அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள்: முற்போக்கு அழகியலின் தொடக்கம்

jeevaரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. ‘வாசிக்கும் அனைவரும் வாசகனா?’ எனக்கேட்டால் இல்லை என்பதே பதில். பல முக்கியமான இலக்கியப்பிரதிகளை வாசித்த நண்பர்கள் எனக்கு உண்டு. ஒரு சிறுகதையை வாசித்து முடித்தபின் அவர்களால் அதில் உள்ள தகவல்களை மட்டுமே சொல்ல முடிவதைப் பார்க்கிறேன். தொடக்கத்தில் அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர்களால் மொழிவழியாகக் கற்பனைசெய்ய முடியவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவர்களால் சொற்களில் இருந்து ஒரு சூழலை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கான பயிற்சியும் இல்லை. சொற்கள் வழியாக ஒன்றைத் தெரிந்துகொள்ள மட்டுமே செய்தனர். தெரிந்துகொண்டதைத் தகவல்களாகச் சேமித்து ஓரிரு வாக்கியங்களில் கூறினர். அதையே விமர்சனமாகவும் நம்பினர். கடைசிவரை அவர்களால் ஒரு சிறுகதையினுள் நுழைந்து அதன் நுட்பத்தை தரிசிக்கவே முடியாது.

இரசனை விமர்சனம்

வாசிப்பின் நுட்பங்களை அறியக்கூடியவன்தான் இரசனை விமர்சனத்தை முன்னெடுக்கிறான். அவன் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கையிலெடுத்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து இலக்கியப்போக்கு உருவாக்கிக் கொடுத்த கட்டமைப்பை அளவுகோலாகக் கொண்டோ இலக்கியப் பிரதியை ரசிப்பதோ விமர்சிப்பதோ இல்லை. ஒரு ரசனை விமர்சகன் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்கள், தன் வாசிப்பனுபவங்கள் மற்றும் படைப்பனுபவங்கள் மூலம் பெற்ற ஒட்டுமொத்த ரசனையின் அடிப்படையில் ஒரு படைப்பை அணுகுகிறான். அப்படைப்பு மீதான தனது மதிப்பீட்டைச் சொல்கிறான். அந்த மதிப்பீட்டில் மாறுபட்ட தரப்புகளின் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து வெளிப்படுகிறது. அதன் விளைவாகப் புதிய மதிப்பீடுகள் உருவாகின்றன.

எம்.ஏ.நுஃமானிடம் ரசனை விமர்சனம் குறித்து ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது அவர் கூறினார், “உங்களுக்கு பிரமிள் கவிதைகள் கொடுக்கும் மனக்கிளர்ச்சி அல்லது தரிசனம் இன்னொரு வாசகனுக்கு வைரமுத்து கவிதைகள் கொடுக்கலாம். அப்படி இருக்க, நீங்கள் ஒரு படைப்பை எப்படி இன்னொரு படைப்புடன் ஒப்பிட முடியும். ஒவ்வொரு தரத்தில் உள்ள வாசகனுக்கு ஒவ்வொருவிதமான படைப்புகள் முக்கியமானதுதானே…” ஒருவகையில் நுஃமான் என்னைச் சீண்டுவதற்காகவே அந்தக் கேள்வியைக் கேட்டார். அவருக்கு அதன் சரியான பதில் தெரியும். ஆனால், இந்தக் கேள்வியை வைத்துக்கொண்டே பலர் இன்றுவரை தங்களை எழுத்தாளர்களாக நிறுவிக்கொள்கின்றனர். தன் (மொண்ணையான) படைப்பு ஏதோ ஒரு வாசகனைச் சென்றடையும் என்றும் எனவே அப்படைப்பு வேறுவகை ரசனை கொண்டவர்களுக்கானது எனவும் சொல்லிக்கொள்வதுண்டு. முகநூல் போன்ற ஊடகங்களில் பெறும் ‘லைக்’குகள் அவர்களின் அந்த உற்சாகத்தை அதிகரிக்கிறது.

ரசனை விமர்சனம் மூலம் திட்டவட்டமான கலை மதிப்பீடுகள் மெல்ல மெல்லவே உருவாகின்றன.  அதன் மதிப்பீடுகளின் மூலமே கால ஓட்டத்தில் சில படைப்புகள் நிராகரிக்கப்படவும் சில கொண்டாடப்படவும் செய்கின்றன. ஆனால், அதுவும் நிரந்தரமானதல்ல. மீண்டும் இன்னொரு காலகட்ட வாசகர்களால் அவை மறுமதிப்பீடு செய்யப்படுகின்றன. புதிய கண்டடைவுகளை உருவாக்குகின்றன. அதுதான் விமர்சனத்தின் பணி. அது குறிப்பிட்ட காலகட்டத்துக்கானது மட்டுமே. விமர்சனம் ஒரு கட்டத்தில் பழமையாகிக் காணாமல் போகிறது. ஆனால், நல்ல படைப்புகள் விமர்சனத்தைக் கடந்து தன் ஆயுளை நீட்டித்துக்கொள்கின்றன. அது தன்னை நீட்டித்துக்கொள்ள விமர்சனம் ஏதோ ஒருவகையில் காரணமாகவே இருக்கிறது. காரணம், நல்ல விமர்சனம் சமூகத்தின் முன் ஒரு படைப்பைத் திறந்துகாட்டி விவாதப்பொருளாக மாற்றுகிறது. அதன் மூலமே இன்னொரு வாசகனுக்கு அதைக் கடத்துகிறது. இலக்கியப்பிரதி ஒரு மரம் என்றால் விமர்சனம் அதில் உருவாகும் பழங்கள்தான். மரத்தின் தன்மையைப் பழத்தில் காணமுடியும். பழத்தின் மூலமே ஒரு மரம் சட்டென அடையாளம் காணப்படுகிறது. ஆனால், பழம் நிரந்தரமானதல்ல. அது பழுத்துப் பின் உதிரும். மரத்துக்கே எருவாக மாறும். ஒரு மரத்தின் செழுமைக்கு, காலம் முழுவதும் அதைச்சுற்றி விழுந்த எருவான பழங்களும் முக்கியக்காரணம். விமர்சகர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உருவாக்கும் கருத்துகள் பழங்கள் போல உதிர்ந்து காணாமல் போகும் என அறிவர். அந்த அறிதலோடுதான் விமர்சனங்களைச் செய்கின்றனர். ஆனால், அவை மிகச்சரியான வாசகர்கள் படைப்பை வந்தடைய வழியமைக்கும் என்பதில் குழப்பமே இருக்காது.

மலேசியா போன்ற சூழலில் இவ்வாறான ரசனை விமர்சனப்போக்கு அவசியமானது. படைப்புகளுடைய கருத்தின் அடிப்படையில் மட்டுமே வெளிப்படும் இன்னொரு கருத்தே இங்கு விமர்சனமாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அபத்தமான சூழலில் கறாரான விமர்சனங்கள் மூலமாக குறிப்பிட்ட படைப்புகளை அடையாளம் காட்டுவதும் அதன் மூலம் விவாதங்களை உருவாக்குவதும் விவாதங்கள் மூலம் படைப்புகளை வேறொரு கோணத்தில் அணுகுவதுமே இன்றைய மலேசியத் தமிழ் இலக்கியத் தேவையாக உள்ளது. முழுக்கவே விமர்சனங்கள் இல்லாமலாகிவிட்ட மலேசிய இலக்கியச் சூழலில் அரு.சு.ஜீவானந்தன் எனும் ஆளுமையின் மொத்த சிறுகதைகளைக் குறித்த ஒரு விமர்சனப் பார்வையை முன்வைப்பது தொடர் உரையாடலுக்கான சூழலை உருவாக்கும் என நம்புகிறேன். மீண்டும் அவரை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்விமர்சனக் கட்டுரைப் படைக்கப்படுகிறது.

