மதியழகன் குறிப்புகள் : போலி அறிவுவாதப் புற்று – ம.நவீன்

பகுதி 1

கலை இலக்கிய விழா பணிகளின்போது பொதுவாக வேறு சங்கதிகளில் ஈடுபடுவதில்லை. அது Michael-Rosen-Quackery-Watchநேரத்தைச் சன்னஞ்சன்னமாக உறிஞ்சும். அதே மனநிலையில்தான் மதியழகன் முனியாண்டி தன் முகநூலில் எழுதியுள்ள குறிப்பை ஒரு முகநூல் பதிவாக மட்டுமே எண்ணி புறக்கணிக்க நினைத்தேன். எளிய கலந்துரையாடலுக்குக்கூடத் தகுதியற்ற பிதற்றல்கள் அவை. குறிப்புகளை ஒட்டி விஜயலட்சுமி எழுப்பிய சில அடிப்படையான கேள்விகளை அவர்  ‘கிறுக்கல்கள்’ எனப் புறம்தள்ளி விட்டிருந்தார். சரி என அவரது முந்தைய சில குறிப்புகளை வாசித்தபோது கடும் அதிர்ச்சி. கட்டுரையைவிட அதைப் பாராட்டி எழுதப்பட்ட கருத்துகள் மேலும் குழப்பங்களையே உண்டு செய்தன. முகநூலில் போலி புத்திஜீவிகள் எவ்வாறு உருவாகின்றனர் என மதியழகன் முனியாண்டியின் முகநூலை வளம்வந்தால் போதும் எனப்புரிந்தது. எதையும் சிந்திக்க முடியாத ஒரு தரப்பு இளைஞர்கள் எத்தனை பரிதாபமாக இவ்வாறான அரைவேக்காட்டு எழுத்துமுறையில் சிக்கிக்கொள்கின்றனர் எனவும் அறிய முடிந்தது.  எனவே, இந்தக் எதிர்வினை அல்லது விளக்கம் மதியழகனுக்கு மட்டுமல்ல. மதியழகனால் வெகு எளிதில் இந்த எதிர்வினையைக் கடந்து செல்ல முடியும். அதற்கு அவரிடம் Mark Zuckerberg முகநூலில் உருவாக்கிக்கொடுத்த கிண்டல் சிரிப்பு சின்னம், ‘ஹஹஹ..’ என சத்தமிட்டு சிரிக்கும் பாவனை, இது ஒரு மாற்றுக்கருத்து என்ற பெருந்தன்மையான வசனங்கள் உதவக்கூடும். எனவே கொஞ்சம் மேம்பட்டு சிந்திக்கும் ஆர்வம் இருந்தால் பிற வாசகர்கள் தொடர்ந்து வாசிக்கலாம்.

மதியழகன் முனியாண்டி எழுதியக் குறிப்புகள் (மன்னிக்கவும் அவர் இதுவரை எழுதிய எதுவுமே நீண்ட கட்டுரைகள் அல்ல. இதை பின்னர் பேசுகிறேன்) அடிப்படையான மூன்று குறைபாடுகள் உள்ளன.

1. முதலாவது குறைபாடு. அவர் கூறும் பல கருத்துகளுக்கு அவரிடம் ஆதாரம் இல்லை. மாறாக அவை ஓர் ஊகம் அல்லது அவதூறு மட்டுமே.

 • எ.கா :
  வாசிக்கும் பழக்கம் குறித்து இங்கு யாரும் ஒரு தெளிவான/முறையான ஆய்வு செய்ததில்லை. இன்னொன்று உண்மையான தகவல்களை/தரவுகளை யாரும் வெளியில் சொல்வது இல்லை.

இந்தக்கூற்றைச் சொல்ல முதலில் இதற்கு முன், வாசிப்பு குறித்து நடந்த ஆய்வுகளின் பட்டியல் தேவை. அவர் தமிழ் நூல்கள் வாசிப்பு மட்டும் என்றால் மலாயா பல்கலைக்கழகத்திலும், முத்தமிழ் படிப்பகத்திலும் கடந்த மூன்றாண்டுகள் வாசிக்கப்படும் நூல்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்திருக்கலாம். அவற்றுக்கான கணக்கெடுப்புகள் அவர்களிடம் இருக்கும். அல்லது மலாயா பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற தலைப்புகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா எனக்கேட்டிருக்கலாம். அல்லது பொதுவான வாசிப்பு என்றால் தேசிய நூலகத்தில் மூன்றாண்டு தரவுகளைக் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் ‘முறையான ஆய்வு செய்யப்பட்டதில்லை’ எனச் சொல்வது அவரது அனுமானம். குறைந்தபட்சம் அந்த அனுமானத்தைச் சொல்லவாவது சில நடைமுறை ஆதாரங்களை முன்வைக்கலாம். அதுவும் இல்லாமல் அந்த அனுமானங்கள் அம்போவென நிற்கின்றன.

 • எ.கா :
  தன் வாழ்நாளில் ஒருவர் 500 சிறுகதைகள், 12 நாவல்கள் எழுதியுள்ளார். ஆனால் வெகு சிலருக்கே அவரைத் தெரிந்திருக்கிறது. மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமையாக மா.இராமையா கருதப்படுகிறார். ஆனால் அவரைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.

