தாரா: கால்களும் இறக்கைகளும் கொண்ட கதை – சாலினி

நல்ல நாவல்கள் விசாலமான வாழ்க்கையைச் சொல்வதாகவே அமைகின்றன. அந்த வாழ்க்கையின் ஊடே நுழைந்து பெறக்கூடிய நிகர் அனுபவங்களே நாவல் வாசிப்பு கொடுக்கும் இன்பமாகிறது. ம.நவீனின் ‘தாரா’ அப்படியான ஒரு நாவல்தான். அவரது முந்தைய நாவல்களைப் போலவே யதார்த்த வாழ்க்கையோடு மிகுபுனைவும் கலந்த நாவல் இது. ஒரு புறம் தரையில் கால்களை ஊன்றி நடக்கும் மனிதன் இறக்கைகளையும் அசைத்துக் கொண்டிருப்பதுபோல மெய்யான வாழ்க்கையினூடே நாம் அறியாத இன்னொரு மெய்யும் இணையும் புனைவு ‘தாரா’.

அறமற்ற தலைமைத்துவம், பிடிவாதமான சாதிய பற்று, அந்தரங்கமான தாழ்வுணர்ச்சி, தீராத இச்சை, ஆழ்மன குரூரங்கள், அதிகார வேட்கை ஆகியவற்றினால் ஓர் இனக்குழு மற்றொரு இனக்குழுவுக்கு இழைக்கின்ற அநீதிகளையும் கொடூரங்களையும் பின்னணியாகக் கொண்டு நாவல் புனையப்பட்டுள்ளது.

குகன் எனும் உள்ளூர் ரௌடியின் கொலை செய்தியினால் தொடங்கும் நாவல் கிச்சி எனும் சிறுமியின் கண்கள் வழி மெல்ல மெல்ல தன் களத்தை விரித்தெடுத்துக்கொள்கிறது. நாவல் கொண்டுள்ள அடிப்படை தர்க்கம் மிகுபுனைவாக எழுகின்ற தருணம் கதை ஆழமான தாக்கத்தை வாசகனிடத்தில் ஏற்படுத்தி நிறைவடைகிறது.

மிகுபுனைவு (Fantasy) என்பதை யதார்த்தத்திற்குக் கட்டுப்படாத புனைவு முறை எனலாம். இருந்தபோதிலும், கதையில் கையாளப்பட்டுள்ள இத்தன்மை எந்தவொரு இடத்திலும் கதையின் நம்பகத்தன்மையைக் குறைப்பதாக அமையவில்லை. நாவலின் காட்சி சித்தரிப்பு, வலுவான மையப்பாத்திரங்கள், கதாப்பாத்திரங்களின் அகவுணர்ச்சிகளை வாசகன் உணரச் செய்யும் வகையில் அமைந்துள்ள பாத்திர வார்ப்பெடுப்பு,  கதையோட்டம் போன்றவையினால் அவை நிஜமென்றே பாதிக்கிறது.

இரு வெவ்வேறு தலைமுறையினர்களின் வாழ்க்கையை முன்னும் பின்னுமாகச் சொல்லி நாவல் நகர்கின்றது. தமிழகத்தில் இருந்து கங்காணி முறையில் பஹாங்கிற்கு அழைத்து வரப்படும் தமிழர்களில் குறிப்பிட்ட ஒரு சாதி குழுவினர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தவுடன் காட்டுக்குள் தலைமறைவாகின்றனர். பஹாங் காட்டில் ஜகூன் எனும் பூர்வக்கூடியினரின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் வாழத்தொடங்குகின்றனர். தங்களின் இனக்குழுவின் தலைவரான பூழியனின் கட்டளைக்கேற்ப நதியோரத்தில் வீடமைத்து  வசிக்கின்றனர். தங்களின் குல தெய்வமான கந்தாரம்மனை ஆற்றோர களிமண்ணில் உருவாக்கி வழிபடுகின்றனர். தொடக்கத்தில் ஜகூன் இனத்தவருக்கும் இவர்களுக்கும் முரண்கள் இருந்தாலும் நாளடைவில் இரு இனக்குழுவினருக்கும் இடையே நல்லுறவு உண்டாகுகின்றது. ஆனால், அந்த உறவு பூழியன் வம்சாவளியினரின் அராஜகத்தால் அழிகிறது. கந்தாரம்மனின் கண் முன்னாலேயே அத்தனை அநீதிகளும் நடந்து முடிகிறது; ஊர் அழிந்து மற்றுமொரு புலப்பெயர்வு நடக்கிறது.

சாலினி

பூழியனின் இனக்குழுவைச் சார்ந்தவர்களில் மிஞ்சி இருந்தவர்கள் நல்லக்கண்ணுவின் பேச்சுக்கிணங்கி கண்டடைந்த இடம்தான் கரங்கான். அதுவும் நதியோர கிராமமாக உருவாகிறது. சுங்கை கம்பத்தில் புலம்பெயர்ந்த இவர்கள் தங்களுக்கான நிலத்தில் விவசாயம் செய்து வாழ்கின்றனர். பஹாங்கிலிருந்து சுங்கைகம்பத்துக்குப் புலம்பெயர்ந்த பிறகும் இவர்கள் தங்களின் சாதிக்கு அதிகமுக்கியத்துவம் தரும் குலமாகவே திகழ்கின்றனர். இப்படிப் புலம்பெயர்ந்த மக்களின் நான்காவது தலைமுறைதான் குகன். இந்த நான்காவது தலைமுறை 90களில் எதிர்கொண்ட அக புற சிக்கல்கள் வழியாகவே ஒட்டுமொத்த நாவல் விரிகிறது.

