லீகாட்: நன்றியுணர்வு – ஜி.எஸ்.தேவகுமார்

பொதுவாக பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்தப் பிறகு பள்ளிக்கு விடுப்பு எடுத்து கொள்வார்கள். சடங்கு சம்பிரதாயம் எல்லாவற்றையும் விடுப்போடு முடித்துக் கொண்டு பள்ளிக்கு வருபவர்களின் முகம் பொழிவுடன் காணப்படும். அவள் அச்சுறுத்தப்பட்டுமிருப்பாள். ஆண்களோடு பேசுவது தொடங்கி உடைகள் வரை  வீட்டுப் பெரியவர்கள் எச்சரித்து அனுப்பி வைப்பார்கள். ஆண்களுக்கு ஏன் அவ்வாறான சடங்கு சம்பிரதாயங்கள் நடத்தப்படவில்லை என்ற கேள்வி ஆண்களின் மனதில் எழாமல் இருக்காது. அந்த ஆழ்மனத்தின் அடக்கப்பட்ட உணர்வுகள் பேசுவது லீகாட் நாவல்.

பால்ய பருவத்தில் நுழையும் ஒவ்வொரு ஆணும் தன்னுள்ளே ஏற்படும் உடல்ரீதியான மாற்றத்திற்கும், அதன் விளைவாக ஏற்படும் மனரீதியான பாதிப்புகளுக்கு ஒரே வகையான எதிர்வினையை ஆற்றுவதில்லை. வடிகால் தேடுவதில்லை. சிலர் தப்பித்து விடுகிறார்கள். பலர் சிக்கிக் கொண்டு விடுகிறார்கள்.

தீபனும் அவ்வாறு சிக்கிக் கொண்டே நாவல் முழுக்க வலம் வருகிறான். கதை நடக்கும் காலகட்டத்திற்கும் எனக்குப் பக்கத்து வீடுபோல பக்கத்து வயதுதான். அதனால் மாணவர்கள் பேசிக் கொள்ளும் பேச்சு வழக்கு மொழியை விரைவாகவே புரிந்துக் கொண்டேன். 80கள் தொடங்கி 90களின் ஆரம்பத்தில் பிறந்தவர்கள் இந்த லீகாட்டோடு விரைவில் ஒட்டிக் கொள்வார்கள்.

தன் தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மைக் கொண்ட தீபன் அதிலிருந்து கனகா வழி மீண்டு வருகிறான். பின் கனகா தொலைந்த பிறகு மாறன் அவளின் இடத்தை நிரப்பி விடுகிறான். மாறனோடு சேர்ந்த தீபன் குற்ற உணர்வு ஏதுமில்லாமல் திருடுகிறான். ஒரே நோக்கம் பணமும் அது கொடுக்கும் மகிழ்ச்சியும். நெருங்கிய நண்பர்களாக இருந்த தீபனும் மாறனும் பகைக் கொள்வது நாவலில் எதிர் பாராத திருப்பம் மட்டுமன்றி வாழ்க்கையிலும் அவ்வாறான திருப்பங்கள் எங்கும் நிகழும் ஒன்றுதான். பக்கத்து வீடு முதல் அரசியல்வாதிகள் வரை நட்பாக இருந்து, ஒரு கட்டத்தில் சட்டையைப் பிடித்து கொள்ளும் நிலைக்குச் செல்வது குறித்து இதுதான் காரணம் என விளக்க முடியாது. எதுவும் காரணமாகலாம்.

அந்த வகையில் நாவலில் தீபன் மீதும் வாடிக்கையாளர்கள் மீதும் பகைக் கொள்ளும் தமிழகத் தொழிலாளி விச்சு தனித்து பார்க்கப்பட வேண்டிய கதாப்பாத்திரம். தீபனுக்கு அங் பாவ் கொடுத்து கிளம்புவதைக் காட்டிலும் தன்னோடு கடையில் வேலைப் பார்க்கும் பெண்ணின் மருத்துவ செலவுக்குப் பணம் கொடுத்து விட்டு தமிழகம் செல்கிறான். இனி இங்கு வரவே கூடாது எனச் சொல்லும் விச்சு, இறுதியாக செய்து விட்டும் போகும் உதவியால் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு விச்சு மிகச் சிறந்த குறியீட்டுக் கதாப்பாத்திரம்.

தீபன் எதிர் நோக்கும் உளவியல் சிக்கலை ரத்தனா ஆண்ட்டியைத் தவிர கதையில் வேறு யாரும் புரிந்து கொள்ள வில்லை. அவன் அம்மா உட்பட. அவனின் மன நோய்க்கு  ரத்தனா ஆண்ட்டியே மருந்தாகி விடுகிறார். காரணம் அவனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர் அவர் மட்டுமே.

உறவுக்குப் பிறகு, அவர் அசந்து தூங்கும் போது அவரின் முகத்தை தீபன் உற்றுப் பார்க்கிறான். பிறகு அவன் கைகள் எழுந்து தன்னிச்சையாக அவரை வணங்கியது, என் மனதை உருக்கிய காட்சி. 

அப்போது தோன்றிய ‘அந்த’ உணர்வை தீபன் தன்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்றாலும் அந்தக் காட்சியே வாசகனின் இடைவெளியில் லீகாட் நாவலின் உச்சம்.  விசுவாசம், நன்றியுணர்தல், ஜீவகாருண்யம்

என அந்தக் காட்சிக்குப் பல தூய அர்த்தங்களைக் கொடுக்கலாம்.  விச்சுவை மிஞ்சி விட்டார் ரத்னா ஆண்ட்டி.

பொதுவாக பால்ய பருவத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களைக் குறித்து குறைச் சொல்லும் மனோபாவம் பல ‘பெரிசுகளிடம்’  உண்டு.  தன்னிலை விளக்கத்தைப் பேத்திக்கு எழுதும் கடிதம் வழியாக தொடங்கி நாவலாக வளர்த்து கடிதமாகவே நிறைவு செய்துள்ளான் தீபன். அந்தக் கடிதம் பேத்திக்கானது மட்டுமில்லை. அந்தப் பெரிசுகளுக்கும்.

(Visited 21 times, 4 visits today)