ஒரு திரைப்படத்தில் வடிவேலு ஒருவரிடம் நன்றாக அடிவாங்கிவிட்டு ‘என் கட்சிக்காரரை கதற கதற அடித்தார்கள்’ என மேடையில் கதறுவார். எனக்கு அந்தக் காட்சி ஞாபகம் வந்துவிட்டது. மதியழகன் மா.இராமையாவை அறிந்திருக்கவில்லை. அந்த நேர்காணலை வாசித்த அதிர்ச்சியில் அவரே அதை ஒப்புக்கொண்டார். இப்போது பலருக்கும் மா.இராமையாவை தெரியவில்லை என்பது யார் அந்த பலர் என்றே கேட்கத்தோன்றுகிறது. அதற்காக ஏதும் ஆய்வு செய்தாரா? மலேசிய இலக்கியச் சூழலில் தீவிரமாக இயக்குபவர்கள் மா. இராமையாவை அறியாதவர்களாக இருக்க முடியாது. இந்நாட்டில் ‘இரத்ததானம்’ என்ற முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டவர். இலக்கியக்குரிசில் எனும் இதழ் நடத்தியவர், மலேசிய இலக்கிய வரலாற்றை எழுதியவர். கார்த்திகேசு உள்ளிட்ட எந்த ஆய்வாளரும் அவர் ஆய்வை மேற்கோள் காட்டாமல் இருந்ததில்லை. அப்படி இருக்க அவருக்குத் தெரியாத ஒன்றை அவர் கட்சிக்காரருக்குத் தெரியவில்லை என வருந்துவது எவ்வளவு அபத்தம். மலேசிய இலக்கிய வரலாற்றை எழுதியவரை அறியாமல் எவ்வளவு அவதூறுகள் எளிமையாக வைக்கப்படுகின்றன. இதை அவர் திட்டமிட்டே செய்கிறார். தன்னைப்போலவே மா.இராமையாவை அறியாத கூட்டம் ஒன்று இருப்பது அவருக்கும் தெரியும். அவர் எழுதுவது அந்தக் கூட்டத்துக்கு. இந்தக் கூட்டம்தான் முகநூலிலும் ஆமோதித்துக் கருத்திடும். இந்தக் கூட்டத்தின் கோஷம் அக்கருத்து உண்மை போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். கால ஓட்டத்தில் வாசிப்பு, தேடல் அற்ற இந்த வெற்றுக்கூச்சலும் ஒரு தரப்பின் கருத்தாக நிறுவப்படும். நிற்க, இங்கு மா.இராமையாவை அறியாததைப் போன்றே உலகில் பல ஆளுமைகளும் மேதைகளும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற கூச்சல் கும்பல்களால் அறியப்படாமலேயே இருந்துள்ளனர்.  அவர்களை உதாரணம் காட்டியெல்லாம் குறைந்தபட்சம் அந்தத் தளத்தில் நின்றுகூட நான்  இவர்களிடம் விவாதிக்க விரும்பவில்லை.  ஆம்! இவர் அதற்குக்கூட சரிவர மாட்டார்.

 • எ.கா :
  //தமிழ்ப் பத்திரிகைகளை யாரும் வாங்கி படிக்காமல் போனதற்கு வாசிக்கும் பழக்கம் குறைந்தது ஒரு காரணம் அல்ல. தமிழ்ப் பத்திரிக்கைகளை நடத்த தெரியாததும், இன்றைய நவீன வாசகர்களுக்கு தேவையானதைக் கொடுக்க தவறியதும்தான் முக்கிய காரணம்.// என்றுக்கூறி //குறைந்தபட்சம் பக்க வடிவமைப்பையாவது மாற்றி தொலைக்கலாம். அதுவும் இல்லை. The Star, Berita Harian, NST போன்ற பத்திரிக்கைகளின் பக்கங்கள் மிக அழகாக வடிவமைக்கிறார்கள்.// எனத்தொடர்ந்து // தமிழ்ப் பத்திரிகைகளின் விற்பனை மிகவும் மோசமாக இருப்பதற்கு காரணம் தமிழ் குடும்பங்களில்/தமிழர்களிடையே வாசிப்பு பழக்கம் இல்லை என்பது அல்ல. தமிழ்ப் பத்திரிக்கைகளின் தரம் மற்றும் செய்திகள் கவரும் வகையிலும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இல்லை என்பதே முக்கிய காரணம்.// என்று அறிய கண்டுப்பிடிப்பைச் செய்துள்ளார்.

அப்படியானால் அவர் கூறும் The Star, Berita Harian, NST ஆகியவற்றின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்துள்ளதா? அதற்கு ஆதாரம் கேட்டால் சொல்லவா போகிறார். சரி போனால் போகிறது நாளிதழ்களை விடுவோம். மலாய் மொழியில் வெளிவருகின்ற ஜனரஞ்சக இதழ்களின் விற்பனை சரிவு கண்டதால் புடுராயா, லெபோ அம்பாங் பகுதிகளில் கடைகளை இழுத்துமூடிவிட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் அவற்றின் விற்பனை எண்ணிக்கை என்ன? ஏதேனும் கணக்கெடுப்பை மதியழகன் நடத்தியுள்ளாரா? The Star, Berita Harian, NST தரமானவைதான். வடிவமைப்பில் அசத்துபவைதான். அந்தத் தரத்தின் காரணமாகவே அவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது; அல்லது குறைந்தபட்சம் சரிவில்லை என நிரூபிக்காமல் தமிழ்ப்பத்திரிகை தரமில்லாததால் சரிவு கண்டன என சொல்வதுதான் ‘நீண்ட கட்டுரையின்’ பணியா?

கவனிக்க, போலி அறிவுவாதிகளின் கட்டுரையில் எப்போதும் ஒரு நுண்ணிய ஏமாற்றுத்தனம் இருக்கும். அவர்கள் ஒரு உண்மையுடன் பொய்யைப் புனைந்து இட்டுக்கட்டுவதில் திறன்பெற்றிருப்பர். உதாரணமாக மலேசியாவில் தமிழ் நாளிதழ்கள் விற்பனை குறைந்துவிட்டது என்பது உண்மை. ஆனால் அதற்கான காரணம் வாசிப்புப் பழக்கம் குறைபாடா எனச் சொல்லவே தேடல் தேவைப்படுகிறது. முன்னதில் உள்ள உண்மையில் ஒரு பொய்யை இணைத்துக்கட்டும்போது சிந்தனையற்ற வாசகர்களுக்கு அது முழுமையுமே உண்மைபோல தோன்றக்கூடும். அவர்கள் மூளை இதைப்பகுத்தறியாது. இந்த அவசர வாசகர்கள்தான் மதியழகன் போன்றவர்களின் வாசகர்களாகிறார்கள். அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

