நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்தவாரம் இந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை எனது தளத்தில் பதிவேற்றியப் பிறகு வாசகர்களிடமிருந்தும் சக நண்பர்களிடமிருந்தும் பல்வேறுவகையான கேள்விகளை எதிர்க்கொண்டேன். அதில் முதன்மையான கேள்வி ‘ஏன் இந்த அங்கத்திற்குச் சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல் எனத் தலைப்பிட்டிருக்கிறீர்கள்? சிறுகதையின் நுட்பங்களை அறிதல் என்றுதானே சொல்ல வேண்டும்’ என்பதாக இருந்தது.
ஒருவகையில் அந்தச் சிறுகதைகளில் நாம் கண்டடைந்தது நுட்பங்களைத்தான். ஆனால் அப்படி அவற்றை வகைப்படுத்தும் முன்னர் மூன்று கேள்விகளை நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. முதலாவது எல்லா சிறுகதைகளிலும் இத்தனை நுட்பங்கள் உள்ளனவா? இரண்டாவது, நுட்பங்களைக் கண்டடையும் அனைவராலும் ஒரு சிறுகதையின் ஆழங்களைச் சென்றுத்தொட முடிகிறதா? மூன்றாவது நுட்பங்கள் வழியாக ஆழங்களைச் சென்று தொடும்போது ஒரு சிறுகதைக்கு என்ன நிகழ்கிறது?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலைக் கண்டடைந்த பின்னர் இன்றைய சிறுகதைகளுக்குள் செல்லலாம் என நினைக்கிறேன்.
முதலாவது, எல்லா சிறுகதைகளிலும் இத்தனை நுட்பங்கள் இருப்பதில்லை. உதாரணமாக வணிக எழுத்துகளை எத்தனை முறை வாசித்தாலும் அதில் ஒருபோதும் புதிய வெளிச்சங்கள் கிடைப்பதில்லை. அதற்கு முதன்மையான காரணம், வணிக இலக்கியம் என்பதே வாசகனின் எளிமையான உணர்ச்சிகளோடு விளையாடிப் பார்ப்பதுதான். கதைக்குள் ரகசியத்தை ஒளிய வைத்து அதை ஆசிரியனே விலக்கிக் காட்டி வாசகனுக்கு அதிர்ச்சியூட்டுவது, பொதுபுத்தியால் பலகாலமாக ஏற்கப்பட்ட நீதிகளை கருத்துப்பிரதிநிதிகள் மூலமாக அழுத்தமாகச் சொல்வது, பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்குவது போன்றவை அதன் அடிப்படையான குணங்கள். வணிக எழுத்தாளன், வாசகனுடன் விளையாடிப் பார்க்க மட்டுமே செய்கிறான் என்பதால் அவனது எழுத்தில் நிஜ வாழ்க்கை என ஒன்று வருவதில்லை.
தீவிர எழுத்தாளன் நம் முன் வைப்பது ரத்தமும் சதையுமான ஓர் அசல் வாழ்க்கையை. இந்த வாழ்க்கையை வாசகனின் அனுபவமாக மாற்றி அமைக்க ஓர் எழுத்தாளன் எத்தனை பிரயத்தனப்படுகிறானோ அத்தனை நுட்பங்களுடன் எழுத்து விரிவாகிறது. ‘அக்கினி பிரவேசம்’ சிறுகதையை எடுத்துக்கொள்வோம். பேருந்துக்கு பலரும் காத்திருக்கும் இடத்திலிருந்து தொலைவாக நிற்கும் கிழட்டு காளை மாடு, எல்லாரும் புறப்பட்ட பிறகு மெல்ல மெல்ல முன்னகர்ந்து மழைக்கு அவள் ஒதுங்கியிருக்கும் மரத்தின் அடியைத் தனதாக்கிக் கொள்வது எத்தனை துல்லியமான காட்சியாகிறது எனப் பாருங்கள். இந்த நுட்பமே நமக்கும் மழையில் அவளைப் போல நனையும் அனுபவத்தைத் தருகிறது. அது கொடுக்கும் குளிருடன் அந்த மாட்டின் மீதிருந்து மழைக்காலத்தில் அடிக்கும் வீச்சத்தையும் நீங்கள் உணர்வீர்களானால் சொற்கள் உங்களுக்குள் அனுபவமாகிவிட்டது எனப்பொருள்.
இந்த நிகர்வாழ்க்கை அனுபவம்தான் அவள் அம்மா இளமையில் விதவையானவள் என்பதையும் கணக்கில் எடுக்கச் செய்கிறது. அதுவே அம்மா அவள் மேல் ஊற்றும் நீருக்கு வேறொரு கோணத்தைக் கொடுக்கிறது. இப்படித்தான் நுட்பங்கள் வாசிப்பிற்கான எண்ணற்ற வாசல்களை ஒரு சிறுகதையில் திறக்கிறது.
