வல்லினம் 100 களஞ்சியத்தில் சிங்கை பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் குறித்து நான் எழுதியிருந்த ‘இல்லாத விளக்கில் உருவாகும் ஒளி’ எனும் விமர்சனக்கட்டுரையை ஒட்டி நண்பர் சிவானந்தம் நீலகண்டன் சில மாற்றுக்கருத்துகளை முன்வைத்திருந்ததை வாசித்தேன். என் விமர்சனக் கட்டுரையில் பல இடங்களில் தவறான அணுகுமுறைகளும் மேலோட்டமான பார்வைகளும் உள்ளதால் அதை விமர்சனத்திற்குள்ளாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதைப் பாராட்ட வேண்டும். சிவானந்தன் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் எனது சில மாற்றுக் கருத்துகளை முன்வைக்க நினைத்தேன்.
கட்டுரையின் தொடக்கம் முதலே சிவானந்தம் சொல்லும் பல விடயங்களில் எனக்குக் குழப்பம் உள்ளது. ‘ஒரு படைப்பாளியை ஒட்டுமொத்தமாக மதிப்பிடுவதற்கு அவரின் அனைத்துப் படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டியது குறைந்தபட்ச அவசியம். சில படைப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு படைப்பாளியின் மீது ஒட்டுமொத்த முடிவுக்கு வரும் விமர்சனங்கள் அதிக மதிப்பில்லாதவை.’ என சிவா சொல்கிறார். நல்ல கருத்துதான். நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ள வேண்டியதுதானே. ஆனால் அதை இங்கே சொல்ல என்ன அவசியம் வந்தது என்றுதான் விளங்கவில்லை.
முதலில், இக்கட்டுரை படைப்பாளியை ஒட்டுமொத்தமாக மதிப்பிட எழுதப்படவில்லை. அவ்வாறான விமர்சனப்போக்கும் இலக்கியத்தில் உண்டுதான். அதில் எழுத்தாளரின் எழுத்துக்கும் வாழ்வுக்குமான தொடர்புகள், கட்டுரைகள் வழி அவர்களது சிந்தனைகள், நேர்காணல்கள் மூலம் அறியப்பட்ட அனுபவங்கள் என விரிவாக ஆராயப்பட்டிருக்கும். ஆனால், இக்கட்டுரை ஒவ்வொரு எழுத்தாளரின் சிறுகதைகள் குறித்து மட்டுமே பேசியுள்ளன. அதுவும் எழுத்தாளர்களின் தொகுப்புகள் குறிப்பிடப்பட்டு அதில் உள்ள கதைகளே விமர்சிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களின் தனிப்பட்ட கருத்துகள், சிந்தனை என எதுவும் ஆராயப்படாத சூழலில் ‘ஒட்டுமொத்த மதிப்பீடு’ எனும் சொல்லாடலின் காரணம் புரியவில்லை. அதேவேளையில் எடுத்துக்கொண்ட சிறுகதைத் தொகுப்புகளில் உள்ள மொத்தக் கதைகளுமே வாசிக்கப்பட்டே விமர்சிக்கப்பட்டுள்ளன. ஜெயந்தி சங்கர் மட்டும் விதிவிலக்கு. அவரே தனது கதைகளில் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த கதைகளுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். நிலை இவ்வாறு தெளிவாக இருக்க சிவானந்தம் அவ்வாறாக உருவாக்கிக்கொண்ட கற்பனைக்கு நான் வண்ணம் பூச முடியாது அல்லவா?
