வணிக எழுத்தாளனாக இருப்பதில் என்ன தவறு?

இதழும் இயக்கமும் எழுத்தாளனும்

//ஒருவன் வணிக எழுத்தாளனாக இருப்பதில் என்ன தவறு// இந்த சந்தேகம் எனக்கு இன்றும் இருக்கிறது. இது ஒரு form of expression தானே? ஏன் எனக்கு பிடித்ததை எழுதக்கூடாது? நான் எழுதுவது இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளாத வரையில், (விமர்சகர்களின்  விமர்சனமெல்லாம் பிரச்சனை இல்லை, வணிக இலகியம் என்பதை உணர்ந்து எழுதுகிறேன் என்பதால்)

ஹேமா, சிங்கப்பூர்

அன்பான ஹேமா,

முதலில் உங்களின் இந்தக் கேள்விக்கு நான் சுருக்கமான பதில் ஒன்றை தனிப்பட்ட முறையில் அனுப்பியிருந்தேன். ஆனால் அதுபோன்ற சுருக்கமான பதில்கள் மேலும் குழப்பங்களை விளைவிக்கும் என்றே தோன்றியது. வணிக எழுத்து x இலக்கியம் குறித்து நான் ஏற்கனவே சில கட்டுரைகள் எழுதியதுண்டு. ஆனால், இலக்கியம் குறித்து எத்தனை முறை கேள்விகள் எழுந்தாலும் அவற்றுக்கான முறையான விளக்கங்கள் கொடுப்பதை நான் என் ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டுள்ளேன். எனவே, இந்தக் கேள்விக்கு விரிவான விளக்கம் கொடுப்பதே நியாயம் எனத் தோன்றியது.

முதலில் வணிக இலக்கியம் x தரமான இலக்கியம் குறித்த வரையறைகளைக் கூறிவிடுகிறேன். என் தொடக்கக் காலத்தில் இது குறித்த குழப்பங்களைத் தெளிய வைத்தவர் சுந்தர ராமசாமி. எனவே அவருடைய நேர்காணல்களில் கூறப்பட்டுள்ள விளங்களைத் தொகுத்துக்கொடுக்கிறேன்.

தரமான இலக்கியம்: தரமான இலக்கியம் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் பேசக்கூடியதாக இருக்கும். அனுபவம் சார்ந்து வாழ்க்கைச் சிக்கலைப் பற்றி விவாதிப்பது தீவிர இலக்கியத்தின் முக்கிய குணம். வாழ்க்கையைக் கலை ரீதியாக ஆராய முற்படும் இலக்கியவாதியின் பணி மிகக் கடுமையானது.

வணிக எழுத்து: வணிக எழுத்தில் வாழ்க்கையைப் பற்றிய கனவு அம்சங்கள் இருக்கும். வாசகர்களின் பலவீனங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றைத் தந்திரபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும். கவர்ச்சிக்குறிய அம்சங்களை இணைத்து வாழ்க்கை சார்ந்த மயக்கங்களை உருவாக்கும் ஜனரஞ்சக எழுத்து சில தொழில் திறன்களை மட்டுமே கேட்டு நிற்கும் எளிமையான காரியம்.

(சுந்தர ராமசாமி படைப்புலகம் பக் 167,207)

சுந்தர ராமசாமி மட்டுமல்ல, அவருக்கு முன் இருந்த க.நா.சுப்ரமணியமாக இருக்கட்டும் அவருக்குப் பின் வந்த ஜெயமோகனாக இருக்கட்டும் நானறிந்து இவர்கள் யாருமே வணிக இலக்கியம் படைக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. க.நா.சு காலத்திலிருந்து இன்றுவரை விமர்சகர்களாக உருவான குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் யாரை எடுத்துக்கொண்டாலும் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். ஆனால் அவர்கள் உருவாக்கி நிறுவியது வணிக இலக்கியம், தரமான இலக்கியம் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை.

அதற்கு ஓர் உதாரணம் கூட சொல்லலாம்.

