தீர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் புரிதலில் இறைவி வெளிப்படுகிறாள் – ஆசிர் லாவண்யா

வாழ்வின் எத்தனையோ தேவைகளும் அதைச் சார்ந்த தேடுதல்களும் இருந்த போதிலும் மனதின் ஆழ் அடுக்குகளில் முதன்மை இடத்தில் விளங்குவது ‘பசி’ ஒன்றே. அதுவே மனித வாழ்வின் நகர்வைத் தீர்மானிக்கிறது. அதுவே ஒருவரை திக்குகளற்ற முடிவெளியில் அலைக்கழித்த வண்ணமும் இருக்கிறது. அதை முன்னிறுத்தியே வாழ்வின் சக்கரம் சுழல்கிறது.

ஒருவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் அவை எல்லாம் அச்சக்கரத்தின் சுழற்சிகளே; அதன் எல்லைக்குள் அடங்குபவையே. உடல் என்பது முதிர்ச்சி அடையும்போது சிறுக்கிறது; உள்ளம் முதிர்ச்சியடையும்போது விசாலமடைந்து ஒளிர்கிறது. ஆனால் முதிராத மனம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நிலைக்கும்போது உண்டாகும் விளைவுகள் அபத்தமானவை. உள்ளம் நிற்க, உடல் மட்டும் ஓடும் முரண் நிலை இது. லீகாட்டின் மையம் அங்கிருந்து தொடங்குகிறது.

தீபனின் தீரா கனம் கொண்ட மன அடுக்குகளிலிருந்து வெளிபடும் ஒரு கெட்டியான திரவம் போல, பிரித்து செரிவாக அடுக்கிப் பார்க்க முடியாத ஆழமாக வேர் விட்டிருக்கும் ஆதி பசியை, மன அடுக்குகளின் பல தீராத பசியும்  கதையின் மையமாக வைத்து நாவலை நகர்த்தி இருக்கிறார் ம.நவீன்.

‘லீகாட்’ ஒரு சிக்கலான, உளவியல் நாவல். அதை சுவாரசிய நாவலாக வாசிப்பது வாசிப்பவரின் ஆழத்தைப் பொறுத்தது. ஆண் மைய மனநிலை, காமம், பயம், ஆணாதிக்கம் மற்றும் பெண்களின் உணர்திறனின் நுட்பம் ஆகியவற்றை மையமாக வைத்து கதை விரிவடைகிறது. தீபனின் ஆண் பிம்பம் உடையும் போதெல்லாம் தன் சக்தியை மீட்டெடுக்க பெண்களை ஆதாரமாக்குகிறான். தன் வெற்றிடத்தை நிரப்புவதற்கான கருவியாக காமத்தை பயன்படுத்துகிறான். ஆனால் வாழ்நாள் முழுவதும் பெண்கள் வெவ்வேறு வடிவங்களில் அவன் வாழ்வில் வருகிறார்கள். தீபன் குழம்பி திகைத்து, சக்தியின் பிறவாகத்தில் திலைக்க ஒரு அடி முன்னே நகரும் போது பெண்ணிடமிருந்து வெளிப்படும் வெவ்வேறு நிலையிலான உணர்ச்சி வெளிப்பாடுகளை கண்டு அஞ்சி ஒடுங்குகிறான். ஆணவ பசியுடன் ஆதிப் பசியும் கலக்கும் போது பயம் காமமாக வெளிப்படுகிறது.

தீபன் உள்ளே இருப்பது உண்மையான வலிமை அல்ல; ஆழ்ந்த பயம். அதை மறைக்க கோபம் வருகிறது. கோபத்தை அடக்க மீண்டும் வேட்கை எழுகிறது. அதனாலேயே தன்னை நிராகரிக்கும் பெண்ணைத் தேடி அலைகிறான். ஏற்பின் மூலம்தான் தன் மதிப்பை மீண்டும் நிரூபிக்க முடியும் என்று தீபன் நம்புகிறான்.