அடுத்து சிவானந்தம் சொல்லும் வரிகள், ‘விறுவிறுப்பான ஒரு சம்பவத்தை மட்டும் நம்பி எழுதப்படுவது சிறுகதை அல்ல என்ற கோட்பாட்டையே நான் மறுக்கிறேன். சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ ஒரு சல்லிக்கட்டு சம்பவத்தை மட்டும் வைத்து விறுவிறுப்பாக எழுதப்பட்ட கதைதான். இன்றும் அனைத்து எழுத்தாளர்களின் பட்டியலிலும் இடம்பெறும் ஒரு முக்கியமான கதையாக அது நீடிக்கிறது.’ என்ற வரியை வாசித்தபின் தலை கொஞ்சம் கிறுகிறுக்கத்தான் ஆரம்பித்தது. வாடிவாசலைப் படிக்கும்போது எனக்கு வயது 24 அல்லது 25 இருக்கும். ஒரு சிறுகதையை நாவல் என நம்பி வாசித்துவிட்டேனா என மீண்டும் சோதித்துக்கொள்ள தேடி எடுத்தேன். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு குறுநாவல். கமலாதேவியின் ‘தாகம்’ சிவா வாசிப்பில் நல்ல சிறுகதையாக இருப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் அச்சிறுகதையை குறுநாவல் போக்குடன் ஒப்பிட்டு எழுத்து நடையை நிறுவ முயல்வது அபத்தம். ‘வாடிவாசல்’ குறித்தும் நான் விரிவாகப் பேசத் தயாராக இருக்கிறேன். அந்நாவலை வாசித்த யாருமே அதில் உள்ள கிழவன் சொல்லும் சல்லிக்கட்டு நுட்பங்களை மறக்க மாட்டார்கள். தன்னளவில் ஆழமான நாவலாக இருக்கும் அதை மொண்ணையாக எழுதப்பட்ட தாகத்துடன் ஒப்பிடுவதான் சி.சு.செல்லப்பாவுக்கு மாபெரும் கேவலம். மேலும் நான் முன்வைத்தது ஒரு கோட்பாடும் இல்லை. அது சிறுகதை குறித்த எனது அபிப்பிராயம் மட்டுமே.
சிவாவின் சிறுகதை குறித்த புரிதலை மொத்தமாகக் குழப்பியது இந்த வரிகள். /‘விரல்’ சிறுகதையைச் சில மாற்றங்களுடன் இணைத்துக்கொள்ள வேண்டிய சிறப்பான கதைதான் என்று விமர்சித்துள்ளார். ஆனால் எனக்குக் கடும் அதிர்ச்சியளித்த கதை இது. கதைப்படி அத்தொழிலாளி மாதாமாதம் காசு அனுப்பினால்தான் ஊரில் அடுப்பு எரியும் நிலை இருப்பதாக வருகிறது. அந்த நிலையில் கதையிலேயே சொல்லப்படுவதுபோல் வருமோ வராதோ என்ற சந்தேகத்துக்குட்பட்ட காப்பீட்டை நம்பித் தன்னை ஊனப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்க அவனுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதைச் சிறப்பான கதையாக விமர்சகர் முன்வைத்துள்ளது ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை./ இந்த வரியைப் படித்ததும் இப்படி நினைத்துப் பார்த்தேன். ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் ரஸ்கோல்னிகோவ் எனும் இளைஞன் ஒரு வட்டிக்கடை கிழவியைக் கோடரியால் அடித்துச் சாகடிக்கிறான். இந்த வரியை வாசிக்கும் ஒருவன் கிழவியைக் கொன்று அவள் சேகரிப்பில் உள்ள நகைகளை எடுத்துக்கொண்டு எப்படி அவனால் தப்ப முடியும்? இதில் நண்பர்கள் உட்பட அனைவரிடம் தான்தான் கொன்றேன் என்பதற்கான குறிப்புகள் வேறு கொடுக்கிறான். அவனுக்கு இவ்வாறு செய்ய என்ன முகாந்திரம் உள்ளது? எனவே இது ஆபத்தான நாவல் எனும் பட்டியலில் சேர்த்தால் அந்த வாசகர் மீது எவ்வாறான மதிப்பீடு நிகழும்? வாழ்வு தற்செயல்கள் மிகுந்தது. காரணங்களையும் நோக்கங்களையும் முன்வைத்து மட்டுமே எந்த எதிர்மறை நிகழ்வுகளும் நடப்பதில்லை. மனிதனை வாழ்வு எவ்வாறான கோர முடிவையும் தனது ஈரமற்ற நிந்தனையால் எடுக்கவைக்கும் என்பதற்கு ‘விரல்’ ஒரு உதாரணச் சிறுகதையாகவே எனக்குப்பட்டது. இதில் அசட்டுத்தனமாக எடுக்கும் அவன் முடிவே அக்கதையை வலுவாக்குகிறது. அவ்வாறு அசட்டுத்தனமாக செயல்படும் ஒருவனின் இறுதி நிலை என்ன என்பதைச் சுற்றிதானே கதை உள்ளது.