இரண்டாவது கேள்வி, ஏன் ஒரு சிறுகதையில் உள்ள நுட்பங்களைக் கொண்டு எல்லாராலும் அவ்வகையான ஆழங்களைச் சென்றுத் தொட முடிவதில்லை என்பதுதான். அதற்கு முன்னர் ‘இவையெல்லாம் வெறும் நுட்பம்தானே’ என்பவர்களை நோக்கி நான் முன்வைக்கும் கேள்வி, ‘நீங்கள் வாசித்தபோது முதலில் அந்த நுட்பங்களை கவனித்தீர்களா?’ என்பதுதான். ஒரு சிறுகதையை வாசிக்க நாம் நம்மை எவ்வளவு ஒப்புக்கொடுக்கிறோம் என்பது முக்கியமானது. மீண்டும் ‘அக்கினி பிரவேசம்’ சிறுகதைக்கே வருவோம். அவள் ‘சுவிம் கம்’மை மென்றுக்கொண்டிருந்தாள் எந்த வரியை வாசிக்காத, கண்ணில் படாத ஒருவரிடம் மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை. நான் உரையாடுவது அந்த வரியை வாசித்து அதன் வழியாக மேற்கொண்டு செல்லாதவர்களுக்கானது.
ஒரு புனைவில் வாசகன் சென்று தொடும் ஆழம் என்பது தனக்குள் அவன் கடந்து தொட்டுள்ள ஆழத்தையும்தான். இத்தனைக்குப் பிறகும் ஏன் அவள் அவன் கொடுத்த அந்த சுவிம் கம்மை மென்றுக்கொண்டிருக்கிறாள்? இனிப்பு தீர்ந்த அதில் அவள் என்ன சுவையைக் கண்டாள்? அவள் காணும் சுவை அந்த சுவிம் கம்மில் உள்ள சுவைதானா? என கேள்விகளை பிரதியின் முன் வைக்கும்போது அது மேலும் மேலும் நமக்குள் விரிகிறது. இந்தக் கேள்வி ஒருவகையில் வாசகனின் ஆழத்திலிருந்துதான் எழுகிறது. நவீன வாசிப்பு அப்படியானதுதான். அது ஒரு சிறுகதையை அறிவதற்கான பயிற்சியாக இல்லை; மாறாக உரையாடலுக்கான மையமாக மாறியுள்ளது. அதன் வழியாகவே கதை காட்டும் நேரடித்தன்மையில் இருந்து வாசகனால் கூடுதலாக ஒன்றைச் சென்று அடைய முடிகிறது. தனக்குள் இருக்கும் பதில் தெரியாத வாழ்வின் புதிர்களுக்கு இந்தக் கதை மாந்தர்கள் வழி பதிலை அறிகிறான், விளைவாக வாழ்க்கையையும் சக மனிதர்களையும் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
இதை ஒட்டிதான் அடுத்தக் கேள்வி எழுகிறது. நுட்பங்கள் வழியாக ஆழங்களைச் சென்று தொடும்போது ஒரு சிறுகதைக்கு என்ன நிகழ்கிறது?
ஒரு சிறந்த சிறுகதை பலகாலமாக பலராலும் வாசிக்கப்படும்போது அதற்கு இயல்பான ஒரு வடிவம் உருவாகிவிடுகிறது. ‘அக்கினி பிரவேசம்’ சிறுகதை வெளிவந்தபோது ஓர் அசாதாரண சூழலில், தாய் ஒருத்தி தன் மகளுக்கு நிகழ்ந்தது வன்முறையே அன்றி அவள் கற்பை இழந்துவிடவில்லை என்று உணர்ந்து அவளை அதிலிருந்து உள ரீதியாக மீட்பதாக வாசிக்கப்பட்டது. இந்த வாசிப்பு பல ஆண்டுகள் தொடர்ந்து ‘அக்கினி பிரவேசம்’ என்றவுடன் ‘கற்பு என்பது உடல் சார்ந்தது அல்ல’ எனும் கருத்தை மனதில் வைத்துக்கொண்டு வாசிக்கப்படும் பிரதியானது. இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் நான் கல்லூரியில் படித்தபோதெல்லாம் இந்தக் கருத்தைச் சொல்லிய பிறகே கதைக்குள் செல்வார்கள். அத்தனை இறுக்கப்பட்டிருந்தது இந்தச் சிறுகதை. ஜெயமோகன் அந்தக் கட்டுகளை தன் கூரிய வாசிப்பின் மூலம் தகர்க்கிறார். கதையின் இறுதியில் வரும் தாயில் செய்கையை மட்டுமே கவனத்தில் கொண்டு வாசிக்கப்பட்ட கதையின் போக்கை மகளின் மனநிலையில் இருந்து அணுகும்போது அக்கதை இலக்கியச் சூழலில் பாம்பு தன் தோலை உரித்துக்கொண்டதைப் போல புதுமையாகப் பளபளக்கத் தொடங்குகிறது. ஆனால் அதுவுமே சில ஆண்டுகளில் மறுபடி மறுபடி சொல்லப்பட்டு, இன்னொரு கட்டுபோல இறுகிக்கொண்டது.
