லீகாட்: மறைந்துள்ள ஒளியின் மகத்துவ வெம்மை – லதா

மலேசியாவின் முன்னணி எழுத்தாளர் ம. நவீனின் நான்காவது நாவல் ‘லீகாட்’.

இந்த நாவலில் வரும் பெயர்கள், தோட்ட வாழ்க்கை, பாத்திரங்கள், இடங்கள் எனப் பலதும் நவீனின் முன்னைய நாவல்களையும் சில சிறுகதைகளையும் நினைவூட்டினாலும் ‘லீகாட்’ நாவலுக்குள் செல்ல அதைத் தனியான படைப்பாகவே வாசிக்க வேண்டும். உலக இலக்கியங்களில் அப்படித் தங்கள் கதாபாத்திரங்களை பிற படைப்புகளில் உலாவ விட்டவர்கள் பலர் உண்டு. ​ஹோனரே டி பால்சாக், கேப்ரியல் கார்சியா மார்க்கெஸ், வில்லியம் பால்க்னர் என பிற மொழியிலும் அசோகமித்திரன், ஜெயமோகன், யுவன், சீ.முத்துசாமி என தமிழிலும் சில உதாரணங்களைக் கூறலாம்.

படைப்பின் வழியாக ஆழமான கேள்விகளை தனக்குள் இடைவிடாது உருவாக்கிக்கொள்பவருக்கு இந்த ஒருமை அவசியமாக உள்ளது. படைப்பாளிகளுக்கு தங்கள் வாழ்நாளில் வாழ்வு குறித்து இருக்கும் ஆழமான கேள்விகள் இந்த ஒருமை வழியாவே வெளிபடுகின்றது. அவர்கள் ஒரு மனிதனின் அத்தனை பகுதிகளையும் தோண்டித்துலாவுகின்றனர். அதன் வழியாக அவர்கள் சென்றடைவது தங்கள் ஆழ் அகத்துக்குள். அங்கு என்ன உள்ளது என அவர்களுக்கே தெரியாது. தெரியாத இருளினுள் நுழைந்து பார்க்கும் ஆவல் கொண்ட படைப்பாளிகளில் நவீனும் ஒருவர். அதற்கு ஆன்ம பலமும் அவசியமாகிறது.

பேய்ச்சியிலிருந்து நவீன் நாவல்களை வாசிக்கும் எனக்கு அவரது அந்த பயணத்தை உணர முடிகிறது. அது ஒருவகையில் நடுங்க வைக்கும் பயணம். நம்மை நாமே நிர்வாணமாகப் பார்க்கக் கூடிய பயணம். உலகில் நாம் அதிகம் வெறுப்பது நமது நிர்வாணமன்றி வேறென்ன? அதைச் சந்திக்க மனோதிடம் அவசியம். எழுத்தாளன் சொல் விளையாட்டாளனாக இல்லாமல் கலைஞனாக உருவாகும் இடம் இதுதான். அதன் வழியாக அவன் தான் யாரென்பதை அறிகிறான். ஆன்மிகத்திற்கும் கலைக்கும் உள்ள ஒற்றுமையும் இதுதான்.

நவீன் போன்ற எழுத்தாளர்கள் கதாபாத்திரங்களை உருவாக்குவது வெளியில் இருக்கும் வாசகனுக்காக அல்ல; தங்களுக்காக. ஓர் ஆன்மிகவாதி தன் தீராத சாதகத்தின் வழியாக சென்றடையும் வெளியை எழுத்தின் வழி இடைவிடாது அடைய முயல்பவர் மட்டுமே எழுத்தாளர்களாகிறார்கள். சில எழுத்தாளர்களுக்கு இந்தக் கருவிகள் (ஒரே வகை கதாபாத்திரம், களம், காலம்) அதற்குத் துணையாகின்றன. நவீன் அந்தக் கருவிகளைக் கையில் எடுத்துள்ளார்.