தாய் பேரருள் வடிவம் கொள்ளும் பொழுது

உலக வழக்கிலும் தீபனின் வரைபடத்திலும் நாவலின் பிற கதாபாத்திரங்கள் வழியும் தாய் என்பவள் யாராக இருக்கிறாள்? எப்படி வகைபடுத்தப் படுகிறாள்? தாய்  என்பவளின் சக்தியின் எல்லைகள் என்ன? வயிற்றுப் பசியை தீர்க்கும் பெண் தாயென்றால் உடல் பசியை தீர்க்கும் பெண்ணை தாய்மையின் எந்த அடுக்குகளில் வைப்பது என்ற கேள்வியை நாவல் முழுக்க சம்பவங்கள் வழி கேள்வி எழுப்பிக் கொண்டே வருகிறார்  நாவலாசிரியர். கொஞ்சம் பதற வைக்கும் கேள்வி என்றாலும் எழுத்தின்  வழியாக ஆழ்மனதில் நுழைந்து பார்க்கும் எழுத்தாளன் எதிர்க்கொள்ளும் கேள்வியது.

கதையில் வரும் தீபனின் அம்மா பேச்சாய் பெண்ணின் பல நிலைகளை வாசகருக்கு கடத்துகிறாள். தீபனின் பசியறிந்து செயல் புரிகிறாள், அவனின் வாலிப மாற்றங்களை அனுசரிக்கிறாள், அவன் தவறிழைக்கும் போது தான் முதலில் அறைந்து பிறர் அவன் மேல் கை வைக்காமல் பாதுகாக்க்கும் அரணாகிறாள். கணவனால் நம்பிக்கை துரோகம் ஏற்படும் போது ஆத்திரத்தையும் அழுகையும் கவசமாக்குகிறாள். தீபன் மடியில் ஒடுங்கும் போது அவள் அன்பின் அரவணைப்பில் அவனை தனக்குள் இழுத்துக் கொள்கிறாள். இது பெண் பேரன்பு கொள்ளும் இடமாக பாதுகாப்பின் உச்சமாக, சரிவுகளின் மீட்சியாக பிரவகிக்கும் இன்னொரு சக்தி நிலையாக பார்க்கலாம்.

குளிக்கும் போது சாரதா அக்காவின் உடலை எட்டிப் பார்க்கும் தீபனை அனைவரின் முன்னும் அசிங்கப் படுத்தும் அவளே அவன் மீண்டும் லூனாசுக்கு திரும்பும் அந்த  இரவில் சாப்பாடு எடுத்து வர உடனே செல்கிறாள். தன்னுடைய கனிவால் நடந்த சம்பவங்களின் தருணங்களை மறக்க செய்கிறாள். தீபனிடமிருந்த குற்ற உணர்வு மறையும் இடமும் அதுதான். அச்சூழலில் தீபன் பெண் என்பவள் எத்தனை பெரிய தவறு செய்தாலும் மன்னிக்க கூடியவளாக மாறக் கூடியதை பார்க்கிறான். அதுபோலவே சாரதாவின் கணவன். தீபனின் தாயின் நிலைகண்டு கனிந்தவனாக இருக்கிறான். ஒருமாதத்தில் அவர்கள் கசப்புகள் வடிந்துவிடுகின்றன. எந்தச் சக்தி இந்த மாற்றங்கள் அத்தனையையும் வடிவமைக்கிறது என்பதே நாவல் தனக்குள் பொதிய வைத்துள்ளது.

தீபன் காமத்தோடு அணுகும் கனகாவும் தீபனை விரும்பும் கலைவாணியும் இரு வேறு துருவங்கள். தீபனுக்குள் காமத்தை கடத்தி பார்க்க முயன்ற கனகா தீபனால் கடக்கவே முடியாதக் காதலை கொடுத்துவிட்டுச் செல்கிறாள். தீபனை முதலில் மதித்து, கௌரவமாக நடத்தியதும், அவனின் தோற்றத்தை மாற்றி சக மாணவர்கள் மதிக்கும் ஆளாக மாற்றியதும் அவள்தான். அவளின் இருப்பு இல்லாமல் அவளின் நினைவுகள் மூலம் இயங்கியப்படி இருக்கும் தீபனுக்கு கனகா தேவதையாக தெரிகிறாள். அவள் வழி உணரும் பாதுகாப்பு ஒரு தாய் வழங்குவது. அந்த மதிப்பே அவளின் பெயரை நண்பர்களிடமிருந்து பாதுகாக்கும் இடத்திற்கு தீபனை நகர்த்தி செல்லப்படுகிறான். தன் சொற்களின் வழியாகவே தீபனை இயக்கிவள் கனகா. அதுவே அவளது சக்தி நிலை. இதற்கு முற்றிலும் மாற்றானவள் கலைவாணி.