அரு.சு.ஜீவானந்தன்

மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் விமர்சனம் செய்கிறேன் என முன்வருபவர்கள்c முதலில் ஏந்திக்கொள்வது ஒரு கருணை முகத்தை. ‘மலேசியா ஆழமான தமிழ்க்கல்விச் சூழல் இல்லாத நாடு, ஈழம் போலவோ தமிழகம் போலவோ இங்கு இலக்கிய மரபு என ஒன்று இல்லை, இங்கு இலக்கியம் படைக்க வந்தவர்கள் சஞ்சிக்கூலிகள், அவர்கள் மொழியைத் தங்கள் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தவே இலக்கியத்தைக் கையில் எடுத்தனர், இங்கு வாசிக்க தரமான இலக்கியங்கள் கிடைக்கவில்லை, பல்வேறு வாழ்க்கைச் சிக்கலுக்கு நடுவே இவர்கள் இலக்கியத்தை எடுத்துச்செல்வதே பெரும்பாடு, இவ்வாறான காரணங்களால் இவர்கள் படைப்பு கொஞ்சம் தரம் குறைந்தே இருக்கும், அதனால் அவர்களின் படைப்புகளை எதிர்மறையாக விமர்சிக்காமல் தட்டிக்கொடுத்து இலக்கியம் வளரச்செய்வோம்’ எனத்தொடங்கும்போதோ முடிக்கும்போதோ  தங்கள் கருணை முகத்தில் பாவங்களை மன்னிக்கும் ரட்சகரின் கண்களைப் பொறுத்திக்கொள்வர்.

1930-களில் தொடங்கும் மலேசியத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஜப்பானியர் காலம் வரை (1945) இந்தச்  சலுகைகள் பொருந்தும்தான். ஆனால்,1950-களில் கதை வகுப்புகளும் 1952-ல் கு.அழகிரிசாமி போன்ற ஆளுமைகள் இந்நாட்டில் சிறுகதை வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்புகளுக்கான சான்றுகள் இருக்க, படைப்பிலக்கியத்தில் குறைந்தபட்ச அளவீடுகள் எவ்வகையில் அவசியமானவை எனப் புரியவில்லை. எனவே அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள் குறித்துப் பேசும்போது இந்தக் ‘குறைந்தபட்ச அளவீடுகளை’ முழுக்கவே நிராகரிக்கிறேன். அவ்வாறு செய்வது சமகாலத்தில் வாழும் ஓர் ஆளுமை மிக்க படைப்பாளிக்குச் செய்யும் அவமானமே.

அரு.சு.ஜீவானந்தன் 70-களில் மிகத்தீவிரத்துடன் எழுதத்தொடங்கிய படைப்பாளி. 70-களில் உதயமான ‘இலக்கிய வட்டம்’ எனும் சிற்றிதழில் தீவிரமாக இயங்கியவர். ‘நவீன இலக்கியச் சிந்தனை’ எனும் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு சுந்தர ராமசாமி போன்ற அக்காலகட்ட ரசனை இலக்கிய விமர்சகர்களோடும் எஸ்.வி.ராஜதுரை போன்ற இடதுசாரிச் சிந்தனையாளர்களோடும் கலந்துரையாடல்களை நிகழ்த்தியவர். ‘அகம்’ எனும் இலக்கிய குழுவின் மூலம் நவீன இலக்கியச் சிந்தனைகளை முன்னெடுத்தவர்களில் ஒருவர். லண்டனில் அவர் மேற்கொண்ட கல்வி அவர் அறிவை விசாலமானதாகவும் அங்கு அவர் கற்ற மார்க்ஸியம் அவரை ஒரு இடதுசாரிச் சிந்தனையாளராகவும் மாற்றியுள்ளது. இவ்வளவு விரிவான அனுபவமும் ஆளுமை வளர்ச்சிக்கான சூழலும் வேறு ஒரு தமிழ்ப்படைப்பாளிக்கு மலேசியாவில் அக்காலகட்டத்தில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டே அரு.சு.ஜீவானந்தனின் சிறுகதைகளை நவீன இலக்கியத்தின் வகைமைக்குள் வைத்து விமர்சிக்க வேண்டியுள்ளது. 15-ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தைய காலகட்டத் தத்துவத்தை நவீனத்துவம் என்பர். மேலைத் தத்துவத்திலிருந்து மதம் தன்னை விடுவித்துக்கொண்ட காலகட்டமது. மத நிறுவனங்களுக்கும், மத மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான விஞ்ஞான மனப்பாங்கு, தனிமனித சுதந்திரம், அரசியலில் ஜனநாயகக் கோட்பாடு, மக்களிடையே சமத்துவம், பெண்களுக்குச் சம உரிமை, கலை இலக்கியத்தில் சமயச் சார்பின்மை, புதிய கலை இலக்கிய வடிவங்களின் தோற்றம் போன்றவை நவீனத்துவம் சார்ந்த அம்சங்களாகக் கருதப்படுகிறது.

ஜெயமோகன் தமிழில் நவீனத்துவ காலகட்டத்துப் படைப்பாளிகளை மிகச்சரியாகப் பட்டியலிட்டுள்ளார். 1940-களில் எழுதத்தொடங்கிய புதுமைப்பித்தன் மற்றும் கு.ப.ராஜகோபாலனிடமிருந்து தொடங்கும் நவீனத் தமிழ் இலக்கியம் 60-களில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் மூலம் அதன் உச்சமான தருணங்களை அடைந்தது என்கிறார். அதன் பின்னர் வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவன் காலகட்டம் 70-களில் மிகச்செழிப்பாகவே தொடர்கிறது என்கிறார். ஆக, அரு.சு.ஜீவானந்தன் தமிழில் சிறுகதைகள் எழுதத்தொடங்கும் முன் வலுவான நவீன இலக்கிய மரபு உருவாகி வந்துள்ளது. அவர்கள் மூலம் தமிழ் புனைவிலக்கியத்தில் பல சாதனைகள் நிகழ்ந்துள்ளன. இந்த நீண்ட மரபில் தமிழ் எனும் மொழியின் மூலம் இலக்கியத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவரின் சிறுகதைகளைச் சமரசமின்றி அணுக வேண்டியுள்ளது.

நவீனத்துவ அழகியல் விமர்சகர்கள் ஒரு பிரதியில் எதிர்பார்க்கும் உணர்ச்சி கலவாத எழுத்து நடை, கச்சிதமான வடிவம், குறிப்புகள் மூலம் தொடர்புறுத்துவது போன்ற அம்சங்கள் எல்லா காலகட்டத்து படைப்புகளுக்கும் பொருந்துவதில்லைதான். இந்த அம்சங்கள் தளர்ந்து பிரசுரமாகும் படைப்புகள் ‘பிரச்சாரம்’ என அவர்களால் சொல்லப்படுகிறது. ‘பிரச்சாரம்’ என்ற சொல், இலக்கிய வெளியில் ஒரு படைப்பாளியை அவமதிக்கும் சொல்லாகவே நவீன விமர்சகர்களால் எய்தப்படுகிறது. ‘பிரச்சாரம்’ இருந்தால் அது கலைப்படைப்பாகாது எனப் பலர் சொல்வதை இன்றும் கேட்க முடிகிறது.  கதையின் மையம்  வெளிப்படும்போதும் சொல்ல வந்த கருத்துக்கு ஆசிரியர் அழுத்தம் கொடுக்கும்போதும் அது பிரச்சாரம் என்று சொல்லப்படுகிறது. எந்தப் படைப்பும் ஏதோ ஒன்றைச் சொல்லவே படைக்கப்படுகிறது. அவ்வகையில் அவை தங்களுக்குள் பிரச்சாரங்களைக் கொண்டே இருக்கின்றன. ஒரு படைப்பில் பிரச்சாரம் (சொல்லவரும் விடயம்) இருப்பது வேறு, பிரச்சாரம் மேலோங்கி இருத்தல் என்பது வேறு. பிரச்சாரம் மேலோங்கி இருப்பதே கலையின் குறைபாடாகும். பிரச்சாரம் மேலோங்குதல் என்பதை, ஒரு புனைவின் ஆசிரியன்  குறிப்பிட்ட கருத்தின் பக்கம் நின்று, அதற்காக வாதாடி, மறு தரப்பின் கருத்தை மறுக்கும் பாணியைக் கூறலாம். கலைநுட்பமுள்ள ஒரு படைப்பு கருத்தைக் கதையினூடே வாசகனுக்கு உணரவைக்கும். அது கதாமாந்தரை கருத்துப்பிரதிநிதியாக மாற்றாது.

திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட பல தொன்மையான இலக்கியங்கள் ஏதோ ஒரு கருத்தைப் பிரச்சாரம் செய்யவே எழுதப்பட்டன. ஆனால், அவை தங்களுக்கான கலைநுட்பத்துடன் வெளிப்பட்டன. அவற்றை இன்றைய நவீன விமர்சன நோக்கில் அணுகுவது சரியாகாது என நவீன இலக்கிய விமர்சகரான ஜெயமோகன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. நவீனத்துவ காலகட்டத்து விமர்சனப்போக்கு எல்லாக் காலகட்டத்துப் படைப்புகளுக்கும் பொருந்துவதில்லை. ஆனால், அரு.சு.ஜீவானந்தன் படைப்புகளை அவ்வாறுதான் அணுகவேண்டியுள்ளது. அப்படி அணுகி அரு.சு.ஜீவானந்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வாசித்து முடித்தபின் அவர் கதைகளில் நான் கண்ட இரு முக்கியமான பலவீனங்கள் மிகை உணர்ச்சியும் மேலோங்கிய பிரச்சாரமும்தான்.

மிகை உணர்ச்சி

மிகை உணர்ச்சி என்பது  நமது அன்றாட வாழ்வில் சந்திக்கக்கூடிய சம்பிரதாயமான உணர்ச்சி நிலைதான். தினமும் தொலைக்காட்சி சீரியல்களை நமது குடும்பத்தினர் பார்த்துக் கண்ணீர்விடுவதும் இந்த மிகை உணர்ச்சியினால்தான்.  தாய்ப்பாசம் உள்ளிட்ட உறவுகள் மீதான பாசமும் தியாகம், காதல் தோல்வி போன்றவைகளை சிற்றுணர்ச்சிகள் எனலாம். இலக்கியத்திலும் இதுபோன்ற உணர்ச்சிகள் இருக்கும். ஆனால், அதைச்சொல்லும் பொருட்டே ஒரு நவீன இலக்கியம் படைக்கப்படுவதில்லை. ஒரு காதல் தோல்வியைச் சொல்வதற்கும் ஒரு நண்பரின் தியாகத்தைச் சொல்வதற்கும் சிறுகதை எழுதப்படுவதில்லை. மாறாக, அவ்வுணர்வை வேறு வகையில் ஆராய்கிறது. நல்ல இலக்கியம் அதற்குப் புதிய பொருள் தருகிறது. ஆனால், மிகை உணர்ச்சியைக் கொண்டுள்ள படைப்புகளோ அவற்றைப் புனிதப்படுத்தி, அப்புனிதம் உடைபடுவதையும் காட்டி வாசகனை அழவைக்க முயல்கின்றன. இலக்கியம் கையாளும் உணர்ச்சிகளில் உள்மடிப்புகள் விரிந்துகொண்டே செல்பவையாக இருக்கும். அவை சொல்வனவற்றை விட அதிகமாக குறிப்புணர்த்தும்.

‘மாளாத இனி மீளாத உறவு’ எனும் சிறுகதை, மிகையுணர்ச்சியை மட்டுமே நம்பிப் படைக்கப்பட்ட சிறுகதை. ஒரு தகப்பன், தன் மகள் விரும்பியவனைத் திருமணம் பேசி முடிக்கச் செல்கிறார். தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி தன் மகளுக்கும் ஏற்படக்கூடாது என நினைக்கிறார். இளமையில் தனது காதலியின் தகப்பனார் திட்டமிட்டுத் தன் காதலியைத் தன்னிடமிருந்து பிரித்த பாதிப்பிலிருந்து மீளாத அவர், தன் மகளுக்காகத் தானே மாப்பிள்ளை கேட்க நடக்கிறார். ஆனால், அங்குதான் தன் மகள் விரும்பியவனின் தாய், தான் முன்பு காதலித்த பெண் எனத் தெரிய வருகிறது. இவரது மகள் தனக்கும் மகள்தான் என காதலியால் அறிவுறுத்தப்படுகிறார். திருமணம் செய்யாவிட்டாலும் புனிதமான காதலுக்குச் செய்யும் மரியாதையாக அந்தத் தியாகத்தைச் சுட்டிக்காட்டுகிறாள். அவர்கள் இருவரும் அவ்விடத்தை விட்டு அகல்கின்றனர் எனக்கதை முடிகிறது.

‘சவங்கள் இங்கே உயிர்வாழ்கின்றன’ என்ற சிறுகதையும் இவ்வாறு மேலோட்டமான உணர்ச்சியைக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைதான். தமிழ்ப்படங்களில் பஞ்சாயத்துத் தலைவரை எதிர்க்கும் கதாநாயகன் போல இந்தக் கதையிலும் ஓர் இளைஞன் ஊர்ப் பெரியவரை எதிர்க்கிறார். ‘தமிழர் இறப்பு நிதி உதவி சங்கம்’ எனும் அமைப்பு தொடங்கப்பட முழுக்காரணியாக இருந்த இளைஞன் ஆசிரியர் தொழிலுக்குப் பட்டணம் சென்று திரும்பி வரும்போது சங்கத்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட பெரியவரால் ஊழல் நடப்பது தெரியவருகிறது. பெரியவரை எதிர்த்து ஆண்டுக்கூட்டத்தில் கேள்வி கேட்கிறான். விளைவாகக் கொல்லப்படுகிறான். அவன் பிணம் நடந்ததைக் கூறுவதாகக் கதை தொடங்கி முடிகிறது.

‘இறைவனை மன்னித்தேன்’ என்ற சிறுகதையையும் இந்த ரகத்தில் சேர்க்கலாம். குழந்தையாக இருந்தபோது இருதயத்தில் ஓட்டை விழுந்ததால் அறுவை சிகிச்சைக்காக நாளிதழில் வந்த செய்தியின் மூலம் பொதுமக்களிடம் பணம் பெற்று அறுவை சிகிச்சை வழி உயிர் பெற்ற சிறுவன் பெரியவன் ஆனதும் நாட்டுக்காக இராணுவத்தில் சேர்ந்து துப்பாக்கியில் இருதயம் துளையிடப்பட்டு இறப்பதோடு கதை முடிகிறது. “என்னவோ கதை சொல்வார்களே அப்படி நடந்துவிட்டது. யார் மேல் பழி சொல்ல முடியும்? ஊரார் கொடுத்த உயிர் ஊரார்க்காகவே போயிற்று” என தாயின் புலம்பலோடு கதை முடிகிறது. ஒருவகையில் தாயின் அந்தக் குரல்தான் கதையின் கரு. அந்தக் கருவைச் சொல்லத்தான் மொத்தக்கதையுமே எழுதப்பட்டுள்ளது.

‘ஒரு நிர்வாண மனம்’ என்றொரு கதை. மனைவியிடம் விலகலைக் காட்டுகிறான் கணவன். குழந்தை பிறந்து இரு மாதங்களுக்குப் பின் அந்த மாற்றம்  நிகழ்கிறது. மனம்விட்டுப் பேசவும் அவன் தயார் இல்லை. கணவனின் மாற்றத்துக்குக் காரணம் ஆராய்ந்தவள் திடுக்கிடுகிறாள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணொருத்தியிடம் கணவனுக்குத் தொடர்புள்ளதை கண்டறிகிறாள். அவனை விவாகரத்தும் செய்கிறாள். பின்னர் ஒரு சமயம் அவளை அவன் விதவைக் கோலத்தில் பார்க்கிறான். தன் அழகு பிறரைத் தூண்டக்கூடாது என்று தான் தேர்ந்தெடுத்த உடை என அவள் கூறி அகல்கிறாள்.