 • எ.கா :
  //முன்பு காலத்தில் எல்லா பஸ் ஸ்டாண்டிலும், பேருந்து நிலையத்திலும் புத்தக கடைகள் இருக்கும். அங்காங்கே பொட்டி கடைகளில் (பெட்டிக்கடை) புத்தகங்கள் விற்பார்கள். ஆனால் இன்றைய திகதியில் பொட்டி கடைகளும் புத்தக கடைகளும் பார்ப்பதே அரிதாகி விட்டது. புத்தக கடைகளும் பொட்டி கடைகளில் புத்தகங்கள் விற்பனை செய்வதில்லை என்கிற காரணத்தை காரணம் காட்டி, தமிழ் குடும்பங்கள்/தமிழர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்று அபத்தமாக கணக்கெடுக்கிறோம்.//

இந்த அபத்தமான கணக்கெடுப்பை யார் செய்தார்கள் என கட்டுரையின் கடைசியில் குறிப்பு ஏதேனும் உண்டா என தேடோ தேடென தேடினேன். ஒன்றையும் காணவில்லை. முதலில் இவர் குறிப்பில் எந்தக் கணக்கெடுப்பும் இல்லை எனக் கவலைப்பட்டேன். அடுத்து கணக்கெடுப்பு என இல்லாத கணக்கெடுப்பைச் சொல்கிறார். ஆனால் நமது முகநூல் வாசகர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன?

 • எ.கா :
  புத்தக வெளியீடு என்பதுதான் தீவிர வாசிப்பின் அளவுகோலாக இங்குப் பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் வெளியிடப்படும் புத்தகத்தின் விற்பனையை அடிப்படையாக் கொண்டு தீவிர வாசிப்பின் பழக்கத்தை முடிவு செய்கிறார்கள்.

யார் முடிவு செய்கிறார்கள்? எனக்குத் தெரிந்து அப்படி யாரேனும் கட்டுரையோ அல்லது கருத்தையோ எழுதியதில்லை. உதாரணமாக இந்நாட்டில் வைரமுத்து புத்தகம் வெளியீடு காணும்போது அரங்கு நிறைகிறது. யாராவது அங்குக் கூடிய கூட்டத்தால் தீவிர வாசிப்பு வளர்ந்துவிட்டதாகச் சொன்னார்களா என்ன? புத்தக வெளியீட்டு கூட்டத்துக்கும் தீவிர வாசிப்பின் அளவுகோளுக்கும் என்ன சம்பந்தம்? என்ன கணக்கு இது? யார் சொன்னார்கள், எங்கு சொன்னார்கள் என எதுவும் இல்லாமல் மதியழகன் இந்தக் கட்டுரையில் மட்டுமல்ல இதற்கு முன் எழுதிய பல கட்டுரைகளிலும் தாவித்தாவி செல்கிறார்.

ஆம்! இதற்கு முன் அவர் எழுதிய கட்டுரைகளை வாசித்தாலும் இந்த நிலைதான். ஆனால் இந்தக் குறைப்பாட்டைச் சமாளிக்க அவர் வைத்துள்ள உத்தி மிக அபாரமானது. ‘நான் எழுதிய கட்டுரையில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று சொல்பவர்கள், அடிப்படை ஆதாரத்தோடு பொய் என்று நிரூபிக்க வேண்டும்.’ என மே 15இல் ‘செடிக் கட்டுரையின் தாக்குதல்’ எனும் முகநூல் குறிப்பில் எழுதியுள்ளார். அதையே மீண்டும் வலியுறுத்திக்கேட்டால், ‘ஏதோ எனக்கு தெரிந்ததை, என்னால் முடிந்ததை எழுதுகிறேன்… என்னிடம் புள்ளி விபரம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்…? ஏதோ எனக்கு தோன்றியதை எழுதிக் கொண்டிருக்கிறேன்…’ எனச் சமாளிக்கிறார்.

இதை இப்படி எடுத்துக்கொள்வோம். அவர் ஒருவனைப் பார்த்து அவருக்குத் தோன்றிய வகையில் ‘அவன் ஒரு கொலை செய்துள்ளான்’ எனச் சொல்லி பெயரைக் களங்கப்படுத்துவார். நாம் அதற்கான ஆதாரம் உண்டா எனக்கேட்டால் ‘நான் சொன்னதில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று சொன்னால், அடிப்படை ஆதாரத்தோடு பொய் என்று நிரூபி’ என நம்மிடமே திருப்பிவிடுவார். நாம் நாக்குத் தொங்க ஆதாரம் தேடவேண்டும். இதைதான் போலி அறிவுவாதம் என்பார்கள். மேலோட்டாமாகப் பார்க்க அறிவுசார்ந்த எழுத்துபோல இருந்தாலும் அவை அடிப்படையில் சந்தேகங்களை மட்டுமே எழுப்பும் நீண்ட கிசுகிசுக்கள் மட்டுமே.

2. இரண்டாவது குறைபாடு. அவர் கூறும் கருத்தின் தெளிவின்மை.

 • எ.கா :
  ஒடுக்கப்பட்ட, சமூகத்தின் கடைநிலை மக்களை குறித்து எழுதுவது அல்லது வாசிப்பது தீவிர இலக்கியமாக பார்க்கப்படுகிறது. இங்கு தீவிர வாசிப்புக்கு சில விதிமுறைகளையும் கட்டுபாடுகளையும் வைத்திருக்கிறார்கள்.

2005 தொடங்கி இலக்கியத்தில் ஈடுபட்டு வருகிறேன். தீவிர இலக்கியத்துக்கு இப்படி ஒரு விளக்கத்தை சர்வ நிச்சயமாக எங்கும் வாசித்ததில்லை. கொஞ்ச நேரம் மண்டை சுழன்று இதுவரை நான் வாசித்த எழுத்துகளைக் கொஞ்ச நேரம் ஓட்டிப்பார்த்தேன். மதியழகன் கூற்றுப்படி தமிழில் ஓரிருவரைத் தவிர வேறு யாருமே தீவிரமான எழுத்தாளர்கள் இல்லையே என மனச்சோர்வே மிஞ்சியது. சரி இதை ஒருவாராக ஜீரணித்துக்கொண்டு அடுத்தவரிக்குப் போனால் அங்கும் இன்னொரு தலைச்சுற்றல்.

