லீகாட்: மீட்பு உதறிய இருள் – அரவின் குமார்

எழுத்தாளர் ம. நவீனின் நான்காவது நாவலான லீகாட் நாவலை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். ஒரு நல்ல புனைவு எப்பொழுதுமே பதில்களை வழங்குவதில்லை. வாழ்க்கை, மனித உளவியல் குறித்து கேள்விகளை எழுப்பும் என்பதை அனுபவமாகவே உணர்ந்திருக்கிறேன். லீகாட் நாவலை வாசித்து முடித்ததுமே தோன்றிய கேள்வி என்பது உடல் மட்டுமே ஆன காமத்தின் எல்லைத்தான் என்ன அதற்கான மீட்புத்தான் என்ன என்பதாக இருந்தது.

ஒரு மனிதன் தன் வாழ்நாளுக்குப் பிறகு விட்டுச் செல்லும் தன்னிலைக் குறிப்பு வடிவத்திலே லீகாட் நாவல் அமைந்திருக்கிறது. தீபன் தன் பேத்திக்கு விட்டுச் செல்லும் மன்னிப்பும் விளக்கமும் சேர்ந்த தன்னிலை குறிப்பென்னும் வடிவத்தை நவீன் லீகாட் நாவலில் பயன்படுத்துகிறார். அந்த உத்தியே நாவலின் புனைவு சாத்தியங்களை எண்ணற்றதாக்குகிறது. இந்தப் புனைவு சாத்தியத்தை லீகாட் நாவல் எந்தவகையில் பயன்படுத்தியது என்பது அது எடுத்துக்கொண்ட வடிவம் சார்ந்து எழுப்ப வேண்டிய கேள்வி.

லீகாட் நாவலின் களமும் கதையோட்டமும் பலவகையில் சிகண்டி நாவலை நினைவுப்படுத்தக்கூடியது. சிகண்டி நாவலின் மையப்பாத்திரமான தீபனின் மாற்று வார்ப்புருவாகவே லீகாட் நாவலின் தீபனையும் பார்க்க வேண்டியிருக்கிறது. சிகண்டியைப் போலவே இந்நாவலில் வரும் தீபனும் வறிய குடும்பச் சூழலில் கம்பத்தில் வளர்கிறான். அவனுடைய அப்பா சிங்கப்பூரில் வேலை செய்கிறார். குடும்பத் தேவைகளுக்காய்க் கம்பத்து வீட்டைச் சுற்றிலும் அம்மா நிறைய காய்கறிச் செடிகளையும் பழமரங்களையும் நட்டிருக்கிறார். அத்துடன் கோழிகளையும் ஆடுகளையும் வளர்க்கின்றனர். அதனைப் பராமரிக்கும் பொறுப்பு தீபனைச் சேர்கிறது. அவனுடைய மெலிந்த கரியத் தோற்றம் பள்ளி மாணவர்களிடையே அவனைக் கேலிக்குள்ளாக்குகிறது. தோற்றம், பின்னணியால் தாழ்வுணர்வு கொண்டவனைச் சிலர் மீட்டெடுக்க முயல்கின்றனர். அத்துடன் தீபனின் உடலில் இயல்பாகவே ஒரு விரைவு இருப்பதைக் காணமுடிகிறது.