இந்த நான்கு சிறுகதைகளும் வாசகர்களிடம் மிக எளிதாகச் சென்று சேர வாய்ப்புகள் அதிகம். முக்கியக்காரணம், இவை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளவை சிற்றுணர்ச்சிகள் [Sentiments]. மிக எளிதாக  திரைப்படங்கள் மூலமாகவும் அனுபவங்கள் மூலமாகவும் வாசகர்கள் ஏற்கனவே கடந்து வந்த உணர்ச்சிகள் அவை. ஆனால், நல்ல இலக்கியம் காட்டும் உணர்ச்சிகளில் நம்மை நாமே புதியதாக அடையாளம் காண்கிறோம். நம் உணர்வுநிலைகள் முற்றிலும் புதிதாக வெளிப்படுகின்றன. நாம் நமது நிர்ணயங்களை மறு ஆய்வு செய்கிறோம். அவற்றைக் கலைத்து அடுக்குகிறோம். மேற்சொன்ன நான்கு கதைகளும் மிகைநாடகத் தருணம் [Melodramatic Situations] கொண்ட முடிவைக் கொண்டுள்ளதை எந்த வாசகனும் எளிதில் அறியமுடியும். அதை நல்ல சிறுகதை உருவாக்கத்திற்கு எதிரான நிலையாகவே கருதமுடியும்.

மேலோங்கிய பிரச்சாரம்

pic 10அரு.சு.ஜீவானந்தன் தன் சிறுகதைகள் சிலவற்றில் தன் கருத்துகளுக்கு வாதாடுபவராக இருப்பதே அதன் கலை குறைபாட்டுக்கும் காரணமாக இருக்கிறது. உதாரணமாக ‘நான் பகிரங்கப்படுகிறேன்’  என்ற சிறுகதை. ஊருக்காக வாழக்கூடாது. உனக்காக வாழ வேண்டும் என அறிவுறுத்தும் நண்பனால் சிவப்பு விளக்குப் பகுதிக்குப் போகும் ஒருவனின் கதை. இக்கதை ‘நதிகள் கடலில் கலக்கட்டும்’ என்ற தலைப்பில் ‘இலக்கிய வட்டம்’ இதழில் வெளிவந்தது. சமூகக் கட்டமைப்பில் நம்பப்படும் ஒழுக்க நெறிகளைக் கொஞ்சம் கடந்து பார்ப்பதைப் பேசுகிறது இக்கதை. சமூக மதிப்புக்காக தன்னை தன் எண்ணங்களைச் சுருக்கிக்கொள்ள விரும்பாத ஒருவன் அக்கருத்துத் தரப்பின் பிரதிநிதியாக நின்று இக்கதையில் பேசும் வசனங்கள் யாவும் பிரச்சாரமானவை. அதிலும் அவன் பேசுவது ஒரு இளைஞனின் மொழியாக இல்லாமல் ஏதோ போதகரின் மொழிபோல ஒலிப்பது கதையின் யதார்த்தத்திற்குத் தடையாக உள்ளது. நீலப்படம் பார்த்துவிட்டு தனிமையில் இருக்கும்போது நடந்து கடக்கும் ஒரு பெண்ணை நெருங்க எண்ணி அது சட்டத்தின் பிடியில் தவறாகிவிடும் என நிதானமாகி பின்னர் சிவப்பு விளக்குப் பகுதிக்கு அவ்விளைஞன் செல்வதாகக் கதை முடிகிறது.

‘தீர்மானங்கள்’ சிறுகதையில் சிவராமன் என்பவரின் செல்வாக்கை இழக்க வைத்து அவரை ‘தமிழர் ஒன்றியப் பேரவை’ இயக்கத்தின் தலைமைப் பதவியிலிருந்து விலக்க முடிவெடுக்கும் இன்னொரு குழுவும் அந்தக் குழுவின் அபத்தமான திட்டங்களை மறுத்து இயக்கத்தை முன்னெடுக்கும் சிவராமனின் ஆளுமையையும் சொல்லும் கதை. சூழ்ச்சியின் மூலம் சிவராமன் வீழ்த்தப்பட இந்தக் கசடுகளின் கசப்பில் சிவராமன் பேரவையில் இருந்து வெளியேறுகிறார்.

அரு.சு.ஜீவாவின் பெண்கள்

அரு.சு.ஜீவானந்தனின் படைப்புகள் அக்காலகட்டத்தில் சட்டென அடையாளம் காணப்பட அவர் புனைவுலகத்தில் காட்டிய பெண்கள் ஒரு முக்கியக்காரணமாக இருந்திருக்கலாம். அவர்கள் வழக்கமான பெண்கள் அல்ல. அரு.சு.ஜீவா, அவர்களைக் கட்டமைத்திருக்கும் விதம் அக்கால வாசகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கலாம். இவரது கதைகளை வாசிக்கும்போது ஜெயகாந்தனின் புனைவுலகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அரு.சு.ஜீவானந்தன் ஜெயகாந்தனால் வசீகரிக்கப்பட்டவர் என்றே அவரது கதைகள் சான்று பகர்கின்றன.

இந்த அத்தியாயத்தின் மறுபக்கம் என்ற சிறுகதை மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டிய அனைத்துத் தகுதிகளையும் கொண்ட படைப்பு. ஆனால், சிறுகதையைப் பொறுத்தவரை அதன் ஆசிரியர் சொல்கிற தகவல்கள் சிறுகதையாகாது. அவர் சொல்வதை ஒரு கைவிளக்காகக் கொண்டு வாசகன் தேடி அடையும் சொல்லப்படாத இன்னொரு பகுதிதான் ஒன்றைத் தரமான சிறுகதையா இல்லையா என நிர்ணயம் செய்கிறது.  ஒரு வழக்கில் இரு தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலங்களும் அந்த வாக்குமூலங்களைத் தாண்டி உள்ள உண்மையையும் சித்தரிக்கும் கதை இது (இந்த அத்தியாயத்தின் மறுபக்கம்). பெண்ணின் வாக்குமூலம், தன் கணவரைக் காண வந்தவர் தன்னைப் பாலியல் வல்லுறவு கொள்ள முயன்றார் என்றும் ஆணின் வாக்குமூலம் அந்தப் பெண்தான் தன்னை உறவுக்கு அழைத்தாள் என்றும் கூறுகின்றன. ஆயினும் இருவருக்கும் நெடுநாள் உறவு இருந்ததும் அந்த உறவு குறித்து இருவரும் சொல்லவிரும்பாமல் தங்கள் நம்பிக்கையானவர்களிடம் தாங்கள் உண்மையானவர்கள் என நிரூபிக்கப் பொய்களை உருவாக்குகிறார்கள். அதில் பெண்ணின் பொய்யே வெல்கிறது. இந்தக் கதையில் வாசகன் சிந்திக்க எதுவும் இல்லை. கதாசிரியர் முடிவில் பெண்ணின் மனநிலையை விளக்கும்போது அவர்களுக்குள் இருந்த உறவையும் அதை விடமுடியாமல் தொடர்ந்ததால் வந்த விளைவையும் எண்ணிப்பார்ப்பதைச் சொல்வதன் மூலம் வாசகனுக்கு அனைத்தையும் விளக்கிவிடுகிறார். ஒத்த சம்மதத்துடன் சமூகக் கட்டுப்பாட்டைத் தாண்டும் இருவரது உடன்பாட்டுடன்தான் மீறல் நடந்தது என ஒப்புக்கொள்வதில் உள்ள தயக்கத்தை ஜீவா சித்தரித்துள்ளார்.