கல்கியை நாம் அனைவரும் அறிவோம். அவரது புனைவுகள் புகழ் பெற்றவை. அவர் வழியாக எளிய வாசகர்கள் பலர் இலக்கிய வாசிப்பில் நுழைந்தனர். பொன்னியின் செல்வன் திரைப்படமாக வந்தபோது அதை நாவலாக தங்கள் இளமையில் வாசித்த உற்சாகமான பல முகங்களை நான் பார்த்தேன். தங்கள் வாழ்நாளில் வாசித்தது கல்கியை மட்டுமே என அவர்கள் சொன்னதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. தமிழ்ப்பண்பாட்டின் பல கூறுகள் கல்கியின் நாவல் வழியாக எளிமையாக வெளிபட்டது. எழுத்தாளராகவே புகழின் உச்சியில் இருந்தவர் கல்கி. அரசியலிலும் சினிமாவிலும் ஜொலித்தார். கல்கியை யாரேனும் வாசிக்க வேண்டாம் எனச் சொன்னார்களா? எந்த இலக்கிய விமர்சகனாவது அவர் நூல்களை வாங்க வேண்டாம் என்றோ கல்கியைப் படிப்பது குற்றம் என்றோ இன்றுவரை வாதிட்டார்களா?

க.நா.சு அவரைப் பேரிலக்கியவாதியாக மதிப்பிடக்கூடாது என்றுதான் கூறுகிறார். வாசக ரசனைக்காக எழுதியவர் கல்கி. வாசகர்களை மகிழ்வூட்டுவதே அவரது எழுத்தின் நோக்கம். அவ்வகையில் அவர் மிகச்சிறந்த கேளிக்கை எழுத்தாளர் என்பது அவரது வாதம். அதுபோல, புதுமைப்பித்தன் வாசக ருசிக்காக எழுதவில்லை. வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது அவருக்கு முக்கியமே அல்ல. சமகால அங்கீகாரம், புகழ் எதுவும் அவருடைய இலக்கு அல்ல. கலையின் உச்சகட்ட சாத்தியத்தை தன் வாழ்நாளில் அளித்துவிட்டுச் சென்ற அவரை க.நா.சு தமிழ் இலக்கியத்தின் உச்சமுனை என்றார்.

க.நா.சு சொல்வது தன் தரப்பை. உலக இலக்கியங்களை விரிவாக வாசித்தவர். அவற்றைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். தமிழ் நவீன இலக்கியத்தின் பார்வையை, போக்கை தீர்மானித்த ஆளுமை. எனவே அவரது குரலுக்கு இன்றும் இலக்கியத்தில் மதிப்புண்டு. ஆனால் அது தீர்ப்பு அல்ல என்பதைதான் நான் பலமுறை சொல்லி வருகிறேன். க.நா.சுவின் கூற்றுக்கு மாற்றாக யாரேனும் கல்கியை முன்னிறுத்தி விரிவாக ஆராய்ந்து, புதுமைப்பித்தனைப் பின்னகர்த்தவும் உரிமை உண்டு. ஆனால், அப்படிச் செய்பவரின் இலக்கிய இடத்தைப் பொறுத்தே அது காலத்தால் நீடிக்கும்; குறைந்தபட்ச உரையாடலுக்காவது இலக்கியச் சூழலில் ஏற்றுக்கொள்ளப்படும்.

விமர்சகர்கள் வணிகப் படைப்புகளின் இடத்தை கேளிக்கைக்கான இடத்தில் வைத்து மதிப்பிடுவதை தரம் தாழ்த்துவதாகப் புரிந்து கொள்ளப்படுவதுதான் சிக்கல் என நினைக்கிறேன். அதுபோன்ற கதைகளை எழுதுவோரும் அதை வாசிப்போரும் இரண்டாம் தர இலக்கிய குடிமக்களாக ஆக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுதான் எல்லா எதிர்வினைகளுக்கும் காரணமாகிறது. ஆனால் உலகம் முழுக்க வணிக எழுத்தில் சாதித்த எழுத்தாளர்களுக்கு இப்படியான குற்றச்சாட்டுகள் இருப்பதில்லை. இலக்கியச் சூழலில் தங்கள் பெயர் குறிப்பிடப்படாததில் கவலை அடைவதில்லை. அவர்கள் வாசகர்களை எழுத்தின் மூலமாக மகிழ்ச்சி படுத்துவது மட்டுமே தங்கள் நோக்கம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