அவனுடைய விரைவை முதலில் ஓட்டப்பந்தயப் போட்டிக்கான பயிற்சியாக ஆசிரியர் சப்ரி மாற்ற முயல்கிறார். அவனுக்குப் பூமா (மலைச்சிங்கம்) என அடைமொழியிட்டு ஒட்டப்பயிற்சிகள் அளிக்கிறார். ஆனால், அவனுடைய இயல்பான தாழ்வுணர்வு அதனை மெலெடுத்துச் செல்ல தடையாகிறது. அடுத்ததாய், அவன் வாழ்வுக்குள் ஒரு அந்திப் பொன்னொளி போல கண நேரம் மட்டுமே வந்து செல்கிறாள் கனகா. அழகிய தோற்றம் கொண்ட கனகா அவனுடன் நெருங்கி பழகுகிறாள். தன்னை வெறும் உடலாகவும் அதன் ஆற்றலாகவும் மட்டுமே உணர்ந்து கொண்டிருக்கும் தீபனை வேறொன்றாக முயல்கிறாள். அவனது தோற்றத்தைச் சரிசெய்து அவனுக்குள் நம்பிக்கையை வளர்க்கிறாள். அதைப் போல, ஒரு மலைப்பயணத்தில் கண்டு இரசித்திட வேண்டியவற்றைக் கற்றுத்தருகிறாள். ஆனால், அவனது வாழ்வில் மின்னல் பொழுதே நீடிக்கும் அவளுடைய வருகை அவனுக்குள் ஏமாற்றத்தைத்தான் தந்துவிட்டுச் செல்கிறது. அவனுடைய உடல் ஆற்றல் மாறனுடனான நெருக்கத்துப் பிறகு வேறு எல்லைகளைத் தொடுகிறது. இளமையின் ஆற்றல் வெறும் கொண்டாட்டத்தின் கருவி என்றுத்தான் அவன் தீபனுக்குப் போதிக்கிறான். விலைமாதர் விடுதிக்கு அழைத்துச் செல்லுதல், எதற்கும் கட்டுப்படாதிருத்தல், திருடு, களவு, வன்முறை என அதன் தளங்கள் ஒவ்வொன்றும் தீபனுக்குப் புலனாகிறது. நிஷா எனும் பாலியல் தொழிலாளியைக் காண்கிறான். அவளுடைய அழகும் பேச்சும் அவனைச் சீண்டுகிறது, அவளை அடைவதே தன் உடல் தினவுக்கான எல்லையாக இருக்குமென எண்ணுகிறான். ஆனால், பணம் கொண்டு வந்தபிறகும் அவனை அவள் நிராகரிக்கிறாள். பணத்தையும் ஆற்றலையும் தாண்டியதாகக் காமம் தன் பொல்லா குணத்தைக் காட்டுகிறது. அவனுக்குள் உடல் பற்றி உருவாகியிருந்த அதீதமான கற்பனைகள் உதிர்ந்து சமநிலை குலைந்து கம்பத்துப் பொது கழிப்பறையில் பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்து அவமானப்படச் செய்கிறது.

அந்த அவமானத்துக்குப் பிறகும் அவனை மீண்டும் மீட்பதற்கான கரங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவனை மீட்டெடுக்கும் இன்னொரு கரமாக ஜாலாம்பாரு மாமாவின் கரங்கள் நீள்கின்றன. பினாங்கில் மாமா நடத்தும் உணவகத்துக்குள் உதவியாளராகிறான். அவனுடைய உடல் பற்றிய கற்பனைகளும் ஆணவங்களும் நிகர் வாழ்வுடன் மோதி ஒன்றுமில்லாமல் ஆகும் அனுபவங்கள் வாய்க்கின்றன. உணவகப் பராமரிப்பு கோரும் அகோரமான உடல் உழைப்பைச் செலுத்தித் தன்னைக் கரைத்துக் கொள்ளும் முயற்சிகள் கலைவாணியின் வருகையால் தடைபடுகிறது. மளிகைக் கடை வைத்திருக்கும் ரத்னாவின் மகளான கலைவாணியின் அறிமுகம் அவனுக்குள் மறைந்திருக்கும் வேட்கையை வளர்க்கிறது. கூடவே, உணவகத்தில் வேலை செய்யும் விச்சுவுடன் நிழல் மோதல் ஒன்றை நிகழ்த்துகிறான். விச்சுவும் மாமாவும் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த முரட்டுக் கைகளால் அவனைப் பராமரிக்கவே செய்கின்றனர். அதைப் போலவே, கலைவாணியின் ஆதுரமான கரங்களும் அவனை நோக்கி நீள்கிறது. ஆனால், அவனது பசி என்னவென்பதை அறிந்தவளாக இருப்பது ரத்னா மட்டும்தான். அவள் அவனுடைய பசியை மட்டுமில்லை ஆற்றலையும் என்னவென்று அறிந்தவள். அவன் உயர்ந்ததென்றும் எல்லையற்றதென்றும் தரிசிக்கத் துடிக்கும் ஆற்றலின் முழுமையையும் ரத்னா பெற்றுக்கொள்கிறாள். அவன் கனவில் கொண்ட கோரப்பசி கொண்ட பெண்பன்றி பெற்றுக்கொள்ளும் பலியாகவே அதனைக் காணமுடிகின்றது. அவன் ஆற்றலைப் பலியாகப் பெற்றுக்கொண்ட அன்னையாக ரத்னா மாறுகின்றாள். மனித உளவியலின் ஆழத்தைப் பேசக்கூடிய இடமாகத்தான் அதனைக் காணமுடிகிறது. ஒர் அன்னையென தீபனை அணைத்துக் கொண்டிருந்த ரத்னா அவனுக்கு அளிக்கும் காமம் மரபான பார்வையில் அதிர்ச்சியைத் தரலாம். ஆனால், மனிதனின் ஆதியுணர்வான காமத்தின்  வெளிப்பாடுத்தான் என அதனைக் காணமுடிகிறது. அவனை முழுதற அறிந்து கொண்டு அவனுடைய காமத்தைப் பலியாகக் கேட்கின்றவளின் ஆழத்தில் உறைந்திருப்பது ஆதியுணர்வு மட்டுமின்றி ஒர் பழங்குடித் தெய்வத்தின் குரலும்தான்.