இதை இங்கே விரிவாகச் சொல்ல காரணம் உண்டு. படைப்பாளனின் இந்த நோக்கத்தை அறிந்துகொண்டால் மட்டுமே நாவல் சென்று தொடும் தத்துவார்த்தமான புள்ளியை, தரிசனத்தை ஒருவனால் அடைய முடியும். இல்லாவிட்டால் இந்நாவல் சுவாரசிய வாசிப்புக்கு மட்டுமே ஏற்றதாக மாறிவிடும். எளிய கிளர்ச்சியைக் கொடுக்கும் நாவலாகிவிடும். அப்படியும் வாசிக்கலாம் தவறில்லை. மருத்துவ குணம் கொண்ட எலுமிச்சங்கனியை காரின் டயரில் வைத்து நசுக்குவது அவரவர் விருப்பம்தானே.

அப்படியென்றால் லீகாட்டை முந்தைய நாவல்களோடு ஒப்பீடு செய்து வாசிக்க வேண்டுமா? அப்படி இல்லை. ஆனால் அந்த நாவலின் களம், கதாமாந்தர்களை நாம் அறிந்திருந்தால் அதன் வழியாகக் கூடுதலான உரிமையுடன் அவர்களிடம் நெருக்கம் காட்ட இயலும். அதன் வழியாக எழுத்தாளன் சென்று தொடும் இடங்களை வாசகனும் எளிதாக அடைய முடியும்.


ஒரு படைப்பை அந்த எழுத்தாளரின் முன்னைய படைப்புகளுடன் ஒப்பீடு செய்து வாசிப்பது அந்தப் படைப்பின் முழுமையான வாசிப்பாக இருக்காது. எந்த ஒரு படைப்பையும் அதனதன் சூழலில், நிலையில் வாசிப்பதே அந்தப் படைப்புக்குச் செய்யும் நியாயமாக இருக்கும். இலக்கிய விமர்சனம் என்பதற்கும் வாசக பார்வை என்பதற்கும் இடையில் உள்ள துல்லியமான வேறுபாடும் அதுதான். இலக்கிய விமர்சனம் ஒரு படைப்பை தனித்த கலை வடிவமாக ஆராய்கிறது. எழுத்தாளனின் ஒட்டுமொத்த ஆளுமையை மன உணர்வை படைப்புலகை ஆராய மட்டுமே பிற படைப்புகளையும் கணக்கில் கொள்கிறது. வாசக பார்வை ‘அந்த படைப்புபோல இது இல்லை’ எனச் சொல்கிறது. அப்படி எந்தப் படைப்பும் இருக்க முடியாது. அந்தந்தப் படைப்புகள் தாங்கள் எடுத்துக்கொண்ட கேள்விகளுக்கு நியாயமாக வெளிபட்டுள்ளதா என்பதே முக்கியமானது.

***

லீகாட், உணர்வுநிலைகளைக் கடந்து, அகமன உளவியலைத் தொட்டு நவீன் எழுதியிருக்கும் நாவல். ஒரு சிறிய சம்பவத்தால் சமூகத்தின் முன்னாலும், குடும்பத்தின் முன்னாலும் ஒரு மனிதனின் சுயபிம்பம் உடையும் தருணத்தில் நாவல் நகர்கிறது.

கறுத்த தோல், மெலிந்த உடல், ஏழ்மை ஆகியவற்றால் பள்ளிப் பருவத்திலேயே கடுமையான தாழ்வுணர்ச்சிக்கும் ஒதுக்குதலுக்கும் ஆளானவன் தீபன்.  தந்தையின் திடீர் மரணம், அவர்  தாய்க்குச் செய்த துரோகம், அதன்பின்னான தாயின் சிரமமான வாழ்க்கை எல்லாம் அவனறியாமலே அவனுக்குள் அழுத்தத்தை நிறைக்கின்றன. 

பள்ளியில் தொடர்ந்த கேலி அவனது அடையாளச் சிக்கலை மேலும் மோசமாக்குகிறது. வேகம் அவனது பலம். இரக்கம், நேர்த்தி, நேரக்கட்டுப்பாடு, நியாயம் அவனது இயல்பான குணங்கள். அவன் தனது பலத்தையும் குணங்களையும் அடையாளம் கண்டு, அதன் மூலம் தன்னை  வளர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அவனுக்கு அமைகின்றன. 

