கச்சிதமாக எழுதப்பட்டுள்ள கதை. நவீனின் சிறந்த கதைகளில் ஒன்று.
மனித உணர்வுகள், அதன் ஆதி குணத்தைத் தீண்டும்போது, தான், தனது என்றே நினைக்கிறது. பாசாங்குகள் அறுபட்டுப் போகின்றன.
ஆதி குணத்திலேயே பாசாங்கற்று வாழும் மிருங்களின் தூய அன்பும் வேதனையும் தற்காப்பும் குற்றவுணர்வும் சமரசமற்றதாக உள்ளன. அவை சமாதானங்களைக் கோருவதில்லை. வினைக்கான எதிர்வினைகளை கேள்விகளற்று ஏற்றுக்கொள்கின்றன.
காட்டுயிர்போல எதற்கும் கட்டுப்படாமலேயே இருந்த போப்பி, தான் தவறிழைத்தை உணர்ந்தபின் தண்ணீர்கூட வாயில் படாமல் விலகுகிறது. அதுவரையில், அவனின் அன்புக்கும் கவனிப்புக்கும் தான் தகுந்தவன்தான் என்று உரிமையோடு சண்டித்தனம் செய்தது, குழந்தைக்கு வலி ஏற்பட்டதை உணர்ந்து தான் எதற்கும் தகுதியில்லாதன் என முடிவெடுக்கிறது. அமைதியாக அவனிடமிருந்து வெளியேறுகிறது. கட்டிப்போடப்படாமல் இருந்தால் அது தானே சென்றிருக்கும்.
அத்தனை பாசத்தோடும் அன்போடும் மனைவியின் எதிர்ப்புகளுக்கிடையே போப்பியைப் பேணி வந்தவன், தன் குழந்தையைக் காயப்படுத்திவிட்டது என்பதை உணர்ந்ததும் அதன் மேல் கோபப்படுகிறான். அதை அடித்துத் துரத்த மனம் நினைக்கிறது. பாப்பாவுக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்று வேதனைப்படுகிறது. ஆனால், ஒரு நொடி கூட பாப்பாவைக் காயப்படுத்தியபின் போப்பி வேதனைப்பட்டிருக்குமே என்று நினைக்கத்தோன்றவில்லை. தண்ணீர்கூட குடிக்காமல், அமைதியாக இருக்கும் அதன்மேல் கழிவிரக்கம் ஏற்படவில்லை.
போப்பி அவன் உயிரைக் காப்பாற்றியது என்பதாலேயே அதனால் ஏற்படும் சிரமங்களை எல்லாம் அவன் பொறுத்துக்கொள்கிறான். அதையே அடிக்கடி சொல்லவும் செய்கிறான். அந்த நன்றியுணர்ச்சியே அவனைக் கட்டிப்போட்டுள்ளது. கடைசியாக அதை இழந்தபின்னர் அதன் தூய அன்பின் இழப்பு அவனுக்கு உறைக்கிறது.
தர்க்கங்களற்ற மிருகநிலைக்கும் பரிணாம வளர்ச்சியடைந்த மனித மனங்களின் தர்க்கரீதியான உணர்வாடல்களுக்குமிடையேயான இடைவெளியில் நகர்கிறது கதை.
எவரும் குற்றவாளி அல்லர். போப்பியும் கோமதியும் அவள் கணவனும் குழந்தையும் அவரவர் இயல்பில் உள்ளனர். எதிர்பார்ப்பு, நன்றியுணர்வு, குற்றவுணர்வு போன்ற பல உருவாக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட உணர்வுகளால் ஆனது மனித மனம். அதற்கு வேறுபாடுகள் இருக்கும். உணர்வுகள் கட்டமைக்கப்படாத, தூய ஆதி குணத்தோடு இருக்கும் பொப்பி அவனைப் பார்த்து வாலாட்டுவதைப் போலவே, அதை வெறுத்து, துன்புறுத்தும் அவன் மனைவியைப் பார்த்தும் வாலாட்டுகிறது. அதனிடம் வேறுபாடு இல்லை. எதிர்பார்ப்பும் இல்லை.
