ம.நவீன் என்ற பெயரில் மலேசிய இலக்கியச் சூழலில் புதிய இலக்கியச் செயல்பாடுகளில், தொடர்புபடுத்தி வருபவரும், இளைய வயதும், ஆழ்ந்த இலக்கிய அக்கரையும் கொண்டவரும் ஆன கவிஞரின் அபூர்வமான கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குச் சமீபத்தில் வாய்த்தது.
மலேசியாவில் தோட்டவாழ்க்கை என்னும் எதார்த்தம் சிதைந்த பின்பு நகரங்களுக்குக் குடிபெயர்ந்த முன்னாள் தமிழகத்துச் சகோதரர்கள் சுமார் 80 களிலிருந்து தங்கள் புதிய வாழ்க்கைமுறையை இலக்கியத்தில் புதிய முறையில் பதிவு செய்து வருகின்றனர். நவீன் பலரோடு முரண்படுகிற இலக்கிய ‘ஆக்டிவிஸ்டாகவும்’ சமரசமற்ற கவிஞராகவும் விளங்குவது மலேசிய இதழ்களான காதல், வல்லினம் போன்றவற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும். சிங்கப்பூர், மலேசிய இலக்கியச் சூழலை அறிந்தவர்களுக்கு இலக்கியத்துக்குப் புறம்பான காரணங்களை வைத்து இலக்கிய அந்தஸ்து கோருபவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது நாம் அறியவேண்டும். அதுபோல் தமிழகத்தின் பெரும் பத்திரிகை, டி.வி.க்கள், சினிமா போன்றவற்றின் பொதுஜனமனோநிலையின் இலக்கியம் அல்லாத கூறுகள் தமிழகத்தின் கும்பல் கலாச்சார மனோநிலையைச் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகச் சிறுபத்திரிகை சார் விழுமியங்கள் தமிழகத்தில் முக்கியமான சக்தியாக மாறியுள்ளன. அதனால் தமிழ்த்துறைகள் தமிழகத்திலும் (ஈழம், சீரிய மரபுக்குள் 70களில் வந்துள்ளது. சினிமா பாடலாசிரியனைத் தவறுதலாகக் கவிஞன் என்று கருதாது) மாறத் தொடங்கியதை இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கண்டோம்.
தமிழகம் எப்போதும் மலேசியத் தமிழர்களின் தாய்ப்பூமியாகவே விளங்குகிறது. தமிழகத்தின் மாற்றங்களை நுட்பமாக வெளியிடும் தமிழிலக்கியம் மலேசிய இலக்கியத்தையும் பாதித்துள்ளது. மலாய், சீன, இலககிய பாதிப்புகள் அனைத்துலகப் பண்பை மலேசியா வழியாக தாய்த் தமிழிலக்கியத்துக்கு அறிமுகப்படுத்துகின்றன. இவ்வாறு மலேசியத் தமிழிலக்கியம் ஒரே நேரத்தில் தெற்காசிய இலக்கியமாகவும் மிகப்பிந்திய தமிழிலக்கியமாகவும் விளங்குகிறது. இந்தச் சிறப்புப் பண்பு இன்றைய இந்தி இலக்கியத்துக்கோ, மராட்டி, மலையாள, கன்னடம் போன்ற இலக்கியத்துக்கோ இல்லாதது; எனினும் இந்தியாவில் முக்கியமான இந்தப் பண்புள்ள தமிழிலக்கியம் கண்டு கொள்ளப்படவில்லை. சினிமா பாடலாசிரியர்களே சிறந்த கவிஞர்களாக ஊதிப் பெருக்கி டி.வி. ஊடகங்களும் தினத்தாள்களும் பரப்புரை செய்வதால் இந்திக்காரனோ, பிறரோ இந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் நிஜமான தமிழிலக்கியத்தின் புதிய தன்மைகளை அறியாமல் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் நடந்த தமிழில் புலம்பெயர் இலக்கியம் என்பது பற்றி நடந்த கருத்தரங்கில் தமிழிலக்கியத்தின் அனைத்துலக முக்கியத்துவத்தை சிக்காகோ பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளரான ஒரு ஜெர்மன் தேசத்தவர் ஆங்கிலக் கட்டுரையாக முன்வைத்தார். “ஒப்பியல் இலக்கியம்” என்ற மேற்கத்தியச் சிந்தனைத் துறையில் இவ்விஷயங்கள் சிந்திக்கப்படும்போது நாடுவிட்டு நாடு பெயர்தல், இலக்கிய, கலாச்சார கலப்புப் போன்ற ஆய்வுகள் புதுப்பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.