 • எ.கா :
  தீவிர வாசிப்பு என்பதனை இங்கு இரு வகையாக பார்க்கலாம். தேடலுக்கான வாசிப்பு ஒரு வகை. பொழுது போக்கிற்காக வாசிப்பது இன்னொரு வகை. இரண்டுமே தீவிர வாசிப்பு வகையில் சேருகிறது.

frustratedபொழுது போக்கு வாசிப்புக்கும் அவ்வகை எழுத்துக்கும் மாற்றான இலக்கிய தீவிர வடிவத்தையும் பொழுதுபோக்கு எழுத்தையும் ஒரே பெட்டியில் அடக்கி இரண்டுமே ஒன்றென சொல்வதற்கு முன் குறைந்தபட்சம் தமிழில் மட்டும் (உலக இலக்கியமெல்லாம் வேண்டாம்) இதுகாலம் வரை வரையறை செய்துவைத்திருக்கின்ற இலக்கியப் போக்கையும் அதன் நோக்கங்களையும் அதன் முன்னெடுப்புகளையும் கொஞ்சம் தேடி வாசித்திருக்கலாம். ‘நவீன இலக்கிய வரலாறு’ (ஜெயமோகன்) எனும் எளிய நூல் கிடைக்கிறது. அதில் வாசிப்பு வகை என்றே தனிக்கட்டுரைகள் உள்ளன. அடிப்படை வாசிப்புக்கு அது உதவும். கொஞ்சம் பின்னால் சென்றால் கா.ந.சு, சி.சு.செல்லப்பா போன்றோரும் எழுதியுள்ளனர். ‘காற்றில் அலையும் பேரோசை’ எனும் நூலில் சுந்தர ராமசாமி எழுதியுள்ளார். சரி ஆரம்பப்பள்ளி அளவில் தேவையா? கோவை ஞானி முதல் பூரண சந்திரன் வரை எளிமையாக உதாரணங்களோடு எழுதியுள்ளர். ஒன்றும் அவசரமில்லை. பொறுமையாக வாசித்து நீண்ட கட்டுரை எழுதலாம்.

 • எ.கா :
  மலேசிய இலக்கியம் என்று பார்க்கும்போது வல்லினத்தை ஒதுக்கிவிட்டு நாம் தொடரமுடியாது. அவர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆனால் வல்லினம் எந்த மாதிரியான வாசகர்களை உருவாக்கி வைத்திருகிறது?

எந்த மாதிரி வாசகர்களை? பதிலைச் சொல்லாமல் அடுத்துத்தாவிச்சென்றால் என்ன அர்த்தம். வல்லினத்தின் வாசகர்கள் எந்த மாதிரியானவர்கள் என தெரிந்துகொள்ள எனக்கும் ஆசைதான். மீண்டும் மீண்டும் இவ்வார்த்தையைக் கூற வருந்துகிறேன். நிச்சயமாக இதுதான் போலி அறிவு. வல்லினம் எவ்வாறான வாசகர்களை உருவாக்கியுள்ளது என அறிய செறிவான ஆய்வுகள் தேவை. அதன் வாசகர் கடிதங்களை, இன்று அதன் வாசக எண்ணிக்கையை, அதன் விரிந்த பரப்பை அறிய பொறுப்பான ஆய்வும் நிதானமான அணுகுமுறையும் ஆரவாரமற்ற மொழியும் சமநிலையான, கவனத்தைக் கோராத ஆளுமையும் தேவை. முகநூல் கவனத்துக்கு எழுதப்படும் கிசுகிசு நீண்டு இருந்தால் அதை கட்டுரை என கூறிக்கொள்வதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.

3. மூன்றாவது குறைபாடு தனிமனித ரசனையைப் பொதுமைப்படுத்துதல்.

 • எ.கா :
  /இருபது ரிங்கிட் கொடுத்து ஒரு புத்தகம் வாங்கும் பயனிட்டாளர்களுக்கு அந்தப் புத்தகத்தினால் ஏதாவது ஒரு ஈர்ப்பு அல்லது பயன் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் வாசிப்பதற்கு ஆர்வத்தையாவது கொடுக்க வேண்டும். இங்கு அந்த மாதிரியான எத்தனை புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்./

சரி அப்படி ஈர்ப்பற்ற பயனற்ற நூல் பட்டியல் உண்டா? வாசிக்க ஆர்வத்தையே தூண்டாத நூல் பட்டியல் உண்டா? ஈர்க்கத்தக்க நூலின் பட்டியல் உண்டா? இருக்காது. காரணம் ஈர்ப்பு, ரசனை என்பது தனிமனித விவகாரம். நான் மிகக்கடுமையாக ஒரு நாவலை நிராகரித்து எழுதுகிறேன். அது என் வாசிப்பின் என் ரசனையின் அடிப்படையானது. அவ்வாறு மதியழகனும் செய்ய எல்லா சுதந்திரமும் உண்டு. நான் நிராகரித்த ஒரு நூலை ஆதரித்து எழுதவும் என் கருத்துகள் முழுமுற்றாய் மறுக்கவும் கூட. ஆனால், அப்படி கருத்து ரீதியிலான அல்லது ரசனை ரீதியிலான தர்க்கம் எழாமல் இப்படிப் பொத்தம் பொதுவாகச் சொல்வதுதான் போலி அறிவுவாதிகளின் தந்திரம். இப்படிச் சொல்லும்போது வாசிப்பவர் மனதில் அவர்கள் வாசித்து ஏமாந்த ஒரு நூல் சட்டென தோன்றும். எனவே இக்கருத்துடன் உடன்படுவார்கள். ஆனால் இது அந்தந்த தனித்தனி மனிதனின் உணர்வுகள் மட்டுமே. இதனால் வாசகன் அவன் இதற்கு முன் என்ன தெரிந்து வைத்திருந்தானோ அதையே வேறொருவர் வாயால் கேட்கும் போதும் உற்சாகம்  அடைவான். ஆனால் முழுமையான/ புதிய விவரங்கள் எதுவும் தெரியவராது.