நான் ஜெயமோகன் பார்வையையும் உள்வாங்கிக்கொண்டு அந்தத் தாயின் வாழ்க்கைப் பின்னணியையும் கவனத்தில் கொண்டு அத்தாய் மகளிடம் உருவாக்க விரும்புவது நம்பிக்கையையா? அல்லது தன் ஆளுள்ளத்தில் இளமை முதல் எழுந்துள்ள அந்தரங்கமான அச்சத்தை, தத்தளிப்பை தனது பாவனையான சொற்களால் மகளிடம் இருந்து போக்க விரும்புகிறாளா எனும் கேள்வியை முன் வைக்கிறேன். இது ஒரு தொடர்ச்சிதான்.
இந்த தொடர்ச்சியால்தான் ஒரு சிறுகதையின் ஆயுள் நீண்டுகொண்டே செல்கிறது. ஒவ்வொரு காலத்திலும் வாசகனுக்கு புதிய உயிராகக் கையில் தவழ்கிறது. இப்படி வெவ்வேறு உடல்களுக்குள் பாயும் ஒரே சிறுகதையின் ஜூவனைத்தான் ‘சிறுகதையின் ஆன்மா’ என்கிறேன்.
அப்படி காலம் தோறும் தன்னைப் புதுப்பித்து வாழும் சிறுகதைகளில் ஒன்றுதான் புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’.
இச்சிறுகதை பிரமநாயகப் பிள்ளை – செல்லம்மாள் எனும் கணவன் மனைவி இணையரை மையப்படுத்தியது. கதையின் தொடக்கத்திலே கதையின் முடிவும் சொல்லப்பட்டுவிடுகிறது. அதாவது செல்லம்மாள் இறந்துவிடுகிறாள். எனவே வாசகனுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. கதை முழுவதும் பிரமநாயகம் நோய்மையில் வாடும் செல்லம்மாளைக் காப்பாற்ற செய்யும் செயல்கள் எல்லாம் பலனளிக்காமல் போகும் தருணத்திற்காகத்தான் வாசகன் துக்கத்துடன் காத்திருக்கிறான். இந்தத் துக்கம் பிரமநாயகத்திடம் இல்லை. மனைவியின் இறப்பை எந்தவொரு அதீத துக்கமுமின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன்தான் வாசகனுக்கு அறிமுகமாகிறார். தொடர்ந்து செல்லம்மாள், பிரமநாயகம் பிள்ளை அவர்களின் பின்புலம், செல்லம்மாள் இறக்கும் நாட்களில் நடந்த நிகழ்வுகள், பிரமநாயகத்தின் கையறு நிலை எனக் கதை பின்னப்பட்டுள்ளது.
அந்தப் பின்னல்தான் சிறுகதையின் உடல்.
இந்தச் சிறுகதையில் ஒரு வரி பிரமநாயகத்தின் வாழ்க்கையை நமக்கு காட்சியாக விளக்கிவிடுகிறது. அதாவது அவர் வாழ்க்கையில் ஏறியுள்ள மேடுகள் என்பது தொடர்ந்து இறங்கிக்கொண்டே போகும் பள்ளத்தில் கோளாறுகள் என்கிறார். பிரமநாயகம் ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான். தந்தை இறந்தபிறகு குடும்ப கடன்களை அடைக்கும் பொறுப்பை மூத்த அண்ணன் பார்த்துக்கொள்ள அவர் செல்லம்மாவுடன் சென்னை வருகிறார். மனைவி நோயாளியாக மாற வாழ்க்கை அவருக்கு நரகமாகிறது.
ஜவுளிக்கடையில் வேலை செய்யும் பிரமநாயகத்திற்கு சம்பளமும் சொற்பமாகவே கிடைக்கிறது. அதில் பாதியை மனைவியின் நோயே தின்றுவிட கடனாளியாகவும் ஆகிறார். செல்லம்மாவோ மனஉளைச்சலாலும் பட்டினியாலும் நசிந்துகொண்டே போகிறாள். இதனால் பிரமநாயகமும் நகரைவிட்டு சற்று தள்ளி மின்சார வசதியில்லாத இடத்தில் வாழ்க்கையைத் தொடர்கிறார்.
பத்து வருடங்கள் இப்படியே போகிறது இருவரின் வாழ்க்கையும். அவ்வப்போது ஊருக்குச் சென்றால் என்ன என்ற ஆர்வம் அங்குள்ள சூழல் தெரியாததால் மங்கிவிடுகிறது. இப்படியான சூழலில்தான் அவர் தன் மனைவி செல்லம்மாவுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை எவ்வாறு போக்குகிறார் என்பது விரிவான காட்சிகளாக வருகின்றன.
