அன்பு நண்பர் நவீன் அவர்களுக்கு,
கிறிஸ்டி எழுதிக் கொள்வது. கடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் தங்களை நான் சந்தித்தது நினைவிருக்கலாம். எனக்கு உங்கள் ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தை “வாசித்துவிட்டு எழுதுங்கள்” என்று சொல்லிக் கொடுத்ததும் நினைவிருக்கலாம். அடுத்த சிறுகதைத் தொகுப்பையே வெளியிட்டு விட்டீர்கள் என்று நண்பன் சுரேக்ஷ் கூறினான். மிகவும் தாமதமாக கடிதம் எழுதுவதற்கு மன்னிக்கவும். இடையில் சில காரணங்களால் இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட முடியாமல் போய்விட்டது. மீண்டு வந்ததும் உங்கள் சிறுகதைத் தொகுப்பைத்தான் முதலில் வாசித்தேன். உடனே எழுத மனம் துடித்தாலும் அலுவலகப் பணிச்சுமையும் அலைச்சலும் தடைகளாகவே இருந்தன. இன்றைய தினத்தில்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததுபோல எனக்கும் இன்று இரண்டு மணி நேரம் ஓய்வு கிடைத்தது.
தங்கள் எழுத்தைப் பற்றி தங்களிடம் சொல்லியே ஆக வேண்டும் என வாசித்துக் கொண்டிருக்கையிலேயே முடிவு செய்து விட்டேன். வாசித்து முடித்ததும் நண்பன் சுரேஷிடம் உடனடியாக என் வியப்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டேன். எதுவாகிலும் நானே உங்களுக்கு நேரடியாகத் தெரிவிக்க வெண்டும் என விரும்பியதால்தான் தகுந்த நேரம் பார்த்துக் காத்திருந்தேன். அந்தளவிற்குத் தங்கள் எழுத்து வித்தியாசமான ஒன்றாக அமைந்துள்ளது.
விஷ்ணுபுரம் விருது விழாவில் நான் இளம் எழுத்தாளர்கள் சிலரது சிறுகதைகளை வாசித்துவிட்டு இதுதான் நவீன இலக்கிய சிறுகதை வடிவமோ என மிரண்டிருந்தேன். அதனால்தான் ஏன் இத்தனை வன்முறைகள் என்ற கேள்வியை அரங்கில் எழுப்பினேன். அப்போது உங்கள் தொகுப்பை வாசித்திருக்கவில்லை. தங்கள் எழுத்தில் நான் எந்த விதமான வன்முறைகளையும் அத்துமீறல்களையும் விரசங்களையும் ஆபாசங்களையும் பார்க்கவில்லை. இருக்கின்றன. அனைத்தும் இருக்கின்றன. ஆனால் எடுத்துச் சொல்லும் முறையில் தாங்கள் அனைவரிடமிருந்தும் தனித்திருக்கிறீர்கள். தங்களிடம் நான் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் டால்ஸ்டாய் அவர்களின் கதை சொல்லும் முறையினைக் கண்டேன். மிகவும் மென்மையாக ஆழமாக நிதர்சனத்தை சொல்லும் முறையில் சம்பவங்கள் நேரில் நிகழ்வது போல் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறீர்கள்.
உங்கள் கதை சொல்லும் முறையில் எனக்கு மிகவும் பிடித்திருப்பது என்னவெனில் ஒரு நிகழ்ச்சியின் அல்லது உணர்ச்சியின் சிக்கலானது மிகச் சிறியதாக ஆரம்பித்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மிகப் பெரியதாக ஆகி ஒரு கட்டத்தில் வெடிக்கையில் அங்கு கதை முடிவடைவதுதான். தியேட்டரில் படம் பார்க்கிறவர்கள் மிகவும் திரில்லோடு சீட்டு நுனிக்கே சிலசமயம் வந்து விடுவதுண்டு. அப்படிப்பட்ட உணர்வைத் தங்கள் “இழப்பு, மணிமங்களம், நொண்டி, கூலி சிறுகதைகளில் அனுபவித்தேன். நொண்டியும் கூலியும் மிக மிகப் பிடித்த சிறுகதைகளாக அமைத்துவிட்டன. சாலையில் செல்கையில் யார் பின்னாலாவது ஏதாவது ஒரு நாய் செல்வதைப் பார்த்துவிட்டால் உடன் என்னையறியாமல் ‘நொண்டி’ ஞாபகம் வந்துவிடுமளவுக்கு சேதுவின் பாத்திரமும் நொண்டி நாயின் பாத்திரமும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. கூலியில் உருத்திர மூர்த்தியின் உணர்ச்சிகள் தத்ரூபமாக எழுத்துக்களால் வடிக்கப்பட்டுள்ளன. அவனின் உணர்ச்சிகள் மிகச்சிறியதாக ஆரம்பித்து அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடையும்போது என் கண்களில் நீர் பெருகி வழிய ஆரம்பித்துவிட்டது. நொண்டியையும் கூலியையும் அதன் கதை சொல்லும் முறைக்காகவே அதாவது எப்படி எழுத்தில் உணர்வுகளைக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என வியப்படைவதற்காகவே திரும்பத் திரும்ப வாசித்தேன். அதேபோல் மணிமங்களம் வளர்ச்சி வேகமும் நான் மிகவும் ரசித்த ஒன்று.
