அம்பரம் நாவல் (உரை)

அனைவருக்கும் வணக்கம்

நான் வாழ்ந்த லுனாஸ் வட்டாரத்தில் ஒரு மாரியம்மன் கோயில் இருந்தது. ‘பேய்ச்சி’ நாவலில் அந்தக் கோயிலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் மண்டபத்தில் தேர் ஒன்று ஓரமாக ஒதுங்கி நிற்கும். திருவிழாவின்போது மட்டுமே அதை கண்டுகொள்வார்கள். மற்ற நாட்களில் அது எங்கள் விளையாட்டு பொருள்களில் ஒன்று. திருவிழாவின்போது அதை மண்டபத்தில் இருந்து இழுத்துச் சென்று பெரிய காளை மாடுகளுடன் இணைக்க வேண்டி இருக்கும். அது சாதாரண காரியமல்ல. அவ்வளவு சீக்கிரம் தேர் நகராது. ஆனால் அதை இழுத்துச் சென்று மாட்டிடம் இணைப்பதே ஒரு மங்கள செயலாகக் கருதப்பட்டதால் பலரும் தங்கள் கைகளை தேரில் வைத்திருப்பார்கள். ஐம்பது அறுபது கரங்கள் அதில் பட்டிருந்தாலும் குறிப்பிட்ட சில இளைஞர்களின் பலத்தால்தான் அந்தத் தேர் நகரும். அவர்களே அதில் பிரதானமானவர்கள். மூச்சுத்திணர தேரை இழுத்து மாட்டுடன் பூட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்வார்கள்.

இவர்களுக்கு அடுத்து ஒரு பெரும் குழு இருக்கும். அது எங்களைப் போன்ற பொடியர்களின் குழு. ஒன்றுதிரண்ட எங்களுடைய பலத்தால் அந்தத் தேர் சில சென்டி மீட்டராவது நகருமா இல்லையா என்றுகூட எங்களுக்குத் தெரியாது. ஆனால் அந்த இளைஞர்கள் அடைந்துள்ள சோர்வில் சற்றும் குறையாமல் நாங்களும் சோர்வை அடைந்திருப்போம். சட்டை தொப்பலாகியிருக்கும். கை கால்களில் வலி இருக்கும். இறுக்கக் கடித்திருந்ததில் பற்களிலும் வலி இருக்கும். எங்களால் அந்தத் தேர் நகரவில்லை என யாராலும் சொல்லமுடியாது. எங்களால்தான் நகர்ந்தது எனவும் சொல்ல முடியாது. எங்களுக்கு அதை பற்றிய கவலையும் இல்லை. எங்களுக்கு அதற்கான உத்தி தெரியாமல் இருக்கலாம். உயரம் போதாமல் இருக்கலாம். உடல் பலம் குறைந்திருக்கலாம். ஆனால் அந்தத் தேரை நகர்த்த வேண்டும் என்று முயன்ற எங்கள் கரங்கள் உண்மையானவை. புண்ணியம் கிடைக்கும் என சடங்குக்காக வைக்கப்பட்ட கைகளல்ல அவை. மேலிடத்து கடவுளின் கவனம் கிடைக்கும் என்பதற்காக வைக்கப்பட்ட கைகளல்ல அது. பட்டியலில் இடம்பிடிப்பதற்காக வைக்கப்படும் கைகளல்ல அவை. ஒன்றை நகர்த்த வேண்டும் என்ற வேட்கை மட்டுமே அந்தக் கரங்களில் இருந்தன. அம்பரம் எழுதிய கை அவ்வாறானது. சிங்கை தமிழ் இலக்கியத்தை நகர்த்த வேண்டும் என்ற உண்மையான நோக்கம் கொண்டது. எனவே பல கலை குறைபாடுகள்  இருந்தாலும் அந்தக் கை மதிக்கத்தக்கது.

