சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல்

அனைவருக்கும் வணக்கம். க்யோரா.

2021இல் சிறுகதை ஓர் எளிய அறிமுகம் எனும் தலைப்பில் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் பட்டறை ஒன்றை வழிநடத்தினேன். நண்பர் மெய்யப்பன் அவர்கள் மூலமாக அப்படி ஒரு முயற்சி சாத்தியமானது. எந்த ஒரு முயற்சிக்கும் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் இல்லை என்றால் அவை சடங்குகளாக ஓரிடத்தில் தேங்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அவ்வகையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு முன்னெடுப்பை அவர் மீண்டும் கையிலெடுத்திருப்பதை ஆரோக்கியமான நகர்ச்சியாகக் கருதுகிறேன். அவருக்கும் அவரது குழுவினருக்கும் மற்றும் இங்கு இணைந்துள்ள நண்பர்களுக்கும் என் வணக்கத்தையும் அன்பையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்கள! எந்த ஒரு கலையையும் ஆழமாக அறிய அதற்கான பயிற்சிகள் அவசியமாக உள்ளது. குறிப்பாகக் குறியீடுகளாலும் படிமங்களாலும் உருவாகும் நவீன கலைகளை அறிந்துகொள்ள அது குறித்த அடிப்படை புரிதல் முக்கியம். யோசித்துப்பார்த்தால் நவீன சிற்பங்களையும், நவீன ஓவியங்களையும் அத்தகைய பயிற்சி இல்லாமல் நம்மால் முழுமையாக உள்வாங்க இயலாது என்ற உண்மையை நாம் அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம். நவீன கலைகளை விடுங்கள், மரபான கர்நாடக சங்கீதத்தையோ முத்திரைகளால் முழுமைபெற்ற பரதத்தையோ நம்மால் அதன் அடிப்படை அறிதல் இல்லாமல் உள்வாங்க இயலாது என்ற தெளிவு நம்மிடம் உள்ளது.

இலக்கியம் எனும் கலையை மட்டும் நாம் எவ்வித பயிற்சியும் இல்லாமல் ஒரு வாசிப்பிலேயே முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டதாகக் கருதுகிறோம். அல்லது ஒரு சிறுகதையை வாசிக்க நமக்கு எவ்வித பயிற்சியும் தேவையில்லை என நினைக்கிறோம். ஏன் நமக்கு அப்படித் தோன்றுகிறது.

முதன்மையான காரணம், இலக்கியத்தின் மூலப்பொருள் நாம் அன்றாடம் பயன்பாட்டில் புழங்கும் மொழியால் உருவாகி வருவதுதான். எனவே, அதை வாசித்தவுடன் நமக்குப் புரிந்துவிடும் என நாமாக நினைத்துக்கொள்கிறோம். அப்படிப் புரியவில்லை என்றால் அந்தப் படைப்பில் ஏதோ சிக்கல் எனவும் கருதிக்கொள்கிறோம்.

யோசித்துப் பாருங்கள், நமக்கு வண்ணங்களும் நன்கு அறிமுகம்தான். ஆனால் வண்ணங்களை மூலப்பொருளாகக் கொண்ட நவீன ஓவியத்தை அறிவதில் நமக்குச் சிக்கல் உள்ளதை உணர்ந்துள்ளோம். சப்தங்கள் அறிமுகம்தான். ஆனால் சப்தங்களை மூலப்பொருளாகக் கொண்ட இசையை உள்வாங்குவதில் நமக்கு எல்லைகள் உள்ளதை அறிந்துள்ளோம். ஆனால் மொழி நம்முடன் இன்னும் நெருக்கமாக உள்ளது. அதை நாம் பேச மட்டும் அல்ல; எழுதவும் பயன்படுத்துகிறோம். கடிதங்களாக, கட்டுரைகளாக, செய்திகளாக, வீட்டின் வரவு செலவு கணக்குகளாக என மொழி எல்லாமுமாக உள்ளது. எனவேதான் இலக்கியம் என்பது நாம் அறிந்த மொழியில் இருந்து மாறுபட்டது என நம் மனதுக்கு எட்டுவதில்லை.

இலக்கியம் மொழியால் ஆனாலும் அது மொழியில் அடித்தளத்தில் இயங்கும் இன்னொரு மொழியாக உள்ளது. அதை மீ மொழி எனச் சொல்லலாம். ஆங்கிலத்தில் Meta language என்கிறார்கள். குறியீடு (symbolism), கற்பனை (Imagery), உருவகம் (Personification) ஆகிய மூன்றும் அடங்கிய மொழியையே மீ மொழி என்கிறோம் இந்த மொழியை அறிய தேவைப்படும் பயிற்சி ஒன்றுதான். அது தொடர் வாசிப்பு.

