மிகவும் எளிமையான நடையிலும், வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் ‘லீகாட்’ நாவலைப் படைத்திருப்பது சிறப்புக்குரியது. கம்பத்து சூழல், இடைநிலைப் பள்ளிச் சூழல், பட்டணச் சூழல் என மூன்று வெவ்வேறு தளங்களில் கதையை நகர்த்தியிருப்பது நாவலுக்குச் சிறப்பான உயிரோட்டத்தை அளிக்கிறது.
நாவலில் பல புதிய சொற்களையும் சொற்றொடர்களையும் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருப்பது வாசிப்பனுபவத்தை மேலும் வளப்படுத்துகிறது. குறிப்பாக, குடும்பத்தில் தந்தையின் இறப்பு அல்லது இல்லாமை பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மிகத் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பிள்ளைகள் வாழ்க்கையில் தடுமாறி, நோக்கமின்றித் தவறான பாதையில் செல்லும்போது ஏற்படும் விளைவுகளையும் ஆசிரியர் ஆழமாக எடுத்துரைக்கிறார்.
அதேபோல், பதின்ம வயதில் உருவாகும் உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளால் ஏற்படும் விளைவுகளும் இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, நாற்பது வயதைக் கடந்த வாசகர்கள் இந்நாவலை வாசிக்கும்போது தங்களது இடைநிலைப் பள்ளி நாட்கள் கண்முன்னே திரைப்படக் காட்சிகளைப் போல இருக்கிறது . தலைமுடி ஸ்டயில், பூட்காட், சைட் பென், காதல், அடிதடி, டிசிப்ளின் ஆசிரியர், பொந்தேங் போன்ற பள்ளிப் பருவ நினைவுகள் பழைய அனுபவங்களை மீட்டெடுக்கின்றன.
மேலும், உணவகத்தில் சில வாடிக்கையாளர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் விதத்தை ஆசிரியர் சுட்டிக்காட்டியிருப்பதும் சமூகத்தின் பல்வேறு முகங்களை வாசகர்களுக்கு உணர்த்துகிறது.
மொத்தத்தில், ‘லீகாட்’ ஒரு கதையை மட்டும் சொல்லும் நாவலாக இல்லாமல், குடும்பம், பதின்ம வயது, கல்விச் சூழல், சமூக வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் வாழ்க்கைப் பாதையில் எடுக்கப்படும் முடிவுகளின் விளைவுகளைச் சிந்திக்கத் தூண்டும் படைப்பாக அமைந்துள்ளது. எளிய மொழியில் ஆழமான வாழ்க்கை உண்மைகளைப் பதிவு செய்த எழுத்தாளர் ம. நவீன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
அன்புக்கிறிய அண்ணன் நவீன் அவர்களுக்கு,
‘லீகாட்’ என்று நீங்கள் எழுதிய ஒரு நாவலைப் படித்திருந்தேன். விடலைப் பருவத்தில் ஓர் ஆண்மகனுக்கு ஏற்படும் உள்ளுணர்வுகளைச் சித்தரிக்கும் நாவலாக இது அமைகின்றது. தாத்தா தீபன் நிஷாவுக்கு எழுத்தும் ஒரு கடித உத்தியின் வரிவடிவத்தில் கதை அமையப்பெற்றிருப்பது மிகவும் சிறப்பான அம்சமாகப் பார்க்கிறேன். மலேசிய கம்பத்துச் சூழலில் தீபன் என்ற மாணவன் தன் விதவை தாயுடன் வாழ்ந்து வருங்காலத்தில் அவன் எதிர்நோக்கிய அகச்சிக்கல்களையும், புறச்சிக்கல்களையும் இந்நாவல் விவரித்துள்ளது.