***

‘அம்பரம்’ நாவலை ஒரு மனிதனின் கதையென்றே நான் அணுக விளைகிறேன். இதற்குள் பர்மா, இந்தியா, சிங்கப்பூர் என வெவ்வேறு நிலங்கள் வந்தாலும்; பூகம்பம், போர், வன்முறை என பல்வேறு சிக்கல்கள் எழுந்தாலும்; பல்வேறு கதாபாத்திரங்கள் குறுக்கிட்டுச் சென்றாலும் இது யூசுப் எனும் இளைஞனின் கதை. பதினோரு வயது முதல் இருபது வயது வரை அவன் அலைக்கழிப்புகளைச் சொல்லும் கதை. காலமும் வரலாறும் ஏற்படுத்தும் மாற்றங்களை ஒருவனை எதுவரை நகர்த்திச் செல்கிறது எனச் சொல்லும் கதை.

தன் கணவன் மௌன் போவை தேடி அங்கி எனும் சிறு கிராமத்தில் இருந்து பேகூ நகருக்குச் அன்னை ஆயிஷாவுடன் செல்கிறான் சிறுவன் யூசுப். அவன் அப்பா மனதில் மெல்ல மெல்ல துறவு மனநிலை ஏற்பட்டு முற்றிலுமாக  குடும்பத்தில் இருந்து விலகி விடுகிறார். அப்பா காணாமல் போகப்போவதை ஒருவகையில் சிறுவனான யூசுப் அறிந்திருந்தான். அதை தடுக்கும் என்னமெல்லாம் எழாமல் மிக இயல்பாகவே அந்தப் பிரிவு நிகழ்கிறது. அவன் அம்மா ஓராண்டுக்குப் பிறகு அப்பாவைத் தேடிச் செல்வதுகூட அவனுக்கு பெரிய ஆர்வத்தைக் கொடுக்கவில்லை. ஓர் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்க்கும்போது ஓர் இளம் பிக்குவைப் பார்த்து ஓர் வயதான பெண்மணி உதிர்த்த கண்ணீர்  சொற்கள் மட்டும் அவன் மனதில் பதிகின்றன. அந்த மூதாட்டி சொல்கிறாள், “துறவறம் என்பது துன்பங்களில் இருந்து ஓடி ஒளியும் இடமல்ல. தனக்குள்ளிருந்து சத்தியத்தையும் சந்தோஷத்தையும் கண்டடையும் ஞானம்”.

ஒருவகையில் அவன் தந்தையைப் புரிந்துகொள்ளும் வரியாக இது இருக்கலாம். அவன் தந்தை துன்பத்தைக் கண்டு ஓடவில்லை. அவர் வாழ்க்கை இன்பமாகவே உள்ளது. அவரது மகிழ்ச்சியான குடும்பமே. ஆனால் அவர் மெல்ல மெல்ல குழந்தையாகிக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் ரமா அவரைக் காட்சிப்படுத்துகிறார். சிறுவனின் கண்கள் இடையறாத தேடல் கொண்டது. ஓரிடத்தில் நிலைக்காதது. அவரும் தேங்காமல் திரிகிறார்.

இந்த முடிச்சில் இருந்துதான் நாவல் விரிகிறது. எங்கோ யாரோ ஒரு கிழவி யாருக்கோ சொல்வதாகச் சொல்லிசென்ற சொல்லல்ல அது. அது அவனுக்கானது. யாரோ அவனுக்காக அனுப்பி வைத்த சொல். அன்றிரவே பூகம்பத்தால் அவன் வாழ்வில் முதல் இழப்பு நிகழ்கிறது. அது அவன் தாயின் மரணம். எரிந்து அழுகிய உடலைப் பார்த்த துன்பத்தோடு அவன் தன் புதிய குடும்பத்துடன் ரங்கூன் செல்கிறான்.