சிவா சிறுகதை குறித்த எனது பார்வை தட்டையானது என நிரூபிக்க இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். லதாவின் ‘நாளை ஒரு விடுதலை’ சிறுகதையில் மேலும் ஒரு கருத்தை முன்வைக்கிறார். அதாவது, அந்தப் பணிப்பெண் விரும்பி வீட்டு முதலாளியின் இச்சைக்கு இணங்கவில்லை. அப்படி அவளுக்கு உடல் இச்சை இருந்தால் சாலையில் நடந்து செல்லும்போது ‘ஹவ் மச்?’ எனக்கேட்கும் கூலித்தொழிலாளர்களிமே போயிருக்கலாம். அவள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றே எல்லாக் கொடுமைகளோடு இந்தக் கொடுமையையும் ஏற்றுக்கொள்வதாக எழுதியுள்ளார். சிவா கவனிக்கத் தவறிய இரண்டு இடங்களை இங்கு தொட்டுக்காட்டலாம் என நினைக்கிறேன்.
ஒன்று, “ஹவ் மச்?” என கேட்கும் கூலித்தொழிலாளர்களின் குரலுக்கு அவள் மனதில் ‘என் விலை 200 டாலர்’ எனக்கூறினால் கூலித்தொழிலாளர்களால் கொடுக்கவா முடியும் என நினைக்கிறாள். அவர்களால் கொடுக்க முடியாது என அவளுக்கும் அவர்களுக்கும் தெரியும். அங்கு நடப்பது ஒரு சீண்டல் மட்டுமே. அந்தச் சீண்டலை அவர்களால் அவளிடம் மட்டுமே காட்ட முடியும் எனவும் நினைத்துக்கொள்கிறாள். அதன்மூலமே அவர்கள் நிறைவடைகின்றனர் என அவளுக்கும் தெரியும் என்றே அப்பகுதி விளக்குகிறது. சிவா சொல்வதைப் பார்த்தால் உடல் தேவையுள்ள ஒரு பெண் சாலையோரம் எவனொருவன் உறவுக்கு அழைத்தாலும் “வாங்க அத்தான்” என ஜி.நாகராஜன் நாவலில் வரும் பெண்கள் போல கிளம்பிவிட வேண்டும் என நினைக்கிறாரோ? அவள் பணிப்பெண்தான். ஆனால் பாலியல் தொழிலாளியல்ல. அவளுக்கு தன் உடலை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற தேர்வு உள்ளது. வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வராமல் ஓர் உள்ளூர்வாசிப் பெண்ணுக்கு இவ்வாறான உடல் தேவை இருந்தால், “அதான் ரோட்டுலயே கூப்பிட்டானே போவ வேண்டியதுதானே. போகவில்லையென்றால் அவளுக்கு அவ்வாறான தேவையில்லை” என சிவானந்தன் சொல்வாரா எனக் குழப்பமாக உள்ளது. சிறுகதையின் கடைசி வரியில் ‘நமக்கும்தானே வேண்டியிருக்கிறதே என அன்றும் அவளுக்குத் தோன்றியது’ என்கிறாள் பெண். சிறுகதை இவ்வாறு தெளிவாக சூழலை விளக்கியிருக்க சிவா கதையை அணுகும்விதம் அவரது மேம்போக்கான வாசிப்பையே காட்டுவதாக உள்ளது.