சினிமாவிலும் இது இருப்பதுதானே. அண்மையில் ரஜினிகாந்தின் ஒரு உரையைக் கேட்டேன். “இந்த சிறந்த படமெல்லாம் எடுத்து அதற்காக அவார்டெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்குத் தேவை வசூல்,” என்கிறார். இதுதான் வணிக எழுத்தாளர்களின் அடிப்படை மனநிலையும். அப்படி இருப்பதில் தவறு ஒன்றும் இல்லையே. அதேசமயம் ரஜினி, விஜய் போன்றவர்கள் இந்திய அளவில் பிரபலம்தான். ஆனால், இந்திய சினிமாவில் தரமான படைப்புகளைத் தேடிவரும் ஒருவன் இவர்களின் பெரும்பாலான படங்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டான் என்பதையும் நாம் ஏற்க வேண்டும்தானே. அவன் தேடிச்செல்வது சத்யஜித் ராய், அடூர் கோபாலகிருஷ்ணன், பாலு மகேந்திரா, பாரதிராஜா, ராம், லீனா மணிமேகலை, பி. எஸ். வினோத்ராஜ் எனச் சிலர் இருக்கலாம். ரசிகர்களின் ஆரவாரம் இல்லாமல் உருவாகும் இதுபோன்ற படங்கள் வெளிவந்து பல ஆண்டுகள் ஆனாலும் சினிமா உலகில் தங்கள் இடத்தை நிறுவிக்கொள்கின்றன.

இங்கு இன்னொரு தெளிவையும் கொடுத்துவிடுவது அவசியம். வணிக கலையாக இருந்தாலும் கலைப்படைப்பாக இருந்தாலும் அனைத்துமே பணத்துக்குத்தானே விற்பனை செய்யப்படுகின்றன. எனவே எல்லாமே வணிக படைப்புதான் எனச்சொல்லும் தரப்பினரும் உள்ளனர். ஒரு படைப்பை விற்பனை செய்வது வேறு. வணிகத்தின் பொருட்டு ஒரு படைப்பை உருவாக்குவது என்பது வேறு. ஓர் இலக்கியவாதி நாவல் எழுதுகிறார். அவர் எழுதுவது அசல் வாழ்க்கையை. அந்நாவலை அவர் எழுதும்போது கண்முன்னே எந்த வாசகனும் இருப்பதில்லை. யாரைக் கவரும் பொருட்டும் அப்புனைவு உருவாவதில்லை. அது எழுத்தாளன் தனக்குள் நிகழ்த்திக்கொள்ளும் தீவிர தேடல். அது அச்சாக நூலுரு பெறுகிறது. அதற்கான உற்பத்தி செலவு உண்டு. அதை வாசகனிடம் சேர்க்க வேண்டும். எனவே அதற்கு ஒரு விலை வைத்து விற்கப்படுகிறது. வணிக எழுத்து உருவாகும்போதே எழுத்தாளனின் மனதில் வாசகன் இருக்கிறான். எங்கு எதை வைத்தால் அவன் திடுக்கிடுவான் எனக் கணக்கு வைக்கிறான். அவனின் உணர்ச்சியைத் தூண்டிப்பார்க்க ஆவல் கொள்கிறான். அதற்கேற்ப புனைவில் பாத்திரங்களை அலையவிடுகிறான்.

எவ்வித வழித்தடமும் இல்லாத மலையொன்றில் தானே தனியாக ஏறி மலையின் பிரமாண்டத்தை அறிவது தீவிர எழுத்தாளனின் போக்கு என்றால், திட்டமிடப்பட்ட ஒளிப்பொருந்திய சர்க்கஸ் கூடாரத்தில் திடுக்கிட வைக்கும் சாகசங்களை நிகழ்த்துவது வணிக இலக்கியம். மலைப்பயணம் செய்பவர் தரையில் நடந்தாலும் அடுத்த அடியின் மர்மம் தெரியாது; அந்தரத்தில் திடுக்கிடும் துள்ளலுக்குப் பின்பாகக் கிடைக்கும் பிடி குறித்த தெளிவு சர்க்கஸ் கலைஞனுக்கு இருக்கும். அந்தத் திடுக்கிடல்கள் கீழே கைத்தட்டும் ரசிகனுக்காக உருவாக்கப்பட்டது.

ஜெயமோகன் வரியில் சொல்வதானால், ‘வணிக எழுத்தை வாசகன் தீர்மானிக்கிறான், இலக்கியத்தை எழுத்தாளன் தீர்மானிக்கிறான்.’

இதுவரை நான் சொன்னவற்றைத் தொகுத்துக்கொடுக்கிறேன்.