சிவராமனைத் தந்தையாக ஏற்று அவர் அரவணைப்பில் வளர்கிறான். ஏறக்குறைய மூன்றாண்டுகள் எதிலும் நாட்டமில்லாமல் இருந்தவனுக்குக் குத்துச் சண்டை மீது ஆர்வம் உண்டாகிறது. பிறந்த நிலத்தை இழந்தபிறகு தாயை இழந்தபிறகு அவனுக்கு உரிமையாக இருப்பது அவன் உடல். அவ்வயதில் தன் உடலை தன்னிடமே நிரூபிக்க காமமும் வீரமுமே தேவையாகின்றன. அவன் வீரத்தை தேர்வு செய்கிறான். குத்துச்சண்டையில் நுழைகிறான். தன் உடலின் எல்லையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு அது. அதில் மாணவனாக இருக்கின்ற சிட் போ மீது பகையும் பின்னர் அதுவே நட்பாகவும் மாறுகிறது. வாழ்வில் மீண்டும் ஓர் உறவின் மீது வலுவான பிடி கிடைக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற நடந்த தேர்வுச் சுற்றுக்கான விளையாட்டில் யூசுப் – சிட் போவை கொல்கிறான். அது விபத்து. இருப்பைத் தக்க வைக்க நடந்த போராட்டத்தின் விபத்து. மீண்டும் யூசுப் அகத் தனிமைக்கு உள்ளாகிறான்.

மேலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மார்ஷியலால் அவன் வாழ்வில் மாற்றம் நிகழ்கிறது. மார்ஷியல் பிரிட்டிஷ் அரசால் பர்மாவில் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டவர். பர்மாவின் வளங்களைச் சுரண்டி பிரிட்டனுக்கு அனுப்புபவர். இப்போது அவனுக்கு இருப்பது அடையாளச் சிக்கல். தன்னை பிறருக்குக் குத்துச்சண்டை வீரனாக நிரூபிக்க சிங்கை புறப்படுகிறான். ஆனால் பிரிட்டிஷ் இராணுவத்தில் இணைய மறுக்கிறான். அடுத்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள சிங்கப்பூரில் இருப்பதே வழியென உணர்ந்து தன் நண்பன் பஹீர் மற்றும் மனைவி காஜியாவுடன் சிங்கப்பூர் செல்கிறான். தன் தாய் நிலத்தைப் பிரிகிறான்.

சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு யூசுப் மூன்று குழந்தைக்குத் தந்தையாகிறான். இரண்டாவதாக அவனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. அவன் ஏன் அங்கு வந்தான், எதன் பொருட்டு சிங்கப்பூரில் இருக்கிறான் என மறந்த நிலையில் வாழ்க்கை தொடரும்போதுதான் இரண்டாம் உலகப் போர் உக்கிரமடைகிறது. இதற்கிடையில் தன் மனைவி காணாமல்போன தம்பி குதாஃபக்கைத் தேடும் பிடிவாதத்தைக் காட்டியதால் பர்மா திரும்பும் திட்டம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக குண்டு  வீச்சில் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைப் பறிகொடுக்கிறான்.

இனி அவன் நம்ப காலம் மட்டுமே உள்ளது. ஆற்றில் அடித்துச்செல்லும் துரும்பு போல காலத்திடம் தன்னை ஒப்படைக்கிறான். மனைவி மட்டுமே அவனுக்கு ஒரே நெருங்கிய உயிர். ஆனால் வரலாறு ஏற்படுத்தும் இரண்டாம் உலகப் போரினால் ஜப்பானிய இராணுவத்தால் அவன் மனைவியும் கொல்லப்படுகிறாள்.

நாவலில் யூசுப்பில் இழப்புகள் படிப்படியாக நிகழ்கின்றன. அம்மாவின் காதலால் பிறந்த ஊரை இழக்கிறான், இயற்கையின் தாக்கத்தால் தாயை இழக்கிறான், தனது உடல்மீது கொண்ட பற்றினால் நண்பனை இழக்கிறான். அடையாளத் தேடலால் பிறந்த நாட்டை இழக்கிறான், மனைவியின் சகோதர பாசத்தால் தன் பிள்ளையை இழக்கிறான், வரலாற்று மாற்றத்தால் தன் மனைவியை இழக்கிறான்.

அவன் நதியில் அதன் போக்கில் அடித்துச்செல்லும் ஒரு சின்னச் சிறிய துரும்புதான்.