அவனது உடற்பயிற்சி ஆசிரியர் அவனை ஓட்டப்பந்தய வீரனாக்க முயற்சி செய்கிறார்.
ஒட்டுமொத்தப் பள்ளியின் கனவுக்கன்னியான கனகா அவனுக்கு ஆதரவளிக்கிறாள். அவன் தன் சுய மதிப்பை மீட்டெடுக்க முயற்சி செய்யும் உளவியல் புகலிடமாக அவள் இருக்கிறாள். அவள் திடீரென்று பள்ளியிலிருந்து நின்றதும், அவனுக்குள் இருந்த வெற்றிடம் மேலும் பெரிதாகிறது. இருளுக்குள் இருந்தவனுக்கு துளி ஒளி அருகில் வந்து கண்ணை அதற்குப் பழக்கியப்பின் உடனடியாக அணைந்துபோனால் ஏற்படும் சூனியம் அது. அந்த சூனிய இருளில் அல்லாடும் அவன் தன்னை மீட்க முயல்கிறான். தன் ஆளுமையை தனக்குள் உறுதிப்படுத்த மனம் உந்துகிறது. அந்த உந்துதலுக்கான அத்தனை நியாயங்களையும் நவீன் உருவாக்கிக்காட்டுகிறார். நாவலின் முழுமை என்பது இதுதான். அந்த உந்துதலுக்குப் பின்னால் உள்ள வலி என்பது ஒரு பந்தய வாகனம் கக்கிச்செல்லும் புகையும் ஒலியும் போன்றது. வேகமாகச் செல்லும் வாகனத்தை மட்டும் வியந்து பார்ப்பவர்கள் அதன் எச்சத்தைத் தவற விடுகின்றனர். நாவலில் எச்சத்தையும் கவனத்தில் எடுப்பதே சீறிச்செல்லும் வாகனத்தின் அழுத்தத்தை அறிய உதவும். எச்சமும் முக்கியத்துவம் பெறுவதே நல்ல கலைக்கு அறிகுறி.

நாவலின் மற்றுமொரு முக்கியப் பாத்திரம் அம்மா. கணவனின் வஞ்சமும் அதனால் ஏற்பட்ட துயரமும் தாயின் மனத்தில் அகத்தில் அடங்காத கோபமாக இருக்கிறது அம்மாவுக்கு. கணவனின் இறப்புக்குப் பின் பொருளியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும்  பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுவதால், தீவிரமான உணர்ச்சிப் கொந்தளிப்புக்கு ஆளான  அவள், தனது எதிர்பார்ப்புகளையும் சுமைகளையும் தன்னையறியாமலேயே தீபன் மீது ஏற்றுகிறாள். அதை ஏற்கும் பக்குவமும் வயதும் இல்லாத தீபன், மேலும் தனித்துப் போகிறான். 

இழந்த தந்தையின் அரவணைப்பு, குடும்ப மகிழ்ச்சி, கனகாவின் ஆதரவு அனைத்தையும் மாறனின் நட்பு தருவதாக நம்புகிறான்.  செய்யாத குற்றத்துக்குச் சுமத்தப்படும் பழி, மாறனால் ஏற்பட்ட ஏமாற்றம், நிஷாவின் நிராகரிப்பு எல்லாம் அவனை ஆழமான உளவியல் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. ஆண்மை என்று அவன் நம்பியதை  உறுதிப்படுத்திக்கொள்ள மனம் தவிக்கிறது. உடல் துடிக்கிறது. உடலால் எல்லாம் சாத்தியம் என இயங்குகிறான். தன் உடலின் எல்லை எதுவென அறிய வன்முறையில் ஈடுபடுகிறான். படிகளில் தாவிக்குதிக்கிறான். உடல் அவனுக்கு ஒரு விந்தையான அசாதாரண கருவி. ரத்னா ஆண்டி அவனது அத்தனை கொத்தளிப்பையும் ஒன்றுமே இல்லாமலாக்கி, அவனை ஆற்றுப்படுத்திவிடுகிறார் என்று நினைத்தால், முடிவில் வரும் கடிதம் உள்ளுக்குள் உறுத்தும் முள்ளை அத்தனை எளிதாகவெல்லாம் எடுத்துவிட முடியாது என்ற யதார்த்தைக் காட்டுகிறது. தெளிவும் புரிதலும் கிடைக்க ஈகோ, ரத்தவிளாறாகி முழுக்கச் சிதைய வேண்டியிருக்கிறது.