அ. யாரும் வணிக எழுத்தை எழுத வேண்டாம் எனச் சொல்லவில்லை. வணிக இலக்கியத்தின் உச்சமுகமான கல்கிக்கு இன்றுவரை எல்லாவித வாசல்களும் திறந்து இருக்கும்போது இன்று உருவாகும் வணிக எழுத்தாளர் ஒருவரை யாரும் தடுப்பது இல்லை.

ஆ. இலக்கிய விமர்சகர்களின் நோக்கம் யாரையும் எழுதுவதைத் தடுப்பதல்ல. மாறாக அவர்கள் தங்கள் தரப்பினைச் சொல்கிறார்கள். அப்படிச் சொல்ல அவர்களுக்கு எல்லாவித உரிமையும் உண்டு. அதற்கு மறுப்புக்கூற எதிர் கருத்து கொண்டவர்களுக்கும் உரிமை உண்டு.

இ. இலக்கிய விமர்சகர்கள் ஒரு படைப்பை வாசித்து எது நல்ல இலக்கியம் எது வணிக இலக்கியம் என்றே விரிவான விளக்கத்துடன் வகைப்படுத்துகிறார்கள். அது அவர்கள் கருத்தே அன்றி தீர்ப்பல்ல. க.நா.சு முன்வைத்த நல்ல படைப்பாளிகள் காணாமல் போனதையும் அவர் பெயர் குறிப்பிடாத எழுத்தாளர்கள் மீண்டு தீவிர வாசக பரப்பில் கவனம் பெற்றதையும் இதற்கு உதாரணம் சொல்லலாம். வேதசகாயகுமார் போன்ற விமர்சகர்கள் ஜெயகாந்தன் குறித்து முன்வைத்த கருத்தைத் தாண்டி அவர் நீட்சி தொடர்வதையும் இங்குச் சுட்டலாம். எனவே விமர்சனம் என்பது ஓர் அறிவுத்துறையில் நடக்கும் உரையாடல்.

ஈ. அந்த விமர்சகர்களின் கருத்துகளை புறக்கணிக்கவும் மாறுபட்ட கருத்துகளைப் பதிவு செய்யவும் இலக்கியச் சூழலில் முழு சுதந்திரம் உண்டு. நான் மேலே குறிப்பிட்ட விமர்சகர்களைப் போல இலக்கியம் குறித்து தீவிர வாசிப்பும், உலக இலக்கிய பரீட்சயமும் அந்தக் கருத்தை கவனிக்க வாசல்களாக இருக்கும். வசைகளுக்கும் பிதற்றல்களுக்கும் கூட தமிழ் இலக்கியத்தில் வெளி உண்டு. ஆனால் அவை கவனிக்கப்படாது.

உ. வணிக கலைஞர்களுக்குப் பொதுவாகவே அறிவார்ந்த சூழலில் கவனம் இருப்பதில்லை. வணிக கலைஞர்கள் அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் கவனம் பெருந்திரளான மக்களை மகிழ்ச்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பது. அதில் அவர்கள் வெற்றியடைதல் அவசியம். அதில் சாதிக்கும்போது கால ஓட்டத்தில் அது தன் இடத்தை நிறுவிக்கொள்ளும்.

ஹேமா, உங்கள் கேள்வியில் உள்ள அடுத்த அடுக்கிற்கு வருவோம். நீங்கள் எழுதுவது வணிக இலக்கியம்தான் என முடிவெடுத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். அதை இலக்கியம் என நீங்கள் குறிப்பிடவில்லை. அப்படிச் செய்ய உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்கிறீர்கள்.

அதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அதை ஒட்டி சிலவற்றைக் கூறலாம் என நினைக்கிறேன்.

நான் 2000இன் தொடக்கத்தில் இலக்கியம் வாசிக்க வந்தேன். அதற்கு முன்னர் ஜெயகாந்தனைத் தவிர எனக்கிருந்த வாசிப்பு அனைத்தும் வணிக எழுத்தாளர்களுடையது. எழுத்தாளர் தமிழ்வாணன் தொடங்கி சுஜாதா வரை கல்கி தொடங்கி பாலகுமாரன் வரை என் பதினெட்டு வயதிற்குள்ளாகவே பலரையும் வாசித்துள்ளேன். வாசிப்பின் மீதிருந்த ஆர்வத்தினால் ‘வீரா நாவல்’ எனும் புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். எம்.ஏ.இளஞ்செல்வந்தான் என்னை அங்கே வேலைக்குச் சேர்த்துவிட்டார். கோ. புண்ணியவான் அக்கடைக்கு வந்து என்னுடன் உரையாடியிருக்கிறார். அத்தனை சுவாரசியமான இலக்கியங்களை வாசித்த நான் தீவிர இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கியபோது சுந்தர ராமசாமி முதலில் கையில் கிடைத்தார். சில மாதங்களிலேயே ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், சாரு நிவேதிதா போன்றவர்கள் என் வாசிப்பு உலகை மேலும் சுவாரசியமாக்கினார்கள்.