அவ்வப்போது செல்லம்மாள் மயக்கமடைவதும் சுயநினைவை இழப்பதும் அதை பிரமநாயகம் சமாளிப்பதும் என நகரும் சிறுகதையில் ஓரிடத்தில் “அம்மா, அம்மா, ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு விடுவான்… துரோகி! துரோகி…” எனும் பிரக்ஞையற்ற நிலையில் இருக்கும் செல்லம்மாளின் புலம்பல் ஒலிக்கிறது. அதை பெரிதாக சட்டைசெய்யாத பிரமநாயகம் அவரே அவளின் அம்மாவாக மாறி ஆறுதலும் சொல்கிறார். உண்மையில் அவள் அம்மா இறந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டிருந்தன.
அவளுக்கு நினைவு பிறழ்ந்துவிட்டதோ என்ற கலக்கம் கூட பிரமநாயகத்திற்கு எழுகிறது. ஆனால் எல்லா குழப்பங்களுக்கு மத்தியிலும் அவள் விரும்பிய சேலை ஒன்றை எடுத்து வைக்கிறார். ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற அவளது ஆசைக்கு இணக்கமான பதிலையே கொடுக்கிறார். இப்படிப் போகும் இவர்களின் அன்பு மரணத்தின் மூலம் விடைபெறுகிறது. செல்லம்மாள் பிரமநாயகம் கொடுத்த பானகத்தை இரண்டு மடங்கு குடித்துவிட்டு வலிப்பு வந்ததுபோல அவஸ்தை படுகிறாள். உடல் வெட்டு நின்றதும் இறந்த உடலுக்கு பானகம் தரும் காட்சியைப் புதுமைப்பித்தன் விவரிக்கும் இடம் முக்கியமானது. ‘பூதாகாரமாகச் சுவரில் விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப் பிடுங்குவனபோல் இருந்தன’ என்கிறார். இறுதியில் மரணமடைந்த உடலில் மொய்க்கும் ஈயை அண்டவிடாமல் விசிறிக்கொண்டிருக்கும் பிரமநாயகத்தின் எஞ்சிய அன்பில் சிறுகதை முடிகிறது.
இச்சிறுகதை நகரம் புறக்கணித்த ஒரு தம்பதியரின் கதையாகவும் இரு காதலர்களின் கதையாகவும் வெவ்வேறு காலங்களில் வாசிக்கப்பட்டதை நாம் அறிந்திருக்கலாம். இப்போது வாசித்தாலும் அப்படியான ஒரு அனுபவமே நம்மை முதலில் வந்தடைகிறது.
கதையைத் தொடக்கத்திலிருந்து வாசிக்கும் பொழுது பிரமநாயகப் பிள்ளை – செல்லம்மாள் இருவருமே அன்பான, அந்நியோன்யமான, பொறுப்பான இணையராகவே சித்தரிக்கப்படுகின்றனர். பிரமநாயகப் பிள்ளை செய்யும் அர்ப்பணிப்பு, மனைவியின் மீது அவருக்குள்ள காதல் போன்றவைப் பிரமநாயகப் பிள்ளையின் மேல் ஒரு பாசமுள்ள கணவன் என்ற பிம்பத்தையே ஏற்படுத்துகிறது. அதுபோலவே இயலாத சூழலிலும் செல்லம்மாள் தன் கணவன் மேல் காட்டும் அக்கறை அவள் கொண்டுள்ள காதலைப் பிரதிபளிப்பதாக உள்ளது. ஆனால் ஒரு சிறுகதையில் ஒவ்வொரு வரியும் கதைக்கு முக்கியமானது.
தன் சுயநினைவை இழந்துவிட்ட நிலையில் செல்லம்மாள் தன் அம்மாவிடம் சொல்வதாக வரும் வரிகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு வாசிக்கும்போது செல்லம்மாவின் மனதில் உண்மையில் காதல் கனிந்திருந்ததா அல்லது அது ஒரு பாவனையா எனும் கேள்வி எழலாம். அவள் யாரை ‘துரோகி’ எனச் சொல்லி அம்மாவிடம் திட்டுகிறாள். நிச்சயமாக தனக்கு நல்வாழ்க்கை கொடுப்பான் என நம்பி வந்த கணவனைத்தான். ஆழ் மனதில் அவள் தன் கணவன் மேல் வைத்துள்ள அபிப்பிரயாத்தின் சுவடுகள்தான் அந்தப் புலம்பல்கள். அதுபோல சுவரில் பூதாகார நிழலாக விழுந்து செல்லம்மாளின் நெஞ்சைத் தோண்டி உயிரைப் பிடுங்குவதாக பிரமநாயகத்திற்குத் தோன்றும் காட்சி அவர் மனதில் இருந்து வெளிபடுவது. தன்னை நம்பி வந்த செல்லம்மாவை காப்பாற்ற முடியாத கையாளாகாத தனமாகவோ தான் அத்தனைக் காலம் செய்துக்கொண்டிருந்த பணிவிடைகளுக்கு அடியில் உள்ள கோர முகமாகவோ அதைப் புரிந்துகொள்ளலாம்.
சிறுகதையில் இந்த இரு சிறிய பகுதிகள் வழி காதல், பாசம் எனக் காட்டப்படும் இணையர்கள், உண்மையில் தங்களின் ஆழ்மனதில் என்னவாக உள்ளனர் எனும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது.