தங்களின் சுருங்கச் சொல்லி விரிய சிந்திக்க வைக்கும் பாங்கினை ‘ஒலி’யிலும் ‘நெஞ்சுக் கொம்பு’ சிறுகதையிலும் கண்டேன். ‘ஒலி’யில் எழுத்தாசிரியரின் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்ட மௌனங்கள் வாசிப்பவரின் சிந்தனையை வளர்க்கின்றன. தூண்டுகின்றன. உதாரணமாக குட்டைக்கார முனியாண்டியின் பேரைச் சொல்லி அரசியல் நிகழ்த்துவது இங்கு மௌனமாக விளக்கப்பட்டுள்ளது. ஏமாற்றுதல், சுரண்டல், பெண்கள் மீதான அத்துமீறல், சாமானிய மக்களின் அறியாமை இப்படி பல விஷயங்கள் ஆசிரியர் விடும் இடைவெளிகளில் வாசகர் நிரப்பிக் கொள்ள வேண்டும். லுனாஸ் என்னும் அவருடைய ஊரில் நடப்பதாகச் சொல்லப்படும் சம்பவங்கள் ஒரு கோடிழுத்துக் காட்டப்படுகின்றன. வாசகர்கள் அவரவர் ஊர்களில் அவற்றை சம்பந்தப்படுத்திக் கொண்டால் இன்றைய நாட்டு நடப்பைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். சமுதாய சூழல் அப்படியே ஒலி சிறுகதையிலும் நெஞ்சுக் கொம்பு கதையிலும் பட்டவர்த்தனமாகக் காட்டப்பட்டுள்ளது. நமக்கு மிகவும் அணுக்கமாக நடப்பதைப் போன்ற உணர்வு எழுந்தது.
எழுத்தைக் கையாளும் மிகவும் அற்புதமான திறமையைத் தங்களிடம் கண்டு வியந்தேன். ஒரு சிறுகதையை எப்படி ஆரம்பிப்பது எப்படி கொண்டுசெல்வது எப்படி முடிப்பது என்று தங்கள் சிறுகதைகளில் நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள். ‘சொற்களைச் சேமிப்பதும் செதுக்குவதும் கலை’ என்று கூறியுள்ளீர்கள். இக்கலையைச் சிறந்த முறையில் கைவரப் பெற்றிருக்கிறீர்கள். நான் இதுவரை எந்தக் கதையையும் புத்தகத்தையும் ஒருமுறைக்கு மேல் வாசிக்க விரும்பியதில்லை. ஆனால் தங்களின் எழுத்து வன்மை என்னை மறுமுறை மேலே குறிப்பிட்ட அனைத்துக் கதைகளையும் மறுமுறை வாசிக்க வைத்துவிட்டது. அந்த சந்தோஷத்தைத் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரைவிலேயே சுதந்திர தின விடுமுறை தினத்தையும் எனக்கு கடவுள் வழங்கி ஆசீர்வதித்துள்ளார். இதைத் தங்களுக்குக் கிடைத்த நல்லருளாகவே நான் நினைக்கிறேன். மேன்மேலும் தங்கள் எழுத்துப் பணி சிறக்கவும் தங்கள் உடல் நலம் நன்றாக இருக்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கொண்டு இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் அன்புத் தோழி,
கிறிஸ்டி