நான் பல சமயம் மரபான வாசிப்பு உள்ள நண்பர்களிடமும் கல்வியாளர்களிடம் அவர்கள் வாசித்த ஏதாவது புனைவு குறித்து உரையாடும்போது என்னை அறியாமலேயே அவர்களைப் புண்படுத்தி விடுவதை உணர்ந்துள்ளேன். ஒரு சிறுகதையில் அவர் சென்று அடைந்துள்ள இடம் மிக மேலோட்டமானதாக இருக்கும்போது அதில் தொட வேண்டிய ஆழங்களை நான் சுட்டிக்காட்டத் தொடங்குகிறேன். உண்மையில் அவர்களின் மொழித்திறனும் இலக்கண அறிவும் ஆழமானது. அவர்களின் மொழி ஆற்றலோடு ஒப்பிடும்போது நான் பல படிகள் கீழ் உள்ளவன்தான். எனவே என் விளக்கங்கள் அவர்களைக் கசப்பாக்குகின்றது. தங்கள் விரல் நுனிகளில் தவழ்ந்தாடும் மொழியைக் கொண்டு ஏன் மிகச்சிறிய, மிக எளிய சிறுகதையைத் தன்னால் சென்றடைய முடியவில்லை எனச் சீற்றம் கொள்கின்றனர்.

நண்பர்களே, இந்தச் சீற்றம் இப்போது தொடங்கியதல்ல. நக்கீரன் – தருமி காலத்திலேயே தொடங்கிவிட்டது. திருவிளையாடல் புராணத்தில் உள்ள 64 படலங்களில் ஒன்று தருமிக்குப் பொற்கிழியளித்த படலம். திருவிளையாடல் திரைப்படத்தால் இக்காட்சியும் இதில் இணைக்கப்பட்ட இறையனார் இயற்றிய குறுந்தொகை பாடல் ஒன்றும் பிரபலமானது. அக்காட்சியை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

இந்தப் பாடலை ஒட்டி இரண்டுவிதமான கருத்துகள் மோதுகின்றன. இதில் நக்கீரனை நமது கல்வியாளர்களாக எடுத்துக்கொள்ளுங்கள். ஈசனை நவீன கவிஞனாக எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் இன்றும் தொடர்கிறது. நக்கீரன் அப்பாடலை நேரடியாக அணுகுகிறார். அப்பாடலில் உள்ள வரிகளின் பொருளை நேரடியாகப் புரிந்துகொண்டு பெண்களுக்கு இயற்கையில் கூந்தலில் மணம் இல்லை என்கிறார். ஆனால் கவிஞன் சொல்ல வந்தது அதுவா? அங்கு இருப்பது ஓர் அபாரமான உணர்ச்சியலை உள்ளது அல்லவா? நீ கண்ட மலர்களில் என்னுடையவளின் கூந்தலைவிட மணமுள்ள மலர் ஒன்று உண்டா என்பது அறிவால் செய்யப்படும் ஆராய்ச்சியா என்ன? தலைவன் அதை வண்டிடம் கேட்கவில்லை. காதலியிடம் ரகசியமாகச் சொல்கிறான். உறுதியாகச் சொல்வதை சந்தேகமாகக் கேட்பது போல பாவனை செய்கிறான். அந்த உறுதி காதலின் உறுதி. கனவின் உறுதி. அதை கையில் எடுத்துக்கொண்டு ஆராய்தல் என்பது வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளைப் பிய்த்து அது பறப்பதெப்படி என ஆராய்வதைப் போன்றது.

இந்த இரண்டுவார அமர்வுகளில் நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவதெல்லாம் நம்மிடம் உள்ள நக்கீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நவீன கவிஞனாக ஒரு வண்ணத்துப்பூச்சி தன் போக்கில் பறப்பதை பொறுமையுடன் ரசிப்பது எப்படி என்பதைத்தான்.

முதலில் நம்மில் பலரும் அறிந்த ஒரு சிறுகதையில் இருந்து தொடங்கலாம் என நினைக்கிறேன்.‘அக்கினி பிரவேசம்’ எனும் ஜெயகாந்தனின் இந்தச் சிறுகதையை பலரும் அறிந்திருப்பீர்கள். இன்னும் சிலர் ஜெயமோகன் இக்கதையின் நுட்பமான ஒரு பகுதி குறித்து சுட்டிக்காட்டி அக்கதையை மேலும் எப்படி ஆழமாக அறிவது எனக் கொடுத்த விளக்கங்களையும் வாசித்திருக்கலாம். நான் முதலில் இக்கதையைச் சொல்லி, ஜெயமோகன் கொடுத்த விளக்கத்தையும் பகிர்ந்து கூடுதலாக இச்சிறுகதையில் ஒரு வாசகனாக நான் சென்றடைந்த இடத்தைச் சொல்லலாம் என நினைக்கிறேன். இதன் மூலம் ஒரு மகத்தான சிறுகதைக்கு எத்தனை கோணங்கள் உள்ளது என நீங்கள் அறியலாம். மேலும் எத்தனை பேர் ஒரு சிறுகதைக்கு விளக்கங்கள் கொடுத்தாலும் அதில் கூடுதலான இன்னொரு பார்வையை நம்மால் அக்கதையில் வைத்து இன்னும் சில ஆழங்களைத் தொட இயலும் என்பதை உணர்த்துவதற்காகத்தான்.

