எனது ‘தாரா’ நாவல் வெளியீடு குறித்த அறிவிப்பு வந்த நாள் முதலே நண்பர்கள் பலரும் என் நாவலை வெளியீடு செய்யப்போகும் அந்த வாசுகி டீச்சர் யார் எனக்கேட்டனர். இலக்கியச் சூழலில் அறிமுகமில்லாத அவர் யாராக இருக்கும் என்பதை அறிய பலருக்கும் ஆர்வமும் குழப்பமும் இருந்தது. அவர் என் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் என்றேன் சுருக்கமாக. ஆனால் அவர் அது மட்டுமல்ல. என்னை ஓர் எழுத்தாளன் என முதன் முறையாகக் கண்டுப்பிடித்து என்னிடம் சொன்னவர் வாசுகி டீச்சர்தான்.
வாசுகி டீச்சர் நான் படிவம் 3 படித்தபோது தமிழாசிரியராக அறிமுகமானார். அவர் தமிழ்ப்பாடம் எடுக்கும்வரை தமிழ் வகுப்பு என்பதே கூச்சலும் கும்மாளமுமாக இரண்டு ஆண்டுகள் கடந்தன. பல சமயங்களில் தமிழ் ஆசிரியர்கள் வகுப்பில் நுழைந்ததே இல்லை. அப்படியே நுழைந்தாலும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஒப்பனையைச் சரிபார்த்தபடி இருப்பர்.
தமிழ்ப்பாடம் என்பதே கூடி கும்மாளம் அடிப்பதற்கான பொழுது எனக் கிட்டத்தட்ட முடிவான சூழலில்தான் வாசுகி டீச்சர் ஒரு மின்னலைப் போல வகுப்பில் நுழைந்தார். இழுத்துக் கொண்டையிடாதத் தளர்வான சிகை அலங்காரம். மெல்லிய கண்கள். அது துலங்கித் தெரியும் வகையில் அடர்த்தியாக மை இட்டிருந்தார். பளிச்சென்ற நிறத்திற்கு ஏற்ற எளிய ஒப்பனைகள். அவர் யார்? என்ன? என்று அறிமுகமாகும் முன்னரே கணீரென்று வெளிபட்ட குரலால் வகுப்பு அதிர்ந்தது.
வாசுகி டீச்சர் கண்டிப்பானவர். அவரது துடிப்பான உடல்மொழியால் அது இன்னும் காத்திரமாக வெளிபட்டது. நாங்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் வகுப்பினுள் அடங்கிக் கிடந்தோம். போதனையின்போது அவரது அசாதாரண முகபாவனையும் உயிர்ப்பான உடல்மொழியும் வகுப்பை ஈர்ப்பானதாக மாற்றியது.
தமிழ்ப் பாடத்தை கடமைக்காக இல்லாமல் எப்படியும் தன் அறிவையும் மொழிப்பற்றையும் மாணவர்களிடம் கடத்திவிட வேண்டும் என தீவிரமாக இருந்தார் வாசுகி டீச்சர். எனக்கு டீச்சரின் அந்தத் தீவிரம் முதலில் பயத்தைக் கொடுத்தது. வழக்கமாக வகுப்பில் சேஷ்டைகள் செய்யும் மாணவர்கள் யாரையும் அவர் தைரியமாகக் கையாண்டார். யாருக்கும் பயப்படவில்லை. கேலிக் கிண்டல்கள் செய்யும் மாணவர்களை “என்னாடா?” என நேருக்கு நேராக எதிர்க்கொண்டார். என் வாழ்வில் அத்தனை தைரியமான ஒரு பெண்ணை நான் சந்தித்தது அதுவே முதன் முறை. அதுவே அவரிடம் நெருங்க எனக்குத் தயக்கத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால் அவரிடம் நான் தனியாகப் பேசக்கூடிய ஒரு சூழலும் அமைந்தது.
வாசுகி டீச்சர் வகுப்பில் வாசிப்பை அதிகம் வலியுறுத்துவார். ஒவ்வொருவரையாக எழுந்து வாசிக்கச் சொல்வார். நான் அப்போது அதிகம் திக்குவேன். அதனால் கேலி கிண்டலுக்கும் ஆளாவேன். நான் எப்போதும் எதிரிகள் சூழவே இருந்துள்ளேன். இடைநிலைப்பள்ளியில் கட்டொழுங்கு மாணவர் குழுவுக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்காது. வகுப்பில் நான் திக்கும்போதெல்லாம் கிண்டல் செய்வார்கள். தமிழ்ப்பாடம் அந்த ஆண்டின் அத்தனை வகுப்பு மாணவர்களும் இணைய நடத்தப்படும் என்பதால் கேலிக் கூச்சல்களின் சத்தம் அதிகமாகவே இருக்கும் என அறிவேன். டீச்சர் என்னை வகுப்பில் வாசிக்கச் சொன்னால் அடையக்கூடிய அவமானம் கற்பனையில் வந்து மிரட்டியது. இதை டீச்சரிடம் எப்படிச் சொல்லி புரிய வைப்பது எனக் குழப்பமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை.