தீபன் உடல் நலமில்லாமல் கிடக்கும் போது கள்ளத் தனமாக வந்து சந்திக்கும் கலைவாணியிடம் இருப்பது  தாய்மை குணம்தான். ஆனால் தீபனுக்கு அவள் உடலாகத் தெரிகிறாள். அது குறித்த எந்தப் புரிதலும் இல்லாத கருணையுடன் மட்டுமே கலைவாணி வந்து செல்கிறாள்.

காமத்தைத் தூண்டும் கனகாவிடம் தாய்மையையும் தாய்மையை வழங்கும் கலைவாணியிடம் காமத்தையும் தேடும் தீபனின் அலைக்களிப்பை அறிந்துகொள்ளும்போது நாவலில் ஆசிரியர் பேசும் உளவியல் நமக்கு நெருக்கமாகிறது. தன் தாயை மட்டுமே பெண்ணின் இலக்கணமாக அறிந்தவரை தீபனுக்கு அத்தனைப் பெண்களும் கருணையின் வடிவாக உள்ளனர். நிஷாவைச் சந்தித்த தொடிமுதல் கருணை கொண்ட பெண்கள் எல்லாமே அவனுக்குக் காமம் கொண்ட உடலாகத் தெரிகிறார்கள்.

இந்தக் குழப்பங்களில் கிடந்த உழல்பவன் சந்திக்கும் ரத்னா ஆண்ட்டி அவனை மேலும் குழப்பத்திலும் பயத்திலும் ஆழ்த்துகிறாள். நாவலில் ரத்னா ஆண்ட்டியில் தீவிரம் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தக்கூடியது. அவள் தீபனின் இருளையும், காமத்தையும், நிராகரிப்பையும் அறிந்து கொண்டு அவனை தண்டிக்காமல், விலகாமல் அவனையே அவனுக்கு மீட்டுத் தருகிறாள். அவன் ரத்னா அன்டியுடம் தேடுவது அரவணைப்பு.  அவளோ அவனுக்குத் தருவது உயிர்ப்பும் விடுதலையும். அவன் பெண்கள் மீது வைத்துள்ள அத்தனை மதிப்பீடுகளுடன் சுக்குநூறாக உடையும் இடம் அது. இந்த வாழ்க்கை தனக்குப் புரியாதது என ஒப்புக்கொண்டு அடங்கும் இடம் அது. அவ்விடமே அவன் பணிபவனாகிறான். பணிவதற்கான சிறுவன் முகத்தை தேடி அணிந்து கொள்கிறான்.

நாவலில் ரத்னா ஆண்ட்டி ஒரு யட்சியைப் போன்றவள். அவள் அன்பின் எல்லையையும் பொறுமையின் ஆழத்தையும் மீறி நிற்கிறாள். அவள் தீபனின் உள்ளம் அறிந்து, அதன் வலியும் வேட்கையும் புரிந்து, அதற்கு ஏற்றவாறு வழிநடத்தி, தாங்கி, நிலைநாட்டுகிறாள். தீபாவளிக்கு முதல் நாள் சில மணி நேரங்கள் தன்னை வெளிப்படுத்தும் ரத்னா ஆண்ட்டி அத்தகையவளே.

தீபனுக்கு ரத்னா ஆண்ட்டி பெருந்தேவியின் உருவமாகிறாள். அவன் உடைந்து, பயந்து, காமமும் கோபமுமாகத் தவிக்கும்போது அவள் அவனை ஆட்கொள்கிறாள். அவன் மகுடிக்கு ஆடும் பாம்பாக இருந்தாலும், அவள் தாய் போலத் தாங்குகிறாள். அவனது கோரப் பசியை அறிந்து தூண்டவும் அடக்கவும் செய்கிறாள். அவளிடம் அவன் வணங்கி சரணடைகிறான். உலகில் எங்கும் கிடைக்காத அமைதியை அவளிடம் பெறுகிறான். இது தாய் எனும் எல்லையற்ற சக்தியின் மேலும் ஒரு கீற்று என்பதாகவும் புரிந்துக் கொள்ளலாம். மானுட அவஸ்த்தை எப்படிப்பட்டதாக இருந்தாலும், புரிந்து ஆளும் திறனே தெய்வீகம்.

தீபன் அன்று இரவு வணங்கி விடை பெறுகிறான்.