ஜெயகாந்தன்

மழை நேரத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கிறாள் கல்லூரி மாணவி ஒருத்தி. அவளுடன் காத்திருந்த எல்லாருமே போய்விட அவள் தனியாக நிற்கிறாள். கூட ஒரு கிழட்டு மாடு. அப்போது முன் பின் அறியாத ஆடவன் அவளை அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாகச் சொல்கிறான். இவளும் காரில் ஏறி செல்கிறாள். காரில் செல்லும் அப்பெண்ணுக்கு ஆடவன் சுவிம்கம் கொடுக்கிறான். அவள் அதை மெல்லாமல் கைகளில் வாங்கிக்கொள்கிறாள். ஆடவன் மெல்ல மெல்ல அவளை அணுகி அவளுடன் உறவு கொள்கிறான். குழப்பமும் இணக்கமுமாக இருந்தவள் திடீரென வீடுச்செல்ல வேண்டும் என அடம்பிடித்து காரிலேயே வீடு திரும்புகிறாள். நடந்ததை அறிந்த அப்பெண்ணின் அம்மா அழுகிறாள்; அப்பெண்ணையும் அடிக்கின்றாள். ஆனால், யாரும் அறியாதபடி அப்பெண்ணின் தாய், அப்பெண்ணின் மேல் நீரை ஊற்றி அவன் மனத்தளவில் இன்னுமே கற்பிழக்காதவளே என்கிறாள். தான் ஊற்றியது நீரல்ல நெருப்பு என்கிறாள். கற்பு என்பது உடல் சார்ந்தது எனும் மரபான சிந்தனையிலிருந்து வெளிப்பட்டு மனம் சார்ந்ததாக அதனைக் கருதி அதனை நம்ப தாய் செய்யும் செயலே இக்கதையை முக்கியமான கதையாக மாற்றுகிறது.

இக்கதையை ஒட்டி அக்காலக்கட்டத்தில் கடுமையான சர்ச்சைகள் எழுந்தன. சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்தவுடன் இக்கதையைக் கல்வியாளர்கள் மிக எளிதாக புரிந்துகொள்ள முயன்றனர். அதாவது, ‘கற்பு என்பது உடல் சார்ந்தது அல்ல; மனம் சார்ந்தது’ என ஜெயகாந்தன் முற்போக்காக எழுதியுள்ளார் என அதன் ஆயுளை முடிக்கத் தலைப்பட்டனர்.

ஜெயமோகன் இச்சிறுகதை குறித்து வைத்தது ஆகச்சிறந்த வாசிப்பாகச் சொல்லப்பட்டது. இக்கதையில் அவள் பத்திரப்படுத்தி வைத்த சுவிம்கம் அம்மா அவளைக் குளிப்பாட்டும்போது அவள் வாயில் இருக்கிறது. அம்மா அதனைத் துப்பச்சொல்கிறாள். அவள் கிட்டத்தட்ட சுவையில்லாமல் போயிருக்கக் கூடிய சுவிம்கம்மை ஏன் மென்றுக்கொண்டிருந்தாள்? அவள் மென்றுக்கொண்டிருந்தது எதை? என்பதாக ஜெயமோகனின் கேள்வி அமைந்திருந்தது.

இக்கதை ஒரு பெண்ணின் உளவியலைக் காட்டும் கதையாக அந்தக் கேள்வி மாற்றி அமைத்தது. அப்பெண் வலுக்கட்டாயத்திற்கு ஆளாகி அவ்வுறவில் ஈடுபடவில்லை, அவளே விரும்பி அதில் ஈடுபட்டாள் என்ற பார்வை அது. ஆதி இச்சையான உடற்பசியை தீர்க்கும் ஒரு முகமும் சமூகக் கட்டுப்பாடுகளால் அதை வெளிகாட்டாத அபலைப்பெண்ணின் பாவனை மறுபுறமும் என நிகழும் வாழ்க்கையின் அந்தரங்கமான இன்னொரு பகுதியை இப்பார்வை சுட்டிக்காட்டியது.