உண்மையில் மனித மனம் அத்தனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய மர்மமான பொருள்தான். அது இடைவிடாது நிகழ்த்திக்காட்டும் பாவனைகளை, நல்ல சிறுகதைகள் வைரத்தின் பட்டையைப் பிழப்பதுபோல பிழந்து பிழந்து காட்டி புத்தொளியைக் கொடுத்தபடியே உள்ளன. சீ. முத்துசாமியின் ‘இரைகள்’ சிறுகதை அப்படியானது.
கதையை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம். லட்சுமி என்ற பெண் தன் குடிகார கணவன் இழந்தபிறகு ஐந்து குழந்தைகளோடு தனியாக வாழ்கிறாள். அண்ணன் தன்னுடன் வந்து இருக்கும்படி சொல்ல, அதை மறுக்கிறாள். அண்ணனுக்கு ஏற்கனவே ஆறு பிள்ளைகள். தன்னால் யாருக்கும் தொந்தரவு இருக்கக் கூடாது என அவள் தன் விதியை தானே எதிர்க்கொள்கிறாள். இந்நிலையில்தான் கால் ஊனமான கிருஷ்ணன் அவளோடு வாழ ஒப்புதல் கேட்கிறான். கிருஷ்ணனுக்கே லட்சுமியின் அருகாமை தேவையாய் இருக்கிறது. அதுபோல கிருஷ்ணனுடன் சேர்ந்து வாழ்வதால் ஒரு பாதுகாப்பு கிடைக்கும் என லட்சுமியும் முடிவெடுத்து அதை அண்ணனிடம் சொல்லி அனுமதி பெறுகிறாள். மெல்ல அவ்விசயம் தோட்டத்தில் பரவியப்பின்பே நிர்வாகி அவளைப் படுக்கைக்கு அழைக்கிறான். சம்மதிக்க மறுக்கும் அவளிடம் கிருஷ்ணனின் பெர்மிட்டைப் புதுப்பிக்காமல் அவனை வேலையில் இருந்து நீக்குவதாக மிரட்டுகிறான். லட்சுமியும் சிவப்பு அடையாள அட்டையுடன் பெர்மிட்டுக்காக நிர்வாகியின் தயவை நாடுபவள்தான். அவன் அவளது பெர்மிட்டை புதுப்பிக்காமல் இருக்கப் போவதாக மிரட்டவில்லை. விளைவாக லட்சுமி, கிருஷ்ணனின் வேண்டுகோளை நிராகரித்து நிர்வாகியின் எண்ணத்துக்குச் சம்மதிக்கிறாள் என கதை முடிகிறது.
இச்சிறுகதை குறித்து பலகாலமாக மலேசியாவில் பேசப்பட்டாலும் அக்கதையினுள் சிலவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலேயே வாசிக்கப்பட்டதால் அதன் ஆழம் கவனப்படாமலேயே உள்ளது. விளைவாக, தோட்டத்து நிர்வாகியின் அராஜகத்தால் தன்னை ஒப்புக்கொடுக்க முயன்ற ஒரு பெண்ணின் அபலக்குரலாகவே இக்கதை மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டது. சிவப்பு அடையாள அட்டையால் எத்தனை பேர் இப்படி பாதிக்கப்பட்டனர் என கல்வியாளர்களின் ஆய்வேடுகளில் அங்கலாய்க்க வைத்தது.
நண்பர்களே! கிருஷ்ணனோடு சேர்ந்து வாழலாம் என முடிவெடுக்கும் நிமிடம் வரை நிர்வாகியால் லட்சுமிக்கு எந்தத் தொந்தரவும் இல்லை என்பதை கவனிக்காமல் வாசிக்கும் ஒருவருக்கு இக்கதை எதையும் திறந்து காட்டாது. லட்சுமியின் மனநிலையை சீ.முத்துசாமி மிக நுட்பமாகவே சித்தரித்துள்ளார். அவளுக்கு மரத்துப்போன மனம். ஐந்து குழந்தைகளைக் கொடுத்துவிட்ட குடிகாரக் கணவன். கணவன் மேல் அவளுக்கு உள்ள வெறுப்பும், கணவனின் அருவருப்பான செயல்களை ஒப்பிட்டுப்பார்க்கும் இடமும் அவளுக்கு இன்னொரு துணையைத் தேடுவதிலும் அதற்கு மேலாவது ‘வாழ்வதிலும்’ எந்தத் தடையும் இல்லை என்பதையே காட்டுகிறது. தன்னைவிட பரிதாபமாக மனைவியை இழந்து குழந்தைகளுடன் வாழும் உடல்குறையுள்ள ஒருவனின் வாழ்வில் இணைவதன் மூலம் அவனுக்கு ஏற்படும் இழப்பே அவளை அலைக்கழிக்கிறது. கிருஷ்ணனின் வேண்டுகோளை நிராகரித்து நிர்வாகியைச் சந்திக்க அவள் எழும் அவ்விரவில் அவள் யாராக இருந்தாள் என்பதேயே விசாரிக்கிறது ‘இரைகள்’
.
