வேம்படியான் : கடிதங்கள் 1

வேம்படியான் சிறுகதை

அன்பு நவின்,

வேம்படியான் குறித்த அறிவிப்பு வந்த நாளில் இக்கதையை வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்து வைத்தேன். இன்று வாசித்தேன். இப்படி ஒரு பேய்க்கதையை வாசித்து பல நாட்களாகிவிட்டது. ஆனால் உங்களின் ‘பூனியான்’ சிறுகதை போலவே இது உளவியல் சார்ந்த சிக்கலா? அல்லது உண்மையான பேயா? எனும் சிக்கலான இடத்திற்கு வாசகனைத் தள்ளி விட்டுள்ளீர்கள்.

கதை சொல்லும் தாத்தா பிளாக்காயன் (அது என்ன பெயரோ) வழி அறிந்தது நான்கு பேய்களை. நாம் கதைச்சொல்லி வழி அறிவது இரண்டு பேய்களை. ஆனால் பிளாக்காயனின் பார்வையில் அவர்கள் இருவரும் பேய்கள் அல்ல. அப்படியானால் அவர் பேயென அறிந்தவர்கள் எல்லாம் பேய்கள்தானா?

பிரபாகரன்

பேய்க் கதைகள் குறுகிய கால அச்சத்தையோ திகிலையோ மட்டும் வாசகனிடத்தில் கடத்திச் சென்று நின்றுவிடாமல், வாசகர் மனதில் நீங்காத உணர்வை ஏற்படுத்துவதற்குக் கதாசிரியர் கையாளும் உத்தி முக்கியமென்பதை ‘வெம்படியான்’ சிறுகதை உணர்த்தியது. இக்கதையில் கதாசிரியர் கையாண்டிருக்கும் உத்தியே ‘வெம்படியான்’ கதையின் சிறப்பாகவும் கதையை மனதிற்கு நெருக்கமாகவும் ஆக்கியது. 


பேய்க் கதைகளில் தர்க்கத்தைக் காட்டிலும் கற்பனையும் காட்சி விவரிப்புகளும் முக்கியம். அதன்வழியே கதையில் நம்பகத்தன்மை கூடிவரும். அவ்வகையில் ‘வேம்படியான்’ கதையில் காட்சி, ஓசை, மணம் போன்ற மூன்று கூறுகளை விவரித்த விதம் கதையின் சிறப்பாக அமைந்தது. அதுவே பல இடங்களில் அச்சத்தையும் உண்டாக்கியது. 


அதோடு, கதையில் பெயர்கள் என்பது நுட்பமானவொன்று. இக்கதை பேய்க் கதையென்ற ஒன்றைக் கடந்து வேறொரு திறப்பை ஏற்படுத்துவதற்கு இக்கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள பெயர் காரணமாக அமைகின்றது. இக்கதையில் வருகின்ற பேத்தியின் பெயர் அமுதவரசி. அமுதத்திற்கெல்லாம் அரசி போல இனிமையானவள். ஆனால், இக்கதையோ கசப்பான வேம்பை மையமிட்டு நகர்கின்றது. காலம் காலமாகக் கசப்பைச் சுமந்து வரும் ஒரு குடும்பத்தில் பிறக்கும் பெண்ணுக்கு இனிமையான பெயர் சூட்டப்படுகின்றது. அந்த இனிமையான பெயர் கொண்டவள் வழியே ஒருவன் அவன் வாழ்நாள் கசப்பைக் கடக்கின்றான். இனிப்புக்கும் கசப்புக்கும் இடையில் உள்ள முரணை அமுதவரசி, கதைச்சொல்லி வழி உணர்த்தி, வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சாத்தியத்தையும் இக்கதை ஏற்படுத்தித் தருகின்றது. இவ்வாறு அணுகும்போது இக்கதை பேய்க் கதை என்ற ஒரு வட்டத்தில் அடங்கிவிடாமல் வேறோரு திறப்பையும் வாசகனிடத்தில் உண்டாக்குகின்றது.