நான் மூன்றாவதாக ஒரு பார்வையை வைக்க விரும்புகிறேன். இது என் வாசிப்பில் நான் அடைந்த இடம். எனக்கு இந்தக் கதையில் வரும் தாய்தான் எனக்கு மிக முக்கியமான புள்ளியாகத் திகழ்கின்றாள். இளம் வயதிலே கணவனை இழந்த அந்தத் தாயினால் உடற்பசியை அறிந்திருக்க முடியும். உடலுக்கு அது அறிமுகமானவுடன் மனதை அது செய்யும் பாடுகளைக் கடந்து வந்தவளாகவே அவள் இருப்பாள். அவளால் மட்டுமே தன் மகளின் ஆழுள்ளத்தை அறிய முடியும். சொல்லப்போனால் தன் மகள் மென்றுக்கொண்டிப்பது உடல் சார்ந்த சுகத்தை என அனுமானித்தவள் அவளாகத்தானே இருப்பாள். அம்மா தன் மகளிடம் காமம் எனும் தீ நாக்கு கேட்டும் பலியை வெளிப்படையாக பேச முடியாத காலத்தில் மகளை சிறுமி என நம்ப வைக்க முயல்கிறாள். அப்பெண்ணின் மேல் நீருற்றி அவளுள் எழும் ஏக்கங்களை அணைக்க நினைக்கிறாள். அவள் தூய்மையாகிவிட்டாள் என உணர்த்துவதன் மூலம் அவள் உடலையும் மனதையும் கட்டுப்படுத்த விளைகிறாள். இப்படி ஒரு வாசிப்பதையும் இக்கதையில் நிகழ்த்தலாம்.

இப்போது இந்தக் கதையில் உள்ள மூன்று அறிதல்கள் வழியாக எது சிறுகதையின் ஆன்மாவைத் தொடுகிறது எனப்பார்க்கலாம். முதல் வாசிப்பு ஒருவகையில் தீர்ப்பு சொல்கிறது. கற்பு என்பது மனதில் உள்ளது எனும் கருத்தை வலியுறுத்த இக்கதை எழுதப்பட்டதாக ஓரிடத்தில் நாம் தேங்கிவிட நேரிடும். சிறுகதை அப்படித் தேங்காது. அப்படித் தேங்கக் கூடிய ஒன்று நல்ல சிறுகதை ஆகாது. பெரும்பாலும் கதைகளே அப்படி கருத்தை வலியுறுத்த எழுதப்படுகின்றன. உங்களுக்குத் தெரிந்த குழந்தை கதைகளை யோசித்துப் பார்த்தாலே அதை அறிந்துக்கொள்ளலாம்.

இப்போது நான் கூறிய மேலும் இரண்டு வாசிப்பு முறையை குறித்து ஆராய்ந்து பார்க்கலாம். ஒன்று சிறுமியின் உளவியலை ஆராய்கிறது. மற்றொன்று தாயின் உளவியலை ஆராய்கிறது. இரண்டு பெண்களுக்குள்ளும் அடிப்படையாக உள்ள அம்சம் காமம் குறித்த அச்சம். சிறுமிக்கு அவ்வச்சம் சமூகம் சார்ந்து எழுகிறது. அம்மாவுக்கு தன் அனுபவம் சார்ந்து எழுகிறது. இவ்விரண்டு அம்சங்களையும் பிடித்துக்கொண்டு சிந்தித்தால் இக்கதை உங்களை வாழ்க்கை குறித்த மேலும் ஆழமானப் பகுதிக்குக் கொண்டுச்செல்லும். அது வாழ்க்கை குறித்த புதிய புரிதல்களை ஏற்படுத்தும்; மாறாக விதிமுறைகளை உருவாக்காது.

நண்பர்களே, இவ்வுரையில் இரண்டாவது சிறுகதையாக ‘ராஜா வந்திருக்கிறார்’ எனும் சிறுகதை குறித்து பேசலாம் என நினைக்கிறேன். கு. அழகிரிசாமி என்றாலே ராஜா வந்திருக்கிறார் சிறுகதையை அனைவரும் நினைவுக்கூர்வர். தமிழின் மகத்தான கதைகளில் ஒன்று ‘ராஜா வந்திருக்கிறார்’.

கு. அழகிரிசாமி

கதையை இப்படிச் சுருக்கமாகக் கூறலாம். ராமசாமி பணக்கார குடும்பத்தில் பிறந்தவன். ஆனால், செல்லையா, தம்பையா மற்றும் அவர்களது தங்கையான மங்கம்மாள் மூவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் எப்போதும் போட்டி நிலவிக் கொண்டிருக்கும். அந்தப் போட்டியே சுவாரசியமானது. அது பெரியவர்கள் சிறியவர்களுக்காக உருவாக்கிய போட்டியல்ல. பெரியவர்கள் சிறியவர்களுக்கு உருவாக்கும் போட்டி கட்டுப்பாடுகள் மிக்கது. அறிவின் வரைமுறைகளுக்கு உட்பட்டது. சிறுவர்களின் உலகு கற்பனையால் நிறைந்தது. எனவே கட்டுப்பாடுகள் இல்லாதது. அப்படிக் கட்டுப்பாடுகள் இல்லாத சுவாரசியமான போட்டியைத்தான் இருவரும் விளையாடுகிறார்கள்.