‘நெருப்புப்பூக்களில்’ வரும் பெண்ணும் தன்னுடன் வேலைபார்க்கும் இளைஞனிடம் நெருங்கிப் பழகுகிறாள். அவனைத் தொட அனுமதிக்கிறாள். காதல் மொழி பேசுகிறாள். ஆனால், அவன் திருமணம் செய்யலாம் என முடிவெடுத்தபின் அவள் அதை மறுக்கிறாள். தனக்குத் திருமணமாகிவிட்ட உண்மையைக் கூறுகிறாள். தான் உடல் ரீதியாக தன் கணவனிடம் திருப்தி அடையாததையும் அதனால் சமுதாயத்துக்காகப் பயந்து தன் ஆசைகளை அடக்கிக்கொள்ள முடியாது என்றும் அவள் கூறுகிறாள். அதே சமயத்தில் தன் காதல் கணவனையும் அவன் மூலம் பெற்ற குழந்தைகளையும் கைவிட முடியாதென்றும் கூறுகிறாள். இயற்கைத் தேவையால் உந்தப்படும் பெண் தன் எல்லைகளைத் தானே தீர்மானிக்கிறாள் எனும் மெல்லிய அதிர்ச்சியை இக்கதை, எழுதப்பட்ட காலத்தில் வாசகர்களிடம் ஏற்படுத்தியிருக்கலாம்.

இக்கதைகள் பண்பாட்டு முரண்களைப் பேசுகின்றன. மற்றபடி முற்போக்கு இலக்கியமாக இவற்றை வகைப்படுத்துதல் சிரமம். வலுவான கதாபாத்திரங்களை உருவாக்குவது அரு.சு.ஜீவானந்தனின் பலம். ஆனால், பெரும்பாலும் அவரது கதாபாத்திரங்களுக்கு அவர் பெயரிடுவதை விரும்பவில்லை. பெரும்பாலும் ‘அவன்’, ‘அவள்’, என்ற சுட்டுப்பெயர்களிலேயே கதையைச் சொல்லி முடிக்கிறார்.

‘நெருப்புப்பூக்கள்’ மற்றும் இந்த அத்தியாயத்தின் மறுபக்கம் ஆகிய சிறுகதைகளில் கூடாத வடிவம் ‘வட்டத்துக்கு வெளியே’ சிறுகதையில் கைகூடியுள்ளது. தன் நண்பனை விமானத்தில் வழியனுப்பித் திரும்பும்போது, யாரோ ஒருவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் ஒருவ

னிடம் அடைக்கலம் கேட்கிறாள். தனிமையில் இருக்கும் அவன் முதலில் தயங்கி, பின் தன் தனிமையில் நுழைய அனுமதி தருகிறான். அந்தரங்க உரையாடல்கள் வரை அவர்கள் நட்பு வளர்கிறது. ஒருசமயம் அடைக்கலம் கொடுத்த நண்பனிடம் 300 ரிங்கிட் பெற்றுக்கொண்ட அவள் கொஞ்சநாள் காணாமல் போகிறாள். பின்னர் சில நாட்களில் திரும்பியவள் வல்லுறவில் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கர்ப்பத்தைக் கலைத்ததைச் சொல்கிறாள். நாடு திரும்பும் காதலனைப் பார்க்கச் செல்கிறாள். தான் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டது ஒரு விபத்து என்றும் அதனால் தன் காதலன் வரும்போது தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டதாகவும் தன் மனதிற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் கூறி விடைபெறுகிறாள். இக்கதையில் அடைக்கலம் தருபவனிடம் அந்தரங்க உரையாடல்கள் மட்டுமே நடக்கின்றன. அதை மீறி அவர்கள் செல்லவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்ளவும் இல்லை. அரு.சு.ஜீவானந்தன், ‘ஒன்றுமே நிகழாத’ அந்தத் தருணங்களை அடங்கிய மொழியில் விவரித்துச் செல்வதும் அதை வாசகன் உணரும்படி செய்வதும் பெரிய சவால். அவர் அதில் வென்றுள்ளார். ஆனால், கதையின் இறுதியில் அவளின் “உன் சமூகப்பார்வையில் இருந்து நீ கேட்கப்போகிற எந்தக் கேள்விக்கும் நான் பதில் சொல்லத் தயார் இல்லை” என்ற வசனமும்  ‘மனிதக்கூட்டம் தனக்காக வகுத்துக்கொண்டிருக்கிற சட்டம், போலிஸ், நீதிமன்றம் எனும் வட்டத்துக்கு அப்பால், ஒரு சராசரியிலிருந்து மாறுபட்டு அவள் பறந்துபோன பாதையையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்’  எனும் அவனது வசனமும் வாசகனிடம் நேரடியாகப் பேச முயல்வதில் இச்சிறுகதை மேலே செல்ல முடியாமல் போகிறது.

இக்கதை மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் புதிய தளங்களைத் தொட்டிருந்தாலும்  நிறைவான சிறுகதையாகாமல் இருக்க, சொல்லப்பட்ட விடயங்களைத் தாண்டி வாசகன் சென்றடைய இடைவெளி இல்லை என்பதே காரணம். சிறுகதையில் வாசகப் பங்கேற்பு அவசியமானது. ‘பாலியல் வல்லுறவை அலட்சியப்படுத்தும் பெண்ணின் மனம்’ என வாசகன் அதில் நேரடியாக ஒரு தகவலை அறியும் வகையில் சொல்லப்பட்ட முடிவே கதையின் பலவீனம். இந்தத் தகவல்கள் மெல்லிய அதிர்ச்சி தரக்கூடியவை. ஒருவகையில் மலேசியாவில் சமூக அறங்களைப் புனைவில் அசைத்துப்பார்ப்பவை. தமிழகத்திலிருந்து பிழைக்க வந்து மதம், சாதி, இன ரீதியாக தங்கள் அடையாளங்களைத் தக்க வைக்க முயலும் மலேசியத் தமிழர்களின் விழுமியங்களைக் கேள்வி எழுப்புபவை. அவ்வகையில் முற்போக்கு அழகியலை ஏற்றுவந்துள்ள கலை வெளிப்பாடாக இக்கதையைச் சொல்லலாம்.  ஆனால், இது அவரது முக்கியச் சிறுகதை இல்லை. ஜெயகாந்தனின் ‘அக்கினிப்பிரவேசம்’ சிறுகதையுடன் ஒப்பிட்டே ஜீவானந்தனின் வட்டத்துக்கு வெளியே சிறுகதையில் உள்ள அடிப்படையான சிக்கலை விளக்க வேண்டியுள்ளது.

பொதுவாக நமது கல்லூரிகளில் இக்கதை மிகவும் மேம்போக்காகவே விளக்கப்படும். ஆனால், நவீன இலக்கிய விமர்சகர் மூலம் இக்கதையின் நுண்மையான தருணங்கள் ஆராயப்பட்டுள்ளன. முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு இளைஞன் மழையில் ஒதுங்கியிருக்கும் பெண்ணை வீட்டில் விடுவதாகக்கூறி அவளை ஆடம்பரமான காரில் ஏற்றிச்செல்கிறான். மழையில் காரில் அவளுடன்

உறவும் கொள்கிறான். அவள் அழுகிறாள். வீட்டில் விட்டுவிடும்படி கெஞ்சுகிறாள். வீட்டுக்குச் சென்றதும் அவள் அம்மாவிடமும் நடந்ததைச் சொல்கிறாள். அவள் அம்மா நடந்ததைக் கேட்டு தலையிலடித்துக் கொண்டு அழுகிறாள். ஆனால், ஊரார்  விசாரிக்க வரும்போது சுதாரித்துக்கொண்டு சமாளிக்கிறாள். மகளுக்குத் தலை முழுகிவிட்டு அவள் கெட்டுப்போகவில்லை அவள் சுத்தமாகிவிட்டாள் என்று சொல்கிறாள். அவள் அம்மாவின் கடைசி நேரப் பேச்சுகள் திரும்பத் திரும்ப புரட்சி எழுத்தாக உயர்க்கல்வி கூடங்களில் சொல்லப்படுவதை இப்போதும் கேட்கலாம்.  “நீ பளிங்குடீ, பளிங்கு. மனசிலே அழுக்கு இருந்தாத்தாண்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பாக்கறே? நான் சொல்றது சத்யம். நீ சுத்தமாயிட்டே… ஆமா – தெருவிலே நடந்துவரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக்கூடப் போறோமே. சாமி, வேண்டாம்னு வெரட்டவா செய்யறார். எல்லாம் மனசுதாண்டி…”  வன்புணர்ச்சியின் பாதிப்பு  கற்பை இழத்தல் ஆகாது எனும் கருத்து இதன் மூலம் சொல்லப்படுவதாகவும் அதுவே ஜெயகாந்தனின் முற்போக்குச்சிந்தனை என்றும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