நாவலின் கதைமாந்தர்கள் என்று நோக்கும்போது, எந்தவொரு பாத்திரப்படைப்பும் தேவையற்றது என்று சொல்லிவிட முடியாது. குடும்பதிற்காக வாழ்ந்த தந்தை, அன்பைப் பொழியும் தாய், வஞ்சம் மறையாத லட்சுமி ஆண்டி (இவள் போன்றவர்கள் இன்றளவும் நம் வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்தியது), என்று ஒவ்வொரு காதாபாத்திரமும் கதைக்களத்தை நகர்த்திச் செல்வதற்கு முக்கிய பங்காற்றினர்.
தவிர, கதையிலே, என்னைக் கவர்ந்த இரு பாத்திரப்படைப்பு என்றால், ஒன்று விச்சு, மற்றொன்ரு ரத்னா ஆண்டி…எதிர்பாரா திருப்பங்களை வழங்கியிருந்தார்கள்.
பாத்திரப்படைய்ப்பும் நேர்த்தியாக அமைந்தது. நம் வாழ்விலே இது போன்ற குணநலன்களைக் கொண்டிருக்கும் நபர்களை நிச்சயம் சந்தித்திருப்போம். அவ்வாறான ஓர் உணர்வை ஏற்படுத்திய தாக்கம் மிக்க கதைமாந்தர்களாவர். ராபர்ட் ப்ளட்சிக்கின் உணர்ச்சிச் சக்கரம் அடிப்படயில், சராசரி மனிதர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி – சோகம், நம்பிக்கை – அருவருப்பு, பயம் – கோபம், ஆச்சரியம் – எதிர்பார்ப்பு ஆகிய மன உணர்வுகள் சொற்களின் வழி வாசகன் உணரக்கூடியதாக அமையப்பெற்றிருந்தன. சில அங்க அசைவுகளைக் குறிப்பிடும்போது, நானே அவற்றை ஒரு முறை செய்து பார்த்துக் கொண்டது வேடிக்கையாக (கதையில் எடுத்தாளப்பட்டுள்ள வாசகன் வழியான மறைமுக உணர்ச்சி) இருந்தது.
தொடர்ந்து, அத்தியாய விவரிப்பு என்று பார்த்தோமானால், எவ்வித தடையுமின்றி சீரான நேர்கோட்டில் ஒரு வாசகன் பயணிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சில அத்தியாயங்களில் வரும் திடீர் திருப்பங்கள், அடுத்த நகர்வுக்கான ஒரு தூண்டுதலாக அமைகின்றது. அதிகமான அத்தியாயங்களைக் கொண்டில்லாமல் இருப்பதனால், கதையைப் படிக்கும்போது சலிப்புத் தட்டுவதில்லை.
மேலும், கதைகளில் ஆங்காங்கே, பயன்படுத்தப்படுள்ள சில விரசமான சொற்களைத் தவிர்க்கலாம் என்று நினைத்தேன். காட்டாக, ‘காங்காங் கீ கிங்காங்’ போன்ற பயன்பாடுகள் கொச்சையாகச் சொல்லப்பட்டிருப்பது போல உணரப்பட்டது. அதற்குப் பதிலாகக் குறியீட்டுச் சொற்கள் பயன்படுத்தியிருந்தால் அவ்வப்போது ஏற்படும் முகம் சுழிப்பும் இல்லாமல் இருந்திருக்கும். பிற சொற்கள் பயன்பட்டு என்று பார்த்தால், மலேசிய சூழல் என்பதனால், அனைத்துமே இயல்பாக இருந்தது. குறிப்பாக மாணவர்களுக்கிடையே பேசப்படும் மொழிப்பயன்பாடு, சிறப்பாக இருந்தது. எழுத்தாளர் மாணவர்களின் உளவியலை நன்கு ஆராய்ந்துள்ளார் என்பது தெளிவாகப் புலனாகின்றது.
அதேசமயத்தில், கதைச்சுருக்கத்தை இங்கு சொல்லாலாம் என்று நினைத்தால், அவ்வாறு சொல்வது எழுதிய படைப்பாளனின் உழைப்புக்கான அங்கீகாரம் கிடையாது. வாசித்தால் கிடைக்கும் அனுபவம் சிறந்தது. எழுத்தாளர்க்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்
விக்னேஸ்