ஐந்தாம் வகுப்பிற்குரிய சரித்திர புத்தகத்தை ராமசாமியும் சிவிக்ஸ் புத்தகத்தை செல்லையாவும் வைத்துக்கொண்டு விளையாடுகின்றனர். யார் புத்தகத்தில் படம் உள்ளது என்பதுதான் போட்டி. புத்தகம் வேறுபட்டுள்ளதில் இருவருக்கும் சங்கடம் இல்லை. யார் புத்தகத்தில் படம் அதிகம் உள்ளதோ அவனே வெற்றியாளன். போட்டி ஆசிரியர் வருகையால் பாதியில் நிற்கிறது. மீண்டும் வீடு திரும்பும்போது தொடர்கிறது. ஒருவர் வீட்டில் உள்ள பொருளைக் கூறிய பிறகு இன்னொருவர் தன் வீட்டில் அது போல வேறு என்ன உள்ளது என்று கூற வேண்டும். இப்படி ராமசாமி எதாவது சொல்ல செல்லையா மற்றும் அவன் சகோதர சகோதரிகள் இணைந்து அவனை வாதிட்டுத் தோற்கடிக்கின்றனர்.

கதையில் மங்கம்மாள் என்ற செல்லையாவின் தங்கை துடுக்கானவள். அவளின் அந்தத் துடுக்குத்தனமே கதையை உயிர்ப்பானதாக மாற்றுகிறது. ஆழ்ந்து வாசித்தால் அவளில் குரல்கூட நம் காதில் விழக்கூடும். அவளே அண்ணனின் சார்பாக ராமசாமியிடம் வாதிடுகிறாள். ராமசாமி தன்னிடம் இருக்கும் சில்க் சட்டையைப் பற்றிக் கூற அது சீக்கிரம் கிழிந்துவிடும் என ராமசாமியைப் பரிகசித்து தன் அண்ணனின் சட்டையே சிறந்தது என்கிறாள். ராமசாமி தன் வீட்டில் ஆறு மாடுகள் உள்ளன என்றால் தங்கள் வீட்டில் ஒன்பது கோழிகள் உள்ளன எனக்கூறி மடக்குகிறார்கள். ராமசாமியும் தோல்வியில் அவமானம் அடைந்து வீட்டுக்குள் நுழைகிறான்.

இப்படிப் போகும் கதையில் ராமசாமியின் அக்காவைத் திருமணம் செய்து கொண்ட நிஜமான ராஜாவின் (ஜமீந்தார்) வருகை ராமசாமியின் வீட்டில் நிகழ, அம்மாவை இழந்த பரிதாபமான ராஜா எனும் சிறுவனின் வருகை செல்லையாவின் வீட்டில் அவ்விரவில் நிகழ்கிறது. மறுநாள் தீபாவளி. ஆதரவற்ற சிறுவனுக்கு அம்மா அடைக்கலம் கொடுத்து அப்பாவுக்காக வாங்கி வைத்திருந்த துண்டை அவன் உடுத்தக் கொடுக்கிறாள்.

மறுநாள் தன் வீட்டுக்கு ஜமீந்தார் வந்துள்ளதை ‘ராஜா வந்திருக்கிறார்’ என ராமசாமி எதார்த்தமாகச் சொல்ல பதிலுக்கு மங்கம்மா அதை போட்டிக்கான அழைப்பெனக் கருதி எங்கள் வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறார் என்கிறாள்.

இது மிகப்பிரபலமான கதை. பிரபலமான கதைகள் பல்வேறு வகையான வாசிப்புக்குச் செல்வதுண்டு. அப்படி உருவான அபிப்பிராயங்களை மூன்றாக வகுக்கலாம். முதலாவது, இக்கதையில் வரும் மங்கம்மாளின் அம்மாவும் குழந்தைகளும், அனாதையாக வரும் சிறுவன் ராஜாவிடம் காட்டும் கருணை. தான் இறந்துவிட்டால் தன் குழந்தைகளும் இந்த ராஜாவைப் போலதான் அனாதைகளாகத் திரிவார்கள் என எண்ணி அவனின் சிரங்கைப் போக்க முனையும் அன்பை மையமிட்டு இக்கதையை வாசிக்கலாம். இரண்டாவது, தங்கள் தாயார் தங்கள் தந்தைக்கு வாங்கிய துண்டையே ஒரு சிறுவனுக்குக் கொடுப்பதாலும் அச்சிறுவனுக்குத் தங்கள் அம்மாவிடமிருந்து கிடைக்கும் சலுகைகளாலும் அவனை ராஜாவுக்கு நிகராகப் பார்க்கும் குழந்தைகளின் அபோதத்தில் இருந்து கதையை விரித்தெடுக்கலாம். மூன்றாவது, கருணையினால் குழந்தைகள் அடையும் உளவிரிவு, ஓர் அனாதைச் சிறுவனை ராஜாவாகச் சென்று அடையும் தருணத்தை ஒட்டி இக்கதையை உள்வாங்கலாம்.