தாயின் உறவு பற்றால் இழப்புகளின் தொடக்கத்தில் அடியெடுத்து வைத்தவன் மனைவியில் உறவு பற்றால் மொத்த உறவுகளையும் துறக்கிறான். தந்தையின் தன் சிறுவனின் கண்களை இழந்தவன் தன் மகனிடம் அதைப் பெற்றுக்கொண்டு தன் ஒற்றை பனையைத் தேடிச் செல்கிறான்.

ஆம்! துறவைத் நாட யூசுப் தன் தந்தைக்குக் கொடுத்தது தன் இளமையை. தந்தை யூசுப்புக்குக் கொடுத்தது தன் முதுமையை. ஒரு முதியவனின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை இழப்புகளையும் அவன் அனுமதிக்கிறான். அதன் வழியாகவே அவன் தன் தந்தையை அடைய நினைக்கிறான். அவன் அம்மா தன் கணவனின் உடலைத் தேடினார். அது காதலின் தேர்வு. அவன் தன் தந்தையின் அறிவைத் தேடுகிறான். அது ஞானத்தின் தேர்வு. அவனுக்கு தன் பதினொரு வயதில் கேட்ட கிழவியின் குரல் தன் தந்தை அனுப்பி வைத்ததுதான் என கடைசியாகக் கப்பலில் ஏறியபோது தெரிந்திருக்கும்.

அதுதான் இந்த நாவலின் தரிசனம். தந்தை கொலைகளைப் பற்றி ஏராளமாக படித்த நமக்கு தந்தைக்கும் மகனுக்குமான அரூபமான இன்னொரு பிணைப்பை இந்நாவல் முன்வைக்கிறது. அதுவே இந்நாவலின் தனித்துவம்.

ரமா சுரேஷ்

ரமாவுக்கு வாழ்க்கை குறித்த தனித்த பார்வை உள்ளது. மனிதர்கள் குறித்த சில தனித்த அபிப்பிராயங்கள் உள்ளன. இதனாலேயே அவர் முக்கியமான படைப்பாளியாக சிங்கப்பூரில் உருவாக அதிக சாத்தியங்கள் உள்ளது என நினைக்கிறேன். ஆனால் இந்த எண்ணங்களை, சிந்தனைகளை கலையாக முன்வைக்கும்போது அவர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய கூறுகளை தவற விடுவதுதான் வருத்தமானது. நாவல் என்பது தத்துவத்தின் கலை வடிவம்தான். தத்துவங்களை கலையாக மாற்றவில்லையென்றால் அங்கு எஞ்சி நிற்பது சம்பவத் தொகுப்புகள்தான். ரமாவின் புனைவை பலவீனமாக்குவது இந்த கலைக்குறைபாடுகள்தான்.

அவ்வகையில் மிக அடிப்படையாக ஓர் எழுத்தாளர் கடந்து செல்ல வேண்டிய மூன்று குறைபாடுகளை மட்டும் இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

மொழி

இலக்கியம் மொழியைத்தான் அடிப்படை கச்சா பொருளாகக் கொண்டுள்ளது. ஒரு வண்ணத்துடன் எதை இணைத்தால் என்னவாக மாறும் என்ற அடிப்படை புரிதல் இல்லையென்றால் எவ்வளவு திறமையான கலைஞனாலும் ஒரு ஓவியத்தைப் படைக்க முடியாது. அம்பரம் நாவலில் ஆசிரியர் கூற்றுகளில் பேச்சு மொழியும் வசனங்களில் தூய தமிழும் பயன்படுத்தப்படுகின்றது. சில இடங்களில் இரு கதாபாத்திரங்கள் தூய தமிழிலும் பின்னர் அவர்களே பேச்சு மொழியையும் பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூரில் உள்ள எழுத்தாளர்களுக்கு மலாய் சொற்களை தங்கள் புனைவுகளில் பயன்படுத்துவதில் அப்படி என்னதான் ஆர்வமோ எனத் தெரியவில்லை. சில மலாய் சொற்கள் தமிழுடன் கலந்து அது ஒரு தனித்த தமிழ்ச் சொல்போலவே புழங்கிவிடுவதுண்டு. உதாரணமாக நாசி லெமாக், மீ கோரெங் போன்றவை உடனடியாக நினைவுக்கு வருபவை. இவை மலாய் சொற்கள். ஆனால் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாறிக்கொண்டவை. எழுத்தாளர் தன் புனைவில் இச்சொற்களை கதாசிரியர் மொழியில்கூட பயன்படுத்தலாம். வசனங்களில் பயன்படுத்த தடையே இல்லை. ஆனால் நேனேக், தாங்கா, யாகின் போன்ற சொற்களை கதாசிரியர் மொழியில் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அப்படிப் பயன்படுத்துவதால் அது சிங்கப்பூர் கதையாகிவிடுமா என்ன?

