ஓர் அன்பு நம்மை நிராகரிக்கும்போதும்
அன்பின் நுழைவாயில் அடைப்படும்போதும்
செய்வதற்கு ஒன்றும் இல்லை.
அன்பை வேண்டி பெறுதல் பிச்சையாகிவிடும்
தளர்ந்தமுகம் கழிவிரக்கத்தை ஏற்படுத்தலாம்
சகஜமாக சிரிப்பது அன்பை பரிகசித்ததாகிவிடலாம்
நமது அன்பின்மீது நமக்கே சந்தேகம் ஏற்படலாம்
நிராகரித்து நகரும் அன்பை பின் தொடரவும் இயலாது
அது பாதைகளற்ற பெருவெளியில் பயணிக்கக்கூடும்
நிராகரித்து நகரும் அன்பை
வேரொரு சந்தர்பத்தில் எதிர்கொள்ளுதல்
பயங்கரமானது
அப்போதைய தன்மை அறிந்து
முகத்தை மாற்றும்திறன் கைவர வேண்டும்
நகர்ந்த அன்பு ஏற்படுத்திய வெற்றிடத்தை
கவிதை கொண்டு நிரப்ப இயலாது
அது மேலும் பிரிவின் துக்கத்தையும்
அயற்சியையும் ஏற்படுத்தும்
நிராகரிப்பு ஏற்படுத்தும் வெறுமையில்
வெறுமை இருப்பதில்லை
அது அன்பை தேடவும் சேகரிக்கவும்
சில சந்தர்பங்களைத்தருகிறது
கால்களை நகர வைக்கிறது.
(Visited 103 times, 1 visits today)
மிகப்பிரமாதம்…ஒவ்வொரு வார்த்தையும் வலியேற்றுகிறது வாசிக்கும் பொழுது…கூடவே, கடந்து வந்த நிகழ்வுகளையும் நினைவுபடுத்தி, மென்சோகத்தில் ஆழ்த்திச் செல்கிறது…கலக்கிட்டீங்க…கவிதை கொண்டு நிரப்ப இயலாத அந்த வெற்றிடத்தை, மறதியின் மாயக்கரங்கள் கொண்டு, காலம் மூடிவைத்திருந்தது….இந்தக் கவிதை, அதன் விரல்களை மெல்லப் பிரித்து, விசனத்தின் வடுக்களை வருடிப்போகிறது…