இந்த விசயத்தில் மதியழகனுக்கு இன்னும் கொஞ்சம் விவரம் தேவை. ஒன்றிரண்டு புத்தகங்களின் பெயரை அல்லது எழுத்தாளர்களின் பெயரை google இல் தேடி பட்டியல் போடக்கூடிய நண்பர்கள் அவரிடம் இருந்தால் அவர்கள் துணையுடன் ஆங்காங்கே ‘மானே தேனே பொன்மானே’ போல இணைத்துக்கொண்டால் இன்னும் நம்பகத்தன்மையாக இருக்கும். வாசிப்பற்ற முகநூல் இளைஞர்களை சர்வ நிச்சயமாக அது தரமான கட்டுரை என நம்பவைத்துவிடலாம்.

 • எ.கா :
  கவிதை தொகுப்பு என்பார்கள். அதை கவிதை என்றால் அந்த கவிதையே நம்பாது. கேட்டால் உங்களுக்கு புரியவில்லை என்பார்கள். பாரதியார் கவிதையே நமக்கு புரிந்துவிடும். இவர்கள் கவிதை நமக்கு புரியாது. சிறுகதை தொகுப்பு என்பார்கள். மூணு பக்கத்தை தாண்ட முடியாது. நமது நாட்டில் எழுதப்படும் 95 விழுக்காட்டு கதைகள் நன்னெறி, எஸ்டேட், பாலியல் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். இது போன்ற கதைகளை படித்து படித்து இங்குள்ள வாசகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதைதான் எழுதி வருகிறார்கள்.

பாரதியார் கவிதை மதியழகனுக்குப் புரிந்துள்ளதா என ஒருவேளை அவரை என்றாவது நேரில் பார்க்கும் போது கேட்கிறேன். பாரதியின் சில அரியச் சொற்பிரயோகம் இன்றும் எனக்கு ஆச்சரியமானவைதான். ஆனால் அவர் கவிதைகளை எளிதாக அறியும் / புரிந்துகொள்ளும் நீங்கள் உங்களது முந்தைய கட்டுரைகளில் ஆனாசயமாக ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதும் ‘மூன்றை’ மூணு என்பதும் ‘தோட்டத்தை’ எஸ்டேட் என்பதும் ‘பெட்டிக்கடையை’ பொட்டிக்கடை என்பதெல்லாம் ஆச்சரியமான மொழிப்பயன்பாடுதான். சரி போகட்டும். அது என்ன 95%? சரி அவரிடம் கணக்கெடுப்பு பற்றி பேசுவது வீணான வேலைதான். ஆனால் இந்த எண்ணம் மதியழகனது. அவர், இதை ஊரே அப்படித்தான் என பொதுமைப்படுத்துவதில்தான் ஆபத்து உள்ளது. இதை முகநூலின் வாசகர்களும் கேள்விகளற்று நம்புவர். பின்னர் பரப்புவர். இப்படியே அறிவின் வளர்ச்சியை அழிப்பர்.

சரி ஏன் மதியழகன் எழுதிய இதை வெறும் குறிப்பு என்கிறேன்.

1. கட்டுரை என்பது குறிப்பிட்ட ஒரு விடயத்தை ஆழமான முறையில் அணுக வேண்டும். மதியழகன் கட்டுரையில் இந்த ஒற்றைத்தன்மை இல்லை. அவரது நோக்கம் நீண்டக் குறிப்பு ஒன்றை உருவாக்குவது. எனவே பத்திரிகை வணிகம், மா. இராமையா இலக்கிய ஆளுமை, வணிக – தீவிர இலக்கியம், புத்தக வெளியீடு, நூல் விநியோகம் எனத் தாவித் தாவி செல்கிறார். நன்றாக கவனித்தால் எங்கும் எதிலும் ஆழ்ந்த நோக்கு இல்லை. என் கருத்தை தவறென கருதுபவர்கள் அக்கட்டுரை கொண்டுள்ள கருத்துகளைப் பிரித்து வாசித்துப்பார்க்கலாம். அவை தனித்தனி சிறு குறிப்புகள் என புரியும்.

2. குறிப்பின் தன்மை என்பது தகவல்களின் தரவுகளைத் தராமல் தப்பிப்பது. வாசிப்பு என்பதை மட்டுமே பல்வேறு கோணங்களில் அணுகலாம். இலக்கியம் வாசிக்காத ஒருவன் வரலாற்றையும், தத்துவங்களையும் வாசித்து மட்டுமே மானுட உன்னதங்களை அதன் சிடுக்குகளை அறியலாம். எனவே வாசிப்பு பழக்கம் எனச் சொல்லிவிட்டு நாளிதழ், வெகுசன சஞ்சிகை, பின்னர் தீவிர இலக்கியப்பிரதி எனப்போவதெல்லாம் சின்னச் சின்ன சாடல்களை உருவாக்கி அந்தச் சாடலை வைத்துக்கொண்டு வாசகனிடம் அறிவுஜீவியாகக் காட்டிக்கொள்ளும் முயற்சிதான்.

3. சொற்பிரயோகத்தின் அவரிடம் எந்தத் தெளிவும் இல்லை. இலக்கிய உலகில் பலகாலமாக மிகக் கவனமாகப் பயன்படுத்தப்படும் ‘நவீன வாசகன், தீவிர எழுத்து’ போன்ற சொற்களை அதன் பின்புலம் தெரியாமல் பயன்படுத்துகிறார். இது விவரம் தெரியாமல் வாசிப்பவர் மனதில் தவறான புரிதலை ஏற்படுத்தும். வாசகனின் தேவை பற்றி பேசும் மதியழகன் வாசகனை முட்டாளாக்குவது நகைமுரண்.