ஆசிரியர் தலையீடு

இந்த நாவலை வாசிக்கும்போது இது முதிர்ச்சியற்ற படைப்பு என ஒருவர் முதலிலேயே முடிவுக்கு வர நாவல் முழுவதும் ஆங்காங்கு தலைகாட்டும் ஆசிரியர் கூற்றையும் கட்டுரைத் தன்மையையும் சொல்லலாம். பல இடங்களில் விரிவாகவே பர்மாவின் பின்னணி விளக்கப்படுகிறது. புனைவின் அடிப்படை விதி என்பது சொல்வதல்ல; காட்டுவது. அவற்றை நிகழ்வுகளின் வழி காட்சியாக மாற்றுவதற்கே ஆசிரியர் முயற்சி செய்ய வேண்டும்.  ஒரு நகைச்சுவை துணுக்கைகூட அதற்கேற்ற வடிவத்தில் சொன்னால்தான் சிரிப்பு வரும். எந்த ஒரு ஜோக்கையும் நீங்கள் விரிவாக கட்டுரையாக்கிப் பாருங்கள். அது விரிய விரிய அங்கே சிரிப்புக்கு இடமில்லாமல் போகும். இந்தச் சலுகையைத்தான் நாவலும் கேட்கிறது. அதற்கேற்ற வடிவத்தில் அமையும்போது அதில் புதைந்துள்ள மாயங்கள் துலங்கி மேலே வருகின்றன.

நுட்பமும் சித்தரிப்பும்

ரமாவினால் வெகு நுட்பமாகவே சில இடங்களைச் சித்தரிக்க முடிகிறது. உதாரணமாக, ஊரை விட்டு புறப்படும் முன் யூசுப் தனக்கு சொந்தமாக இருக்கும் பொருட்களை நண்பர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கிறான். அதில் ஒற்றைப் பனையும் அடங்கும் என்கிறார். சிறுவர்களின் மனதை வெகு எளிதாக அவரால் காட்ட முடிகிறது. அதுபோல தான் சாப்பிட்டுவிட்டதாகக் கூறியபடியே கையை முகர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் சிறுவன் யூசுப்பை இன்னொரு இடத்தில் காட்சிப்படுக்கிறார். இதுபோன்ற சித்தரிப்புகள் எல்லாம் ஒரு சிறுவனை நமக்கு நெருக்கமாகக் காட்டுகிறது. நாவலில் ஓரிடத்தில் ‘சண்டையில் அவருடைய படிந்து வாரிய தலை கலைந்ததில்லை’ என்கிறார். இந்த சிறு குறிப்புகூட ஒருவன் எவ்வளவு பெரிய வீரன் என எளிதாகக் காட்டுபவைதான். அதுபோல தன் தம்பியைத் தேடும் காஜியா ‘தீவு முழுவதும் நடந்து நடந்து எதையோ விதைத்துக்கொண்டிருந்தாள்’ என்கிறார். ரமாவிடம் இப்படி தன்னியல்பாக வந்துவிழும் காட்சிகள்தான் நாவலில் வரும் கதாபாத்திரங்களை அறிந்துகொள்ள கூடுதல் பலம் சேர்கின்றன. நாவலில் இப்படி ஒரு வரி வருகிறது. ‘எங்கள் வீட்டுக்குள் அமைதியாக சூறாவளிக்காற்று வீசியது. யாரும் யாருக்கும் தெரியாததுபோல சுழன்றோம்’. ரமா உருவாக்கிச்செல்லும் இந்த வரிகள் கவித்துவமானவை. காரணம் இவை மேலும் விரிவாக நாவலில் காட்சிகளை அடுக்கிச் செல்கின்றன. துல்லியமாக அவர்களின் சூழலை அவதானிக்க முடிகிறது.

