லீகாட்: வாசகர்களின் சில கருத்துரைகள்

வணக்கம்.

லீகாட்டை செப்பாட்டாக (cepat) வாசித்து முடித்துவிட்டேன். மூன்று நாள்களுக்குள் வாசித்து முடிக்க உற்சாகமும் உத்வேகமும் அளித்தது ஆசிரியரின் நடை. என்னுடைய தோட்ட வாழ்க்கையையும் பள்ளிப் பட்டறிவையும் (சூழல்) ஒத்திருந்ததாலோ என்னவோ… மேலும் ஆவலைத் தூண்டி வாசிக்க வைத்தது.

வாழ்க்கையின் இயல்பை தங்கு தடையின்றி நகர்த்திச் சென்ற… இல்லை துரத்திச் சென்ற தங்களுக்கு பாராட்டு.

தாயன்பு, தந்தையின் மீதான மரியாதை, நட்பின் வளம், உயிரினம் போற்றும் பண்பு, முதல் காதல், விடலைப் பையன்களின் விடாப்பிடித்தனம், வில்லத்தனம், தமிழ்நாட்டுக்காரனின் நக்கல் கலந்த தயவு, பெண்ணைத் தேடி ஓடும் பித்து, நிஷாவின் மூலம் கிடைத்த ஏமாற்றத்தின் விளையனான படிப்பினை; அண்டியிடமிருந்து அண்டிய அரவணைப்பு, கலைவாணியின் கனிவு, கனகாவின் கள்ளம், ஆசிரியர்களின் அக்கறை என மிக நுணுக்கமான ஓட்டம்…

ஆண்ட்டியும் அப்படித்தானா ? ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


சில இடங்களில் நெருடல்கள், பல இடங்களில் இப்படி எழுதியிருக்கலாமோ… இதனைத் தவிர்த்திருக்கலாமோ என்ற சிந்தனைகள் என்னுள் எழுந்தன. ‘கங்காங்’ என்பதெல்லாம் தேவையா என்று எண்ணத்தூண்டியது… இருப்பினும் இயல்பை இயல்பாகவே கூறும் துணிவு… சிறப்பு.


பெரும்பாலான ஆண்களுக்கு… மற்றொரு பெண்ணுடன் தொடர்பு என்பதை அப்பட்டமாக வெளிச்சப்படுத்தியுள்ளீர்கள்… மாமா மட்டுமே தப்பித்தார்.
நட்பு நல்லதையும் செய்யும், நாற்றமெடுக்கவும் வழிகாட்டும் என்பதை நாசுக்காக இல்லாமல் நயம்படவே உரைக்கிறது ‘லீகாட்.’


அடுத்தவர் குளிப்பதை எட்டிப்பார்க்க உந்திய உணர்ச்சி… எனக்குத் தெளிவில்லை.
லீகாட்… காராட்

முனைவர் மு. சங்கர்

‘லீகாட்’ ம. நவீனின் நான்காவது நாவல். இதில் வரும் தீபனின் வாழ்வு எத்தனையோ பேரின் சொல்லாமல்போன, சொல்லமுடியாதுபோன, சொல்லகூடாதென்றான இருளின் புதைநிலம். தீபன் வீட்டில், உடலுழைப்பில் தன்னைப் புதைத்துக் கொள்கிறான். ஏழ்மை, பள்ளியில் உருவக்கேலி தீபனை ஒடுக்கும்போது படிப்பும், விளையாட்டும் அவனை மீட்டெடுத்திருக்கும். அவ்வளவு நிதானமாகச் செயல்படும் வயதும் வாய்ப்பும் அவனுக்கில்லை. மாறனின் போதனைகள் தீபனை மேலும் மேலும் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது.

தனியனாக வந்து சேரும் அவனை அரவணைத்து ஆறுதல் கூறும் நிலையில் வியாபாரியான ஜாலம்பரும் இல்லை. இது தீபனின் தந்தையின் மீதுள்ள கோபத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.  இரண்டாந்தரமாகப் பார்க்கப்படும் அவமானத்தில், உதாசீனத்தில் இருக்கும்  ‘ஊர்க்காரன்’ விச்சுவும் தீபனுக்கு எதிரியாகவே தெரிகிறான். தன்னை ஆணாக நிரூபிக்கும் சந்தர்பங்களிலெல்லாம் தீபனுக்கு அவமானமே மிஞ்சுகிறது.

தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் மற்றுமொரு  பக்கத்தைப் பார்க்கும் வாய்ப்பும் தீபனுக்கு கிடைக்கிறது. எப்போது தன்னைச் சீண்டும் விச்சு,தனக்கு அடைக்கலம் கொடுத்த முதலாளிக்கு முழு உழைப்பையும் விசுவாசத்தையும் வழங்குகிறான். தான் பாடுபட்டுச் சேர்த்த பணத்தின் பெரும்பகுதியை தன்னுடன் பழகியவர்களுக்காக கொடுத்துவிட்டுச் செல்கிறான். விச்சுவிற்காகக் கண்ணீர் சிந்தும் ஜாலம்பரும் தீபன் காணும் புது மனிதர்தான்.

தாய்மடி நாடிவரும் தீபனை எப்போதுமான அன்புடன் அண்டி வரும்  கருப்பன், பழைய நிகழ்வை மறந்துவிட்டு அன்புடன் வரவேற்கும் சாரதாவும் அவள் கணவனும் எல்லோரிடமும் தீராது இருக்கும் அன்பை நமக்கு உணர்த்திக்கொண்டேயிருக்கிறார்கள்.

எப்போதும் ஆணை  பலசாலியாக , தைரியசாலியாக . அழக்கூடாதவனாக மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் மனங்களுக்கு சிறிது வெளிச்சம் காட்டியிருக்கிறான் லீகாட்.

சுப்புலட்சுமி (மேனாள் தலைமையாசிரியர்)


​உலகத்தில் இருக்கின்ற பெரும்பாலான மனிதர்களின் மனதில் மறைந்திருக்கின்ற மனக்கிடக்கை படம் காட்டியதுபோல் இந்நாவல் அமைந்துள்ளது. வாசிக்கும் போது நாமே அந்த இடத்தில் வாழ்ந்ததுபோன்ற ஓர் உள்ளுணர்வு ஏற்படுகிறது. அதுவும் தோட்டப்புறத்தில் வசித்தவர்களுக்கு இந்த நாவலில் உள்ள அத்துனை கருத்துகளும் வெள்ளிடைமழை.

குடும்பத்தில் இருக்கின்ற பெற்றோர்களும் பெரியோர்களும் எப்படி வாழவேண்டும், குழந்தைகளிடம் எவ்வாறெல்லாம் அன்பு காட்டவேண்டும் என இந்த இரண்டு வரிகளில் கூறியிருப்பது போதுமானதும் பொருத்தமானதும்.
​’காலையிலே எழுந்து உணவு தயார் செய்வாள் அம்மா’
‘அப்பா எனக்கு முத்தம் ஏதும் கொடுத்ததில்லை’ .

குழந்தைகளுக்கு நன்னெறி ஊட்டுவது குடும்பமே என ஆங்காங்கே சொல்லியிருப்பது அருமை. இடைநிலைப்பள்ளியில் நண்பர்களின் சகவாசத்தினால் ஏற்படும் விளைவுகள், அவர்களிடையே எழுகின்ற உரையாடல்கள், பயன்படுத்துகின்ற கொச்சை வார்த்தைகள்; அங்கே நடக்கின்ற உண்மையான அவலங்கள். இவ்வுண்மையை எந்த சஞ்சலமுமின்றி மறைக்காமல் சொன்ன எழுத்தாளருக்கு யாருக்கும் இல்லாத அசட்டுத்தைரியமும் துணிச்சலும் அதிகமாகவே உண்டு. சில இடங்களில் முகம் சுளிக்கும் வண்ணம் கதை ஓட்டம் இருந்தாலும் ‘உண்மையைத்தானே சொல்கிறார் என்று மனம் ஏற்கிறது.

​மது, மாது இவை இரண்டும் மனிதனை படுகுழியில் தள்ளிவிடும் என்பதை இந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்களின் வழி நன்கு தெரிகிறது. இந்த இரண்டையும் தவறான முறையில் கையாளும்போது அது அம்மனிதனை புரட்டிபோட்டு நையப்புடைத்துவிடும் என்று நேரடியாக எழுத்தாளர் கூறியுள்ளது சிறப்பு.
​இது ஒரு விசித்திரமான நாவலாக என் பார்வைக்குத் தெரிகிறது. கதை ஓட்டத்தைப் பார்க்கும்பொழுது லீகாட் என்ற மலாய்ச்சொல் பொருத்தமான தலைப்பே. இளம் வயது மாணவர்களும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இருக்கும் வேக சுழற்சியை நிஜப்படமாக காட்டுகிறது இந்நாவல்.

எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
​சபாஷ் நவீன்.

செ.சரஸ்வதி (மேனாள் தலைமையாசிரியர்)

(Visited 1 times, 1 visits today)