4. மதியழகன் தன் மனக்குமுறலை வாசகர்களின் கருத்துகள் போல மாற்றுகிறார். அதுபோல மனக்குமுறல் உள்ள சிலர் அவருடன் இணைந்து கைத்தட்டலாம். சிந்திக்கும் ஒரு வாசகன் இதை வெகு எளிதில் புலம்பலில் நீண்ட பெருமூச்சு என அறிவான். இப்படி இரண்டு நிலைக்கும் இடையில் இருப்பவர்களுக்கு இந்தக்கட்டுரை கொஞ்சம் தெளிவு கொடுத்தால் மகிழ்ச்சி.

பகுதி 2

நண்பர் மதியழகன்,

1965610இதை இரண்டாம் பகுதியென எழுதக் காரணம் உண்டு. உங்கள் கட்டுரையில் மேலே கூறிய மூன்று பலவீனங்கள் நீங்கள் எழுதுவது கட்டுரையே இல்லை என்பதற்கான நிரூபணங்கள். அவை வெறும் உணர்ச்சிக்குறிப்புகள் என்பதற்கான சான்றுகள். ஆனால் அதற்குள் விவாதத்திற்குறிய ஒரு கருத்தையும் வைத்துள்ளீர்கள். உங்களது நீண்டக் குறிப்பில் நான் பொருட்படுத்தி மாற்றுக்கருத்தைக் கூற விரும்புவது இதற்கு மட்டுதான். என் அனுபவத்தில் ஒருவரின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும்போது அதை ‘மாற்றுக்கருத்தென’ முத்திரை இட்டுவிடுவார்கள். அதாவது உன்னிடம் ஒரு கருத்து என்னிடம் ஒரு கருத்து எனவே sama – sama என சின்னப்பிள்ளைதனமாய் பேசுவார்கள். எனவே இந்த எதிர்வினையில் மேலுள்ளவை (பகுதி 1) மாற்றுக்கருத்தே அல்ல. அது வெளிப்படையான சாடல். குற்றச்சாட்டு. ஏமாற்றுத்தனம் என்ற கைக்காட்டல். இரண்டாம் பகுதி மட்டுமே மாற்றுக்கருத்து.

இதில் வாசிப்பு பற்றி வாசகன் பற்றி நீங்கள் கூறியவை பின்வருமாறு:

 • எழுத்தாளர்கள் எழுதுவது வாசகர்களுக்கு பிடிக்கவில்லை. வாசகர்கள் விரும்புவதை எழுத்தாளர்கள் எழுதுவதில்லை. வாசகர்கள் எழுத்தாளர்களை நம்பி இல்லை. ஆனால் எழுத்தாளர்கள் வாசகர்களை நம்பித்தான் இருக்கிறார்கள்.
 • வாசகர்களை தூரமாக துரத்திவிட்டு புத்தகம் வெளியிடுவதும், எழுதி குவிப்பதும் என்ன மாதிரியான சூழல்.
 • வாசகர்கள் படிப்பதற்காகவே எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். வாசகர்கள் இல்லை என்றால் யாருக்காக எழுத வேண்டும்?
 • இங்கு ஒரு சிக்கல் உண்டு. The Da Vinci Code போன்ற நாவலை எழுதினால் தீவிர எழுத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் நம்மிடம் சில நல்ல ஜொனர் வகை நாவல்கள் வராமல் போய்விட்டது. சுஜாதாவின் விஞ்ஞான கதைகளைகூட தீவிர இலக்கியத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
 • வாசிப்பு தளத்தை சுருக்கியும் கோட்பாடுகளையும் விதிமுறைகளையும் ஏற்படுத்தி வாசகர்களை குழப்படைய செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் எது வாசிப்பு என்கிற குழப்பத்தில் வாசகர்கள் வாசிப்பதை நிறுத்திவிடுகிறார்கள்.
 • அறிவுஜீவிகள் அங்கிகரித்த புத்தகங்களை மட்டுமே வாசிக்க வேண்டும் மற்றவை வாசிப்பு அல்ல என்று மற்றவர்களை சிறுமைப்படுத்துகிறார்கள். பொன்னியின் செல்வனை வாசிப்பவர்களை ஜெயமோகனை வாசிப்பவர்கள் ஏளனமாக பார்க்கிறார்கள். வாசகர்களிடையே ஜாதியை உருவாக்குகிறார்கள்.

எனக்குத் தெரிந்து வணிக எழுத்துகளைத் தீண்டத் தகாதவைகளாக யாரேனும் விமர்சகர்கள் பேசியுள்ளார்களா எனத் தெரியவில்லை. மதியழகன் வழக்கம்போல தனது பாணியில் ‘செய்கிறார்கள், போகிறார்கள், உருவாக்குகிறார்கள்’ எனச் சொல்வதால் யார் அவர்கள் என அவர்தான் சொல்லவேண்டும். ஆனால் எவ்வகை இலக்கியங்களை முன்னெடுப்பது என தேர்வுகள் ஒவ்வொரு இலக்கிய இயக்கத்துக்கும் இருக்கவே செய்யும்.

உதாரணமாக தங்கள் இதழ் பரவலான கவனத்துக்குச் செல்லவேண்டும் என விரும்பும் ஓர் இதழ் அதற்கேற்ற எளிய விடயங்களை உள்ளடக்கிய சிறுகதைகளை தன்னுள் பிரசுரித்து பொதுவெளிக்கு எடுத்து வருகிறது. இங்கு அவ்விதழ் விற்பனைக்கு பிற ஆக்கங்கள் போல அச்சிறுகதையும் ஒரு பண்டம். அதன் ஆசிரியரிடம் சென்று 23 பக்கத்துக்குக் கதை எழுதியுள்ளேன் பிரசுரிக்க இயலுமா என கேட்க இயலாது. அது அவர்கள் நோக்கத்துக்கு உதவாது. அதேபோல இலக்கியத்தை மாற்று முயற்சிகளை முன்னெடுக்கும் ஒரு இதழிடம் வாசகனின் கீழான உணர்வுகளைத் தூண்டக்கூடிய சிறுகதையைப் பிரசுரிக்க முடியுமா எனக்கேட்க முடியாது. அவர்களின் நோக்கமும் போக்கும் வேறு. எனவே இருமாறுபட்ட தேர்வுகளையும் குழப்பிக்கொள்ள அவசியம் இல்லை.