தாய் எனும் சக்தி வரையறைகளுக்கு உட்பட்டதல்ல. உறவின் சிக்கல்கள் எதுவாயினும், உள்ளத்தை உணர்ந்து வழிநடத்தும் நுட்பமே அவளின் தெய்வீக முகம். எல்லையற்ற அன்பின் மூலவடிவம் தாய். உறவு எப்பாதையில் சென்றாலும், புரிதலின் ஆழத்தால் ஆட்சி செய்யும் திறன் இறைவன் தன்னை வெளிப்படுத்தும் இன்னொரு வடிவம் ஆகும். தாய் என்பவள் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட சக்தி. உறவு முறை எவ்வளவு சிதைந்திருந்தாலும், அத்தியாவசியத்தை அறிந்து தாங்கும் தன்மையே தெய்வத்தின் செயல்பாடாகும். தாய் என்பது எல்லைகளற்ற ஆற்றலின் முழு வடிவம். அதனாலேயே கருணை வடிவாக இருப்பவளையும் கோரமாக குடலை மாலையாக சூடியிருப்பவளையும் அன்னை என்கிறோம். அதனாலேயே அருள் புரிபவளையும் பழி தீர்ப்பவளையும் தாய் என்கிறோம். அதனாலேயே கோயிலில் அமர்ந்து நோயைப் போக்குபவளையும் மாந்திரீகர்களின் சொல் கேட்டு நோய் வழியஆ உயிரைப் பிடுங்குபவளையும் கையெடுத்து வணங்குகிறோம்.

இவை ஒருபுறம் இருக்க, ரத்னா ஆண்ட்டி தீபனின் கவனத்தை கலைவாணியிடமிருந்து திசை மாற்றவும், கலை வாணியை தீபனிடமிருந்து பாதுகாக்கும் இடமாகவும் பார்க்க நாவலில் திறப்பு இருக்கின்றது. இளம் வயதில் உடலை முருக்கி எடுக்கும் காமம் எத்தகையது என்பதை ரத்னா ஆண்ட்டி அறிந்திருப்பவள். தீபனிடம் குடிகொண்டுள்ள அவ்வுணர்வு காதலெனும் மாயபிம்பம் அணிந்து கலைவாணியைப் பற்றிப்படரும் எனும் நிலையை அவள் அறியாதவள் இல்லை. காமம் ஒரு அசாதாரண பேய். நினைத்த தோற்றம் எடுக்கும். அன்னையாக நின்று தன் மகளைக் காக்கவும்  பேரன்னையாக தீபனுக்கு அருள் புரியவும் அவளுக்கு வேறென்ன வழி உண்டு.

தீபனின் காமமும் கோபமும் வலிமை அல்ல  மறைக்கப்பட்ட பயம்

லீகாட்  ஒரு ஆணின் காமத்தை முன்னிருத்தும் நாவலா என்ற கேள்வி என்னுள் எழுந்த படியே இருந்தது. தீபனின் பிம்பம் உடைபடும் போது அதன் சக்தியை பெண்களின் வழி மீட்டெடுக்கிறான். அவன் வாழ்நாள் முழுவதும் பெண்கள் வெவ்வேறு தன்மைகளை ஏந்தி வந்து அவனை குழப்புகிறார்கள். அவன் குழம்பி, பயந்து தனக்குள் பதுங்குகிறான். அடிப்படையில் அவனுள் இருப்பது பயம். அதை அவன் கொண்டு வந்து நிரப்பும் இடம் காமமும் ஆணாதிக்க சிந்தனையும். அதற்காக அவன் தேடி அலைவது தன்னை நிராகரித்த பெண்ணை. தீபன் அலைக்கழிக்கப்படும் போதெல்லாம் அவனிடமிருந்து வெளிபடுவது கோபம். அதை மீண்டும் அடக்கி ஆழ வேண்டும் எனும் வேட்கை. அடி ஆழத்தில் அவனுக்கு இருப்பது பயமே. அதனால் தான் ரத்னா அண்டியுடன் உறவு கொண்ட அந்த நேரத்தில் அவன் லூனாஸ் நோக்கி கிளம்புகிறான். அவன் தன்னைச் சிறுவன் என உணரும்போது ஊர் செல்வதுதானே விதி.

