ஆதி.இராஜகுமாரன்: நிழலைப் பதுக்கிய கலைஞன்

00130-300x214வல்லினம் நூறு வீடியோ பதிவில் இவ்வாறு சொல்லியிருப்பேன். ‘ஒருவேளை ஆதி.இராஜகுமாரன் இல்லாமல் இருந்திருந்தால் வல்லினம் அச்சு இதழ் தொடர்ந்து வெளிவருவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும்.’ அவ்வுதவியை அவர் நட்பு கருதி செய்யவில்லை. அடிப்படையில் அவர் தன்னை ஓர் தேர்ந்த இலக்கிய வாசகனாகவே வைத்திருந்தார். எனவே அவ்வாறான முயற்சிகளில் தன்னை இணைத்துக்கொள்வது அவருக்கு உவப்பாக இருந்தது.

90களின் மத்தியில் ‘புதுநிலவு’ எனும் பெயரில்  நயனத்தில் அவர் எழுதி வந்த கவிதைகளையும் ‘சதுரங்கம்’ எனும் கேள்வி பதில் பகுதிகளையும் விடாமல் வாசித்ததுண்டு. ‘புதுநிலவு’ ஒரு பெண் என்றே பலகாலம் நினைத்திருந்தேன். ராஜகுமாரன்தான் புதுநிலவு எனத்தெரிந்தபோது அவரை சந்திக்க ஆவல் எழுந்ததுண்டு. ஆனால் அவர் யாரையும் சந்திக்க மாட்டார் என்றும் பரவலான பேச்சு இருந்தது. காதலின் ஏக்கமும் ஏமாற்றமும் நிறைந்தவை ‘புதுநிலவு’ கவிதைகள். அதேபோல 90களின் இறுதியில் நயனத்தில் ஒரே ஒரு கவிதை வருவதே பலருக்குக் கனவாக இருந்தபோது தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நயனத்தில் என் கவிதைகளைப் பிரசுரித்து வெகுவாக ஊக்கப்படுத்தினார். இலக்கிய நண்பர்கள் சிலர் ‘கடித உரையில் ஏதும் லஞ்சம் வைத்து அனுப்புகிறாயா?’ என விசாரிக்கும் அளவுக்கு நயனத்தில் என் கவிதைகளைப் பிரசுரமாயின. ஆனால் நான் அவரைச் சந்தித்ததே இல்லை. தனிப்பட்ட கடிதமும் எழுதியதில்லை.

நான் இராஜகுமாரனை முதன் முதலாய் சந்தித்தது பெ.இராஜேந்திரன் வீட்டில். எனக்கு அப்போது வயது 19. நாடு முழுவதும் அறியப்பட்ட கவிஞன் என நானே நம்பிக்கொண்டிருந்த வயது. நான் ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு ரெ.சண்முகம் இருந்தார். அப்போது ராஜேந்திரன் பிள்ளைகளுக்கு இசை வகுப்பு நடந்துகொண்டிருந்தது. ரெ.சண்முகம், ராஜகுமாரனை ராஜா என்று அழைத்ததை வைத்து நான் அவரிடம் நீங்கள்தான் இராஜகுமாரனா என்றேன். அவர் “இல்லை தம்பி என் பெயர் ராஜா” எனக்கூறி என்னைத் தவிர்த்து ராஜேந்திரனுடன் காரில் புறப்பட்டுவிட்டார். அதுதான் அவர். தன்னை வெளிக்காட்டிக்கொள்ள அறியாதவர் அல்லது விரும்பாதவர் என கால ஓட்டத்தில் தெரிந்துகொண்டேன்.

அவர் ராஜகுமாரன் என அன்று ஒப்புக்கொண்டிருந்தால் நான் அவரது ரசிகன் எனச் சொல்லி கைக்குலுக்கியிருப்பேன். அவர் என்னை அறிந்திருக்கக் கூடும். ஆனால் அறிமுகத்தை விரும்பவில்லை.

ஆனால் நாங்கள் சந்தித்தது என்னுடைய மற்றுமொரு பருவத்தில்.

அப்போது நான் ஏறக்குறைய தமிழில் வந்த சிறந்த கவிதைகளை வாசிக்கும் வாசகனாக இருந்தேன். எனவே புதுநிலவு கவிதைகள் மேல் எனக்கு விமர்சனங்களே இருந்தன. ஆனால் கவிதைகள் ஏற்படுத்தும் ஆழ்மன தூண்டலை அவரது கவிதைகளும் அக்கினி கவிதைகளுமே இளம் வயதில் எனக்கு போதித்திருந்தன. மேலும் என் கவிதைகளைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தியவர். எனவே 2007இல் எனது முதல் கவிதை நூலை (சர்வம் பிரமாஸ்மி) அவரே வெளியிட வேண்டும் விரும்பினேன். தயங்காமல் ஒப்புக்கொண்டு வெளியிட்டார். இந்த நெருக்கம் வல்லினம் அச்சு இதழாக வந்தபோதுதான் ஏற்பட்டது.