எளிய உதாரணமாகச் சொல்வதென்றால், மரத்தடியில் கொய்தியோ பிரட்டும் ஒருவன் தன் வாடிக்கையாளன் எப்படிக் கேட்கிறானோ அப்படியெல்லாம் பிரட்டிக்கொடுப்பான். அவனுக்கு கல்லா கட்டவேண்டும். அவன் சமைப்பது வாடிக்கையாளனுக்குதான். அங்கு வாடிக்கையாளன் அதிகமாக இருக்கலாம். இதே போல மற்றுமொரு சமையல் நிபுணன் தனது முயற்சியில் புதியவகை உணவை உருவாக்கியுள்ளான் என வைத்துக்கொள்வோம். அவன் வாடிக்கையாளனுக்காக தன் படைப்பின் தன்மையை மாற்றிக்கொள்ள மாட்டான். அவனுக்கென உயரிய சுவை உணர்வு இருக்கும். அந்தச் சுவையுடன் ஒத்துப்போகும் வாடிக்கையாளனுக்குக் காத்திருப்பான். நீங்கள் அவர்களிடம் சென்று கொஞ்சம் காரத்தைக் கூட்டுங்கள் எனச் சொல்லமுடியாது அல்லவா? அதற்கென அவர்கள் தங்களுக்கான வாடிக்கையாளர்களையும் இழக்கமாட்டார்கள். இங்கு பணம் சம்பாதிப்பதை வைத்து நீங்கள் சிறந்த சமையல் நிபுணனை தேர்வு செய்தால் அது உங்கள் அறியாமை.

நீங்கள் சொல்வது உண்மை. எழுத்தாளர் வாசகனை நம்பி இருக்கிறான். தன் படைப்பை ஒரு வாசகன் வாசிக்க வேண்டும் என விரும்புகிறான். ஆனால் அவன் கண்முன் இருக்கும் வாசகனின் தேவைக்கு ஏற்ப எழுதுபவன் அல்ல. அவன் தன் அக/புற உலகை எழுத்தில் வைக்கும்போது யார் அதனுடன் ஒத்துச்செல்கிறார்களோ அவர்களே அவன் வாசகன். உங்களுப்புரிய இன்னொரு உதாரணம்.

ஓர் ஓவியன் (காப்ளி, பாப்லோ பிக்காசோ, வின்சென்ட் வான் கோ என வைத்துக்கொள்வோம் ) தன் ஓவியக்கூடத்தில் தன் அக உணர்விலிருந்து ஓர் ஓவியம் வரைகிறான். இன்னொரு ஓவியன் யாராவது தங்கள் கரங்களைக் கொடுத்தால் அழகாக மருதாணியில் படம் வரைகிறான்.  முதலில் நான் சொன்ன ஓவியர்கள் தங்கள் வாடிக்கையாளனை நினைத்து வரைந்திருக்க மாட்டார்கள். அவர்கள் வரைந்த ஓவியத்தை அப்போதைக்கு யாரும் வாங்காமல் கூட போகலாம். அதேபோல மருதாணியில் வரையும் கலைஞரிடம் ஒரு நாளைக்கு 100 பேர் வரைந்து செல்லலாம். அதனால் இவர் அவரைவிட மேம்பட்ட கலைஞராகிவிடுவாரா? இல்லை. முதல் காரணம் மருதாணி கலைஞரின் கலை புறத்தேவைக்கானது. அது இன்னொருவரின் வேண்டலில் தேவைக்கு உருவாவது. இரண்டாவது அதில் திட்டவட்டமான எல்லைகள் உள்ளன. மூன்றாவது அதுபோல ஒரு மருதாணி ஓவியத்தை இன்னொருவன் உருவாக்க முடியும். அவனைப்போல நூறு கலைஞர்கள் இருப்பார்கள். நீங்கள் சொல்வது மருதாணி கலைஞனை. நான் சொல்வது ஓவியனை. ஒருவருக்கு மற்றவர் அவரவர் துறையில் சளைத்தவர் அல்ல. ஆனால் இவ்விரு கலைஞர்கள் நமக்குக் கொடுக்கும் அனுபவங்கள் வேறானவை.

தீவிர இலக்கியம் என்பது ஒரு குழுவோ ஒரு அமைப்போ அல்ல. யாரும் எதையும் எதிலும் சேர்க்கவோ விரட்டவோ முடியாது. முதலில் தீவிர வாசகன், பொழுதுபோக்கு வாசகன் என்பதே தவறு. தீவிர வாசிப்பு முறை, பொழுதுபோக்கு வாசிப்பு முறையே உண்டு. ஒரு பொழுதுபோக்கு வாசகன் எப்போது வேண்டுமானாலும் தீவிர வாசிப்பில் ஈடுபடலாம். தீவிர வாசகன் பொழுதுபோக்கு வாசிப்புச் செய்யலாம். இதென்ன ஜாதி சங்கமா ஒருவர் மற்றதை நாடாமல் இருக்க? வைரமுத்துவுக்கு இல்லாத புகழும் பணமுமா? ஏன் சிறுகதை தொகுப்பை எடுத்துக்கொண்டு ஜெயகாந்தனைப்பார்க்க ஓடுகிறார். ஏன் முன்னுரையை ஏமாற்றி வாங்குகிறார்? நன்றாகத்தானே அவரது கவிதைத் தொகுப்புகள் விற்பனையாகின்றன. ஏன் எந்தத் தேர்ந்தெடுத்தக் கவிதை களஞ்சியத்திலும் அவர் கவிதைகள் இல்லை? ஏன் யார் தொகுத்த சிறந்த சிறுகதை தொகுப்பிலும் அவரது ஒரு சிறுகதையும் இல்லை? இதை தனி ஒருவர் செய்வதில்லை. தீவிர இலக்கியச் சூழல் என்பது ஒரு மாபெரும் இயக்கம். அதை அறிய உங்களிடம் உழைப்பு எதுவும் இல்லை. புலம்பல் உண்டு. அதை வைத்துக்கொண்டு முகநூலில் சிறந்த கட்டுரையாளராகப் பலவீனமானவர்களிடம் வேண்டுமானால் பெயர் எடுக்கலாம்.