உள்ளார்ந்து எழுதப்படும் எளிமையான ஒரு கதை, ஆழமான சிந்தனையையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த கதை.
லதா, சிங்கப்பூர்
அன்பு நவீன், இம்மாத வல்லினத்தில் மிருகம் சிறுகதை நேரடியாக எழுதப்பட்டது போன்று இருந்தாலும், ‘மிருகம்’ என்ற தலைப்பு சில வினாக்களை முன்வைக்கிறது. உள்ளபடியே கதையில் யார்தான் மிருகம்? போப்பியா? கோமதியா? கதைசொல்லியா?’ போப்பியின் காரணமற்ற குரைப்பும் அதன் வித்தியாசமான நடத்தையும், அது தரும் தொல்லையும் , கடைசியில் அது குழந்தையைக் குதறிவைப்பதும் அதனை மிருகம் என்றே வைத்துக்கொள்வோம்.
ஆனால், கோமதி அதனைத் தெருநாய் என்று கீழ்மை செய்து உயர் சாதி நாய்களின் குணத்தோடு ஒப்பீடு செய்து அதனை அடியோடு வெறுக்கிறாள். பெரும்பாலும் போப்பியை அடித்துத் துரத்துவதாலும், அதன் அருகாமையால் ஒவ்வாமை அடைவதாலும், போப்பியை அன்போடு பராமறிக்கும் கணவனை தரம் குறைவாக நடத்துவதையும் பார்க்கும் போது கோமதிதான் மிருகமா என்று எண்ண வைக்கிறது.கதையின் இறுதியில், தன் உயிரைக் காப்பாற்றிய போப்பியை, அதன் பின்னர் அன்போடு வளர்த்ததை, அது செய்யும் அட்டூழியங்களைப் பொறுத்து மன்னித்து, அதனை எப்படியாவது நன்றியுள்ளவனாக, நல்லவனாக ஆக்கிவிடவேண்டும் என்ற கதைசொல்லியின் வளர்ப்பு முறையை கதை சொல்லிச் சென்றாலும், தன் குழந்தையையே அது குதறிவிட்டது என்பதற்காக அதனை அத்துவானத்தில் அனாதையாய் கைகழுவிடும் கதைச் சொல்லி மிருகமா?
இப்படி சில இடைவெளிகளை விட்டுச் செல்கிறது கதை. எனவே கதை முடிந்த பிறகும், தொடர்கிறது. நாயோடு பழகாத ஒரு சராசரி மனிதன் வைக்கின்ற ஒரு சந்தேகம். போப்பி இறுதியில் நல்லவனாக, தன் தவறை உணர்ந்தவனாக ஆகிவிட்டது போலக் காட்டுகிறீர்கள். நாய் உண்ணாவிரதம் இருப்பதும், தனக்கான தண்டனையை அல்லது விதியை தன் எஜமானரிடம் விட்டுவிடுவதையும் சொல்லிப் போப்பியின் குணத்தில் சில எதிர்ப்பாரா குணாம்சத்தைக் காட்டுகிறீர்கள். இது போப்பியின் மீது வாசகனுக்கு அனுதாபம் வரவேண்டும் என்பதற்காக வைத்த முடிவுபோல உணரவைக்கிறது. நாய வளர்ப்போருக்குக் கண்டிப்பாக இது நல்ல கதைதான். எனக்கும்தான்.
கோ. புண்ணியவான்
அன்பு நவீன். நலம் சூழ்க.
உங்கள் சிறுகதைகளில் ஆகச்சிறந்த ஒன்று ‘மிருகம்.’ இந்த வரியை இனி நீங்கள் எழுதப்போகும் கதைகளை வாசித்தும் நான் சொல்ல எனக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.
கதைச் சொல்லியும் (அவனுக்குப் பெயர் இல்லை) அவன் மனைவி கோமதியும் நேர் எதிர் துருவங்கள். இருவருக்கும் இரு விதமான குணங்கள். இந்தக் குணங்களை அவர்கள் தங்கள் மனதில் அதுவரை வளர்த்து வந்த நாயின் மூலமாக அடைந்துள்ளனர் என்பதுதான் கதையின் பிடி. இந்தப் பிடி கிடைக்காவிட்டால் கதை தன்னைத் திறந்து காட்டாது என்றே நினைக்கிறேன்.