இவை மூன்றும் முக்கியமான பார்வைகள்தான். எனக்கு இக்கதை கூடுதலாகத் துலங்கி வந்தது இதில் வரும் ராமசாமியை மையப்படுத்தி வாசித்தபோதுதான். இக்கதையில் வரும் ராமசாமியை ஏன் ஒரு குழந்தையாகக் கவனிக்கத் தவறுகிறோம் எனும் கேள்வி எனக்குத் தாமதமாகவே எழுந்தது. அதற்கு முதல் காரணம் அவன் பணக்காரனாக இருப்பதுதான். கதையில் காட்டப்படும் சமூகப்பின்னணியும் அதை ஒட்டிய ஏற்றத்தாழ்வுகளையும் நமது மதிப்பீடுகளைக் கொண்டு அணுகும்போது ராமசாமியின் மீது சில எதிர்மறை தன்மைகளை நாமே புகுத்திவிடுகிறோம்.

உண்மையில் மற்ற சிறுவர்கள் போலவே அசலான குழந்தை மனத்தோடு இருக்கும் ராமசாமியின் வழி கதையை அணுகும்போது இக்கதையில் குழந்தைகளின் அபாரமான கள்ளமின்மை வெளிபடுவதை உணரலாம்.

இந்திய தேச சரித்திரப் புத்தகத்துக்கும் சிவிக்ஸ் புத்தகத்துக்கும் இடையில் படங்களைக் காட்டி போட்டி வைப்பவன்தான் ராமசாமி. அவன் அணிந்திருக்கும் விலை உயர்ந்த சில்க் சட்டையை விட தன் அண்ணன் அணிந்துள்ள கனமான சட்டையே கிழியாதது எனத் தன்னைவிட இளையவளான மங்கம்மாளின் வாதத்தை ஏற்று தோல்வியை ஒப்புக்கொள்ளும் சிறுவன்தான் அவன். தன் வீட்டில் இருக்கும் ஆறு பசுக்களைவிட மங்கம்மா வீட்டில் உள்ள ஒன்பது கோழிகள் பெரிதென கேலிக்குள்ளாகி அழுகிறான். அவன் அணிந்துள்ள அலங்காரங்களுக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவன் மனதளவில் நிர்வாணமாகச் சுற்றும் சிறுவன் என அறிந்துகொண்டால் மட்டுமே இக்கதை வேறொன்றாக வாசகனுக்குத் துலங்கக் கூடும். அதன் வழியாகவே இறுதியில் மங்கம்மாள் தன் வீட்டுக்கும் ராஜா வந்திருக்கிறார் எனச் சொல்லும்போது அதை முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்ளும் கள்ளமின்மை மட்டுமே அவன் வழியாக இக்கதையில் வெளிபடும்.

இக்கதையில் உள்ள ராமசாமி மங்கம்மாளின் இன்னொரு நிலை என்பதுதான் என் வாசிப்பு. மங்கம்மாள் எப்படி ராஜா எனும் பெயர் கொண்ட சிறுவனை உண்மையான ராஜாவாகச் சென்றடைந்திருப்பாளோ அதற்கு சற்றும் குறையாமல்தான் ராமசாமியும் அவள் சொற்கள் வழி சென்று அடைந்திருப்பான். அதற்கான மனம்தான் அவனிடம் உள்ளது. அவனை அந்த நிலைக்குச் சென்று பார்க்கும் மனம் பெரியவர்களான நம்மிடம்தான் இல்லாமல் இருக்கிறது.

மூன்றாவது சிறுகதையாக சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ கதையைப் பார்க்கலாம்.

விகாசம் என்பதற்கு மலர்ச்சி அல்லது பரந்து விரிதல் என்று பொருள் கொள்ளலாம். கணவன் மனைவி உறவுக்குள் இருக்கின்ற மெல்லிய ஊடலைப் போல இரு நண்பர்களுக்கிடையிலான உறவைப் பேசுகிறது. இக்கதை, ஆனால் அதை மட்டும்தான் பேசுகிறதா என்றுதான் நாம் பார்க்கப்போகிறோம்.

ஜவுளிக்கடையொன்றில் கணக்கராகப் பணியாற்றும் ராவுத்தருக்கும் கடை முதலாளி ஐயருக்குமிடையிலான உறவைக் கதை பேசுகிறது. ராவுத்தருக்கு இருக்கும் அபாரமான கணக்குப் போடும் திறன் ஐயருக்கு ஆணவச் சீண்டலை ஏற்படுத்துகிறது. அதனாலே இருவருக்கும் இடையில் அடிக்கடி மறைமுகமான ஊடல் ஏற்பட்டு மீண்டும் சேர்ந்துகொள்கின்றனர். கால்குலேட்டரின் வருகை ராவுத்தரின் கணக்குப்போடும் திறனைப் பொருளற்றதாக ஆக்குகிறது. அந்தச் சூழலைத் தாண்டி ராவுத்தர் தன் இடத்தை எப்படி நிலைப்படுத்திக் கொள்கிறார் எனக் கதை முடிகிறது.