மெல்ல அவரை நெருங்கிச் சென்று என் நிலையைச் சொன்னேன். அப்போது டீச்சருடன் நானும் மூன்றாவது மாடியின் படிக்கட்டு விளிம்பின் நின்றுக்கொண்டிருந்தது நல்ல ஞாபகம் உண்டு. சொல்லி முடித்தவுடன் வியர்த்திருந்தது. ஏதும் திட்டினால் அப்படியே படிக்கட்டில் உருண்டு விழுந்துவிடுவேனோ என பயமாக இருந்தது. நான் சொல்வது அவருக்குப் பாதி புரிந்திருக்காது. அந்த அளவுக்குத் திக்கித் திணறிச் சொல்லி முடித்தேன். ஆனால் அதுவே அவருக்கு என் நிலையை உணர்த்தியிருந்தது.
எப்போதும் படபடப்பாக பேசும் அவர், கனிவான கண்களோடு ‘சரி’ என்றார் சுருக்கமாக. எனக்கு நான் என்ன சொன்னேன் என்றே நினைவில் இல்லாதபடி சொற்கள் மூளைக்குள் முண்டியடித்து மோதிக்கொண்டிருந்தன. வகுப்பில் இதைப் பற்றி ஏதும் சொல்லி ஏசுவாரா எனப் பயந்தேன். அடுத்த வகுப்புக்கு சில நாட்கள் அவகாசம் இருந்ததால் அதை அவர் மறந்திருப்பார் என்றே நினைத்தேன். ஆனால் அன்று தொடங்கி ஐந்தாம் படிவம் வரை அவர் என்னை வகுப்பில் வாசிக்கச் சொன்னதே இல்லை. என் முறை வரும்போதெல்லாம் யாருக்கும் கேள்வி எழாதபடி அடுத்த மாணவனுக்குத் தாவிச் செல்வார். கிட்டத்தட்ட அந்த ஒப்பந்தம் நானும் அவரும் கடைசிவரை காத்து வந்த ரகசியமாகவே இருந்தது.
வாசுகி டீச்சரின் வகுப்பு நாளுக்கு நாள் சுவாரசியமாகிக்கொண்டே சென்றது. பாடநூலில் உள்ளத் தகவல்களைத் தாண்டி ஏராளமான விளக்கங்களைக் கொடுக்கக் கூடியவராக இருந்தார். அவர் பாடம் நடத்தத் தொடங்கி முதல் தேர்வு முடிந்து பிறகு வகுப்பின் முன் சொன்னார், “நவீனைத் தவிர வேறு யாரும் கட்டுரைக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் சிறுகதையைத் தேர்வு செய்ய வேண்டாம். அவனுக்கு மட்டுமே சிறுகதை எழுதும் ஆற்றல் உள்ளது.” இந்த வரி அன்று என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் அசாதாரணமானவை. நான் தினம் தினம் வீட்டில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். நானாகவே தலைப்புகளை உருவாக்கிக்கொண்டு பலவிதமான கதைகளை எழுதிக்கொண்டே இருந்தேன். நாளிதழ்களில் வரும் சிறுகதைகளை விடாமல் வாசித்தேன். என் கதைகளையும் நாளிதழுக்கு அனுப்பி பிரசுரிக்க ஏக்கம் கொண்டேன். அப்படிப் பிரசுரமானால் டீச்சரிடம் காட்ட ஆர்வமாக இருந்தேன். ஆனால் எந்தக் கதையையும் நாளிதழ்கள் பிரசுரிக்கவில்லை. அப்போது இருந்த ஞாயிறு பத்திரிகை பொறுப்பாசிரியர்கள் உண்மையில் இலக்கிய இரசனை உள்ளவர்கள் என்பதற்கு அதுவே சான்று. கிடைத்தப் படைப்புகளைப் போட்டு பக்கங்களை நிரப்பாமல் இருந்தனர். ஆனால் நான் விடாமல் முயன்றுக்கொண்டிருந்தேன்.
அங்குப் பயின்ற அத்தனை பேரிலும் நான் சிறுகதை எழுத கூடுதல் லாயக்குள்ளவன் என எண்ணும் போதெல்லாம் உற்சாகம் பிறகும். அதற்கேற்ப டீச்சரும் என்னைச் சிறுகதை போட்டிகளில் பங்கெடுக்க ஊக்குவித்தார். ஒருமுறை கோ. புண்ணியவான் நடத்திய கவிதைப் பட்டறைக்கு என்னைத் தன் சொந்த முயற்சியில் அழைத்துச் சென்றார். அவருக்கு எனக்குள் இருக்குள் ஆற்றலை வெளிக்கொணர்வதில் அத்தனை ஈடுபாடு இருந்தது.