அதுபோல இந்த நாவலில் வரும் மனவெளிப்பாடுகளையும் சொல்லலாம். நாவலில் மிகக்குறைவாக வரும் ஆறாயியுடைய மன ஓட்டம் ஓரிடத்தில் வரும். வாழ்நாள் முழுவதும் கணவனின் நிழலில் வாழும் ஒரு மனைவியின் அகக்குரல் அது. தான் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறோமா அல்லது சோகமாக இருக்கிறோமா எனத் தெரியாமல் தவிக்கும் அவளது சொற்கள் அற்புதமானவை; ஆழமானவை. அதுபோல யூசுப்பின் மனப்போராட்டமும் சில இடங்களில் அவனை நெருக்கமாக அறிந்துகொள்ள உதவுகிறது. உதாரணமாக, யாருடைய நம்பிக்கையையும் உடைக்காமல் இருப்பதையே தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு அவன் கொடுக்கும் ஆறுதலாகக் கருதுவதை அவனை யாரென உணர்த்துகிறது. கடும்போரில் உயிர்கள் இறந்துகொண்டிருக்க யூசுப்பின் பிள்ளைக்கு யாரோ ஒரு தாய் பாலூட்டுகிறாள். அவள் ‘இந்த உம்மாகிட்ட பால் குடிக்கனே வந்தீங்களா?’ எனும் அவளின் குரலெல்லாம் ரமாவின் மேலும் நம்பிக்கையை அதிகமாக்குகிறது.

ஆனால், இந்த நுட்பத்தை ஏன் அவர் புறக்காட்சிகளில் நிகழ்த்தவில்லை என்பதுதான் வருத்தம். நாவல் முழுவதும் பர்மா, தமிழகம், சிங்கப்பூர் போன்ற நிலங்களும் குத்துச்சண்டை, பூகம்பம், போர் என அசாதாரண தருணங்களும் வந்தபடியே உள்ளன. ஒரு துளி தேனின் நுட்பத்தைச் சொல்லும் ரமா அது சொட்டிய கூட்டையும் அது தொங்கிக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான மரத்தையும்  தவறவிடுகிறார். துளி நமக்கு சுவையைக் கொடுக்கலாம். ஆனால் அது எத்தனை பிரம்மாண்டத்திலிருந்து சொட்டியது என்பது நம் கற்பனையை விரியவைக்கும். அந்தத் துளி எந்த உயரத்தில் நாம் தொட முடியாத தூரத்தில் இருந்தது எனப் புரியவைக்கும். அந்த சிறு தேன் துளிக்கு மதிப்பைக் கூட்டும். இந்தப் புறக்காட்சிகளில் உள்ள பலவீனமான சித்தரிப்புதான் நாவலில் நிகழும் எந்த இழப்புகளையும் வாசகனுக்கு தன் இழப்பாக கடத்த முடியாதவையாகிறது.

சிறிய பிழைகள்

எழுத்தாளர் இமையம் எழுத்துக்காகச் சாக வேண்டும் என்பார். இங்கு சாதல் என்பது முழுக்க தன்னை படைப்புக்குக் கொடுத்தல்தான். பல கோடி முதலீடு செய்து இயக்கப்படும் சினிமாவில் காணும் சில காட்சிக் குறைபாடுகளைக் காணும்போது சரிப்படுத்தியிருக்கலாம் எனச் சொல்கிறோம். அப்படி ஒரு காட்சியை மாற்றியமைக்க பல லட்சம் தேவைப்படலாம். ஆனால் அவ்வளவு பொருளாதாரத்தை கோராத ஒரு புனைவை நாம் எத்தனை முறை எவ்வளவு வேண்டுமானாலும் செறிவாக்கலாம். அதற்கான அவகாசத்தை எடுத்துக்கொள்ளலாம்.