அந்தப் பெண் கற்பிழந்தாளா இல்லையா என்ற கேள்வியை முன்வைத்து விவாதமெல்லாம் நடப்பதைக்கூட இன்றும் காண முடிகிறது. ஜெயகாந்தன் அந்தக் கேள்வியை மட்டுமே வாசகர் மத்தியில் வைக்க நினைத்திருந்தால் அந்தப்பெண் இளைஞனால் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாகக் காட்டியிருக்கலாம். அவளை மயக்கம் அடைய வைத்துப் புணர்ச்சி கொண்டதாகச் சித்தரித்திருக்கலாம். ஜெயகாந்தன் கதை முழுவதும் கொடுக்கும் குறிப்புகள் அந்த முடிவுக்கானதல்ல. அந்தக் குறிப்புகள்தான் அக்கினி பிரவேசம் சிறுகதையைக் கலைப்படைப்பாக மாற்றுகிறது. அந்தக் குறிப்புகள், அந்தப்பெண் முகத்தில் அச்சத்தைக் காட்டிக்கொண்டே அவனுடன் கூடலுக்குத் தயாராவதையும் அவனுக்கான சந்தர்ப்பங்கள் உருவாக அவள் மறைமுகமாகத் துணைபுரிவதையும் அவனுக்காகவும் தனக்காகவும் சம்மதம் இல்லாத பாவனைகளைக் காட்டிக்கொண்டே தன்னை அனுமதிப்பதாகவும் காட்டும் குறிப்புகள். அம்மாவின் எல்லா புலம்பல்களுக்கும் நடுவில் அவன் கொடுத்துச்சென்ற சூயிங் கம்மை அவள் மென்றபடி இருப்பது உறவின் திருப்தியில் உண்டாகும் உற்சாகத்தின் சுவடுகளை முகத்தில் மறைப்பதற்கான ஒரு துணை சாதனமாக மட்டுமே ஜெயகாந்தன் காட்டுகிறார். அந்தச் சொல்லப்படாத மறைமுக ஒப்பந்தம் வாசகனின் புரிதலுக்கு வரும்போதுதான் அக்கினிப் பிரவேசம் வேறொரு பரிணாமம் எடுக்கிறது.

‘வட்டத்துக்கு வெளியே’ சிறுகதையில் அவள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது அவள் காயம்பட்டு வந்த கோலத்தில் அறிய முடிகிறது. ஆனால், அவள் அடைக்கலம் தேடி வந்தது ஓர் அறிமுகமில்லாத ஆணிடம். அவளை அவன் வன்புணர்ச்சி செய்ய எல்லா சந்தர்ப்பங்களையும் தருகிறாள். அவனிடம் உடலுறவின் சாத்தியங்கள் குறித்துப் பேசுகிறாள். ஆனால், அவன் எல்லை மீறவில்லை. தன்னளவில் தனிமையைத் தேடுபவனாக அவன் இருப்பதுதான் காரணம். இவ்விடத்தில்தான் அக்கதை புதிய திறப்புகளைக் கொடுக்கிறது. முன்பு அவள் வன்புணர்ச்சிக்குள்ளானது ஒரு விபத்தா அல்லது இவனிடம் அவள் காரணமின்றிக் காட்டும் நெருக்கம் போன்ற பழக்கத்தால் வந்த விளைவா எனச் சொல்லப்படாத பகுதி ஒன்று கதையில் இருக்கிறது. அதுவே இக்கதையைக் கலைத்தன்மைக் கொண்டதாக மாற்றுகிறது. ஆனால், அவள் கர்ப்பத்தைக் கலைத்து வருவதும் இறுதி வசனமும் இக்கதையை உச்சம் தொடவிடாமல் மாற்றுகிறது.

அரு.சு.ஜீவானந்தன் தவறவிட்ட சந்தர்ப்பங்களை ‘மனந்திரும்புங்கள்’ என்ற சிறுகதையில் முழுமையாகவே பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லத்தோன்றுகிறது. விளிம்புநிலை மனிதர்களை வைத்து உருவான இந்தக் கதையிலும் ஒரு பெண் வருகிறாள். இக்கதையில் குற்றவாளியாக நீதிமன்றத்தில் இருப்பவனின் தாய் ஒரு பிச்சைக்காரி. போகிற வருகிறவரிடமெல்லாம் கை ஏந்துபவள். குற்றவாளி சிறுவனாக இருந்தபோது அவனது உலகை நசுக்கியவள். அவளிடமிருந்து ஒருத்தி மீட்கிறாள். அவளும் பரதேசியாய் அலையும் ஒரு பெண்தான். இவனிலும் மூத்தவள். இவனிடம் நெருங்கி பழகுகிறாள். குற்றவாளிக்குக் காமம் புரியத்தொடங்கிய வயதில் இருவரும் ஜோடிகளாகவே சுற்றுகின்றனர். அவளை அவன் பிறர் சேஷ்டைகளிலிருந்து பாதுகாக்கிறான். அவளுக்காக அடிபடுகிறான். அவளுக்காக, கிடைக்கும் வேலைகளைச் செய்து உழைக்கிறான். ஒருமுறை அவன் உடல் நோவால் இருநாள்கள் படுத்த படுக்கையாகிறான். உண்ண உணவில்லை. அவள் அவனைத் தனியே விட்டுவிட்டுத் திரும்பி வரும்போது உணவுடன் வருகிறாள். அவள் அவ்வளவு நேரம் எங்குச்சென்றாள் என விசாரித்ததில் முதலில் முரண்டுபிடித்தவள் பின்னர் பணத்துக்காக விபச்சாரம் செய்ததாகச் சொல்கிறாள். அவனால் அதைத் தாங்க முடியவில்லை. அதிகாலையில் கல்லை எடுத்து அவள் மண்டையில் போட்டுக்கொல்கிறான். அவனுக்கு மரண தண்டனை கிடைக்கிறது. ஒப்பீட்டளவில் மனந்திரும்புங்கள் கொஞ்சம் நுட்பமானது. அவ்வகையில் முக்கியமானதும் கூட. காதலனைக் காப்பாற்ற விபச்சாரம் செய்வதையும் அவள் தியாகத்தை அறியாமல் காதலனே அவளைக் கொன்றுவிட்டான் என முடிவின் அடிப்படையில் கதையை மேம்போக்காக ஆராயாமல் இக்கதையில் அந்தப் பெண்ணை மட்டும் ஆராய்ந்தால் மிகச்சிறந்த சிறுகதையாக ‘மனந்திரும்புங்கள்’ உருவெடுக்கும்.

கதையின் தொடக்கத்தில் ஆசிரியர் அந்தப் பெண் குறித்துக் கொடுக்கும் சித்திரம் அற்புதமானது. அவனைப் பிற பரதேசிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற ‘முரட்டுச் சேவல் எம்பி நிற்பதுபோல’ வந்தாள் எனக்கூறுகிறார். அவள் அவனைக்காட்டிலும் வயதில் மூத்தவள். பலமிக்கவள். பின்னர் அவனே அவளைப் பாதுகாப்பதாக எண்ணி கிடைக்கும் வேலையைச் செய்கிறான். அவள் இல்லாவிட்டால் அவனால் இன்னும் எளிதாக வாழ்ந்து கழித்துவிட இயலும். ஆனாலும் அவன் அவளைச் சுமக்கிறான்; அல்லது அப்படி நினைக்கிறான். அவள் அவனிடம் பாதுகாப்புக் கேட்பதாக ஆசிரியர் எங்குமே சித்தரிக்கவில்லை. ஆனால், ஒரு சமயம் அவனுக்கு உடல் நலம் இல்லையெனும்போது அவள் அவனுக்காக விபச்சாரம் செய்து சம்பாதித்து வருகிறாள். அதை அவனிடம் சொல்லவும் செய்கிறாள். ஆரம்பம் முதலே அவளுக்கு எதிலும் பெரிய தயக்கம் இல்லை. அவள் தன்னளவில் முழுமையாக இருக்கிறாள். அவனிடம் ‘நாலு பேருக்கு முந்தானி விரிச்சேன்’ எனச்சொல்லிவிட்டு நன்றாகத் தூங்கியும் விடுகிறாள்.