கதை முடிவில் லட்சுமியைப் பற்றி சீ. முத்துசாமி சொல்லாத அந்தரங்கங்கள் மனதில் தொற்றிக்கொள்கின்றன. அவ்விரவுக்குப்பின் அவளுக்குத் துணை வேண்டாம். நிர்வாகியிடம் செய்துக்கொள்ளும் சமரசம் அவள் அளவில் அருவருப்பானதுதான். ஆனால் அதைக்காட்டிலும் ஒரு அருவருப்பைதான் அவள் தன் கணவன் மூலம் அத்தனைக்காலம் அனுபவித்திருந்தாள். கணவன் மீதான கசந்த மொத்த வாழ்வோடு ஒப்பிடுகையில் நிர்வாகியின் வீட்டை நினைத்து எழுந்த அந்த இரவு அத்தனை கொடுமையானதாக அவளுக்கு இருந்திருக்காது.
இக்கதை, சிவப்பு அடையாள அட்டை, பெர்மிட், தோட்டச்சிக்கல் என அன்றைய சமூகம் எதிர்க்கொண்ட சிக்கலைப் பேசினாலும் ஒரு பெண் தன் உடலை இருவேறு காரணங்களுக்காக எப்படி இரையாக்குகிறாள் என்பதையும் ஆராய்கிறது. கணவனுக்கு அவள் உடல் என்பது தன்னை மறந்த நிலையில் தேவைப்படும் ஒரு கருவி மட்டுமே. அப்போது அவள் படும் துன்பம் கொடுமையானது. காலை இழந்த ஒருவனுக்காக அவள் தன்னைத் தானே இரையாக்கிக்கொள்ள துணிகிறாள். எப்படி தன்னால் தன் அண்ணனுக்குத் துன்பம் வேண்டாம் என நினைக்கிறாளோ அப்படி தன்னால் ஒருவனின் வாழ்வு அழியக்கூடாது என நினைக்கும் ஒரு பெண்ணின் மனதை நாம் கண்டுக்கொள்ளும்போது இக்கதை மேலும் அர்த்தப்படுகிறது.
அவள் முன்பு கணவனுக்கு இரையாக இருந்தாள். இரையாவதன் வலி அவளுக்குத் தெரியும். அதைப்பற்றியே அவள் அதிகம் நினைக்கிறாள். ஆனால் அது பழக்கமான வலி. ஒப்புக்கொடுத்துவிட்டு மௌனமாக அனுபவிக்கும் வலி. கிருஷ்ணன் வாழ்வில் நுழையும் தருணம் உண்டாகும் வலி அவளுக்குப் புதியது. அவள் தன் இயல்பை முற்றிலும் இழந்தவளாகிறாள். ஒப்புக்கொடுத்துப் பழகிவிட்ட அவளுக்குப் போராடி ஒன்றை தக்கவைத்தல் இனி சாத்தியமில்லை. அவள் யாருடைய நன்மையின் பொருட்டோ இரையாவதை விரும்பவில்லை. எனவே அவள் அவன் அன்பைத் தவிர்க்கிறாள். இனி அவள் யாருக்கும் இரையாக மாட்டாள்.
நண்பர்களே மேலே பார்த்த இரு சிறுகதைகளுமே மனம் போடும் வேஷத்தை திறந்து காட்டுவதாக உள்ளது. இது ஒரு வாசிப்பு முறைதான். இந்த வாசிப்பை இந்தக் கதையில் இருந்த பிற கூறுகளின் வழியாகவே நிகழ்த்திப் பார்க்க முடிகின்றது. அப்படி இன்னொரு சிறுகதை ஒன்றையும் பார்க்கலாம். இது மா.சண்முகசிவா எழுதிய ‘ஓர் அழகியின் கதை’.
மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி மனநல மருத்துவரைச் சந்திப்பதில் கதை தொடங்குகிறது. அவர்கள் இருவருக்குமான சந்திப்பு பதினாறு முறை நிகழ்கிறது. இந்த பதினாறு முறையும் அவள் தன் வாழ்நாளில் கடந்து வந்த அனுபவங்கள் குறித்து மருத்துவரிடம் பகிர்ந்துகொள்கிறாள். இந்தப் பகிர்வுதான் அக்கதையின் கட்டமைப்பு.