அதில் முதன்மையான சிக்கல், இயற்கையைச் சார்ந்திருந்த தலைமுறையினரின் பிள்ளைகள் விவசாயத்தில் ஈடுபாடில்லாமல் நவீன வளர்ச்சிக்கேற்ப தொழிற்சாலைகளில் வேலைசெய்வதில் நாட்டம் காட்டுகின்றனர். இதனால் விவசாயத்தை மெல்ல மெல்ல கைவிடுகின்றனர். இரண்டாவது சிக்கல், தொழிற்சாலையில் இளைஞர்கள் ஏற்படுத்தும் சிக்கல்களால் நேபாள தொழிலாளர்களின் வருகை இளைஞர்களுக்கு மருட்டலாகிறது. மூன்றாவது சிக்கல், இரு இனக்குழு மக்களிடையே உருவாகும் வன்முறையால் அநீதி மேலோங்குகிறது. இந்த அநீதி பஹாங் காட்டில் நிகழ்ந்த அறப்பிறழ்வின் தொடர்ச்சியாகத் தொடங்கி முடிகிறது. ஒரு தலைமுறை தொலைத்த அறத்தை இன்னொரு தலைமுறை மீட்டெடுக்கிறது.

நாவலில் கிச்சி போலவே அந்தரா எனும் யுவதியும் முக்கியமானப் பாத்திரம். நேபாள பெண்ணான அவள் தன் தந்தை சனிலிடம் உயர்ந்த குணம் என்றால் என்னவென்று வினவுகிறாள். அதற்கு சனில் “நிபந்தனையின்றி மன்னித்தல்”என்பதே உயர்ந்த குணம் என்கிறார். ஆனால், அது கருணையும் அன்பும் இருந்தால் மட்டுமே பிறக்கும் என்கிறார். நாவலின் மையமென இதைச் சொல்லலாம். நாவல் முழுதும் அந்தரா தன்னை பச்சை தாரா தெய்வமாக நிறுவ முயல்கிறாள். அதற்காகத் தாராவாகும் தகுதிகளைத் தனக்குள் விதைக்கிறாள். நடை, பாவனை, செயல் என அனைத்திலும் தன்னை தாராவாகவே உணர்ந்து செயல்படுகிறாள் அந்தரா. ஷர்யா நிர்த்யா நடனத்தை ஆடுதல், நீலத்தாமரையைத் தேடிச் செல்லுதல் என அனைத்திலும் தன்னை தாராவாக உணரும் அந்தரா உயர்ந்த குணத்தினால் கதையின் முடிவில் தன்னை முழுமையாகத் தாராவாகப் பரிணாமித்துக்கொள்ளும் தருணத்தில் கதை மனதிற்கு நெருக்கமாகின்றது. மன்னித்தல் எனும் உயர்ந்த குணத்தின் மூலம் அறத்தை நிலைநாட்டிச் செல்கிறாள் அந்தரா.

நவீன் அவர்களின் முந்தைய நாவல்களில் பேரன்னை என்ற வடிவம் தாய்மையின் சீற்றத்தினால் கட்டமைக்கப்பட்டது.  தாரா நாவலில் பேரன்னை என்ற வடிவம் கருணையினாலும் அன்பினாலும் உருவாகியுள்ளது.

//ஒரு குலத்தில் உள்ள பெண்களிடம் அறம் பிறழும்போது அதுவே அக்குலத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கும்// எனும் வரி பூழியன் காலத்து மக்களுக்குச் சொல்லப்பட்டு அதன் எதிரொலி கம்பத்தில் வாழும் பெண்களின் காதுகளில் விழுகிறது. தாய்மை என்பது மன்னித்தல் மட்டுமின்றி அறத்தைக் காக்க தண்டித்தலும் தாய்மையே என்று ராக்காயி மூலம் தாரா நாவலில் உணர்த்தப்பட்டுள்ளது.

தாரா நாவலை வாசித்து முடித்த பின், வாசித்ததை மீட்டெடுக்கும்பொழுது கதையின் ஒவ்வொரு தருணமும் மனதில் விரிவாக மலர்கின்றது. குறிப்பாக அந்தரா தன்னை தாராவாகப் பரிணமித்துக்கொள்ளும் தருணமும் தாழ்ந்தவர்கள் என ஒதுக்கப்படும் சனில், கிச்சி, அஞ்சலை மூலம் வாழ்க்கையின் மெய்மை உணர்த்தப்படுவதன் மூலமும் நாவல் உணர்வுப்பூர்வமாக மனதிற்கு நெருக்கமாகின்றது.

(Visited 126 times, 1 visits today)