மிக நுட்பமான உளவியல் கொண்ட கதை இது. அவன் ஓடி ஓடி உழைப்பது அவளுக்காக அல்ல. அவனுக்காகத்தான். அவளால் தனக்காக உழைத்துக்கொள்ள முடியும் என அவன் அறிந்தே வைத்திருந்தான். ஆனால், அப்படி அவள் உழைக்கத்தொடங்கினால் அவன் வசம் இருக்கப்போவதில்லை. அவன் அவளைத் தன்னைவிட்டுப் போகாமல் தற்காக்க வேண்டியுள்ளது. அவள் அவனுக்கானவள் மட்டுமே. அதற்காகவே அவ்வளவு கஷ்டப்படுகிறான். அவளும் அன்பாகவே இருக்கிறாள். ஆனால், இவன் எண்ணத்தில் நம்பும் பாதுகாப்பு என்ற கட்டுப்பாடுகள் அவளிடம் இல்லை. அவளது பாதுகாப்பு உணவு மட்டுமே. அதற்காகவே அவள் வாழ்கிறாள். தன் மிகையான அன்பை அதன் வழியே காட்டுகிறாள்.

ஜீவானந்தனின் சிறுகதைகளில் முக்கியமானதாக அவர் காட்சிப்படுத்தும் விதத்தைச் சொல்வேன். வர்ணனைகளில் அவரால் வாசகனைச் சூழலுக்குள் எளிதாகப் பழக்கப்படுத்த முடிகிறது.  சிறுகதையில் எதையும் வாசகனிடம் சொல்லாமல் காட்டிச்செல்ல அவரால் முடிகிறது. ஆனால், அக்கலையைக் கைக்கொண்டவர் அவ்வப்போது வாசகனுக்குத் தகவலைத் திறந்துகாட்டவும் செய்வது கதையின் தரத்தைக் குறைக்கிறது. மண் என்ற சிறுகதையில் இந்த அம்சத்தைப் பார்க்கலாம் ‘தலைக்கு மேல் சுழல்கிற காற்றாடியும் வெண்மையான சுவர்களும் தன் பக்கத்தில் இன்னொரு படுக்கையும் அதன்மேல் கிடக்கிற நோயாளியும் மனித சஞ்சாரமும்கூட இவனுக்கு இப்போது தான் இருக்கிற இடம் இன்னது என்று ஞாபகப்படுத்தின.’ என மிகக் கவனமாகச் சில காட்சிகளைச் சொல்லி அது மருத்துவனை எனக் குறிப்புகளாலேயே உணரவைக்கிறார். ஆனால், அதற்கு முன்பே ‘நெஞ்சுக்குள் இறங்கிய குளிர்காற்று அந்த மருத்துவ மனையின் நெடியை அவனுக்குள் பரப்பி அவனைச் சராசரிப்படுத்தியது‘ என வாசகனுக்குக் களத்தைப் புரியவும் வைத்துவிடுகிறார். இதுபோன்ற தன்மை அவரது பல கதைகளிலும் காண முடிகிறது.

மொழியை மிகலாவகமாக உபயோகிக்கத் தெரிந்த அவர், அஸ்தமனத்தில் ஓர் உதயம்எனும் சிறுகதையினை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். கோவலனின் தகப்பன் குழந்தைப்பேறு இல்லை என இசைகேட்க பூங்குழலி எனும் பெண்ணை நாடிப் போகிறான். கோவலனின் தந்தையின் பெயர் மாசாத்துவான். பெரும் வணிகன். எல்லாம் இருந்தும் குழந்தை இல்லாத குறை அவனை வதைக்கிறது. பூங்குழலி அவன் மனம் மகிழ இசைக்கிறாள். ஒரு நாள் மாசாத்துவானின் மனைவி கர்ப்பவதியாகிறாள். அவன் மகிழ்ச்சி இசை கேட்பதில் தொடர்கிறது. ஒருசமயம் அப்படிக் கேட்டுக்கொண்டிருக்கும்போது மாசாத்துவானுக்கு மகன் பிறந்ததாகத் தகவல் வருகிறது. அவன் இசைக் கச்சேரியைப் பாதியில் விட்டுச் செல்கிறான். பூங்குழலி முழுமையாகக் கேட்டுவிட்டுச் செல்லக் கெஞ்சுகிறாள். அவன் உதாசீனம் செய்கிறான். குழந்தையின் அழுகையைவிட இசைக்கு என்ன மகத்துவம் எனப் புதிய கோட்பாடுகள் பேசுகிறான். அந்தத் தர்க்கத்தில் வீணையின் நரம்பு அறுகிறது. பூங்குழலி அவனைச் சபிக்கிறாள். அவன் மகனுக்கு வீணையால்தான் வாழ்வு கெடும் எனச் சபிக்கிறாள். அடுத்த நிமிடம் கோவலனின் வாழ்க்கை நம் எண்ணங்களை நிரப்பத் தொடங்குகிறது. ஒரு காப்பிய நிகழ்ச்சியின் முன்சென்று பார்க்கும் கற்பனையும் அதற்கே உரிய திருகலான மொழியும் இக்கதையைச் சிறக்க வைக்கின்றன. ஆனால், அவரது இந்த அத்தியாயத்தின் மறுபக்கம்‘, ‘நான் பகிரங்கமாகிறேன்‘, ‘வட்டத்துக்கு வெளியே போன்ற கதைகளின் வசனங்கள் இதுபோன்ற திருகல் மொழிப் பயன்பாடு பொருந்தவில்லை.

‘அட இருளின் பிள்ளைகளே’  மலேசியாவில் பெரிதும் கவனம் பெற்ற கதை. துலுக்காணம் வாழும் தோட்டத்தில் பொதுத்தொலைபேசி போட அரசு முடிவு செய்துள்ளது. அதற்குப் பொருத்தமான இடமாகத் துலுக்காணத்தின் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதுதான் அந்த ஊரின் மையம். அவனுக்கு நஷ்ட ஈடும் கிடைக்கும் என அறிவிக்கப்பட துலுக்காணம் ஊருக்கு நல்லது நடப்பதென்றால் பணமெல்லாம் வேண்டாம் என்கிறான். ஆனால், துலுக்காணத்துக்கோ அவன் மனைவிக்கோ ‘டெலிபோன்’ என்றால் என்னவென்று புரியவில்லை. ஊர்த்தலைவரோ அவன் வீட்டருகே பொதுத்தொலைபேசி வருவதால் அவனை அவ்வப்போது பாதுகாக்கச் சொல்கிறார். துலுக்காணத்திற்கு அந்தப் பொதுத்தொலை