தீபன்  அடக்கப்பட்ட ஆசைகளுக்கும், சமூகத்தின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஒரு சராசரிப் பதின்வயது ஆத்மா. அவனது கோபம், பயம், காமம், தனிமை தவிப்புகள் அனைத்தும்  வளரும் உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் நிகழும் இயற்கை சார்ந்த உளவியல் போராட்டம் என்பதை நாவல் ஆழமாக அலசுகிறது.

இட் (இயற்கை ஆசைகள்), சூப்பர்-ஈகோ (சமூகக் கட்டுப்பாடுகள்) ஆகிய இரண்டையும் ஈகோ (யதார்த்த மனம்) சமநிலைப்படுத்துகிறது. அதாவது தீபனின் பாலியல் ஆர்வங்களை (இட்) சமூகம் குற்ற உணர்ச்சியாக்குகிறது (சூப்பர்-ஈகோ). இரண்டையும் சமன் செய்ய முடியாமல் தீபனின் ஈகோ தோற்று மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.

நாவலின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடும் ‘யட்சி’ பற்றிய உருவகத்தை இந்த ஈகோவுடன் பொருத்திப் பார்க்கும்போது இன்னும் மிக ஆழமாகப் பயமுறுத்துகிறது.  
மு.வரதராசன் அகல்விளக்கிலும் வாடமலரிலும் அறிவுரையாகச் சொன்னதை கலைப்படைப்பாக மாற்றியிருக்கிறார் நவீன்.   மானுட மனமும் குணங்களும் வடிவம் பெறும் பதின்ம வயது கொந்தளிப்பு நிறைந்தது. அலைக்கழிப்புகளில் உரசி உரசி கூர் பெறும் அந்த வயதின் நியாயங்கள் சில நேரங்களில் வியக்க வைக்கும். பல நேரங்களில் அதிர்ச்சியளிக்கும்.

அந்தக் கொந்தளிப்பையும் அலைக்கழிப்பையும் நியாயப்படுத்துதலோ, விவாதங்களோ இன்றி அதன் நிலையிலேயே முன்வைக்கிறது நாவல். வாசகரின் சுய கொந்தளிப்புகளை மீண்டெழச் செய்கிறது. மன இருளுக்குள் நுழைந்து, வெளிச்சத்தைக் காட்டுகிறது

வெளிச்சம்தான்.

பெண் உடலுக்கானவள் என கனகா வழியாக அறிந்த ஒருவன், அதை கலைவாணியிடமும் தேடும் ஒருவன் உடலை மட்டுமே மையமாக கொண்டு இயங்குவதாக வரும் நிஷாவிடம் பெறுவது என்ன? பெண்மீது அவன் வைத்திருந்த அத்தனை அபிப்பிராயங்களும் நிஷாவினால் சுக்குநூறாக உடையும் அதே தருணம் ரத்னா ஆண்ட்டி மீண்டும் எதை கட்டி எழுப்புகிறாள் என்பதுதான் மையமான கேள்வி. அப்போது அவன் கையெடுத்து வணங்குவதை யாரை? ஏன்? இதற்கிடையே வந்துபோகும் எதிர்கடை பெண், விச்சுவின் பிரிவுக்குப் பின் அழுவது ஏன்? அவர்கள் உறவுக்கு என்ன பொருள்? உடல் என்பது உடல் மட்டுமா?