கதைச்சொல்லி ஒரு சிறுவன். அவன் பார்வை வழியாகவே கதை விரிகிறது. அப்பா அவனை அனுப்பி ராவுத்தரை அழைத்துவரச் சொல்கிறார். அம்மா இது பலநாள் கூத்து என முனகிக்கொள்கிறாள். அப்பா முன்கோபி. எனவே கதைச்சொல்லி ராவுத்தரை சமாதானம் செய்து அழைக்கச் செல்கிறான். ஓணம் வருவதால் கடையில் அவரது இருப்பு அவசியமாக உள்ளது. ராவுத்தர் மின்னல் போல கணக்குப் போடுபவர். கணக்கைச் சொன்னவும் அவரிடமிருந்து பதில் வரும். ராவுத்தர் கண் தெரியாதவர். எனவே காதால் கணக்கைக் கேட்டே உடனே பதில் சொல்வார். வீட்டுக்குச் செல்லும் சிறுவனின் ராவுத்தர் மிக இயல்பாகப் பேசுகிறார். அன்பாக அவனை அரவணைக்கிறார். சிறுவன் அம்மாவின் சார்பாக மன்னிப்பைச் சொல்லவும் “தாயே நீ பெரிய மனுஷி” எனக் கடைக்குப் புறப்படுகிறார். கிட்டத்தட்ட இப்படிதான் ராவுத்தருக்கும் கடை முதலாளிக்கும் இணக்கமும் பிணக்கமும் தொடர்கிறது.

சுந்தர ராமசாமி

கடை முதலாளியான கதைச்சொல்லியின் அப்பா ஒவ்வொரு இரவும் ராவுத்தரின் கணக்கைச் சோதிக்கிறார். ஏதாவது ஒரு தப்பு கிடைத்தால் அவரைத் தட்டி வைக்க வேண்டுமென மனதிற்குள் திட்டிக்கொள்கிறார். ஆனால் அப்படி எந்தத் தவறும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதுவே அப்பாவுக்கு அதிக எரிச்சலை மூட்டி பம்பாயில் இருந்து கணக்கு மிஷினை வாங்க வைக்கிறது.

அதற்கு அப்பாவுக்கு ராவுத்தர் மேல் வந்த கோபமும் காரணம். ராவுத்தர் ஒரு கடன் தொல்லையில் சிக்கிக் கொள்கிறார். என்னுடன் வேலைக்கு வந்தால் கடனை நானே கட்டிவிடுகிறேன் என செட்டியால் சொல்ல ராவுத்தர் அங்கே போய் விடுகிறார். ஆனால், அதற்குள் கடனைக் கட்டிய அப்பாவுக்கு பெரும் ஏமாற்றமாகிறது. ராவுத்தர் தான் தவறு செய்துவிட்டதை எண்ணி வருந்தி அழுது மீண்டும் அப்பாவிடமே வேலைக்குச் சேர்கிறார்.

கணக்கு இயந்திரத்தின் வருகை ராவுத்தரை கலங்கடிக்கவே செய்கிறது. கடையில் நடைபிணம் போல இருக்கிறார். தன்னிடம் உள்ள எதுவோ உருவி எடுக்கப்பட்டதுபோல ஒரு மூலையில் அடங்குகிறார். ஆனால் திடீரென ஒருநாள் ராவுத்தர் பொருளின் விலைப்பட்டியலில் உள்ள தவறைக் கண்டுப்பிடிக்கிறார். அப்போதுதான் அவர் மூளையில் கடையில் உள்ள அத்தனை பொருட்களின் விலையும் மனப்பாடமாக உள்ளதை அனைவரும் அறிகின்றனர். ராவுத்தர் புது அவதாரம் எடுக்கிறார். கணக்கிடும்போது விலை சரியாகச் சொல்லப்படுகிறதா எனச் சரிபார்க்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. மெல்ல மெல்ல அவரால் கண் பார்வையில்லாமலேயே பல வேலைகளைத் துல்லியமாகச் செய்ய முடிவதை அறிகிறார் அப்பா. யார் கடைக்கு வருகிறார் எனத்தொடங்கி அப்பா அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை நினைவு படுத்தும் நிலைக்கு உயர்கிறார். தன்னை மேனஜர் என அழைத்துக்கொண்டு அப்பாவுக்கு வரும் மின் விசிறி காற்றில் பங்கு எடுத்துக்கொள்கிறார்.

