அன்புள்ள நவீன்,
உங்களது ‘தாரா’ நாவலை வாசித்தேன். அண்மையில் என்னை தொந்தரவு செய்த படைப்பு தாரா. மலேசியாவில் பூழியனின் தலைமையில் வேலைக்கு வந்து அங்கேயே வேர்விட்ட தமிழ் வம்சாவளியினருக்கும் மிக அண்மையில் வேலைக்காக குடிபெயர்ந்த நேபாள நாட்டவர்களுக்கும் இடையில் நடக்கும் உரசல்களினூடாக நாவல் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கி வாழ எப்போதும் மனிதர்களுக்கிடையில் அல்லது மனித கூட்டங்களுக்கு இடையில் நடக்கும் பூசல்களில் உள்ள பல பரிணாமங்களை நாவல் தொட்டு செல்கிறதாக வாசிக்க முடிந்தது.
மனிதர்களில் தான் எவ்வளவு வகைகள். ஒரே மனிதன் சூழலுக்கேற்ப எத்தனை விதமாக வெளிப்படுகிறான். உள்ளுக்குள் தூயவளும் ஆனால் தன் பேத்தியை எதற்கெடுத்தாலும் அடித்து தீர்த்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் அஞ்சலை, ஊர் கோவில் கட்ட தன் வளமான நிலத்தை விட்டு கொடுக்கும் அவள் கணவன் சங்கரன், கொலை கற்பழிப்பு என்று எந்த உச்சகட்ட தவறுகளை செய்தும் தன் மகனுக்காக முதலில் பரிந்து பேசும் ராக்காயி, உச்சகட்ட வன்முறையாளனாக இருந்து சில நிகழ்வுகளால் அமைதியுடன் வாழும் குகன் தமிலாவை கடத்தி மிதித்து கொல்லும் போது பழைய குகனாக மறுபடியும் மாறும் தருணம், அனைத்தையும் மன்னிக்கும், சமாதானம் நிறைந்த புத்தரை வணங்கும், தன் கூட்டத்திற்காக எந்த இழிவையும் தாங்க சித்தமான சனீல் கூட ஒரு தருணத்தில் தன் கூட்டத்தை தாக்க வருபவர்கள் தன் வீட்டிற்குள் புக கூடும் என்று பயந்து தன் குடும்பத்திற்காக வீட்டிற்குள்ளேயே இருக்கும் போது இக்கட்டில் அவரில் தோன்றும் சுயநலம், சந்தர்ப்பம் கிடைக்கும் போது அரசியல் லாபத்திற்காக சூழலை பயன்படுத்தும் மருது. குகனை போன்று ஒரே நேரத்தில் கீழான வன்முறையாளனாகவும் தன் கூட்டத்திற்காக நிற்பவனாகவும் இருப்பவனை சுற்றியிருப்பவர்கள் எப்படியெல்லாம் பார்க்கிறார்கள் என்று இந்நாவலில் பார்க்க முடிந்தது.
முதலில் நேபாளிகள் மீது எந்த வன்முறையை செலுத்தினாலும் கம்பத்தில் அவனை ஒரு தலைவன் இடத்தில் பார்ப்பவர்கள் அவன் காரணமாக தங்கள் பிள்ளைகள் ஜெயிலுக்கு போக நேர்ந்த போது தூற்ற ஆரம்பிக்கிறார்கள். பிறக குகன் அமைதியாக வாழ ஆரம்பிக்கும் போது அவனிடம் அடிவாங்கிய பொடியர்கள் அவனை வம்பு செய்கிறார்கள். கடைசியில் குகன் இறந்த பிறகு அவன் மேன்மைகளையும் பேசுகிறார்கள். வரலாற்றில் தன் கூட்டத்திற்காக நிற்பதாக சொல்லும் புரிதலற்ற கீழான வன்முறையாளர்கள் அனைவரையும் கடைசியில் அக்கூட்டத்தின் ஒரு பகுதியினர் விரும்பி ஏற்பது எல்லா இடங்களிலும் உண்டு.