இந்தச் சிந்தனைகளை நம்முன் கொண்டு வரும் கட்டாயத்துடன் எழுதப்பட்டுள்ளன நவீன் கவிதைகள். மலேசியாவிலிருந்து வரும் கவிதைகளிலிருந்து தனித்துத் தெரிகின்றன இக்கவிதைகள். பல கவிதைக் கோட்பாடுகளை தொல்காப்பியத்திலிருந்து இன்றுவரை – எழுதும் தமிழ் அறிவு, இன்னும் பல புதிய கோட்பாடுகளைக் கண்டுபிடிக்கும் தேவையை நவீனின் ஒவ்வொரு கவிதையும் தோற்றுவிக்கும் பரிமாணத்தின் எல்லையைச் சுட்டுகின்றன. ஒரு கவிதை போல் இன்னொரு கவிதை இல்லை என்பதை நான் கண்டுபிடித்தபோது அவற்றின் மையமழிப்பும் நோக்கு வீச்சும் தொடர்ந்து வியப்படைய வைத்தன. தனி அடையாளத்தோடு இன்று தாயகத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் ஈழக்கவிதைகளையும் தமிழகக் கவிதைகளையும் ஒப்பிடும்போது ஒரு தனியான வீச்சும் மொழிலாவகமும் கட்டமைப்பும், தொடக்கமும், முடிவும், உருவாக்கும் முழுமைத் தொனிப்பும் என்னை வியக்க வைத்தன.
குற்ற உணர்ச்சியைச் சேமித்தல் பற்றியும் (பக்.13), பொறுமை இழந்த கடிகார முட்கள் (13) பற்றியும், கொக்கு மரமாவதும் (17) யாரும் கழுத்து இறுகுவதை நினைவூட்டாமல் இருப்பதும் (17) கவிதையை உருவாக்கிய பெட்டி (18)யும் என்னைக் காணவில்லை (19) என்றும், பழைய பானையில் இருக்கும் யோனியும் அப்பானையை நடிகையின் முலை கேட்டு உடைக்கும் (20) செயலும், இறந்து கிடக்கும் ஒற்றைக்கரமும் (20) அசுத்தம் துறக்கும் நிமிடம் குறித்த சிந்தனைகளும் (24) இறக்கை மட்டும் மனித உடலிலிருந்து தனியே பறந்து செல்லுவதும் (24) என் தேவதைகள் பிறரது தேவதைகளைக் கொல்வதும் (27) மரணத்தின் மொழியில் நுட்பத்தைக் காண்பதும் (36) ஒரு குழந்தை கீழே விழுகையில் அது கால்களைக் கண்டுபிடிப்பதும் அக்குழந்தை தூக்கச் சொன்னபோது கால்கள் கவிதையானதும் (26) எழுத்தை எறும்புகள் பொறுக்குதலும் (33) விழித்துக் கண்ணின்றிப் பார்த்தபோது இமையின்றி கைகளைக் காணமுடியவில்லை (47) என்பதும் இரண்டாவது முறை இறப்பதும் இரண்டாவது முறை வாழ்வதும் (48) பற்றிச் சொல்வதும் என கவிதைகள் ஒரு புதிய நுட்பத்துடனும் ஆகோஷிக்கும் அர்த்தங்களுடன், கும்மாளமிடும் மொழியாற்றலும் கவிதையும் ஒன்றோடு ஒன்று கவிஞரின் திறமையை வெளிப்படுத்துவதில் போட்டியிடுகின்றன. இப்படி ஆங்காங்கே நம்மைக் கவரும் வரிகளையும் படிமங்களையும் முழுக்கவிதையோடு இணைக்கையில்தான் இவரது கவிதைக்களுக்கு நியாயம் செய்தவர்கள் ஆவோம்.