இந்தக் கதையில் பொதுவாக வைக்கப்படும் பார்வை ஒன்று உண்டு. அது முதலாளி வர்க்கம் தொழிலாளர் வர்க்கத்தை எப்படி இளக்காரமாக நடத்துகிறது என்றும் கால மாற்றத்தோடு நடக்கும் நவீன சாதனங்களின் வருகையால் தொழிலாளர் வர்க்கம் எப்படிப் பாதிப்புள்ளாகிறது என்றும் வைக்கப்படுவது. இன்னும் சிலர் வேறு சில வாசிப்பையும் அடைந்துள்ளனர். கடவுள் ஒரு கதவை மூடினால் மறு கதவைத் திறப்பான் என இக்கதையைப் பொருள் கொள்கின்றனர்.

இன்னொரு பார்வையில் இதை ஓர் அங்கத கதையாக வாசிக்கலாம். நவீன சாதனங்கள் ஒருபோதும் அடையவே முடியாத மனித ஆற்றலை மையப்படுத்தி இரு நண்பர்களுக்கு இடையில் நடக்கும் போட்டியாக இதை அணுகலாம்.

என் பார்வை இக்கதையில் முற்றிலும் வேறானது. அந்தக் கடையில் ராவுத்தரை ஒரு இயந்திரமாக மட்டுமே பார்க்கப்படுகிறார். அவர் தன்னை மனிதன் என நிரூபிக்கும் இடமாக இக்கதையைச் சென்று அடையலாம். ஒவ்வொருவரும் அவரை அணுகும் முறை கொண்டு அதனைத் தெரிந்து கொள்ளலாம். துல்லியமாகக் கணக்குப் போடும் திறன் மட்டும்தான் அவர் அங்கே இருப்பதற்கான ஒற்றைக் காரணம். அது ஓர் இயந்திரத்திற்கான இடம்.

ஆனால் ராவுத்தர் எதிர்ப்பார்ப்பது வேறு. அது இந்தக் கதையில் இரண்டு இடங்களில் விவரிக்கப்படுகின்றது. கதையின் ஆரம்பத்தில் வாழ்க்கையில் சக மனிதராக மதித்து வீட்டிற்கே சென்று ராவுத்தரை முதலாளியின் மகன் அழைக்கிறான். இயந்திரமாகவே பார்க்கப்படும் ராவுத்தருக்கு ‘உங்கள் மனது புண்பட்டிருந்தால் அதற்கு அம்மா மன்னிப்பு கோருவதாக’ ஐயரின் மகன் வந்து சொல்கிறான். தன்னை இயந்திரமாக அல்லாமல் மனிதனாக பார்க்கிறார்கள் என்றும் மனிதனுக்கான உரிமை தனக்கும் இருக்கிறது என்ற எண்ணமும் ராவுத்தரை நெகிழ வைக்கிறது.

இரண்டாவதாக ராவுத்தருடைய அகங்காரத்தை அடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முதலாளி ஒரு கணிதப்பொறியைக் கடைக்கு எடுத்து வருகிறார். ஒரு முதலாளியின் மனம் ராவுத்தரை ஒரு இயந்திரமாகப் பாவித்துத் தொழிலாளிக்குப் மாற்றுப்பொருளாகக் கணிதப்பொறியை வைத்து அடக்க முயல்கிறார். நீயும் இந்த இயந்திரமும் ஒன்றுதான் என அப்பா சொல்ல முயல்கிறார். ஆனால் ராவுத்தர் தன்னை அப்படி காட்ட முயலும் கடை முதலாளிக்கு நிகரான இடத்தில் வைக்கிறார். முதலாளி செய்யக் கூடிய அத்தனை வேலைகளையும் கண் பார்வையில்லாமல் ராவுத்தர் செய்கிறார். இந்த இடத்தில்தான் ராவுத்தர் விகாசம் அடைகிறார். கதையின் இறுதியில் முதலாளியிடம் மின்விசிறியைத் தன் பக்கம் திருப்பி வைக்கச் சொல்லும் ராவுத்தர், தான் இயந்திரங்களுக்கு மாற்று அல்ல என்பதையும் முதலாளிக்குச் சமமான இடத்தில் ஒரு மனிதன்தான் என்பதைக் காட்டுகிறார்.

நண்பர்களே! இவை மூன்றும் தமிழில் பிரபலமான சிறுகதைகள். ஏராளமான வாசிப்புகள் இந்தக் கதையின் மீது வைக்கப்பட்டாலும் இன்னும் அவற்றுள் சென்று சேரும் பாதைகள் ஏராளம் உள்ளன. அப்படி நான் சென்றடைந்த பாதைகள் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொண்டேன். நீங்களும் வாசித்து அப்படிச் சில பாதைகளைக் கண்டடையலாம். நன்றி

(Visited 252 times, 1 visits today)