தன்னை விட வலுவில் குறைந்த மனித கூட்டம் ஒன்றின் மீது வலுவான மனித கூட்டம் முதலில் செலுத்துவது வன்முறையை தானோ என்றும் மனித ஆழம் எப்போதும் இந்த அருவருக்க தக்க உண்மையை தன்னுள் கொண்டுள்ளதோ என்றும் அய்யப்பட தோன்றியது இந்நாவல் வாசித்த போது. பரந்த அன்பு, எல்லோருக்குமான கனிவும் தாராதேவியின் நீலத்தாமரை போல மிக அரிதாக பூப்பது போல. ராக்காயி தவறு செய்த தன் மகனை பாதுகாக்க மட்டும் முயன்று கடைசியில் அவனை வெட்டி சாய்க்கும் மனநிலைக்கு திடீரென வருவதும் ஒரு நீலத்தாமரை பூத்த தருணம் தான். அதை பற்றிக்கொண்டு எந்த மனித கூட்டமும் மேன்மை நோக்கி செல்லலாம்.
அந்த மேன்மையின் பிரதிநிதியாக அந்தரா இருக்கிறாள்.
தன் பெற்றோர்கள் சாவுக்கும் தன் மீது ஏவப்பட்ட வன்புணர்வுக்கும் காரணமான ஒரு கூட்டத்தை கனிவுடன் மன்னிக்கும் அந்தரா. பாட்டி தன்னை எவ்வளவு அடித்தாலும் தனக்கு பாட்டியை மிகவும் பிடிக்கும் என்று சொல்லும் கிச்சியும் ஒரு குட்டி அந்தரா தான். இவர்கள் இருவரும் தன் மீது ஏவப்பட்ட வன்முறையை ஏற்றுக் கொள்வதன் மூலமாக தன்னை வன்முறைக்கு உள்ளாக்கியவர்களை குற்றவுணர்ச்சி கொள்ள செய்த காந்தியை ஞாபகப்படுத்தினார்கள். ஆனால் இந்த மேன்மைகளை கொண்டுள்ளவர்களை நம்பியே மானுடகுலம் உள்ளது. நாவலும் அந்த வெளிச்சத்தை காட்டியே நிறைவு பெறுகிறது.
இரு மனித கூட்டங்களிடம் புரிதலின்மை நிகழும் போது அதை சரி செய்ய ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு அந்தராவும் ஒரு கிச்சியும் இருந்தால் போதும் போல. நீலத் தாமரையை அந்தரா கிச்சியிடம் கொடுத்தது பொருத்தமானது. ஒரு குலத்தின் பெண்களிடம் அறம் பிறழும் போது அக்குலம் அழியும் என்கிறான் ஜகூன் பழங்குடி தலைவன். ‘என் புள்ளைய நாசம் பண்ணிட்டீங்களேடா’ என்று தன் மகனால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட அந்தராவுக்காக ராக்காயி அலறும் போது அறம் எங்கோ அனைவரிடமும் இருந்து கொண்டிருக்கிறது என்று தோன்றியது. அறம் இருப்பது வரை எல்லா மனித குலங்களும் வாழும்.
குறிப்பு: சென்னை புத்தக திருவிழாவில் புத்தகத்தை வாங்கியிருந்தேன் என்றாலும் வாசிக்கவில்லை. சுவாமி பிரம்மானந்தாவுடன் ஹம்பி பார்க்க சென்றபோது தன்னிடமிருந்த தாரா நாவலை தங்கியிருந்த அறையில் தவறுதலாக விட்டு சென்றார். நான் என்னுடன் புத்தகத்தை சென்னைக்கு எடுத்து வர வேண்டியிருந்தது. வரும் வழியில் ரயிலிலும் பிறகு சென்னையில் என் அறையிலுமாக புத்தகத்தை வாசித்து முடித்தேன். இப்படி ஒரு படைப்பை எதிர்பார்க்கவில்லை. மிகச் சிறந்த படைப்பை அளித்த உங்களுக்கு நன்றி நவீன்!