முதல் முறையே அவள் நிறைய நிபந்தனைகளுடன் மருத்துவரை அணுகுகிறாள். அதாவது தன்னுடைய உண்மையான பெயர் மற்றும் தன் குறித்த தகவல்கள் எதையும் அவரிடம் சொல்லப்போவதில்லை என்கிறாள். ஆனால் எனக்குள் நிகழும் அந்தரங்கமான நிகழ்வுகளைப் பகிரவே தான் வந்ததாகச் சொல்கிறாள். முதல் சந்திப்பில் அவள் சிறுமியாக இருந்தபோது அவளைத் துரத்தி வரும் கனவு குறித்துச் சொல்கிறாள். அந்தக் கனவில் நிறைய இராணுவ வீரர்கள் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகின்றனர். அப்போது அவள் இளம் பெண். எனவே அது முற்பிறப்பாக இருக்கலாம் என நம்புகிறாள். தொலைவில் எங்கோ ‘அம்மா அம்மா’ என்று அழும் ஒரு குழந்தையின் சத்தம் அவளுக்குக் கேட்கிறது. இவளுக்குள் ஒரு தாய்மையின் ஊற்று துளிர்க்கும்போது கனவு முடிகிறது. இந்தக் கனவு அவளுக்கு எல்லா வயதிலும் தொடர்ச்சியாக வருகிறது. ஆனால் அந்தக் குழந்தை யார் என்பதும் அக்குழந்தையின் குரல் கேட்கும்தோறும் ஏன் தனக்கு தாய்மை ஊறுகிறது என்பதும் அவளுக்குத் தெரியவில்லை.
அதன் பின்னர் அவள் கடந்துவந்த ஒவ்வொரு காலக்கட்டம் குறித்தும் அவள் மருத்துவரிடம் சொல்கிறாள். தந்தையின் வறுமையால் சீன முதலாளி மகன் ஒருவனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது, அவனாலேயே அவள் கோலாலம்பூரில் இருக்கின்ற தங்கும் விடுதியில் சேர்க்கப்பட்டு பாலியல் தொழிலாளி முகவரிடம் அவள் அறியாமலேயே விற்கப்படுவது, விற்கப்பட்ட பின்னர் அவள் மனதில் ஏற்படுகின்ற மாற்றமும் அத்தொழிலை ஏற்க அவள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது என ஒவ்வொரு காலக்கட்டமாகச் சொல்லப்படுகிறது. அவள் தொழிலில் ஈடுபடும்போது சந்திக்கும் பெரிய மனிதர் வழியாக கதையில் ஒரு முடிச்சு விழுகிறது.
தொழிலில் அவள் பெயர் ஜூலி. ஜூலி தொழிலில் ஈடுபட மது அவசியமாக உள்ளது. ஒரு விருந்தில் அவள் கலந்துகொள்ளும்போது மது அருந்த முடியாத சூழலில் ஒரு பணக்காரரிடம் உறவு கொள்ளும்போது அவர் கண்களின் பாவை விரிவதில் சில காட்சிகளைக் காண்கிறார். அது தொடர்பற்ற காட்சிகள். அதில் அந்தப் பணக்காரர் மலை உச்சியில் இருந்து பறந்துபோவதாக வருகிறது. அவள் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் அந்தப் பணக்காரர் கெந்திங் மலையின் உச்சியில் கார் பிரண்டு இறக்கும் செய்தியை அறிந்தபிறகு தான் கண்ட காட்சிக்கும் நடக்கும் நிகழ்வுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை அறிகிறாள்.
ஆனால் அவை திட்டவட்டமான காட்சிகளல்ல. அத்தனையும் படிமங்கள். உடலில் புற்றுநோயுள்ள நோயாளியைக் காணும்போது அவள் கருப்புத் திராட்சைத் தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டதாகவே அவளுக்குத் தோன்றுகிறது. எச்.ஐ.வி நோயாளியுடன் உறவுக்குச் செல்லும்போது சிவப்பு நிற மிருகத்தைக் கண்டு அஞ்சி ஓடுகிறாள். பலசமயம் அவளால் தான் காணும் காட்சிகளுக்குப் பொருள் கொள்ள முடியாமலும் போகிறது. இப்படியாக அவள் தன் தொழிலில் சுவாரசியம் அடைகிறாள்.
எந்தத் தொழில் வேண்டாம் என நினைத்தாலோ அவளுக்கு அந்தத் தொழில் பிடித்துள்ளது. அவளுக்குத் தேவையானவை கண்கள். கண்கள் வழியாகக் காட்சிகள். அவள் அந்தக் கண்கள் வழியாக தன்னை அறிய முயல்கிறாள். சிறுவயது முதலே தான் காணும் கனவை இன்னொருவர் கண் வழியாகக் காணக்கூடுமா என அவள் ஏங்கித் தவிக்கிறாள். அந்தக் குழந்தையை அதன் மூலம் அறிய முடியுமா என ஏங்குகிறாள்.
இப்படிப் போகும் இவள் வாழ்க்கை ஒரு பணக்காரருக்கு மட்டுமே சொந்தமாகிறது. ஒரு ‘ரெய்டில்’ அவள் சக தோழிகளுடன் மாட்டிக்கொள்ள அந்தப் பணக்காரர் மூலம் மீட்கப்பட்டு அவருக்கு மட்டுமே ஆசை நாயகியாக இருக்க வேண்டியதாகப் போகிறது. அந்த பிரமாண்டமான வீடு அவளுக்குக் கொடுமையாக உள்ளது. எதை வேண்டினாளோ அது அவள் காலடியில் உள்ளது. எதை விட்டு ஓடினாளோ அது தேவையாக இருக்கிறது. எட்டு வருடம் அவர்கள் உறவு தொடர்கிறது. ஒரு சமயம் அந்தப் பணக்காரர் இறக்க அவரது சொத்தில் ஒரு பகுதி அவளுக்குச் செல்கிறது. ஆனால் அவளைத் துன்புறுத்துவது கனவுதான்.