அப்போதெல்லாம் இதழ் அச்சுக்குச் செல்லும்முன் ‘பிலிம்’ எடுக்க வேண்டும். பிலிம் எடுக்கும் அவ்வியந்திரம் அவரிடம் இருந்தது. நான் முதன் முதலாக என்னை அறிமுகம் செய்துக்கொண்டு வல்லினம் சிற்றிதழ் முயற்சியையும் அதற்கு இருக்கும் பண நெருக்கடியையும் கூறி கழிவு விலையில் பிலிம் எடுத்துக்கொடும்படி உதவி கேட்டிருந்தேன். அவர் கூடுதலாகவே எவ்வித கட்டணமும் வாங்காமல் நூல் வடிவமைப்பையும் அவரது நயனம் இதழின் பணியாளர்களை வைத்தே செய்துக்கொடுத்தார். பிலிமின் அடிப்படை தொகையை மட்டுமே வாங்கிக்கொண்டார். அப்போது பல மாலைகளில் அவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவரை நல்ல வாசகராகக் கண்டுக்கொண்டது அப்போதுதான். ஆனால் இலக்கியத்தில் நிகழும் கலாச்சார, ஒழுக்க மீரல்கள் குறித்து அவருக்கு நிறைய புகார்கள் இருந்தன. “எனக்கென்னவோ மு.வ, ந.பா போன்றவர்கள் என்னுடைய மூதாதையர்களாகத் தெரிகிறார்கள். எவ்வளவு உலக இலக்கியங்களை வாசித்தாலும் எத்தனை கோட்பாடுகள் வந்தாலும் நான் என் மூதாதையர்களை எப்படி நிராகரிக்க முடியும்?” என ஒரு சமயம் கேட்டார். நான் மறுப்பு சொல்லவில்லை. பொதுவாகவே பக்தி, ரசிகமனம், தொண்டர் குணம் போன்ற உணர்வுகளுடன் நான் விவாதிப்பதில்லை.

ஆனால் அப்படிச் சொல்லிக்கொண்டு அவர் எதையும் வாசிப்பதை நிறுத்தவில்லை. எதை வாசிக்கலாம் என எப்போதும் கேட்பதுண்டு. ஒருமுறை ‘அந்நியன்'(காம்யூ) மற்றும் ‘ம்’ (ஷோபா சக்தி) நாவல் இரண்டையும் பரிந்துரை செய்தேன். ‘ம்’ நாவலின் முடிவை அவரால் ஏற்க முடியவில்லை. அந்நியன் நாவல் குறித்து விரிவாகப் பேசினோம்; விவாதித்தோம்.

முதல் தொகுப்பில் வந்த என் கவிதைகள் மீதும் அவருக்கு நிறைய மாற்றுக்கருத்துகளும் விமர்சனங்களும் இருந்தன. சிங்கை இளங்கோவனை நயனம் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றபோது அந்த விமர்சனத்தை முன் வைத்தார். இருவரும் வானம்பாடி இதழ் உருவானபோது நண்பர்கள். இளங்கோவன் முதல் தொகுப்பில் இருந்த என் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்திருந்தார். தனக்கு அக்கவிதைகள் எதுவும் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தார். மிக நேரடியாகவும் கூர்மையாகவும் ராஜகுமாரனிடமிருந்து விமர்சனங்கள் வரும். ஆனால் முகத்தில் மெல்லிய புன்னகை இருந்துகொண்டே இருக்கும். அது சிரிப்பா அல்லது முக அமைப்பா என எனக்கு தெரியவில்லை.

கணினியில்  தமிழ்நெட், தமிழ்ஃபிக்சு போன்ற கணினி எழுத்துருக்கள் பயன்படுத்தும் சிங்கப்பூர் 16 பிட் ஒருங்குறித் திட்டத்தை மேம்பாட்டுக்காக உழைத்த சிங்கை ந.கோவிந்தசாமியுடன் இணைந்து பணியாற்றியவர்களில் ஒருவர் ஆதி.இராஜகுமாரன். மிக முக்கியமாக ‘இணையம்’ எனும் தமிழ்ச்சொல் இராஜகுமாரன் உருவாக்கியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாமல் இருந்த ராஜகுமாரன் தனது சகோதரர் ஆதி.குமணன் மறைவுக்குப் பின்பே அதிகம் பொது நிகழ்ச்சிகளில் வெளிவரத் தொடங்கினார். வல்லினம் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்துகொண்டார். வல்லினம் அழைத்துவரும் தமிழக ஆளுமைகளுடனான தனிப்பட்ட சந்திப்புகளில் அவர் இருப்பு உறுதி. ஆனால் நான் ராஜேந்திரனைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியபோது விலகலைக் காட்டவும் செய்தார்.

