சில எழுத்தாளர்களின் நாவல்களைத்தான் வெளியனாவுடன் வாசித்துவிட வேண்டுமென்று தோன்றும். எனக்கு அப்படி தோன்றும் எழுத்தாளர்களில் நவீனும் ஒருவர். நவீனின் நான்காவது நாவலான லீகாட்டை சிங்கையில் வெளியாவதற்கு முன்பே வாசித்துவிட்டேன்.
தனது முன்னுரையில் லீகாட் நாவல்தான் முதல் நாவலாக வெளிவந்திருக்க வேண்டும் என்று நவீன் குறிப்பிட்டுள்ளார். எனக்கும் அப்படியே நிகழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. Coming off age நாவலான லீகாட் நாவலின் கதைநாயகன் தீபனையும் அவனது அக இருளையும் ஏற்கனவே சிகண்டியில் வாசித்திருப்பதால் அது என்னுள் பெரிதான பாதிப்பு எதையும் நிகழ்த்தவில்லை.
நவீன் இந்த நாவலுக்காக எடுத்துக்கொண்ட வடிவமும் தேர்ந்தெடுத்த மொழியும் வாசிப்பை விரைவானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் ஆக்கினால் கூட மற்ற மூன்று நாவல்களிலிருந்து சற்று கீழாகத்தான் உள்ளது.
பால்யம் எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. இளமையில் மனதாலும் உடலாலும் பாதிக்கப்படும் சிறுவர்கள் தங்களை மீட்டெடுத்து சமூக வாழ்வுக்குள் அற நெறிகளோடும் விழுமியங்களும் வாழ்ந்து முடிப்பது அத்தனை எளிதானதல்ல.
அப்பாவின் எதிர்பாராத மரணம் தீபனின் வாழ்வை வேறு திசைக்கு இழுத்து செல்கிறது. தாழ்வு மனப்பான்மை, கூடா நட்பு, தன்னை நாயகனாக காண்பிக்க கையில் எடுக்கும் வன்முறை என்று பால்யத்தில் ஆண் பிள்ளைகள் விழுந்து எழும் அத்தனை பள்ளங்களிலும் தீபனும் விழுகிறான்.
இதோடு சேர்த்து ‘வயதுக்கு வருதல்’, அதாவது தனது உடலையும் அதில் ஏற்படும் மாற்றங்களையும் அறிந்து கொள்ள அவனுக்கு ஒரு பெண் உடல் தேவைப்படுகிறது. நிஷா தரும் பதில் அவனது ஆணவத்தையும் அகங்காரத்தையும் சீண்டுகிறது. அந்த ஆணவத்தையும் அகங்காரத்தையும் சாந்தப்படுத்துகிறார் ரத்னா ஆண்ட்டி. அவனுள் இருந்த அனல் தணிந்து குளிர்கிறான். ரத்னா ஆண்ட்டியை வணங்குகிறான். பின்பு தனது தாயை தேடிச் சென்று அவளது மடியில் தலைசாய்க்கிறான்.
நவீனின் நாவல்களின் சில பகுதிகளை வாசிக்கையில் ‘அருவருப்பு’ உணர்வு பிராதனமாக எழுந்து வருவதுண்டு. லீகாட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. தீபனை விட மாமா, விச்சு இரு கதாபாத்திரங்களும் என்னை வெகுவாக ஈர்த்தன. அதற்கு காரணம் என்னவாக இருக்குமென யோசித்தேன். இவர்கள் இருவரின் அக ஒளி வெளிப்படும் இடங்கள் நாவலில் உள்ளன. ஆனால் தீபனுக்கு அது நிகழவே இல்லை.
நாவலின் முடிவில் தனது பேத்திக்கு தீபன் எழுதும் கடிதத்தில் அவனது இருளை காண்பிக்காமல் இருந்திருக்கலாமோ என ஒரு வாசகியாக எனக்குத் தோன்றுகிறது. அந்தப் பகுதி தீபனின் ஆன்ம சிதைவும், அக வதையும் தொடர்வதைச் சொன்னாலும் இலக்கியத்தில் அதை எதிர்கொள்ள என்னால் இயலவில்லை. இலக்கியம் தீர்வு தர இயலாது, கூடாது என்றாலும் கூட ரஸ்கோல்னிகோவிற்கு மீட்பளித்த சோபியாவைப் போல ஒரு சோபியாவை கூட வாழ்வு தீபனுக்கு வழங்கவில்லை என்று அறியும்போது ஏற்படும் பதற்றத்தையும் அவநம்பிக்கையையும் இந்த நாவல் வழங்குகிறது.