இதைச் சொல்ல காரணமுண்டு.

இவர்களுக்கு முன்னர் இருந்த பல தீவிர எழுத்தாளர்கள் எனக்குச் சோர்வளிக்கக் கூடியவர்களாக இருந்தனர். யதார்த்த எழுத்து என என்னை வெளியே தள்ளின. நான் அதி உற்சாகமான இளைஞன். ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற சாகசமும் கற்பனைகளையும் தூண்டிவிடும் நாவலே எனக்குத் தேவையாக இருந்தன. எனவே, துப்பறியும்கதை, பேய்க்கதை, மாயாஜாலக்கதை, சாகசக்கதை என இலக்கியத்தின் எல்லா கதைவடிவங்களையும் எழுதக்கூடியவர்களுக்கே நான் வாசகனாக இருந்தேன். கற்பனாவாதம், மிகைபுனைவு, மாயயதார்த்தம் எல்லாமே கலைதான் என நான் பின் தொடரும் ஆசிரியர்கள் எனக்கு உணர்த்தினர்.

இன்று தமிழின் தீவிர இலக்கியவாதிகள் யாருக்குமே இதில் எந்தக் குழப்பமும் இல்லை. வணிக எழுத்துக்கும் இலக்கியத்தின் வகை மாதிரிக்கும் (Genre) எந்தத் தொடர்பும் இல்லை என்பதை இன்று எழுத வரும் யாருமே அறிந்துள்ளனர். தீவிர இலக்கியம் எந்த வகைமாதிரியிலும் எழுதப்படலாம் என்பதை புரிந்துகொண்டுள்ளனர். 80களில் உருவான தமிழ் எழுத்தாளர்களால் தீவிர இலக்கியத்தின் எல்லைகள் விரிவுகண்டுள்ளன.

இங்கு ஒன்றைத் தெளிவு படுத்த வேண்டும். இலக்கியத்தின் வகை மாதிரி என்பது வேறு கேளிக்கையெழுத்து என்பது வேறு. அதற்குச் சரியான உதாரணமாக இந்திரா சௌந்தரராஜனைச் சொல்வேன். சித்தர்கள், ஆலயங்கள் என அவர் உருவாக்கும் களம் தமிழ் இலக்கியத்திற்குத் தேவையானது என்றாலும் அவர் கையாள்வது வணிக எழுத்து முறை. அதாவது, எடுத்துக்கொண்ட கதையைக் கையாளும் சராசரித்தன்மை, ஏற்கனவே பழகிப்போன வடிவம், நன்றாக செப்பனிடப்பட்ட சரளமான மொழிநடை ஆகியவற்றால் தன் புனைவுலகை சராசரி வாசகனுக்காக உருவாக்குகிறார். தேனி மாவட்டத்தின் வைகை அணை கட்டப்பட்ட வரலாற்றை வைரமுத்து கேளிக்கை எழுத்தில் கள்ளிக்காட்டு இதிகாசமாக உருவாக்கியதுபோல தீவிர எழுத்தாளர்கள் யாரும் முயன்றது இல்லை என்றே நினைக்கிறேன்.

ஆக, வணிக எழுத்தாளர்களின் தேவை தமிழில் உண்டு. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர்கள் ஆரம்பக்கட்ட வாசகர்களை வாசிக்க வைக்கிறார்கள். தீவிர இலக்கியவாதிகள் பேசாத பலத்தளங்களைப் பேசுகிறார்கள். இதில் எதிலும் நான் முரண்படவில்லை. ஒரு வாசகனாக நானும் அவர்களை வாசிக்கிறேன். ஆனால் அவர்களைத் தமிழில் பிரதான இலக்கியவாதிகளாக ஒரு விமர்சனகனாக முன்னிறுத்த மாட்டேன். உங்களைப் போன்றவர்களுக்கு அதில் சிக்கல் இருக்காது என்று உங்கள் குறிப்பிலேயே தெரிகிறது. ஆனால் சிக்கல் உள்ள ஒரு தரப்பும் உண்டு. அவர்கள் வழக்கமாக இப்படிக் கூறுவது வழக்கம்.