பேசியின் இருப்பு ஒருவிதக் கிளர்ச்சியைக் கொடுக்கிறது. அதைத் தினமும் ரசிக்கிறான். ஆனால், அவனுக்கு அதை உபயோகிக்கத் தெரியவில்லை. கர்ப்பவதியான அவன் மனைவிக்கு வலி தொடங்குகிறது. அவசரத்துக்கு உதவ யாரும் இல்லாமல் பொதுத்தொலைபேசியின் அருகில் செல்கிறான். அங்கு அது உடைக்கப்பட்டு சில்லறைகள் களவாடப்பட்டுள்ளன. யாருக்கு அழைப்பது என அவனுக்கும் முன் திட்டம் இல்லை. அழைக்க எண்களும் இல்லை. ஆனால், உடைந்து கிடந்த பொதுத்தொலைபேசியால் அவன் அமைதி இழக்கிறான் என கதை முடிகிறது. கதாசிரியர் யாரை ‘இருளின் பிள்ளைகள்’ எனச் சொல்கிறார் எனப் புரியவில்லை. ஒருவேளை அது பொதுத்தொலைபேசியை நாசம் செய்தவர்களை நோக்கிய வசை என்றால் இது பெரியவர்களுக்கான நன்னெறிக் கதையாக மாறவாய்ப்புண்டு. ஆனால், அரு.சு.ஜீவா துலுக்காணத்தின் அறியாமையை நோக்கியே அச்சொல்லைப் பிரயோகிக்கிறார் என்றே புரிந்துகொள்கிறேன். அறியாமையின் குறியீடு இருள். ஆனால், இக்கதையில் துலுக்காணத்தின் அறியாமையும் சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையும் இணைந்தே இருப்பது அதன் கலை நேர்த்தியைப் பலவீனப்படுத்துகிறது. துலுக்காணம் யாருக்கு அழைப்பதென்று தெரியாமல் எண்களை சுழற்றும் காட்சியே கதையின் உச்சம். ஆனால், அந்தத் தொலைபேசி பழுதடைந்திருப்பது அந்த உச்சத்தை அடைவதில் வாசகனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தலைப்பு ஆசிரியரின் குரலில் இருந்தே தொடங்கினாலும் கதை வடிவமைதியுடனே எழுதப்பட்டுள்ளது. எப்படிப் பார்த்தாலும் நவீன சிறுகதைக்கான கச்சிதமான அமைப்பை இந்தக்கதை கொண்டிருப்பதாலும் ஒரு காலகட்டத்தின் அறியாமையை விளக்குவதாலும் மலேசியச் சிறுகதை இலக்கியத்தில் தனித்த இடம் பெறுகிறது.

‘புள்ளிகள்’ சிறுகதை ஜீவானந்தனின் சிறுகதைகளில் தலையாயது எனச் சொல்வேன். பிற சிறுகதைகள் அனைத்தும் 70,80-களில் எழுதப்பட்டிருக்க 90-களில் எழுதப்பட்ட இக்கதையால் அவருக்கு முற்போக்கு அழகியல் முழுமையாகக் கைகூடியிருக்கின்றது என அறியமுடிகிறது. ஆசாரிகள் பட்டறைகளை வைத்திருக்கும் தெருவில் ஓடும் சாக்கடையில் கல்லை வைத்து அடைக்கிறான் குண்டா. அடைத்து, அழுக்குநீரைத் தேங்க வைத்து, இரும்புச்சட்டி போன்ற பாத்திரத்தில் நீரை மண்ணோடு அள்ளி, அதை அலசி, தங்கம் அடிக்கும்போதும் உருக்கும்போது சிதறித்தெறிக்கும் மீதங்களைப் பொறுக்கி எடுத்து ஒரு சீனனிடம் விற்றுவிடுவது அவன் வழக்கம். சீனனிடம் விற்கும் முன் அதை உருக்க ஒரு ஆசாரியின் உதவியை நாடுகிறான். அது வழமையாக நடப்பதுதான். ஆசாரிக்கு, தான் குண்டாவுக்குச் செய்வது பெரிய சேவையாகவே படுகிறது. அதுகுறித்த ஒரு சலிப்பான பெருமிதம் அவர் பேச்சில் வெளிப்படுகிறது.  தங்கத்தை உருக்க குண்டா ஆசாரிக்கு நான்கு ரிங்கிட் தருகிறான். அவ்வாறு உருக்கி விற்கப்படும் தங்கம் அதிக விலைபோகும் என்றும் குண்டா சீனனிடம் சொற்பமான தொகைக்கு விற்று ஏமாந்து வருவான் எனவும் கதைசொல்லியிடம் சாவகாசமாகச் சொல்கிறார் ஆசாரி. ஆனால், குண்டா ஆசாரி அனுமானித்த தொகைக்கு அருகிலேயே விற்றுப் பணம் கொண்டு வரவே அவரால் அதை ஏற்க முடியாமல் போகிறது. வழக்கமாக வாங்கும் தொகையைக் காட்டிலும் ஒரு ரிங்கிட் அதிகம் எடுத்துக்கொண்டு அவனை விரட்டுகிறார். அவரால் அவனது வணிக உத்தியைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர் உடல் நடுங்குகிறது. நுட்பமான மனித உணர்வுகளைச் சொல்லும் கதை இது. குண்டா தன்னளவில் வியாபாரியாக மட்டுமே இருக்கிறான். தன் உழைப்பை மட்டுமே அவன் நம்புகிறான். ஆசாரியின் கருணையை அல்ல. எங்கும் எதிலும் அவன் கடன் வைக்கவில்லை. மலம் ஓடும் சாக்கடையில் கை ஊன்றி தங்கம் தேடுவதே அவன் தொழில். ஆசாரியால் செய்யவே முடியாத தொழில் அது. ஆனால், ஆசாரி அவனுக்குக் கருணை காட்டுவதாக நம்பும் வரை அவரால் அவனைப் பொறுத்திருக்க முடிகிறது. ஒடுக்கப்பட்ட சாதியில் அல்லது பொருளாதார ரீதியில் தன்னைவிடக் கீழாக உள்ள ஒருவன் தனக்கு நிகரான இன்னொரு வணிகனாவதை அவரால் பொறுக்க முடியவில்லை. கருணை என்பது அகங்காரத்தின் இன்னொரு வெளிப்பாடு. தரப்படும் கருணையை ஏற்காத ஒருவனை அகங்காரம் ஏற்பதில்லை. அரு.சு.ஜீவா மார்க்ஸியத்தைக் கற்றபின் எழுதிய கதையாகவே இதை அனுமானிக்க முடிகிறது. வர்க்க பேதங்களை மட்டும் மேலோட்டமாகப் பேசாமல் அதனுள் இருக்கின்ற உளவியலையும் கவனத்தில் கொண்டிருப்பது அவர் எழுத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.  அவ்வகையில் அட இருளின் பிள்ளைகளே  மற்றும் கட்டத்துக்கு வெளியே ஆகிய கதைகளைக் காட்டிலும் புள்ளிகள் மலேசிய இலக்கியத்தில் என்றுமே முத்திரைக்கதையாக இருக்கும்.

அரு.சு.ஜீவானந்தன் புனைவிலக்கியத்தில் ஈடுபடுவதை நிறுத்திப் பல வருடங்கள் ஆனாலும் அவர் இயங்கிய காலத்தில் வலுவான பதிவுகளைச் செய்துள்ளார் என்பதை மறுக்க இயலாது. 90-களில் அவர் ‘புள்ளிகள்’ எனும் ஒரே ஒரு கதையுடன் நிறுத்திக்கொண்டுள்ளார். அவர் தொடர்ந்திருந்தால் மலேசியச் சிறுகதைச் சூழலில் சிறந்த பல சிறுகதைகள் கிடைத்திருக்கும் என்பது உறுதி. மலேசியத் தமிழ்ப்படைப்பிலக்கிய உலகில் அவரை முற்போக்கு அழகியலின் ஒரு தொடக்கமாகவே கட்டமைக்க இயல்கிறது. அதற்கான இடத்தை அவர் மெல்ல மெல்லவே வந்தடைகிறார். பாசாங்கும் பிரச்சாரமும் மலிந்துகிடந்த மலேசியச் சிறுகதைப் பரப்பில்  தனித்த குரலாக அவர் உருவாக்கிய அதிர்வுகள் இன்று  நினைவிலிருந்து மீண்டும் மீண்டும் வாசகர்களாலும் ஆய்வாளர்களாலும் சொல்லப்பட்டே அவர் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அவர் அதிலிருந்து மீண்டு மறுபடியும் தீவிரமாக எழுதத்தொடங்குவதே மலேசிய இலக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

 

(Visited 231 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *