மதியழகன் என்பது புனைப்பெயர்தான் – ம.நவீன்

indexமதியழகன் தன் முகநூலில் எனது நேர்காணலை முட்டாள்தனமானது என்பதாகக் குறிப்பு ஒன்றை இன்றைக்கு எழுதியுள்ளார். அதற்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். உழைப்பை அவரிடம் எதிர்ப்பார்க்க முடியாதுதான். அவரது அதிகபட்ச உழைப்பே ஒரு கட்டுரை எழுதும் முன் பலரையும் அழைத்துக் கருத்துக்கேட்டு தொகுப்பதுதான். மலேசியத் தமிழர்களின் வாசிப்பு குறித்த கட்டுரை எழுதும்போது என்னை அழைத்தவர் “மா.இராமையா என்பவர் யார்? நான் கேள்விப்பட்டதே இல்லையே?” எனக்கேட்டபோது அவர்தான் மலேசியாவின் முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டார் எனக்கூறி விளக்கம் கொடுத்தபோது “அப்படியா? அப்படியா? எனக்குத் தெரியாதே” எனக்கேட்டுக்கொண்டவரின் அறியாமை இன்னமும் மனதில் அகலாமல் உள்ளது. ஆனால் மலேசியாவில் மிக நீண்டகாலம் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு மூத்த எழுத்தாளரின் பெயரையும் தான் அறிந்திராததைப் பற்றிய குற்ற உணர்வோ வெட்கமோ கொஞ்சமும் இல்லாமல் அதை தனது அசட்டுச் சிரிப்பின் வழி கடந்துகொண்டிருந்தார்.

இப்படி பலரையும் அழைத்து தகவலைப் பெற்று பின்னர் அதை தன்போக்கில் எல்லாம் தெரிந்தவர் போல எழுதுவது அவரது வாடிக்கை. எங்கள் கம்பத்தில் பாஞ்சாலை பாட்டி இப்படித்தான் வீடு வீடாகச் சென்று தகவல் சேர்த்து மொத்தமாக ஓர் இடத்தில் கதையளப்பார். ஊர் கதை கேட்க கூட்டம் கூடும். இன்று அது முகநூலில் நடக்கிறது. மரபு தொடர்ச்சி முக்கியம் அல்லவா.

நான் மதியழகனுக்குப் பதில் அளிக்க வேண்டியதில்லை. காரணம் அவருக்கு தேவை பதிலோ தெளிவோ அல்ல. அவர் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருப்பது ஒரு தெருச் சண்டைக்கு. தன் வாயாடித்தனத்தால் எதிராளியை வீழ்த்திவிட முடியும் என்ற நம்பிக்கையில் ‘சந்தேகம்’ கேட்பதாக மிகவும் கீழ்மையாக வலை விரித்து காத்திருந்தார். வலைக்குள் போனாலும் போகாவிட்டாலும் அவரால் வம்பை வளர்க்க முடியும். அவருக்கு தேவை வல்லினத்தையும் என்னையும் மட்டம்தட்டி தன்னை பெரும் அறிவாளியாக முகநூலில் காட்டிக் கொள்வது. சிறு மதியாளனின் சிந்தனைப் போக்கு இப்படிதான் இருக்கும். காரணம் அவர்களால் அறிவார்த்தத்துடன் எப்போதுமே உரையாட முடியாது. தங்கள் முட்டாள்தனம் வெளிப்படும்போது அவர்களின் கீழ்மையைக் காட்டத் தொடங்குவர். கூச்சல் மூலம் அவர்கள் போதாமையை மறைப்பர்.

அகவே எனது இந்த பதில் மதியழகனின் பதிவை வாசித்து உண்மையிலேயே சந்தேகம் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு

மதியழகனின் இந்தக் கட்டுரையை மட்டும் வாசிப்பவர்கள் ஏதோ அவர் இலக்கியச் சர்ச்சை செய்வதாக நினைக்கலாம். அப்படியெல்லாம் இல்லை. அவர் எழுதும் எழுத்துகள் ஆதாரமற்றவை என ‘மதியழகன் குறிப்புகள்: போலி அறிவுவாதப் புற்று’ எனும் கட்டுரை மூலம் நிறுவியிருந்தேன். அது அவருக்குக் கடுமையான மன உளைச்சலைக் கொடுத்திருக்கும்தான். தொலைப்பேசியில் அழைத்து கத்தினார். என் கைத்தொலைப்பேசியில் குரல் பதிவு மென்பொருள் உள்ளதால் அவ்வப்போது அந்தக் கத்தலைக் கேட்டு பொழுதைக் கழிப்பது வழக்கம். அதில் முக்கியமான பஞ்ச் “என் கட்டுரைகள் காப்பிக்கடை பேச்சு போலத்தானே. பின்னர் ஏன் அதைப் பொருட்படுத்துகிறீர்கள். ஏன் அதற்கு எதிர்வினை ஆற்றுகிறீர்கள்.” என்பதுதான். அது எனக்குச் சரியெனப்பட்டது. மையில் மீசை வரைந்துகொண்ட கைப்பிள்ளை “வேணாம்… அழுதுருவேன்” என மிரட்டுவது போலவே இருந்தது. முகநூலில் தன்னை ஓர் அறிவுஜீவியாகக் கட்டமைக்க முயலும்போது, அதன் வழி ஒரு குழுவை தன்னைச்சுற்றி வாசகர்களாக எழுப்ப முயலும்போது இதுபோன்ற கட்டுரைகள் சஞ்சலத்தைதான் வர வழைக்கும்.

“கைப்புள்ளைக்கே இவ்வளவு அடின்னா அடிப்பட்டவன்…” என இன்னும் பலர் உசுப்பேற்றும் பட்சத்தில் வேறு வழியில்லாமல் அவரும் ஏதாவது எழுதிதானே ஆகவேண்டும். எனவே அவர் அதற்குப்பின் புலம்புவதை பெரிதாகக் கண்டுக்கொள்வதில்லை. ஆனால் மதியழகன் விடுவதாகவும் இல்லை.

பொதுவெளியில் ஒரு கருத்தை சொல்லும்போது குறைந்தபட்ச உழைப்பு அவசியம் என நம்புபவன் நான். எனவே ஆபத்தான/ தவறான கருத்துகள் பரவும்போது அதற்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. புதிய, இளம் வாசகர்களுக்குத் தவறான கருத்து சேரக்கூடாது என கவனமாக இருப்பேன். அதுபோலவே இன்று எழுதியுள்ள குறிப்புகளும் அவரது அறியாமையை வெளிப்படுத்துவதாலும் அவ்வறியாமை புதிய வாசகர்களைக் குழப்பும் என்பதாலும் போதுமான விளக்கம் கொடுக்க வேண்டிய கடப்பாடு எனக்கிருப்பதாகக் கருதுகிறேன். எனவே காப்பிக்கடை பேச்சை பொருட்படுத்தி பதில் கூறுவதற்கு மதியழகன் மன்னிப்பாராக.

மதியழகன் முகநூலில் எழுதிய குறிப்பில் சில பகுதிகள் (இதையம் பலவீனமானவர்கள் இதை வாசிக்க வேண்டாம்):

  1. கங்காதுரை நவீனை பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டியில் மலேசிய டலித் இலக்கியம் குறித்து உங்கள் கருத்து என்ன என்கிற கேள்வியை கங்காதுரை நவீனிடம் கேட்கிறார். அதற்கு நவீன், //மலேசியாவில் தலித் இலக்கியம் என்கிற பிரிவு ஒன்று இல்லை. அதை யாரும் நிறுவ முயலவில்லை// என்று சொல்லிவிட்டு, இறுதியில் //மலேசியாவில் தலித் இலக்கியம் எனப் பட்டியலிட்டால் இவை எல்லாம் உள்புகும்// என்று சில மலேசிய கதைகளின் பெயர்களை சுட்டி காட்டுகிறார்.
  2. இப்போ நவீன் என்ன சொல்ல வருகிறார்? மலேசியாவில் டலித் இலக்கியம் என்று ஒரு வகை இல்லை. ஆனால் டலித் இலக்கிய வகையில் நம் நாட்டில் சில கதைகளின் பட்டியல் இருக்கிறது என்கிறார். நவீன் வழக்கம் போல் தன் குரங்கு வித்தையை இங்கு காட்டுகிறார். சாடாரென முனைவர் இரா தாண்டாயுதம், சீ.முத்துசாமி போன்றோர்களின் சில படைப்புகளின் பட்டியலை இட்டு டலித் இலக்கியத்தோடு இணைக்கிறார்.
  3. இது வழக்கமான நவீனின் பாணி, எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்லாமல், சந்து பொந்து மூலை முடுக்கு எல்லாம் யுடர்ன அடித்து, கடைசியில் எல்லோரையும் குழப்பி அவரை மிக பெரிய புத்திசாலியாக காட்டிக் கொள்வது. இது போலிகள் செய்யும் மேஜிக்.
  4. மலேசியாவில் டலித் இலக்கியம் என்கிற ஒரு வகை இல்லை. ஆனால் டலித் இலக்கியத்தில் சில மலேசிய படைப்புகள் அடையாளம் காணப்படுகிறது. இது நவீனின் பேட்டியில் சொல்லப்படும் கருத்து.

முதலாவது: முதலில் அந்த நேர்காணலில் நான் தெளிவாகவே ஒரு விடயத்தைக் கூறியுள்ளேன். ஆய்வாளர்கள் அல்லது விமர்சகர்கள் இலக்கியங்களை தங்கள் ஆய்வுக்காக வகைப்படுத்துகின்றனர். அதாவது எழுத்தாளர்கள் குறிப்பிட்ட ஒருவகை எழுத்து என எழுதுவதில்லை. உதாரணமாக மார்க்ஸியம், பெண்ணியம், தலித்தியம் என கோட்பாட்டை அமுல்படுத்த ஒன்றை எழுதுவதில்லை. ஆனால் ஆய்வாளர்களுக்கு அல்லது கோட்பாட்டாளர்களுக்கு ஒரு பிரதியை இன்னவகை என பிரிக்கும் தேவை உண்டு.  மலேசியாவில் ‘தலித்து இலக்கியம்’ என்பதுபோன்றான ஆய்வுகள் இதுவரை ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படவில்லை; வகுக்கப்படவில்லை; தொகுக்கப்படவில்லை. எனவே மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ‘தலித் இலக்கியம்’ என இதுவரை ஆய்வுகள் செய்து பட்டியலிடப்படவில்லை எனச்சொன்னேன். ஆனால் அவ்வாறு வகுக்கப்படாததாலேயே அவை இல்லை என ஆகிவிடாது எனவும் கூறியுள்ளேன்.

இதை புரியும்படி சொல்வதானால், பலதரப்பட்ட உணவுகள் விற்பனையாகும் உணவகத்தில் ஒருவர் ‘மலேசிய உணவு வகைமைகள்’ என பகுக்க நினைக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் மலாய் உணவுகளில் இருக்கும் இந்திய உணவுச்சாயல் என ஆய்வு செய்து அவ்வாறான உணவுகளைப் பட்டியலிடுகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் ஆய்வு செய்து நிறுவும் முன்பே அவ்வாறான உணவுகள் இருந்தன அல்லவா. ஆய்வாளர் செய்தது அதை சான்றுகளுடன் தொகுத்து திட்டவட்டமாகப் பட்டியலிட்டது மட்டுமே.

மீண்டும் சிறுகதைக்கே வருவோம். மலேசியாவில் இதுவரை யாரும் அவ்வாறு ஆய்வு செய்து தலித் இலக்கியம் என பட்டியலிட்டதில்லை. அவ்வாறு வகுத்தால் எனது ‘வண்டி’ உள்ளிட்ட பல கதைகள் அப்பிரிவுக்குள் வரும் என்றேன். இதைதான்  நான் குழப்புவதாக மதியழகன் கூறுகிறார்.

இரண்டாவது: என்னுடைய சிறுகதை மட்டும் அல்லாமல் அவ்வாறு ஒரு ஆய்வாளர் வகுத்தால் மலேசியாவில் பல இலக்கியங்களையும் தலித் இலக்கியப் பட்டியலில் சேர்க்கலாம் என்கிறேன். அதற்கான சில உதாரணங்களையும் கொடுக்கிறேன். அதாவது முனைவர் தண்டாயுதம் தொகுத்துள்ள நாட்டுப்புற பாடல்களில் ஈழத்தமிழர்கள், மலையாளிகள் தங்களை எவ்வாறு இழிவாக நடத்தினார்கள் என தமிழகத்தில் இருந்து வந்த சஞ்சிக்கூலித்தமிழர்கள் பாடிய பாடல்கள் உள்ளன. பின்னர் நாட்டில் திராவிட இலக்கியங்கள் வளர்ந்தபோது சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான புனைவுகள் எழுந்தன. குறிப்பாக மரபுக்கவிதைகள் பலவும் தொகுக்கப்பட்டு இன்றும் வாசிக்கக் கிடைக்கின்றன. நவீன இலக்கியத்தில் சீ.முத்துசாமியின் நாவல்களில் அதன் தாக்கம் உள்ளது. 2005க்குப் பின் உருவான எழுத்தாளர்களில் மஹாத்மனின் உதிரி மனிதர்களின் கதைகள், சு.யுவராஜனின் ‘கருப்பண்ணன்’, கே.பாலமுருகனின் ‘பறையர்கள் இருந்ததாகச் சொல்லப்பட்ட வீடு’ போன்றவை அழுத்தமாகவே சாதிய ஒடுக்குமுறையைப் பேசுகின்றன. மலாயா பல்கலைக்கழகத்தில் தொகுக்கப்படும் பேரவைக் கதைகளில் மாணவர் பிரிவில் எழுதப்பட்ட கதையிலும் தீண்டாமைக்கு எதிரான கதைகள் உள்ளன. எனவே ஓர் ஆய்வாளர் மலேசியாவில் தலித் இலக்கியம் என தொகுத்தால் இவை எல்லாம் உட்புகும் என்றேன்.

அதாவது நான் மேலே சொல்லியுள்ள பட்டியலில் சாதி ஒடுக்குமுறையை மட்டும் குறிப்பிடவில்லை. வர்க்க அடக்குமுறை, உதிரி மனிதர்கள், விளிம்புநிலை மனிதர்கள் என அனைவரையும் இணைக்கிறேன். இதன் வழி இந்நாட்டில் காலகாலமாக சாதியால், வர்க்கத்தால், தொழிலால் முடக்கப்படுவதையும் அவர்கள் மேல் அதிகாரம் திணிக்கப்படுவதையும், அவ்வாறு திணிக்கப்படும்போது அவர்கள் குரலற்று இருப்பதையும் இந்தக் குரலற்றவர்களின் குரல்களாக இந்தப்புனைவுகள் உள்ளதையும் தொகுத்தால் மலேசியாவிலும் தலித் இலக்கியம் என ஒரு பிரிவு உருவாகும் என்கிறேன்.

இன்னும் எளிமையாகச் சொல்வதானால், இந்நாட்டில் இதுவரை கோட்பாட்டு ரீதியாக இலக்கியங்கள் விரிவான அளவில் வகுக்கப்படவில்லை. அவ்வாறு வகுத்தால் அதற்கான தரவுகள் உள்ளன என்கிறேன்.

மதியழகன் சொன்னதுபோல இதில் ஏதும் நான் குரங்கு வித்தை காட்டி குழப்புகிறேனா என வாசகர்கள்தான் சொல்லவேண்டும்.

கீழ்க்காண்பவை மதியழகன் எழுதியுள்ளதில் ஒருபகுதி:

அடுத்து //நான் பெரும்பாலும் தமிழகத்து வரையறைகளை உள்வாக்குவதில்லை// என்று சொல்லும் நவீன், இறுதியில் //பல்வேறு இனத்தின் புனைவுகளையும், ஒடுக்கப்பட்ட பூர்வகுடிகளின் வலிகளையும் தலித் இலக்கியமாக தொகுப்பது நல்ல முயற்சியாக இருக்கும்// பூர்வகுடிகளை டலித்தோடு இணைக்கிறார். அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாக பார்க்கிறார். நவீனின் முட்டாள்தனத்தின் ஆக சிறந்த வெளிபாடு இதுதான்.

மூன்றாவது: தலித்தியம் என்பதை ஒடுக்கப்பட்ட சாதியோடு மட்டும் நான் ஒப்பிடவில்லை எனத் தெளிவாகவே நேர்காணலில் சொல்லியுள்ளேன். மிகத்தெளிவாகவே குரல் நசுக்கப்பட்டவர்கள், சம உரிமையற்றவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், விளிம்புநிலை மக்களின் குரலைப் பதிவு செய்பவைகளை அவ்வாறு வகுக்கலாம் என நேர்காணலில் கூறியுள்ளேன். அவ்வாறு மலேசியாவில் பூர்வக்குடியினர் தங்கள் உரிமைகளைக் கேட்டுப்பெரும் குரலைக் கொண்டிருக்கவில்லை. அவர்களின் அடையாளங்கள் அகற்றப்பட்டுள்ளன. அவர்கள் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே, மலேசியா போன்ற நாட்டில் தலித்தியம் என்பதற்குப் புதிய வடிவத்தை உருவாக்க வேண்டும் என்கிறேன். அதாவது இவ்வாறு குரல் நசுக்கப்பட்டவர்களின் புனைவுகள் பெரும் தொகுப்பாக மாறும்போது அது ஒரு தேசத்தின் ஒடுக்கப்பட்டவர்களின் ஒருமித்த குரலாக இருக்கும் எனக் கூறியுள்ளேன்.

இதையும் இன்னும் தெளிவாகச்  சொல்வதானால், தமிழகத்தில் தலித் இலக்கியக்கோட்பாட்டாளர்கள் அதனை எவ்வாறு அணுகினாலும் மலேசியத் தன்மைக்கேற்ப தலித்திய இலக்கியங்கள் தொகுக்கப்பட வேண்டும் என்கிறேன். தலித்தியமோ, மார்க்ஸியமோ, பெண்ணியமோ தமிழகத்துக் கோட்பாடுகள் இல்லை. உலகம் முழுவதும் உள்ள இந்த மேற்கத்திய கோட்பாடுகளின் தமிழ் கலைச்சொற்கள் அவை. இந்தத் தெளிவுகூட இல்லாமல் விவாதிக்க வந்தால் என்னவென்று சொல்வது. குறைந்தபட்சம் பூர்வக்குடி இலக்கியங்களை அவர்கள் வலியை ஏன் அவ்வாறு தொகுக்கக்கூடாது என்றாவது கூறலாம்தான். பாவம் அதை சொல்லத்தெரிந்தால் அவர் ஏன் இப்படி உளறுகிறார்.

மதியழகனின் மற்றுமொரு கூற்று:

மலேசியாவில் குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் மட்டும்தான் மலம் அள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தப்படவில்லை. அவர்கள் மலம் அள்ளும் வேலையை செய்யாமலும் இருக்கலாம். நம் நாட்டில் சீனர்கள்கூட மலம் அள்ளும் வேலையை செய்திருக்கிறார்கள். மலம் அள்ளுதல் வேலையை ஒடுக்கப்பட்டவர்களோடு இணைக்கிறார்.

நான்காவது: ‘வண்டி’ சிறுகதையை வாசித்த ஒருவரால் அது கூறப்படும் காலத்தை முதலில் அறிய முடியும். மதியழகனுக்கு இலக்கிய வாசிப்பு என்றால் என்னவென்றே தெரியாது என்பதற்கு இதுவொரு சான்றுதான். மதியழகன் சீனர்களும் மலம் அள்ளுகின்றனர் என்கிறார். அதேபோல இன்று சாக்கடை கழுவுதல், மலக்கிடங்கை சுத்தம் செய்தல், குப்பை அல்லுதல் போன்ற வேலைகளையும் பல்வேறு இனத்தவர்களும் இன்று (பெரும்பாலும் அந்நிய நாட்டவர்களும்) செய்கின்றனர். ஒரு புனைவை அது சொல்லப்படும் காலத்தில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். சாதியை இன்று தொழில் சார்ந்து மலேசியாவில் அளவிட முடியாது என்பதை எவரும் அறிவர். அதை சொல்ல மதியழகன் தான் வர வேண்டுமா என்ன? ஆனால் தமிழகத்தில் இருந்து இங்கு புலம்பெயர்ந்து வந்தபோது இருந்த நிலை அதுவல்ல. ஓரளவு வரலாற்றை உணர்ந்தவர்களும் அதை அறிவர்.

இப்போது மதியழகன் பிரச்னைக்கு வருவோம். அவர் தான் படுபயங்கரமாகக் கேள்வி கேட்டுள்ளதாக நினைத்துக்கொண்டிருக்கும் பதிவுக்குக்கீழேயே சிலர் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளனர். கோவிந் பாலா என்பவர், ‘1981இல் ஈப்போ மாநகரில் நகரான்மை கழக தொழிலாளர்களின் குடியிருப்புகளைத் தமிழ்நாட்டில் இருப்பதுபோல சாதி பெயர் கொண்டு அடையாளப்படுத்தப்படுவதை கண்டிருக்கிறேன்.’ என்கிறார். ஆம். ‘வண்டி’ கதையில் வருவதும் அவ்வாறான குடியிருப்புதான். அவ்வாறு குப்பை அள்ளுபவர்கள் தனித்த பகுதியில் குடியமர்த்தப்பட்டார்கள் என்றே அக்கதையில் எழுதியுள்ளேன். செல்வன் காசிலிங்கமும் சு.வேணுகோபாலின் ஆளுமை பற்றி தெளிவாகவே சொல்லிவிட்டார். செல்வன் சிவதாஸ் தலித் இலக்கியம் குறித்து தெளிவாகவே விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் அதுவெல்லாம் மதியழகனுக்குப் பதிலாக இருக்காது. ‘என்னென்னவோ சொல்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை’ என அப்பாவியாகச் சொல்கிறார். காரணம் அவர் பதிலை எதிர்ப்பார்க்கவில்லை. அல்லது அதை உள்வாங்கும் அறிவு அவரிடம் இல்லை.

மதியழகன் திட்டவட்டமாக பதிலைக் கேட்கிறார்.

மலேசியாவில் டலித் இலக்கியம் என்கிற ஒரு வகை இருக்கிறதா? இருக்கு அல்லது இல்லை. இருக்கிறது என்றால் ஆம் இருக்கிறது, இல்லை என்றால் இல்லை. வண்டி சிறுகதை டலித் இலக்கியமா? ஆமாம் அது டலித் இலக்கியம்தான். அல்லது டலித் இலக்கியம் அல்ல. இதையும் தெளிவாக சொல்ல தெரியாமல், வழக்கம் போல் பல கதைகளின் தலைப்புகளை சொல்லி சமாளிக்கிறார். என புகார் வேறு கொடுத்திருக்கிறார். உண்மையில் அப்படி ஆம் – இல்லை என மட்டுமே ஒருவிவாதத்தில் பதில் சாத்தியமல்ல. உதாரணமாக “முகநூலில் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியலிட்டு கட்டுரை என ஆதாரமில்லாமல் உளறும் ஒரே மடையன் நீங்கள் மட்டுமா?” என ஒருவர் மதியழகனிடம் கேட்டால் அவர் ஆம் அல்லது இல்லை என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை பதிலாகச் சொல்ல முடியுமா? முடியாது அல்லவா? ஒரு சாதாரண கேள்விக்கே முடியாது எனும்போது இலக்கிய விவாதத்தில் விரிவான பதில்களே சாத்தியம்.

ஆனால் இப்படி விளக்கமாக பதில் சொல்பவர்களிடம் மதியழகன் பேசும் வாசகங்களைப் பார்த்தால்vadivelu படு காமடியாக இருக்கும். “நான் அவ்வளவு வொர்த் இல்லை. எங்கிட்ட போய் ஏன் விவாதம்” என பின்வாங்குவார். அல்லது “நான்தான் ஆதாரம் இல்லாமல் சொல்கிறேனே. என்னை ஏன் கண்டுக்கொள்கிறீர்கள். என்னை விட்டு நீங்குங்கள்” எனும் ரீதியில் புலம்புவார். ஏதோ ஒரு படத்தில் வடிவேலு “நான் சும்மா மிரட்டுனத நீங்க உண்மன்னு நம்பிட்டீங்க ஊ ஊ ஊ” என ஊளையிட்டபடி செல்வதுதான் நினைவுக்கு வருகிறது.

இறுதியாக மதியழகன் உதிர்த்த வாக்கியங்கள்தான் அற்புதமானவை. வல்லினம் செட்டு பயந்தவர்கள். அவர்கள் தைரியசாலிகள் போல் நடிப்பவர்கள். தங்கள் பிழையை ஒப்புக் கொள்ள தயங்குபவர்கள். நேர்மையாக பதில் சொல்ல தெரியாதவர்கள். ஒரே பதில், சரியாக தெளிவாக சொல்ல வேண்டும். மலேசியாவில் டலித் இலக்கியம் என்கிற ஒரு வகை இருக்கிறதா? வண்டி சிறுகதை மலேசிய டலித் இலக்கியமா? டாட்.

நான் முன்பே சொன்னதுபோல இவ்வளவுதான் மதியழகன். அவரிடம் அறிவார்த்தமாக உரையாட விசயம் இல்லை. ஒரு தேர்ந்த தற்காப்பு கலை பயின்றவன் தெருச்சண்டை போடுபவனிடம் மல்லுக்கு நிற்பது கலை பயின்றவனுக்குதான் பின்விளைவுகளைக் கொடுக்கும். மோதலின் வரையறைகள் தெரியாமல் கையில் கிடைப்பதையெல்லாம் அள்ளி அள்ளி தெருச்சண்டைக்காரன் வீசத்தொடங்குவான். சேற்றை அள்ளிக்கூட வீசுவான். தற்காப்பு கலைஞனின் சட்டை அழுக்கடைந்தால் தான் வென்றதாகக் கூச்சலிடுவான். மூடர்களும் அதற்குக் கைத்தட்டக்கூடும். ஆனால் அக்கலையின் தன்மையை வரையறையை நேர்த்தியை உணர்ந்தவர்கள் தெருச்சண்டைக்காரரின் போதாமையை உள்ளூர தோன்றியுள்ள பயத்தின் பதற்றத்தை அறிவர். எறுமையைக் கொல்ல சேற்றில் இறங்கும் புலிகளின் நிலை அபத்தமானது. மதியழகனுக்கு அதுதான் வேண்டும். அவரால் சேற்றில் நின்றே உரையாட முடியும். அதற்கான தொடக்க வாக்கியம் இது. ஒருவரை கோழை என்பதால் அவரை கருத்தில் இருந்து விலக வைத்து ; நிதானம் இழக்க வைத்து நீயும் சேற்றில் இறங்கு இதுதான் எனக்கு உவப்பான களம் என அழைக்கும் உத்தி.

மதியழகனின் இந்த வலையில் எல்லாம் நான் விழ மாட்டேன். அவரது மூடத்தனம் இனி வெற்றுக்கூச்சல் ஆகும். தனிமனித வசை ஆகும். அவதூறு ஆகும். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. இது அவருக்கான இறுதியான விளக்கம். மற்றபடி அவரது இயலாமையை வாசிப்பவர் அறிவர். ஒருவரை எத்தனை முறைதான் முட்டாள்  என உலகின் முன் அம்மணமாக நிறுத்துவது? பாவம்தான் மதியழகன் நிலை.

நல்லது. வல்லினம் குழு பயந்தவர்கள்தான். ஏதாவது கொஞ்சம் தெரிந்தவர்களிடம் அதை வைத்து விளக்கி விரிவாகப் பேசலாம். எதுவுமே தெரியாதவர்களிடம் முதலில் இருந்து பாடம் சொல்லித்தருவதால் நேர விரையம் எனும் பயம்தான்.  ஆனால் முட்டாளாக இருப்பதைவிட பயந்தவர்களாக இருப்பது பெரிய அவமானமில்லை என்றே நம்புகிறேன். நண்பர்கள் ஒரு உண்மையை மட்டும் கண்டறிந்து சொல்லவேண்டும். மதியழகன் என்பது நிச்சயமாக அவரது புனைப்பெயர்தானே? பெயருக்கும் ஆளுக்கும் பொருந்தவில்லையே. அதுதான்!

(Visited 516 times, 1 visits today)