  • இவன் யார் இலக்கியம் எது என்று தீர்மானிக்க?
  • இவர்கள் சொல்வதுதான் இலக்கியமா? இலக்கியம் பன்மைத்தன்மையானது.
  • இவர்கள் அங்கீகரிப்பவர்கள்தான் இலக்கியவாதிகளா?

இவற்றுக்கான பதில் மிக எளிது.

நிச்சயமாக யாரும் எது இலக்கியம் எனத் தீர்மானிக்க முடியாது. தனிப்பட்ட முறையில் எனக்கு இலக்கியம் குறித்த ஒரு ரசனை உண்டு. அந்த ரசனையை இடைவிடாமல் வாசிப்பதன் மூலமாக நான் அடைகிறேன். எனவே என் ரசனையைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. உணவின் சுவையை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரே இடத்தில் நெடுங்காலமாக ஒரே மாதிரியான உணவைச் சாப்பிடும் ஒருவருக்கும் உலகில் பல இடங்களில் சுற்றி பல உணவுகளை ருசி பார்த்த ஒருவருக்கும் சுவை குறித்த வெவ்வேறு அபிப்பிராயங்கள் இருக்கும். இதில் ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்றும் சொல்லவரவில்லை. ஆனால் அடிப்படையில் இருவருக்கு சுவையில் இருக்கும் மாறுபட ரசனையை நாம் ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும். ஆனால் இருவரில் பல்வேறு நாடுகளில் உள்ள உணவின் சுவையை அறிந்தவரின் கூற்றுக்கு முக்கியத்துவம் இருக்கும். காரணம் அவரால் சுவையை ஒப்பிட இயலும். அதன் வழியாகவே குறிப்பிட்ட உணவின் இடத்தை அளவிட முடியும். சுவை அரூபமானது. அந்த அரூபத்தை அறியும் ஒருவரால் மட்டுமே அது குறித்து விரிவாகப் பேச முடிகிறது.

இன்னும் கொஞ்சம் விரிவாகவே சொல்கிறேன். தைப்பிங்கில் நடந்த இலக்கியச் சந்திப்பு ஒன்றில் எழுத்தாளர் கோ. முனியாண்டி சொன்னார், எத்தனை இலக்கியத்தை வாசித்து அதன் முக்கியத்துவத்தை அறிந்தாலும் இளவயதில் நான் வாசித்த நா.பார்த்தசாரதி நாவல்கள்தான் என் மனதிற்கு நெருக்கமானது. அவரது ‘இராமனின் நிறங்கள்’ நாவலும் நா.பவின் மொழியில் அவருடைய வர்ணனையில்தான் எழுதப்பட்டது. இப்படி ஒருவருக்கு ஆத்மார்த்தமாக ஒரு சுவையின் மீது ஆர்வம் இருக்கும்போது உனக்கு ஏன் அது பிடிக்கிறது எனக் கேள்வி கேட்பது விமர்சகனின் வேலையல்ல. உலகம் முழுவதும் இத்தனை சுவையான உணவு இருக்கும்போது ஏன் உனக்கு உன் அம்மா சுடும் தோசை பிடிக்கிறது எனக் கேட்க முடியுமா? எனவே நான் இங்கு சொல்ல வருவது ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க ரசனையை மாற்றி அமைப்பது அல்ல; அதனுடன் விவாதிப்பதல்ல. ஆனால், தான் இதுவரை உண்ட உணவுடன் ஒப்பிடும்போது அந்தத் தோசையின் சுவை எவ்வாறு உள்ளது எனச் சொல்ல ஒருவனுக்கு உரிமை உண்டு.