ராஜேந்திரனுக்கு ராஜகுமாரன் மேல் பெரும் மரியாதை இருந்தது. அதுபோலவே ராஜகுமாரன் ராஜேந்திரனின் சங்கப்பணிகளை விமர்சனங்கள் இன்று  ஏற்றார். இவ்வாறு இருவருக்குள் இருந்த நட்பின் காரணமாக இடையில் துருத்திக்கொண்டு இருக்கும் என் போன்றவர்கள் சங்கடத்தையே ஏற்படுத்துவர். எனவே அவர் விலகலை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் சங்கப்பதவிக்காக ராஜேந்திரனிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற வேடதாரிகள் மத்தியில் நட்பு காரணமாக அவர் ஏற்படுத்திக்கொண்ட விலகலால் அவர் மீதிருந்த மரியாதையைக் குறைக்கவில்லை.

எனக்குத் தெரிந்த ராஜகுமாரனுக்கு மா.சண்முகசிவாவின் மீது பெரும் பிடிப்பு இருந்தது. அவருடன் உரையாடுவதை ராஜகுமாரன் விரும்பினார். ஒரு சமயம் நான் பணியாற்றும் பள்ளிக்கூடத்திற்குச் சண்முகசிவாவை அழைத்திருந்தேன். உடன் இராஜகுமாரனும் வந்தார். நிகழ்ச்சியின் இறுதியில் அவரையும் பேசச்சொன்னபோது, “நானும் உங்களைப் போல அவர் பேசுவதைக் கேட்கவே வந்திருக்கிறேன். எனக்கு அவர் பேசுவது பிடிக்கும். அவருடன் இருப்பது பிடிக்கும்” என்றார். எம்.குமரன் இறந்தபோது அவர் காரில் சண்முகசிவாவையும் ஏற்றிக்கொண்டு பயணித்தோம். அது இரவு நேரம். திடீரென ராஜகுமாரன் சொன்னார், “டாக்டர் நம் ஆழ்மன ஆசைகள் வேறொரு வடிவில் நிறைவேறும் என்பது உண்மையா? எனக்கு போர்க்கப்பல் விமானியாக ஆசை இருந்தது. என் உடல் குறையால் அது நடக்கவில்லை.” என்றார். டாக்டர், “பத்திரிகையை நடத்திச்செல்வதும் போர்விமானம் ஓட்டுவதுபோலதானே,” எனக்கூறி சிரித்தார். ராஜகுமாரனிடம் தனிப்பட்ட உரையாடல் நடந்த இறுதி தினம் அது.

அதன் பின்னர் அவரை ‘மழைச்சாரல்’ எனும் இலக்கிய அமைப்பு கொண்டாடி மகிழ்ந்தது. அவ்வாறான ஒரு குழுவில் இருப்பது அவரது இலக்கியப் போக்குக்கு உடன்பாடானதாகவே இருந்திருக்கும். மிதமனப்பான்மையுடன் இயங்கும் போக்கு எனக்கில்லை என்பதால் நான் அவரை தூரத்தில் இருந்தே ரசித்தேன். ஒருசமயம் பேருந்து நிலையத்தில் தற்செயலாகச் சந்தித்தபோது சடங்காகப் பேசி விடைபெற்றேன். அது வெகு இயல்பாக நடந்தது. பொதுவாக குறிப்பிட்ட ஒரு அறிவுத்தளத்தை, ரசனையை மட்டுமே அடிப்படையாக வைத்து உருவாகும் உறவுகள் அவ்வாறுதான் தங்கள் இறுக்கத்தையும் நெகிழ்வுதன்மையையும் காலத்தைச் சார்ந்து தீர்மானிக்கின்றன. அது விலகலோ நட்போ அல்ல; பரிணாமம்.

வல்லினத்தின் கடைசி இரு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அரங்கின் இறுதி இறுக்கையில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் கிழம்பிவிடுவார். வல்லினம் 100 ஆவணப்படத்துக்காக அவரைப் பதிவு செய்தபோது தான் வல்லினத்துக்குச் செய்த உதவிகளைப் பெரும்பாலும் மறந்திருந்தார். அவரை முழுமையாக ஆவணப்படம் செய்யும் ஆவலைச் சொன்னபோது பழையன பலவற்றையும் மறந்துவிட்டேன் என்றார். அது உண்மையா எனத் தெரியவில்லை. தன் சுவடுகளை விட்டுச்செல்ல விரும்பாத ஒரு மனிதன் வேறென்ன சொல்ல முடியும்?

இராஜகுமாரன் உற்சாகமாக இயங்கியது மலேசிய இலக்கிய வரலாற்றின் மிக முக்கியமான காலக்கட்டம். மலேசியாவில் புதுக்கவிதை இயக்கம் உருவாகவும் வானம்பாடி இதழ் வளரவும் அவரது பங்களிப்பு முக்கியமானது. நடந்து செல்கையில் நிழலின் சுவடுகளையும் சுருட்டி வைத்து சுவடில்லாமல் செல்லும் அவர், தன்னைப்பற்றி எந்த வரலாற்றையும் எழுதிவைக்கவோ பிறரை எழுதச்சொல்லவோ வாய்ப்பில்லைதான். ‘மழைச்சாரல்’ குழு அவர் குறித்த பிறரது பதிவுகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளது ஆறுதலளிக்கும் முயற்சி.

2.10 நிமிடத்தில் இராஜகுமாரன் வல்லினம் அனுபவம் குறித்து…

 

(Visited 286 times, 1 visits today)