இப்படிச் சொல்வதால் நான் வாசுகி டீச்சரின் நெருக்கமான மாணவன் எனும் பட்டியலில் இருப்பதாகப் பொருள் இல்லை. உண்மையில் நான் டீச்சரிடம் பேசியதே குறைவு. அவரிடம் மற்ற பல மாணவிகள் அதிகம் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து பொறாமை பட்டுள்ளேன். என்னால் அப்படி முன் சென்று முனைப்புடன் பேச முடிந்ததில்லை. தாழ்வு மனப்பான்மை முதன்மை காரணம்.
மிகச்சிறிய கூட்டத்தில் கூட காணாமல் போகக் கூடிய உருவம் கொண்டவன் நான். கரிய ஒடிசலான உடலுடன் திக்கித் திக்கி பேசும் என்னை அனைவரும் கூடியுள்ள சபையில் முன் வைப்பதில் தயக்கம் இருந்தது. நான் பேசுவதை நண்பர்களே பொறுமையாக நின்று கேட்க விரும்பாதபோது மற்றவர்கள் அதை பொறுப்பார்களா எனத் தயக்கம் இருந்தது. ஏதாவது ஒன்றை பெரிதாகச் சாதித்துவிட்டு டீச்சர் முன் கம்பீரமாக நிற்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தது. என்னளவில் நான் சாதனையாக நினைத்தது நாளிதழில் படைப்புகள் வருவதை. அது நடக்காமலேயே தள்ளிப் போனது.
ஆனால் டீச்சரிடம் கொஞ்சம் நெருங்க எனக்கு வேறு சில சந்தர்ப்பங்கள் அமைந்தன. படிவம் மூன்று, நான்கு ஆகிய இரண்டு ஆண்டுகள் தமிழில் ஆகச்சிறந்த புள்ளிகள் பெற்ற மாணவனாக அன்றைய லூனாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ பெர்ண்டாஸிடம் பரிசும் சான்றிதழும் பெற்றபோது டீச்சர் என்னை உற்சாகமாக வாழ்த்தினார். “நீ பரீட்சையில கத எழுதியதாலதான் அதிக புள்ளிகள் கிடைச்சிருக்கு. விடாமல் கத எழுது,” என உற்சாகப்படுத்தினார்.
வாசுகி டீச்சர் தமிழுடன் சேர்த்து சுயமரியாதையையும் எங்களுக்குப் போதித்தார். சில சமயம் இனமான உணர்வு குறித்து அவர் பேசும்போதெல்லாம் இரத்தத்தில் சூடேறும். தமிழ் மாணவர்கள் எதற்காகவும் தலைகுனிந்து நிற்பதை அவர் அனுமதித்ததில்லை. சில சமயம் வன்முறையில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டபோதுகூட மன்னிப்பதன் வழியாகவே வழிநடத்தினார். “சொரணையோட இருக்குறது ஒன்னும் தப்பில்ல… ஆனா அதை படிப்புலயும் காட்டணும்,” என்பார். ஒருமுறை சண்டை ஒன்றில் பிடிபட்டு வெற்றுடலுடன் அலுவலகத்தின் முன் இருந்த புற்றரையில் நண்பர்களோடு முட்டி போட்டு அமர்ந்திருந்தபோது முகத்தில் இருந்த திமிரெல்லாம் வாசுகி டீச்சர் அதைப் பார்த்துவிட்டார் என அறிந்தபோது மடமடவென நொறுங்கிப்போனது. வீடு திரும்பும்வரை அவரது நம்பிக்கையை உடைத்துவிட்டதற்காகத் தேம்பித் தேம்பி அழுதுக்கொண்டே இருந்தேன். ஆனால் டீச்சர் ஒது பற்றியெல்லாம் ஒன்றுமே கேட்டதில்லை.
இடைநிலைப்பள்ளி படிப்பு முடிந்தபிறகு நான் டீச்சரை அதிகம் தொடர்புக்கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை அவரது வீட்டில் சென்று சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினேன். அதே அன்புடனும் உரிமையுடனும் பேசினார். நான் அவர் முன்னால் பழைய மாணவனாகவே நின்றதை காரில் ஏறியபோதுதான் உணர்ந்தேன். உண்மையில் எனது எந்த ஆசிரியர் முன்பும் நான் பணிவாகவே நிற்கிறேன். நான் என்ன உயரத்தை அடைந்தாலும் அவர்களை அதைவிட உயர்ந்து பிரமாண்டமாகிறார்கள்.
பள்ளிக்காலத்தில் எனது படைப்புகள் எதுவும் நாளிதழில் வெளிவராத சூழலில் டீச்சரிடம் எதையுமே காட்டி நான் ஓர் எழுத்தாளன் என நிரூபிக்க முடிந்ததில்லை. எனவே எனது ‘தாரா’ நாவலை வெளியிட அவரை அழைத்தேன். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அவர் தாராவைக் கையில் ஏந்தும் தினத்துக்காகக் காத்திருக்கிறேன். நீங்கள் நினைத்ததைப் போல நான் எழுத்தாளனாகிவிட்டேன் என அவரிடம் சொல்லவும்தான்.
அந்த நாளில் நீங்களும் என்னுடன் ஒரு சாட்சியாக இணையலாம்.