பேச்சி : ஈரோடு கிருஷ்ணன் கடிதம்

நவீன் ,ஈரோடு கிருஷ்ணன்

நான் சிறுகதைகளை மதிப்பிடும் போது இரண்டு விஷயங்களை பார்ப்பேன். ஒன்று அது விதிவிலக்கான பாத்திரங்களை கொண்டுள்ளதா? இரண்டு அது கனமான சம்பவத்தை கொண்டுள்ளதா ?
விதிவிலக்கான பாத்திரங்கள் என்றால் மனச் சிதைவுக்குள்ளானவர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் நடிகர்கள், சாதனையாளர்கள் , கலைஞர்கள் போன்றவர்கள்.
கனமான சம்பவம் என்றால் இறப்பு, கொலை, தற்கொலை, கற்பழிப்பு, துறவு பூணுதல், சாதனை செய்தல் போன்றவை.

இவை இரண்டும் இருந்தும் அரிதாகவே அது ஒரு உயர்ந்த கதையாக இருந்துள்ளது. தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற எழுத்தாளரின் நோக்கத்தால் எளிதில் இந்த இரண்டையுமோ அல்லது ஏதேனும் ஒன்றையோ கையாள்வார்கள். அது பரிதாபமான தோல்வியில் சென்று முடியும்.
எந்நோக்கில் சாதாரண  மாந்தர்களின் சாதாரண சம்பவத்தில் துலங்கும் அசாதாரண கோணம் அல்லது தரிசனம் அதை ஒரு உயர்வான கதையாக்குகிறது. பெரும்பாலும் அசோகமித்திரனில் இதை காண்கிறேன்.
அசாதாரண மாந்தர்களின் கைகளில் அசாதாரண சம்பவங்கள் என்றால் அது அதி உயர்வான தரிசனமாக இருக்க வேண்டும். புதுமை பித்தனின் சிற்பியின் நரகம் போலவோ, நபகோவின்    “Signs and Symbols”   போலவோ, அல்லது என்றைக்குமான தத்துவ சிக்கலை அவிழ்க்க முயலும் ஜெயமோகனின் பெரும்பாலான  கதைகளை போலவோ  எதிர்பார்ப்பேன். பிறகு தான் மொழி மேன்மை, விவரிப்பு  மற்றும் வடிவ நேர்த்தி.
“பேச்சி” ஒரு எழுத்தாளன்/ பதிவாளன் / கதை சொல்லல் என்கிற துவக்கமே எனது நோக்கில் ஒரு பின்னடைவு.
“காலில் ஓர் ஆடவனை மிதித்துக்கொண்டும் இரு கைகளில் குழந்தையை அணைத்துக்கொண்டும் செத்தவனின் குடலை மாலையாக அணிந்துகொண்டும் இரு கைகளில் ஆசி வழங்குவதை  அவன் கனவுகளில் பலமுறை கண்டுள்ளான். “
இது தான் கதையின் மைய்ய நோக்கு என எண்ணுகிறேன். சக்தி – தாய்மை, அதிகாரம் – ஆண்மை என்கிற நிரந்தர  இரு சரடில்  பெண்ணின் கருணையில்தான் நாம் என முடித்திருக்கிறீர்கள், கூடவே ஒரு தலைமுறையின் மதிப்பீடு  மாற்றம் கவனிக்கத் தக்கது (அறையில் மாட்டி வைப்பதும் செல் போனில் சேகரிக்கும் படமும்), ஒரு தலைமுறையின் ஆதர்சங்கள் எல்லாம் அடுத்தததில் சாதாரணமான செய்தியாக அல்லது பிம்பமாக அர்த்தப்படும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட படிமம் என்றால் அது ஒன்றை ஒன்று வீழ்த்தும் ஆகவே ஒரு சிறுகதையில் ஒன்று தான் இருக்க வேண்டும் அதை தவிர்ப்பது ஒரு எழுத்தாளனின் சவால் என சுந்தர ராமசாமி சொன்னதாக ஜெயமோகன் ஒரு உரையாடலில் கூறினார்.
இதில் பேச்சி ஒரு தனித்துவமான படிமம் அது போதுமானது. ஆலமரம் – நீர் உறிஞ்சும் செம்பனை -காட்டுப் பன்றி  போன்ற உருவகங்கள் ஒரு கதைக்கு சற்று சுமைதான்.
இது மொழியாலும், நுண் விவரிப்பாலும், வடிவ நேர்த்தியாலும்  வாசிக்கத்தக்க கதையாக எனக்குள்ளது, ஆனால் அற்புதமான கதை என கூற  இயலவில்லை.
காரணம் எனது போதாமையாகவும் இருக்கலாம்.
கிருஷ்ணன் 
ஈரோடு        
(Visited 171 times, 1 visits today)