‘ஓடிப்போனவள்’ சிறுகதை குறித்த என் விமர்சனத்தை சிவானந்தம் உள்வாங்கிக்கொண்ட விதத்தின் மூலமே அவரது வாசிப்பை ஓரளவு புரிந்துகொண்டேன். கட்டுரையில் நான் நான்ஸி எனும் சிறுமிக்கு வீட்டை விட்டு ஓடிப்போவது ஒரு விளையாட்டுபோல உள்ளது என்றும் அவள் அம்மாவும் அதை ஒரு விளையாட்டுபோலவே அணுகுகிறாள் என்றும் எழுதியிருந்தேன். சிவானந்தன் அதற்கு அக்கதையின் நான்ஸிக்கு ஓடிப்போவது ஒரு விளையாட்டல்ல என எழுதுகிறார். அதாவது இங்கு நான் விளையாட்டைப்போல என்பதை சிவா விளையாட்டு என்றே புரிந்துகொள்கிறார். அவன் கொலையை ஒரு விளையாட்டுபோல செய்து முடித்தான் என்றால் அவன் கத்தியை வைத்துக்கொண்டு விளையாடினான் எனும் பொருள்படாது. மாறாக அத்தனை காத்திரமான ஒரு செயல் மனதளவில் எவ்வளவு இலகுவாக அணுகப்படுகிறது என்பதையே அது குறிக்கும். வீட்டை விட்டு ஓடும் சிறுமியோ அவள் அம்மாவோ மரபாக நாம் நம்பும் வீட்டை விட்டு வெளியேறுதல் எனும் தீவிரத்தன்மையோடு அதை அணுகவில்லை என்பதை நீட்டி முழக்காமல் சுருக்கமாகக் குறிப்பிட்டேன். நாகரீகம் அதை எவ்வாறு எளிமைப்படுத்தியுள்ளது என்பதின் சாரமே அது. உண்மையில் விமர்சனம் முழுக்க இவ்வாறு சுருங்கச் சொன்ன எதற்குமே சிவாவுக்குத் திருப்தியில்லை. விரிவாகச் சொல்லவில்லை என்றே குறைபட்டுள்ளார்.
‘உறவு மயக்கம்’, ‘பச்சை பெல்ட்’ போன்ற கதைகள் குறித்து சிவானந்தனுக்கு மாறுபட்ட கருத்திருப்பது இயல்பே. எந்தக் கதையும் ஒவ்வொரு வாசகனுக்கு முக்கியமானதாகவும் அப்படி அல்லாததாகவும் இருப்பதும் இயல்புதான். சிவானந்தன் அக்கதைகளை அவர் வாசிப்பின் நெருக்கமாக உணர்வது பற்றி என்னிடம் எந்த மாற்றுக் கருத்தும் இல்லாததுபோலவே நான் முன்வைத்த விமர்சனத்திலும் மாற்றம் இல்லை. சில நாட்களுக்கு முன் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ எனும் நாவலை வாசித்து முடித்தேன். மனோஜ் குமார் மூலம் மலையாளத்தை மூலப்பிரதியாகக் கொண்டு தமிழில் கே.வி.ஜெயஶ்ரீ மூலம் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஜெயமோகனும் (மலையாள நூலுக்கு) நாஞ்சில் நாடனும் (தமிழுக்கு) முன்னுரை எழுதியிருந்தனர். சங்கத் தமிழர்களின் வாழ்வை மையமாகக்கொண்ட நாவலை வாசித்து முடித்தவுடன் மொழி ரீதியாக எவ்வித பாதிப்பையும் கொடுக்காத எளிய நாவலாகவே எனக்குத் தோன்றியது. கொற்றவை கொண்டு செல்லும் உலகத்தினோடு ஒப்பிடுகையில் இது மிக எளிய முயற்சி என்றே தோன்றியது. நாஞ்சில் நாடனுக்கு அதன் தமிழ் வடிவம் சிலாகிக்கும் வகையில் இருப்பதில் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை. என்னளவில் அது மேலோட்டமான நாவல். அப்படித்தானே இருக்க முடியும். காரணம் வாசிப்பு அந்தரங்கமானது.
இறுதியாக, சிவானந்தம் தனது கட்டுரையில் நான் முன்வைத்து எழுதிய கதைகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து தனது கருத்துகளைக் கூறியுள்ளார். அதுவும் அவர் முரண்படும் இடங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். மாதங்கி கதை குறித்த எனது விமர்சனம் பற்றி ஒன்றுமே எழுதவும் இல்லை. தான் வாசித்த கதைகளோடு மட்டுமே ஒரு விமர்சனக்கட்டுரையை அணுகும் சிவானந்தன் ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற உக்கிராணத்தனமான சிந்தனை இலக்கியத்துக்கு ஒவ்வாது’ என ஜெயகாந்தன் சொன்னதைக் கோடிகாட்டுவதெல்லாம் முரண்நகைதான்.