அரவின் குமார்

அந்த அனுபவம் ஏற்படுத்தும் தடுமாற்றங்களுடன் தன் அன்னையைச் சென்று பணிகின்றான். அந்தப் பலியிடலும் அவனது உடல் குறித்த வேட்கையைத் தணித்துக் காலத்தின் அடுக்குகளில் புதைந்திட செய்கிறது. அவனை அழுத்திக் கொண்டிருந்த பாரமொன்று நீங்கிய வெறுமை உருவாக்கிய குழப்பத்துடன் தான் தன் வீட்டுக்குப் புறப்பட்டு அம்மாவின் மடிக்குள் சரணடைகின்றான்.

 பின்னாளில், அவனுக்குள் இருந்த மனம் விழித்துக்கொள்ளத்தான் செய்கிறது. தன்னுடைய பேத்தி நிஷாவிடமும் தீபன் முறைதவறி நடக்க முயன்றதற்காய் மன்னிப்பு கேட்கும் தன்னிலை விளக்கத்தின் பகுதியாகவே நாவல் அமைகின்றது. அதிலும், அவனது சிறுமையை, அவனுடைய அக இருள் ஆழங்களை அறிந்த நவீன கல்வி பெற்றவளாக நிஷா இருப்பதாகச் சொல்கிறான். அவளுக்கு முன்னால்தான் தன் அக இருள் ஆழங்களை தீபன் பிளந்து காட்டுகிறான்.  உடல் சார்ந்த காமத்தை மட்டும் வாழ்வின் இலக்காக எண்ணுகின்ற தீபனை மீட்பதற்கான கரங்கள் கால முழுவதும் நீளத்தான் செய்கின்றன. ஆனால், அதனைத் தன் ஆணவத்தால் புறந்தள்ளிவிட்டு இருளுக்குள் செல்லக்கூடியவனாகவே தீபன் இருக்கிறான். இறுதியில், முதுமையிலும் தொடரும் அக வதையே அவனுக்கான மீட்பாக அமைகின்றது.

சிகண்டியும் லீகாட்டும் முன்வைப்பது உடல் சார்ந்த காமம் என்பதன் எல்லையைத்தான். அது குறித்த அறிதல்கள் தீபனை லீகாட்டிலும் கனவில் வரும் பெண்பன்றி, மனிதர்கள், சூழல்கள் என அமைத்துத்தான் தருகின்றன. ஆனால், அத்தனையையும் தீபன் ஒதுக்குகிறான். அந்த முடிவற்ற இளமையில் தன்னை உடல் மட்டுமேயானவனாக தீபன் உணர்கிறான். அந்த உடல் ஆற்றலைப் பேணுவதையும் வளர்த்தெடுக்கவும் செய்கிறான். அவனுடைய உடல் தினவை வேறொன்றாக மாற்றும் எந்த மாற்றத்துக்கும் அவன் இணங்குவதில்லை.  //பாசமும் கருணையும் ஆண்மைக்கு அழகல்ல// எனத்தான் தீபன் எண்ணுகிறான். உடலின் எல்லை என்ன என்பதை அவன் உணர்வதற்கான அனுபவங்கள் விச்சு, நிஷா என ஒவ்வொருவரின் வாயிலாக நிகழச்செய்கிறது. ஆனால், அதனை ஏற்காத இருளில் தீபன் தன்னை நுழைத்துக்கொள்கிறான். இரத்னாவுடன் அவனுக்கு நேர்கின்ற உறவும் அவன் உடலாற்றலின் எல்லையைக் காட்டி அவனைச் சிறுத்துப்போகத்தான் செய்கிறது. அப்படி உள்ளுக்குள் குறுகிப் போன தன்னுடைய உடலின் எல்லை என்ற கேள்வியை முதுமை வரை தீபன் சுமந்தலைகிறான். பின்னாளில், அவனுக்கு நேர்ந்திருக்கிற அனுபவங்களும் அதற்கான அவனுடைய விளக்கங்களும் அதனைத்தான் காட்டுகின்றன. அந்த முடிவற்ற கேள்வியின் பாரம் அகவதையையே அவனுக்கான மீட்பாகத் தருவதையே லீகாட் நாவலின் தத்துவம் காட்டுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தில் ஒரங்கமாய் தீபனுக்கு மீட்பு அளிக்கப்பட்டதை சிகண்டி குறிப்பிட்டது. அதன் இணைபாதியைப் போலிருக்கும் லீகாட்டில் தனக்கான வழிகளையும் கரங்களையும் ஒவ்வொன்றாய்ப் புறக்கணித்துச் செல்பவனுக்கு அளிக்கப்படும் அகவதையை மீட்பாக்கி முடிகிறது.