வாழ்வில் பதில் கிடைக்காத புதிருக்குள் மனிதன் தள்ளப்படும்போது அடையும் அச்சம் அவனை இறுதியாகத் துரத்தும் இடம் தாயின் மடி. அவன் அங்கு சரணடைகிறான். தன்னுள் நிலைத்துவிட்ட அந்த அச்சத்தை விரட்டியடிக்க காலமெல்லாம் முயன்று தன்னைக் கண்டாலே அச்சம் கொள்ள வைக்கும் ஒரு ஜீவனை உருவாக்குகிறான். ஆனால் அவள் வழியாகவும் அவன் அடைவது பதிலைப் பெற முடியாத மேலும் பல கேள்விகள். அவை கேள்விகள் அல்ல; பதில்கள். அந்த பதில்களின் வழியாகவே வாசகன் ஒளியை அடைய முடியும். நாவலின் ஒளி என்பது அதுதான். அது தீபன் அடையும் ஒளியல்ல; வாசகன் அடையும் ஒளி. திரி கருகி ஒளி கொடுப்பதுபோல வாசகனுக்கு ஒளி கொடுக்க தீபன் கருகுவதில் வியப்பில்லை.

***

இந்நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆராயத்தக்கவையே. அதன் வழியாகவே சமூகத்தையும் சமூக கூட்டு மனத்தையும் முன்வைக்கிறார் ஆசிரியர்.

மலேசியச் சூழலில் எளிய பின்னணியில் இருந்து வரும் ஒரு தமிழ் மாணவன், எப்படி விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகிறான் என்பதற்கு தீபன் சான்று. விசாரணைகளின்றி, சூழ்நிலை ஆய்வுகளின்றி, சமூகத்தின் முத்திரை குத்தும், குற்றவாளி ஆக்கும் போக்கு இளையர்களைச் சிதைப்பதன் யதார்த்தம் இந்நாவல்.

வகுப்புசார்ந்த, தோற்றச் சார்புடைய பாகுபாடுகள் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுக்கு ஒரு காரணமாக இருப்பதை நாவலின் சூழல் உணர்த்துகிறது. 
கதாபாத்திரங்கள்  வறுமை, பாலினப் பாகுபாடு, தோற்றக் கேலிகள், சமூக முத்திரைகள், புலம்பெயர் வாழ்வின் சிக்கல்கள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில், மனிதர்கள் எவ்வாறு தங்களின் உளவியல் சமநிலையை இழந்து அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன.

ஊரே கொண்டாடும் வல்லவனாகவும் உதவி குணம் நிறைந்தவராகவும் இருந்த மாமாவை (ஜாலம்பார்) வறுமை, உணர்ச்சியற்ற உழைப்பு இயந்திரமாக்கிறது. கி.ராவின் ‘கன்னிமை’ சிறுகதையில் வரும் நாச்சியாரம்மா எப்படி தன் பெருந்தாய் குணத்தை இழக்கிறாளோ அப்படியாகிறார் ஜாலம்பார். பணம் தேடும் வாழ்வின் வேட்கை மனிதர்களை அடித்துக்களைத்துபோடும் ஆட்டத்தை ஜாலம்பார் வழி பார்க்க முடிகிறது. மனிதன் நல்லவனா என்றால் நல்லவன். எதுவரை? எனும் அச்சமூட்டும் கேள்வியை நவீன் முன்வைக்கிறார்.

மலேசியச் சூழலில் சிறுதொழில்நடத்திப் பிழைக்கப் போராடும் ஒரு சராசரித் தமிழனின் முகம் ஜாலம்பாருடையது. கடன், போட்டி, தொழில் தோல்வி அச்சம் காரணமாக மனித உறவுகளைவிட உழைப்பும் பணமுமே முக்கியம் என்ற முதலாளித்துவச் சமூக விதியை ஏற்றுக்கொண்டவராகும்போது அவர் தனக்குள் குடிகொண்டிருந்த ஒளியை இழக்கிறார். தீபன் மாமாவின் முகத்தில் பார்க்கும் படர்ந்த கருமை அவ்விருள். மாமாவுக்கும் அது தெரியும். அது தெரியாமல் இறுகிப்போனவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் ஜாலம்பாரினால் நிம்மதியாக வாழ முடியாது. அது அவர் பூண்டுள்ள வேடம். அந்த வேடத்தை அவர் கடையின் இருளில் களைக்கிறார். அப்போது மட்டுமே தீபன் முன் அழுகிறார். அது பழைய மாமா. ஊருக்காக வாழ்ந்த மாமா. இனி இருளில் மட்டுமே அவரால் தன் ஒளியை வெளிகாட்ட முடியும். தன்னுடைய குணம் கொண்ட மனிதர்களைச் சந்திக்கும்போதெல்லாம் மறைவில் ஓடி ஒளிய மட்டுமே முடியும்.