இலக்கியம் பன்மைத்தன்மையானதுதான். நான் மேலேயே அது குறித்து விளக்கியுள்ளேன்.வணிக இலக்கியமும் வாசிப்புக்கு உரியதுதான் என்றே நானும் கூறுகிறேன். ஆனால் அது வணிக இலக்கியமாக இருந்தாலும் அது அதற்குறிய கலைத்தன்மையில் எழுதப்பட்டுள்ளதா என்பதுதான் அவசியமானது. தகவல் பிழைகளுடன் எழுதப்படும் ஆக்கங்கள், வரலாற்றைப் பின்புலமாக வைத்து தமிழ்ப்படங்களில் வந்த காதல் கதைகளைச் சொல்லும் நாவல்கள், செய்தியைச் சொல்வதற்காக சொற்களை உடைத்துப்போடும் வரிகளை அடங்கிய கவிதைகள், தகவலில் கதாபாத்திரங்களைப் புகுத்தி எழுதப்படும் சிறுகதைகள் போன்றவை ஒருபோதும் இலக்கியமாகாது. நான் அவற்றை வணிக இலக்கியம் எனப் பிரிக்கவில்லை. அப்படைப்பு தன்னை தீவிர இலக்கிய முயற்சி எனப் பிரகடனம் செய்துக்கொண்டாலும் அது இலக்கியமாவதில்லை.

யாரும் அங்கீகரித்து யாரும் இலக்கியவாதியாவதில்லை. இவை எல்லாமே கருத்துகள். மாற்றுக்கருத்துகளுக்கு வழிவிடும் கருத்துகள். அறிவாளிகளிடம் இருந்து கருத்துகள் ஆக்ககரமாக வருகின்றன. மூடகர்களிடமிருந்து வசையாகத் திரும்புகின்றன. அதுதான் வித்தியாசம். மற்றபடி இலக்கியச் சூழலில் ஒரு குழு ஒருவரை இலக்கியவாதியாக அங்கீகரிப்பது எங்கும் உள்ளதுதான். அதுபோல மற்றவர்களும் செய்யலாம். பலவீனமான கதையமைப்பும் ஏராளமான பிழைகளையும் கொண்ட ஒருவருக்குக் கூட விருதுகள் கொடுத்து பாராட்டலாம். அது அந்தந்த அமைப்பின் இலக்கியம் குறித்த புரிதலைப் பொறுத்தது.

இப்போது இவற்றை மீண்டும் தொகுத்துக்கொள்ளலாம்.


அ. வணிக இலக்கியத்தின் மீது தீண்டாமை உணர்வு இங்கு யாருக்கும் இல்லை. அனைவரும் அனைத்தையும் வாசிக்கக் கூடியவர்களே.


ஆ. வணிக இலக்கியங்கள் உலாவிய இலக்கிய வகை மாதிரிகளில் தீவிர இலக்கியம் எண்பதுகளிலேயே உலாவத் தொடங்கிவிட்டது. Genre என்பது வேறு எழுத்து முறை என்பது வேறு.


இ. ஒவ்வொருவருக்கும் இலக்கிய ரசனை உண்டு. இலக்கியம் இப்படித்தான் இருக்க வேண்டும் என யாரும் இதுவரை தீர்மானிக்கவில்லை.


ஈ. இங்கு விமர்சிக்கப்படுவது இலக்கியத்தில் இருக்கும் போலித்தன்மையை. தகவல் பிழைகளுடன் கூடிய புனைவு முயற்சிகளும், காலத்தை மிகவும் பின்னகர்த்தி சொல்லப்படும் சாதாரண காதல் கதைகள் வரலாற்று நாவலாக திரிக்கப்படும்போது எழும் எதிர்வினைகளும் இலக்கியச் சூழலில் ஓர் உரையாடலாக வைக்கப்படுபவை.


உ. எல்லோருக்கும் இங்குத் தங்கள் கருத்துகளைப் பதிவிட உரிமை உண்டு. இலக்கிய ஆழம், மொழி ஆழம், அறிவின் ஆழம், தெளிவின் ஆழத்தைப் பொறுத்து ஒரு குரலுக்கு மதிப்பு ஏற்படுகிறது. இலக்கிய விமர்சனத்தில் பொருட்படுத்தப்படுகிறது.


எ. யாருக்கும் யாரையும் அங்கீகரிக்க உரிமை உண்டு. அது ஒருவரின் அல்லது ஒரு குழுவின் ரசனையைச் சார்ந்தது. அதுபோல எது முக்கியமான ஆக்கம் என ஒருவர் சொல்ல சுதந்திரம் உண்டு. அது அவர் வாசிப்பு பின்புலத்தால் கவனம் பெறுகிறது.