மனித அக ஆழங்களை நுட்பமாய்க் காட்டும் நாவலின் சில தருணங்கள் முக்கியமானவை. கழிப்பறையில் பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்ததற்காய் கம்பத்து மக்கள் தீபனைச் சூழ்ந்து கொண்டு அடிக்கின்றனர். அவன் மீதான வன்மத்தைக் காட்டுவதற்கான வாய்ப்பாகவும் அதனைச் சிலர் பயன்படுத்துகின்றனர். அவனைக் காப்பாற்றுவதற்காய் அம்மா கடுமையாக திட்டுவதையும் போலவும் மற்றவர்களுக்கு அடிக்கும் உரிமையைத் தருவதைப் போலவும் போடும் நாடகம் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஆனால், அதே இடத்தில் தான் தம்பியைப் போல எண்ணிய தீபன் தான் குளிப்பதைப் பார்த்துவிட்டான் என்பதையறிந்தும் சாரதா கணவன் தாக்குவதிலிருந்து தீபனைக் காக்கின்றாள். பின்னாளில், ஒரே மாதத்தில் அந்தச் சம்பவமும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்களையும் அவள் மொத்தமாகவே மறந்துவிடுகிறாள். அதனைப் போல நேரில் ஆணவத்தையும் சீண்டலுமாகவே தொடர்கின்ற விச்சுவுக்கும் தீபனுக்குமான உறவு என்பது நுட்பமான முரணியக்கங்களால் ஆனதுதான். சீண்டல், ஆணவத்துக்குப் பின் ஒளிந்திருக்கும் விச்சுவின் கனிவைக் காட்டுகிறது.

நாவலில் வரும் மாமாவும் அப்படி தனக்குள் கனிவை ஏந்தி கொண்டு அதனை தன்னுடைய முரட்டுத்தன்மையால் சாத்தியப்படுத்த முயல்பவர்தான். ஆனால், உணவகம் வைத்துக் கொண்டு தான் என சுருங்கி கொள்ளும் போது அது அவரைச் சோர்வில் ஆழ்த்துகிறது. ஆனால், மாமாவின் உறைந்திருக்கும் கனிவை விச்சுவால் உணரமுடிகின்றது. தாயகம் திரும்புகின்ற போது அவருக்குத் தேவைப்படும் பணத்தைக் கொடுத்துவிட்டுச் செல்கிறான். உணர்வுகளின் மொழியோடு உரையாடத் தெரிந்த நுட்பமானவனாக விச்சு படைக்கப்பட்டிருக்கிறான்.

தீபனின் உடல் சார்ந்த காமத்தை வேறொன்றாக மாற்றிவிட முயலும் எல்லாவற்றையும் ஆணவத்தாலும் அக இருளாலும் அவன் கடக்கின்றான்.  அவனது கனவில் வரும் அன்னைப்பன்றியெனவே அவனது காமத்தின் எல்லையையும் காட்டவும்படுகிறது. அந்த அனுபவத்துக்குப் பிறகு மனத்தளவில் அவனுடைய ஆண்மைத்தினவு ஒன்றுமில்லாமல் போய் அன்னையிடம் சரணடைகிறான். ஆனாலும், வாழ்நாள் முழுதும் அவனுடைய கனவு தொடர்கின்றது. அவனுடைய அகவதையே மீட்பாகவும் தண்டனையாகவும் மாறும் இடத்தில் நாவல் நிறைவுறுகிறது.

லீகாட் நாவலை வாங்க: லீகாட்

(Visited 31 times, 31 visits today)