பொன்னியின் செல்வனை வாசிப்பவர்கள் ஜெயமோகனை வாசிப்பவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்ற வரியை வாசித்ததும் சிரித்துவிட்டேன். சிறுபிள்ளைதனமான கூற்று அது. உண்மையில் ஏதோ  ஜாதி கட்சி உறுப்பினர்போலதான் பிரிவினைகளுடன் பேசுகிறீர்கள்.  முதலில் பொன்னியின் செல்வன் ஒரு நாவல். ஜெயமோகன் ஒரு ஆளுமை. அதெப்படி நாவலையும் ஆளுமையையும் ஒப்பிட முடியும். ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரலை வாசித்தவர்கள் அவரே எழுதிய அனல்காற்று நாவலை வாசித்துவிட்டு ஏமாற்றமடைகிறார்கள். சாரு எழுதிய ஜீரோ டிகிரியை வாசித்தவர்கள் அவரே எழுதிய தேகத்தை வாசித்து ஏமாற்றமடைகிறார்கள்.  ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும் வாசிக்காமல் அவர் எழுதிய வெண்ணிர இரவுகளை மட்டும் வாசிக்கும் வாசகனை ஏளனமாகப் பார்க்கிறார்கள். இப்படி அந்தந்தப் படைப்பாளிகள் எழுதிய படைப்பாளிகளையே சக வாசகர்கள் ஏற்றியும் இறக்கியும் பார்க்கும்போது நீங்கள் சொல்வதெல்லாம் அறியாமையில் உச்சம். அல்லது நீங்களாக உருவாக்கிக்கொண்ட கற்பனை. இலக்கியத்தில் அப்படி ஒரு போதகரோ தலைவனோ/ளோ இருக்கிறார்களா என்ன? அது பன்மைத்தன்மையானது. எல்லாருக்கும் அதில் இடம் உண்டு. ஆனால் கூட்டு வாசிப்பும், காலமும் ஒரு படைப்பை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்றன.

எனக்கு தெரிந்து அறிவு ஜீவிகள் பரிந்துரைக்கும் நூல்கள் பட்டியல் என ஒன்று இருப்பதாகத் தோன்றவில்லை. அப்படி இருந்தால் மதியழகன் காட்டலாம். விமர்சகர்களின் பட்டியல் உண்டு. அது ஒவ்வொன்றும் மாறுபடும். அதுவே ஆரோக்கியமானது. அப்படி என்னால் பல பட்டியல்களைக் காட்ட முடியும். திட்டவட்டம் என்ற வரையறை என இலக்கியத்தில் இல்லை. மதியழகனாக உருவாக்கிக்கொண்ட கற்பனையில் அவரே உழன்று பயந்து குறிப்புகளை எழுதுகிறார். அவருக்கு ஒரு கற்பனை எதிரி தேவைப்படுகிறார். ‘தமிழ்ப்படம்’ எனும் திரைப்படத்தில் சிவாவை கதாநாயகனாக்க பறவை முனியம்மாவே வில்லியாக மாறியதுபோல யாரேனும் அவருக்கு உதவலாம். பாவம்.

மதியழகனின் ஆதங்கம் என்னவென்றே தெரியவில்லை. சுஜாதாவை சேர்க்க மாட்டேன் என்கிறார்கள், விஞ்ஞானக்கதைகளைச் சேர்க்க மாட்டேன் என்கிறார்கள் என்கிறார். யார் அவர்கள் எனச் சொல்லவே மாட்டேன் என்கிறார்கள். ஜெயமோகன் சுஜாதாவை மறுக்கிறார் என வைத்துக்கொள்வோம். தீவிர இலக்கியத்தை வளர்ப்பதாகச் சொல்லும் மனுஷ்ய புத்திரன் சுஜாதா பெயரில்தான் இலக்கிய விருது கொடுக்கிறார். அவர் நூல்களைப் பதிப்பித்து வெளியிடுகிறார். என்ன கெட்டது இப்போது? ஒருவேளை சுஜாதாவை அவ்வாறு கருதாத ஒருவரிடம் விவாதிக்க விரும்பினாலும் மதியழகன் அதற்காகவும் கொஞ்சம் வாசிக்க வேண்டும். அதன் பிறகு விவாதிக்கலாம்.

இறுதியாக

இந்த எதிர்வினைக்கு மதியழகன் ‘நான் சாதாரணமானவன். எனக்கு இவ்வளவு விரிவான விளக்கம் தேவையில்லை’ என்றோ ‘இது வெறும் கிறுக்கல் எனவே பதில் சொல்ல அவசியம் இல்லை’ என்றோ கொஞ்சம் அதிகம் சென்று ‘துஷ்டனை கண்டு தூர விலகினேன்’ எனவோ சமாளிக்கலாம். எதுவாக இருந்தாலும் இது முகநூலில் மட்டுமே வாசிக்கத் தொடங்கும் தொடக்கக்கால வாசகர்களுக்கு. இதுபோன்ற அரைகுறை விசயங்களை வைத்துக்கொண்டு குழப்புபவர்களிடமிருந்து குறைந்தபட்சம் அவர்கள் தெளிவு பெற ஒரு குரல் ஒலிக்க வேண்டியுள்ளது. இது அந்தக்குரல்.

மேலும் மதியழகன் விவாதத்தைத் தொடரலாம். சிக்கல் இல்லை. ஆனால் முதல் பகுதியில் நான் வினவியுள்ளவற்றுக்கு ஆதாரங்கள் வைக்காமல் தொடுக்கப்படும் எதற்கும் எதிர்வினையாற்ற தயார் இல்லை. கொட்டப்பட்ட குப்பையை முதலில் அகற்றுவோம். அதன் பின்னர் சுத்தம் என்றால் என்னவென்று விவாதம் செய்யலாம்.

(Visited 373 times, 1 visits today)