தீபனை அழைத்து வரும் அவர்,  தந்தையின் பாசம், அரவணைப்பு, வழிகாட்டல் தேவைப்படும் நிலையிலிருந்த தீபனுக்கு உதவமுடியாத மனநிலையில் இருக்கிறார். தீபனைப் பயன்படுத்திக்கொள்ளவே அவரது  மனம் விளைகிறது. 
எளியோரை எளியோர் சுரண்டும் போக்கின் வெளிப்பாடு, வெளிநாட்டு ஊழியரான விச்சுவை அவர் நடத்தும் முறை.

எளிய உழைப்புச் சூழல்களில் ஊழியர்களுக்குள் இயல்பாக உருவாகும் அதிகாரப் படிநிலையையும் தங்களின் வேலைப்பளுவின் சலிப்பை புதியவர்கள் மீது காட்டும் சமூகப் போக்கையும் விச்சுவின் கதாபாத்திரம் காட்டுகிறது. விச்சு, தீபனுக்கும் அவன் மாமாவுக்கும் மற்றவர்களுக்கும் செய்யும் உதவிகள் எளியோரின் பெருந்தன்மையைச் சித்தரிக்கிறது. அந்தப் பெருந்தன்மையை உணரும்போது ஏன் நமக்குக் கண்கள் பனிக்கின்றன? உணவகத்துக்கு வரும் சமையல்கார அம்மா தன் மகளைப் பற்றிய வலியைப் பகிரும்போதெல்லாம் மாமாவுடம் சேர்ந்து வாசகனான நாமும் பரிதாபப்படுகிறோம். விச்சு மட்டுமே உதவ முன்வருகிறான். உண்மையில் அந்த அம்மாவின் குரல் நம் காதுகளுக்கும் எட்டவில்லை. நாம் நம்மை எண்ணி கண்ணீர் விடுகிறோம். ஏன் விச்சுவைப் போல நமக்குத் தோன்றவில்லை என நம்மை எண்ணி வெட்குகிறோம். நாம் இறுகிவிட்டதை நாமே அறிகிறோம்.

சூழ்நிலையாலும் வாழ்நிலையிலையாலும் மனச்சிக்கல் நிறைந்தவர்களாக, அதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களாக இருக்கும் எல்லாருமே, அடிப்படையில் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். தீபன் ஊரைவிட்டு ஓடக் காரணமாக இருக்கும் சாரதா அக்காவின் கணவரே, அவனை ஆதரவோடு அழைக்கிறார். தம் மனைவியைத் தவறாகப் பார்த்ததால் கொன்றுவிடும் கோபத்திலிருந்தவர், தன் மனைவியிடம் அவனுக்குச் சமைத்துக்கொடுக்கச் சொல்கிறார். 

தீபன், விச்சு, மாமா என்று எல்லாருமே அப்படியானவர்களாகவே இருக்கிறார்கள். அடித்துச்செல்லும் வாழ்க்கையில் மனிதனால் எத்தனை தூரம் பகைமையை வஞ்சத்தை கோபத்தை மனதில் சுமந்திருக்க முடியும். மானுட மனம் அன்பைப் பகிர மட்டுமே இருக்கிறது. அது மிக இயல்பாக தன்னிலையை அடையும். கறுப்பனும் சாரதாவும் அவள் கணவனும் என எல்லாருமே அப்படி கனிந்திருப்பதுதான் மானுட விதி. இல்லாவிட்டால் அந்தத் தீயைச் சுமந்துகொண்டு அவர்கள் அழிய நேரும். அந்த மன்னிப்பையே தாயும் கொடுப்பாள் என அறிவிக்கிறது நாவல்.

(Visited 149 times, 149 visits today)