கதையின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் குணங்களையும் உணர்வுகளையும் விவரித்த முறையும் அக்கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை வாசகன் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது. இது பேய்க் கதைதான் என்று அறிந்து படித்ததால் பிளாக்காயனின் மகன்தான் பேய் என்பதை வாசிக்கும்போதே கண்டறிந்துகொள்ள முடிந்தது. இருந்தபோதிலும் பேத்தியும் தம்பியும் பேய்கள்தான் என்பதை ஊகிக்க முடியவில்லை. குறிப்பாகப் பேத்தியின் இல்லாமை அச்சத்தை உண்டாக்கியதைவிட அவள் இல்லையே என்ற கவலையையும் ஏக்கத்தையும் ஆழமாக உண்டாக்கியது.


பேய்க் கதை என்பதால் வாசகனிடத்தில் கட்டாயம் பயத்தை, திகிலை உணர்த்த வேண்டும் என்பதற்காக எதையும் வழிந்து திணிக்காமல் கதையை யதார்த்தமாகச் சொல்லிச் சென்ற உத்தி, கதையில் காட்டப்பட்டுள்ள முரண் போன்றவை ‘வேம்படியான்’ கதையின் சிறப்பாகப்பட்டது.

சாலினி


அன்புள்ள நவீனுக்கு வணக்கம். வேம்படியான் சிறுகதையை வாசித்தேன். கதை படித்து முடிக்கும் போது விதிர்க்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் கதைசொல்லியால் மட்டுமே இறந்தவர்களை உணரவும் காணவும் முடிகிறது. துர் மரணம் சம்பவித்து இறந்தவர் நினைவாய்க் கதைசொல்லியின் குடும்பத்தாரால் வேப்பமரம் நட்டுவைக்கப்படும் வழக்கம் நின்ற பின்னர் சொல்லாக மட்டும் எஞ்சுகிறது. அப்படியாகத்தான் கதைசொல்லியின் அகத்துக்குள் ஒவ்வொரு மரணமும் வேப்ப மரத்தின் கணுக்களாய்த் தனித்தனியாய் வளர்கிறது.

கைவிடப்பட்டும், குற்றவுணர்வும் கொண்டும், நோய்மையுமாகச் சொல்வதற்கு எஞ்சிய சொற்களுடனும் ஏக்கத்துடனும் இறந்தவர்களே கதைசொல்லிக்குள் கணுதோறும் முளைவிடுகின்றனர். அப்பாவின் கெடுபிடியும் கண்டிப்பும் நிறைந்த வளர்ப்புக்கு இடையில் இறந்த தம்பியைப் பாதுகாக்க எண்ணித் தான் பெரியவனாய் ஆனதாய் உணர்கிறான்.  ஏதோவொன்றின் அணைப்பில் நிகர்வாழ்வின் கடுமைகளைக் கடக்க அவனுக்கு இறந்தவர்களின் அருகிருப்பு தேவையாக இருக்கிறது. அவர்களைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு கதைசொல்லியே வேம்படியானாக நிற்கிறான்.

அரவின் குமார்

வேம்படியான் கதை அந்தக் கடைசி வரியில்தான் பேய்க்கதையாக மாறுகிறது. அந்த முனையைத் தொடும் வரை எங்கேயும் பீதி உணர்வை அடையமுடியவில்லை. பிளாக்காயான் வரும்போதெல்லாம் நகைச்சுவை உணர்வு உண்டாகிறது. அந்தப் பையன் பிளாக்காயான் என்ற ஆங்கில ஆசிரியரிடம் அடிவாங்கும் போது கொஞ்சம் துன்பியல் எட்டிப் பார்க்கிறது. இல்லாத செத்துப்போன பிளாக்காயானிடம் பாடம் கேட்கும்போது கொஞ்சம் அச்சத்தின் சலசலப்பு இருந்தது. ஆனால் இல்லாத அம்முவிடம் தாத்தா கதை சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார் என்ற உணர்வை கடைசி வரியில் முத்தாய்ப்பாய்ச் சொல்லும்போது கதை முழுக்க பேய் உலவல் நிகழ்ந்துவிடுகிறது.

கோ. புண்ணியவான்

(Visited 63 times, 1 visits today)