கோமதி பயிற்சி கொடுத்து முறையாக வளர்க்கப்படும் நாய் மீது பிடிப்புக் கொண்டவள். அதை வெளிநாட்டு நாய் என்றும் உயர் ஜாதி நாய் என்றும் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. எளிதாகக் கையாளக்கூடிய நாயின் மீது அவளுக்கு ஈடுபாடு உண்டு. அந்த நாய்களின் வீடியோக்களைப் பார்த்து மனதில் கற்பனையான ஒரு நாயை உருவகிக்கிறாள். நில் என்றால் நிற்கும் நாய். உட்காரு என்றால் அமரும் நாய். இந்தக் குணம் கதை முழுவதும் அவளிடம் வருவதைப் பார்க்கலாம். இந்தக் குணம்தான் அவளை வேலையை விடவும் வைக்கிறது. நேர்த்தியும் திட்டவட்டமும் வாழ்க்கை முறை கொண்டவள் கோமதி.
கதைச்சொல்லி அதற்கு நேர் எதிரானவன். அவன் கிராமத்தில் பார்த்து வளர்ந்த நாட்டு நாய்கள் வழி வாழ்க்கையை அறிந்தவன். எனவே அவனிடம் கட்டுப்பாடுகள் இல்லை. விதிகள் இல்லை. அவனால் போப்பி போன்ற நாய்களைத்தான் ரசிக்க முடியும். அவன் ஆளுமை அவற்றின் வழியாக உருவாகி வந்தது. கதையிலும் அவன் அப்படித்தான் வருகிறான். மகள் எங்கே அட்மிட் ஆகியிருக்கிறாள் என அறியாமல் அலைந்து திரியும் இடம் முக்கியமானது.
இந்த வெவ்வேறு மனநிலை கொண்ட இருவர் எப்படி தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டு இணைந்து வாழ முயல்கின்றனர் என்பதுதான் கதையின் முடிச்சி.
கோமதியின் அத்தனை வன்மத்தையும் கதைச்சொல்லி பொறுமையாகக் கையாள்கிறான். இந்த மனநிலை போப்பி போன்ற ஓர் உயிரை விரும்புபவர்களுக்கு மட்டுமே சாத்தியம். காரணம் போப்பி போன்ற ஒரு கட்டுப்பாடற்ற மிருகத்திடமிருந்து எழும் கோபமும் அன்பின் ஒரு பகுதி என அவர்கள் மட்டுமே அறிவர். அதனாலேயே அவனால் போப்பியைப் பொறுத்துப்போக முடிகிறது; கோமதியையும் அவ்வாறே அவன் அணுசரித்துச்செல்கிறான்.
நவீன், உங்கள் கதைகள் என்னை அச்சமுற வைத்துள்ளது. கட்டுக்கடங்காமல் சிரிக்க வைத்துள்ளது. ஆனால் மிருகம் என்னை அழ வைத்தது.
கதைச்சொல்லி கடைசியாக அதை ஓர் மிருகம் எனும் முடிவுக்கே வருகிறான். அதனால்தான் சிற்றூரில் அதை விட நினைத்தவன் மனம் மாறி காட்டுப்பாதையில் தள்ளுகிறான். போப்பி மிருகம்தான். அதனால்தான் அதுவும் காட்டுப்பாதையில் நடக்கிறது. ஆனால் அந்த மிருகத்திடம் தூய அன்பு உள்ளது. அது பழுதுபடாத அன்பு. ஓ…. நவீன் இப்படி ஒரு இடம் தமிழ் இலக்கியத்தில் உண்டா?
சூழல் மிருகமாக்கிய உயிரொன்று தன் ஆழுள்ளத்தில் இருக்கும் மாசுபடாத இதயத்தை காட்டி மறையும் காட்சி… அபாரம்.
இவ்வரியை எழுதும்போது எழும் அழுகையை அப்படியே போப்பியிடம் கொடுத்துவிட்டு நிறைவு செய்கிறேன்.
ராம்