அப்போதுதான் அந்தச் சீன முதலாளியின் நம்பிக்கைக்குரிய மேனஜரின் மகனைச் சந்திக்க நேர்கிறது. சிக்கலான சந்திப்பு அது. போதை பழக்கத்திற்கு அடிமையான அவன் ஜூலி வீட்டில் உள்ள பணத்தை அபகரிக்க வந்து அவளிடம் மாட்டிக்கொள்கிறான். கடும் போதையில் இருக்கிறான். ஜூலி அவன் போதையை தெளிவிக்கிறாள். அவன் கண்களின் வழியாக அவன்தான் முற்பிறவியில் தன்னை அம்மா என அழைத்தவன் என ஜூலி அறிந்துகொள்கிறாள். அவள் தன் மகனை கண்டடைந்த கதையை பதினாறாவது அமர்வில் சொல்கிறாள். அதன் பின்னர் அவள் வரவே இல்லை என சிறுகதை முடிகிறது.
இக்கதையை ஓர் உளவியல் சார்ந்த சிறுகதையாக எடுத்துக்கொள்ளலாம். உண்மைதான். அவள் உளவியல் பாதிப்பு உள்ளவள். எனவே எப்படியும் இக்கதை அது குறித்தே பேசுகிறது. ஆனால் இதில் அவள் சொல்லாத ஓர் அடியாழம் உள்ளது. அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது இக்கதை மேலும் துலங்கி வரலாம்.
முதலில் ஒரு மனிதனுக்கு தன்மேல் தான் விரும்பாத ஒன்று திணிக்கப்படும்போது அதன் மேலுள்ள ஒவ்வாமையின் உளைச்சல் என்னவெல்லாம் செய்கிறது என இக்கதையில் பார்க்க இடமுண்டு. மீளவே முடியாத இடத்தில் சிக்கிக்கொள்ளும் பெண் தன்னைச் சுற்றி பார்ப்பது அனைத்தும் இருள். மனிதனால் தொடர்ந்து இருளில் இருக்க முடியாது. சதா துன்பமான கதைகளை மட்டுமே உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கும் நண்பர் ஒருவரின் வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள். அவர் அதிலிருந்து வெளியேறிச்செல்லும் வாய்ப்புகளையும் இன்னொரு பக்கம் தேடிக்கொண்டே இருப்பார். ஜூலியும் அப்படித்தான். அவள் தனக்கு விதிக்கப்பட்ட இருளின் வழியாக ஒளியைக் கண்டடைய முனைகிறாள். தான் கண்டடைந்த ஒளியை ஒருவரிடம் சொல்லவே அவள் வருகிறாள். ஆனால் அவளுக்கு மருத்துவரின் ஆலோசனை தேவையாக இல்லை.
அறிவியல் திட்டவட்டமானது. அது ஜூலி மனதில் வரைந்து வைத்துள்ளவை. அழுத்தமான சிக்கல்களினால் தனக்குள் தப்பித்துச் செல்லும் ஒரு கற்பனையான பாதை என நிரூபிக்க முயலலாம். ஜூலி அந்தரங்கமான அந்த உண்மையை அறிந்தவர். அதை அவள் கேட்க தயாராக இல்லை. அந்த உண்மை அவளை இருளில்தான் தள்ளப்போகிறது. அவள் இருளில் இருந்து இன்னொரு இருளுக்குள் போயிருப்பாள். அதன் பிறகு அவள் வாழ்க்கை முழுவதும் எஞ்சப்போவது இறந்த கால கசப்புகள் மட்டும்தான். இப்போது பெற்றுள்ள மகிழ்ச்சியான உலகை உடைக்கும் உண்மை அவளுக்கு வேண்டாம். எனவே கற்பனை அவளுக்கு ஒளி கொடுப்பதை அனுமதிப்பதில் அவளுக்குச் சிக்கல் இல்லை.
நண்பர்களே, கடந்த வாரமும் இந்த வாரமும் ஏறக்குறைய ஆறு சிறுகதைகளைப் பார்த்துவிட்டோம். ஒவ்வொரு சிறுகதையும் நமது அறிவையும் புலமையும் நிரூபிக்க வாசிக்கப்படுவதல்ல. ஒரு சிறுகதை வாசிப்பு நம்மை மேலும் மனிதத்துடன் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். நமது முந்தைய தவறுகளில் இருந்து நம்மை மீட்க வேண்டும். சக மனிதர்களின் தவறுகளை பொறுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும். இலக்கியங்கள் போதிப்பது அதைதான். ஒரு புனைவின் ஆன்மாவை அறிதல் என்பது நமது ஆன்மாவை சுத்திகரிக்கும் முயற்சிதான். நன்றி.
சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல் – 1