“கடிகாரம்” என்ற கவிதை இப்படித் தொடங்குகிறது.
“குறிப்பிட்ட நேரத்துக்குப்பின்
பொறுமை இழந்த கடிகார முட்கள்
கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டன
————————
நீங்கள் தாமதித்துக் கொண்டிருந்தீர்கள்”
கவிதையின் முதல் பத்தியான இந்த வரிகளைப் படிக்கும்போது எதற்காக கடிகார முட்கள் பொறுமையிழந்தன என்று கவிதையில் எங்கும் இல்லை. அதுபோல் இதே கவிதையின் இன்னொரு பகுதி. அதாவது கவிதை முடிகிறது.
“ஏதோ ஒரு துவாரத்தில் நுழைந்து
இதயத்தை முற்றிலுமாய்
அறுக்க முற்பட்ட நேரம் நீங்கள்
வழக்கமான புன்னகையோடு வெளிப்பட்டீர்கள்
கடிகாரத்தில் முட்கள் இல்லாததை நீங்கள்
கவனிக்கவில்லை”.
கவிதையின் முதல் பகுதியும் கடைசிப் பகுதியும் இக்கவிதையின் அசாதாரணத் தன்மையைத் தன் அறிவுத் தோற்றவியலாய் (எப்பிஸ்டமாலஜி) கொண்டு கவிதையின் பிற உறுப்புகளை மொழித்தளத்தில் உருவாக்கியுள்ளன. இப்போது இந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள். ஏதோ ஒரு துவாரம் என்பதில் உள்ள “ஏதோ ஒரு” என்பதும் இதயத்தை அறுக்கமுயல்வதன் காரணம் கவிதையில் இல்லாததும் நீங்கள் புன்னகையுடன் வருகிறீர்கள்; அந்தப் புன்னகை வழக்கமான புன்னகை; அப்போது நீங்கள் கடிகாரத்தில் இருந்த முட்கள் மறைந்திருப்பதை எந்தக் காரணத்தாலோ கவனிக்கவில்லை; ஏதோ ஒரு, காரணமற்ற விதமான இதய அறுப்பு, எதற்காகவோ கடிகார முட்கள் மறைகின்றன. இப்படிக் கவிதை ஒரு காரணமற்ற நிகழ்வை கவனத்தில் கொண்டு வருகிறது. அதாவது இக்கவிதையில் வந்தவைகளால் அன்றி கவிதையில் வராதவைகளால் கவிதையின் அர்த்தம் உருவாக்கப்படுகிறது. இது நவீன் கவிதைகளில் அகஸ்மாத்தாக ஏற்பட்ட அர்த்த கட்டமைப்பு முறை அல்ல. “கொக்குமரம்” என்ற கவிதையில்,
“கொக்குமரம்
இன்னும் ஒரு மீனுக்காகக் காத்திருக்கிறது.
அதன் கிளை பற்றி அமரும்
பிற கொக்குகளை
அது கவனம் வைப்பதில்லை.
என்ற பகுதியிலும் ஒரு மீனுக்காக ஏன் கொக்கு மரம் காத்திருக்கிறது என்றோ ஏன் பிற கொக்குகளை அது கவனம் வைப்பதில்லை என்றோ கவிதை சொல்வதில்லை. புதுக்கவிதை தமிழ்ச் சமூகத்தின் ரகசியங்களைச் சொல்கிறது. அதனை இன்றில்லாவிட்டாலும் இன்னொரு நாள் புரிந்துகொள்ளும் சூழலும், விளக்கமும், அரசியலும் உலகமெங்குமுள்ள இந்த இனம் கண்டுகொள்ளாமல் போகாது.
மொத்தத்தில், நவீனின் கவிதைகளைப் பற்றி விரிவாகத் தமிழ்ச்சமூகம் ஆய்வு செய்து தன்னை அறிந்துகொள்வதற்கான வேண்டுகோளாய் இச்சிறு மதிப்புரை அவருடைய “சர்வம் ப்ரம்மாஸ்மி”
(2009-இல் வெளியிடப்பட்டது) என்ற நூலை அடிப்படையாய் வைத்துச் செய்யப்படுகிறது. (நூலாசிரியர் தொடர்பு: valllinamm@gmail.com)
தமிழவன்