நாவலில் வரும் பல கதாபாத்திரங்கள் முதலில் தோன்றி பின்னர் அர்த்தமற்று போகின்றனர். உதாரணமாக அடோ மற்றும் தெயின் கதாபாத்திரங்கள். நாவலின் தொடக்கத்தில் விரிவாக அவர்கள் உறவைக் காட்டும் அளவுக்கு நாவலுக்குள் அக்காட்சி எந்தச் செல்வாக்கும் செலுத்தவில்லை.

இவையெல்லாம் நூலாசியர் மறுபடி மறுபடி வாசிக்கும்போது அவரே கண்டுபிடித்து நீக்கவேண்டிய அல்லது மாற்றியமைக்க வேண்டிய குறைகள். புனைவுக்கு அதற்கான அவகாசத்தை வழங்குவதன் வழியாகவே இந்தத் தவறுகள் நம் கண்ணில்படும்.

இறுதியாக

நாவலாசிரியருக்கு ஒரு சக படைப்பாளியாக அல்லது என்னைப்போலவே கற்றலில் உள்ள படைப்பாளியாக நான் சொல்வதற்கு ஒன்று உண்டு. ஒரு முனிவன் ஏன் தவம் செய்கிறான். அவன் தவம் செய்வதற்கு முன்பும் அதன் பிறகும் முற்றிலும் வேறான ஒருவனாகவே வெளிப்படுவான். ஒரு நாவலை எழுதுவது அப்படித்தான். நாம் நாமே அறியாத ஒரு வாழ்வை வாழ்ந்து பார்க்கிறோம். அந்த வாழ்க்கைக்கு நம்மை முழுமையாகக் கொடுத்துவிட வேண்டும். அப்போது நாம் அறியாத காட்சிகள் நம் கண்முன்னே தோன்ற ஆரம்பிக்கும். அது ஓர் அசாதாரண அனுபவம். அதை நாம் பதிவு செய்ய ஆரம்பித்தாலே நமது உடல் பல நூறாக உடைவதைக் காணலாம். அதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமாகவும் வாழ்ந்து மீழ்வோம். பலநூறு உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவோம். அப்படி ரமா வாழ்ந்திருந்தால் யூசுப்பின் உடலில், மனதில் நிகழும் பரிணாம மாற்றங்களை இன்னும் துல்லியமாக விவரித்திருக்கலாம். கால இடைவெளிகளை நிரப்பியிருக்கலாம். காரணம் ரமாவின் ஒரு பகுதி யூசுப்பிடம் கூடு பாய்ந்திருக்கும். அவர் பர்மாவுக்குச் சென்று கண்ட காட்சியைவிட காணாதவற்றைக் கண்டிருக்கலாம். அதுதான் கற்பனை. அந்தக் கற்பனைக்குள் நுழைவதே படைப்பாளனின் முன் இருக்கும் சவால். இந்த அனுபவமே ஒரு படைப்பாளியை முதிர்ச்சியாக்குகிறது.

நாம் எழுதுவது முதலில் நமக்காக. நமக்கு நம் எழுத்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். நம் எழுத்தின் வழி இந்த வாழ்வையும் சக மனிதர்களை இன்னும் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடிந்தால் அதுவே நாம் எழுதுவதன் வழி அறியும் முதல் பயன். அதை ரமா அடைவாறேயானால் சிங்கையின் இலக்கியத் தேரை முன்னின்று இழுத்துச்செல்லும் அத்தனை தகுதியும் கொண்ட கரத்துக்குச் சொந்தக்காரர் ஆவர்.

(8.5.2022இல் நடந்த அம்பரம் நூல் வெளியீட்டில் நான் ஆற்றிய உரை)

(Visited 353 times, 1 visits today)