இறுதியாக ஹேமா, உங்களுக்கும் இதற்கான பதில் தெரிந்திருக்கும். எனவேதான் உங்கள் கேள்வியிலேயே ‘நான் எழுதுவது இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளாத வரையில்’ எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். பொதுவாக ஒரு பதில் எழுதியப் பிறகு அதைப் பலரும் முழுமையாக வாசிப்பதில்லை. ஆனால் நான் எழுதும்போது இதை இளம் தலைமுறை வாசிப்பார்கள். அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் என்றே மெனக்கெடுகிறேன். எனவே உங்களுக்கு இருக்கும் தெளிவு பிறருக்கும் ஏற்பட கூடுதலாகச் சிலவற்றைச் சொல்கிறேன்.

அ. வணிக இலக்கியம் திட்டவட்டமான நோக்கம் கொண்டது. அங்கே வாசகன் ஒரு நுகர்வோன் மட்டும்தான். எளிமையாக இப்படிச் சொல்கிறேன். ஒருவர் மீ கோரிங் கடை போட்டுள்ளார். அங்கு கடை போட்டவர் அதிகாரம் படைத்தவன் அல்ல. அதன் ருசிக்காக வரக்கூடியவனே அதிகாரம் படைத்தவன். நுகர்வோனுக்கு தன் நுகர்பொருள் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும் அதிகாரம் உண்டு. உரைப்பு அதிகம் வேண்டும் என்றால் அவர் அதிகரிக்க வேண்டும். குறைக்க வேண்டும் என்றால் குறைக்க வேண்டும். இன்னும் என்னென்ன வேண்டும் என ஒரு வாடிக்கையாளன் கேட்கிறானோ அப்படி மாறவேண்டும். வணிக இலக்கியவாதியின் இடம் அதுதான். அவன் ஒருவகையில் கேளிக்கையாளன் என்கிறார் சுந்தர ராமசாமி. தன் வாசகன் எதை விரும்புவானோ அதையே வணிக எழுத்தாளன் எழுதுவான். என்னென்ன இருந்தால் “ஒரு நாளில் படிச்சி முடிச்சேன்” என நெகிழ்வானோ அதையெல்லாம் உட்புகுத்த வேண்டும். அங்கு எழுத்தாளனுக்கென தனியாக மனம் என்று ஒன்று இயங்குவதில்லை. அவனுக்கு தன் கதை வாசிக்கப்பட வேண்டும். நூல்கள் வாங்கப்பட வேண்டும். எனவே அதற்கேற்ப வளைந்துகொள்கிறார். அதன் வழியாகத் தனித்தன்மையை இழக்கிறார்.

ஆ. இலக்கியவாதி தனது ஆக்கம் நுகர்பொருள் அல்ல என்பதை அறிகிறான். அதன்மேல் வாசகனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை உணர்கிறான். அது ஓர் ஆசிரியனின் அகவெளிப்பாடு. அதைநோக்கி செல்ல வாசகன் முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிமிர்வு அவனுக்கு உண்டு. எனவே அவன் தன் எழுத்துகள் வழியாக தன் அகத்தை காண்கிறான். வாழ்வின் கேள்விகளுக்குப் பதில் தேடிச் செல்கிறான். அதன் வழியாக அவன் அடையும் இடங்கள் அவன் வாழ்வை வழிநடத்துகிறது.

முடிவாக, இவ்வகையில் எழுதுவதால் நான் மகிழ்ச்சியடைகிறேன் என ஒருவர் கூறும்போது அது எவ்வகையான மகிழ்ச்சி என அவர் ஒருமுறை தன்னைத் தானே கேட்டுக்கொள்ளலாம். நண்பனுக்கு மதுவை நிரப்பிக்கொடுத்து அவன் போதையாவதைக் கண்டு மகிழ்பவர்கள் உள்ள உலகில்தான் தான் கண்ட மலையுச்சிக்கு நண்பனையும் அழைத்துச் சென்று அவனறியாத உலகின் ஒரு கோணத்தைக் காட்டி மகிழ்பவர்களும் இருக்கிறார்கள். இருவருக்குமே அவரவர் கோணத்தில் மகிழ்ச்சியடைய முழு சுதந்திரம் உண்டு. ஆனால், இரண்டு மகிழ்ச்சியும் ஒரே விளைவுகளை உருவாக்குவதில்லை என்ற தெளிவு இருந்தால் மட்டும் போதுமானது.

(Visited 266 times, 1 visits today)