அன்பு நவீன். நான் உங்களின் வாசகனென தைரியமாகச் சொல்லிக்கொள்ள தகுதி படைத்துள்ளதாகவே நம்புகிறேன். உங்களின் அத்தனை சிறுகதைகளையும் வாசித்துவிட்டேன் எனும் துணிவில் இதைச் சொல்வேன். (மண்டை ஓடியை மறுபதிப்பு போட்டால் என்ன?)
அந்த வரிசையில் மிருகம் என்னை உலுக்கி எடுத்துவிட்டது. உங்களின் உச்சை சிறுகதை வரிசையில் இருந்த பிரமாண்டங்களை எல்லாம் களைத்துப்போட்டுவிட்டு வாழ்க்கையை அதன் அனுபவங்களை நேரடியாக அணுகியுள்ளீர்கள். மன்னன் அத்தனை ஆபரணங்களுடன் அரியாசனத்தில் வீற்றிருப்பது ஒரு கம்பீரம் என்றால் தன்னந்தனியனாக தனது பூங்காவில் எவ்வித ஒப்பனையும் இல்லாமல் உலாவுவதும் அழகுதானே. எப்படியிருந்தாலும் மன்னன் என்பவன் மன்னன்தான்.
தங்கா
மிருகம் சிறுகதையை வாசித்தேன். எதோ ஒரு விதத்தில் தன் உயிரைக் காக்க காரணமாக இருந்த போப்பியைப் பேண கதைசொல்லி அதனால் வரும் எல்லா இடர்களையும் கடந்து முயல்கிறான். நன்றியுணர்வின் பின்னணியில் நாயை வளர்த்தாலும் அதனை புதிய சூழலுடன் பழக்கப்படுத்தும் முறையில் உள்ளூர வன்முறையொன்று இருக்கவே செய்கிறது. சுற்றிலும் நடப்பவை எல்லாவற்றையும் தன் பசி, பயம் ஆகியவற்றுடனே முதலில் தொடர்புபடுத்திப் பார்க்கும் அதன் மொழிக்கு எல்லாமே அந்நியமாய்த் தெரிகிறது.
நன்கு பழக்கப்படுத்தப்பட்டு மனிதர்களின் வாழ்வில் பெரிய இடரேதையும் கொண்டு வராத நடமாடும் அலங்காரப்பொருளைப் போலவே வலம் வரும் நாய்களின் மீதே கோமதிக்கு விருப்பம் இருக்கிறது. அவளின் எண்ணத்துக்கு மாறாக வளர்க்கப்படும் போப்பியின் மீது வன்முறையை நேரடியாகவே காட்டுகிறாள். அவர்களின் வாழ்க்கை முறைக்கேற்பவும் அதனைப் பழக்கப்படுத்துவதும் கோமதியின் விருப்பங்களுக்கேற்ப அதனை மாற்ற முயல்வதுமாய்க் கதைசொல்லி அதற்கு வன்முறையே அளித்துக் கொண்டிருக்கிறான். அந்த வன்முறைக்கு போப்பி எதிர்வினை அளிக்கும்போது அவனுடைய வன்முறையின் மொழி இயலாமையாய் வெளிப்படுகிறது. உள்ளூர அதனை போப்பியும் உணர்ந்தே இருக்கிறது. நேரடியான மொழியில், வன்முறையாகிப் போகின்ற போப்பியின் வளர்ப்பையும் அதன் பின்னான இயலாமையையும் கதை பேசுகிறது.
அரவின் குமார்
‘மிருகம்’ மனித இச்சைக்கும் மிருக இச்சைக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் இரு மனங்களின் அகப்போராட்டத்தைச் சித்தரித்தக் கதையாகப் பட்டது. தன் உயிரைக் காப்பாற்றும் போப்பியை வளர்ப்பதன் மூலம் அவனின் அன்பையும் நன்றியுணர்வையும் காட்டுகிறான் கதையின் நாயகன். நன்றியுணர்வைக் காட்ட அவன் போப்பியை வளர்த்தாலும் அவனால் மட்டுமே போப்பியின் செய்கைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது, போப்பியின் மீது நம்பிக்கையும் கொள்கிறான். காரணம் அவன் நிலையும் போப்பியைப் போலத்தான். நன்றியுணர்வு ஒரு பக்கம் இருந்தாலும் அவன் போப்பியை அவனைப் போன்ற ஒரு ஜீவனாகத்தான் காண்கின்றான். அதே போல போப்பியும் அவன் மீதும் அவனின் குடும்பத்தின் மீதும் அன்பாகவே இருக்கின்றது.
இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து நடந்துகொள்கின்றனர். போப்பி அதன் ஆதி இச்சையினால் உணவைத் தொடும் அவனின் குழந்தையைத் தாக்குவதால் போப்பி வெறுக்கப்பட்டு கைவிடப்படுகிறான். ஆனால் போப்பியைப் போலத்தானே அவனும் அவனது மனைவியும், சுயநலம் எனும் மனித இச்சையினால்தானே அவர்களுக்குப் போப்பியின் மீது வெறுப்பு உண்டாகுகின்றது. போப்பி அதன் இச்சையினால் அவனை இழப்பது போல் அவனும் அவனது இச்சையினால்தானே போப்பியை இழக்கின்றான். இங்கு போப்பி மட்டுமா மிருகம்… என்ற கேள்வியே எழுகின்றது. ஆக, அவனுக்குப் போப்பியின் மீது அன்பும் நன்றியும் இருந்தாலும் அவனது சுயநலம் என்ற இச்சை மேலோங்க குற்றவுணர்ச்சிக்கும் நன்றியுணர்ச்சிக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறான் அவன்.ஏனோ கதையை எத்தனை முறை வாசித்தாலும் படித்த முடித்த பின் ஓர் அழுத்தத்தைக் கதை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றது.
சாலினி
அண்ணா, இன்று எங்கள் நண்பர்கள் குழுவில் கதை பகிரப்பட்டு உரையாடப்பட்டது. நேரடியான சிறுகதை என நண்பர்கள் கூறினர். எல்லா நேரடியான கதையும் நேரடியான அனுபவங்களைக் கொடுக்கிறதா என்ன?
இந்தச் சிறுகதை அந்த நாயுடைய கதையல்ல; அவனின் கதை. அதன் மேல் அவனுக்கு எழுந்த இரக்கம் போல நாய்க்கு அவன் மேல் இரக்கம் எழும் தருணமே கதையின் உச்சம். அவன் அழைத்துவந்து அதைக் காக்கிறான், அது விட்டுச் சென்று அவனைக் காக்கிறது.
அவன் அழுவது எதனால்?
அவன் வளர்க்கும் நாயொன்று அடையும் சுதந்திரத்தை அவனால் எப்போதாவது பெற்றுவிட முடியுமா? அப்படி விட்டு விடுதலையாகிச் செல்ல முடியுமா? அவ்வளவு இருளில் தனக்கான வெண்ணொளியைத் தேடிக்கொள்ளத்தான் முடியுமா?
உங்களின் மிகச்சிறந்த சிறுகதை அண்ணா.
க.கேசவன் (K7)