ஆனால், காலம் கடந்தும் தீபனுள் குடி கொண்டிருக்கும் பயம் எந்த மாற்றமும் அடையாமல் அப்படியே இருக்கிறது. இல்லையென்றாள், பேத்தியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீபனுக்கு அத்தனை பெரிய பலம் தேவைப்பட்டிருக்காது. அத்தனை வருடங்களும் தீபனுக்கு கீழ் படிந்து நடக்கும் நிஷா தன்னுடைய கற்புக்கு பங்கம் ஏற்படும் போது அவள் வேரொருவளாக மாறுகிறாள். அதுவே தீபனை அச்சமுற செய்கிறது. அவன் செயலிழக்கிறான்.

பேத்தி நிஷாவின் கோபத்தை, நிராகரிப்பை தீபன் குழம்பி கடிதத்தின் வழி கடக்கிறான். இம்முறை காலம் அவனுக்கு வேறு கதவுகளை திறக்க மறுக்கிறது. ஆட்டம் முடிவடைகிறது. அவன் இறப்பின் விளிம்பில் காத்துக் கிடக்கிறான்.  கிழப்பருவத்தை அடைந்தும் பேத்தியை தவறாக அணுகும் தீபன் எதை பரிசோதிக்க அப்படிச் செய்கிறான் என்ற கேள்வி நிற்கிறது. மேம்போக்கான பார்வையில் காமத்திற்காக என்றாலும் அவன் உள்ளுணர்வில் எப்போதும் சுவாசத்தோடு கலந்திருக்கும் பயம் அவனை சீண்டிக் கொண்டே இருக்கிறது. தீபன் பேத்தியிடம் கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பதும் அவன் தன்னை தன்னுடைய பயத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் வித்தையே.

முந்தைய தோல்வியை இந்த முறை சரிசெய்யலாம்; நிராகரிப்பை மீறி ஆதிக்கம் செலுத்தலாம் என்று அவன் நினைக்கிறான். ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் முடிவு ஒன்றுதான். முதல் நிஷா வார்த்தையால் தீபனை அறைகிறாள். அவன் அஞ்சி உள்ளுக்குள் அலறுகிறான். பேத்தி நிஷா அவன் குரல் வளையத்தைப் பிடித்து நிறுத்துகிறாள். மீண்டும் அதே பயம்.

இனி முடியாது. அவன் அதுவரை அறியாத வீதியில் நிற்கும் நிஷாவை மட்டுமல்ல… சிறுமியாக இருக்கும்போதே தன் சொல்லால் அதட்டி மிரட்டி வளர்த்த தன் பேத்தியைக் கூட அவனால் அறியவே முடியாது. அறியாமை கொடுக்கும் அச்சம் அவனை ஒடுக்குகிறது. அவன் அடையும் பதற்றம் வாசகனையும் பீடிக்கிறது.

மனதின் காலம் நகராமல் உறைகிறது.

உடல் வயது வளர்ந்து முதிர்ச்சி அடைந்தாலும், மனம் ஒரு குறிப்பிட்ட நொடியில் உறைந்து போகிறது. காலம் அசைவதைப் போல உணர்ந்தாலும், நினைவுகள், உணர்வுகள், காயங்கள் அசையாமல் அங்கேயே நின்றுவிடுகின்றன. தீபன் வயதாகி, கிழப்பருவம் அடைந்தாலும் அவன் மனம் எப்போதோ நடந்த நிராகரிப்பு, பயம், அவமானம் ஆகியவற்றிலேயே சிக்கிக் கொள்கிறது. நிகழ்காலம் என்று ஒன்று இல்லை. கடந்த காலம்தான் திரும்பத் திரும்ப நடக்கிறது. ஆனால் நிகழ்காலத்தின் வடிவில், உடல் காலத்திற்கு அடிமையாகிறது, முதிர்கிறது, இறக்கிறது. ஆனால் மனம் தன் காயம் பட்ட தருணத்தில் காலத்தை நிறுத்திவிடுகிறது. அது மீண்டும் மீண்டும் அதே நாடகத்தை நடத்திக் கொண்டே இருக்கிறது.

அது கடந்து வர முடியாத தருணம். அவனை முதன் முதலில் உடைத்த தருணம். நிராகரிப்பின் கூர்மையான வார்த்தை. பயம் புகுந்த அந்த அமைதி. காமம் எனும் பெயரில் ஓடி மறைந்த காயம். தீபன் என்ற பெயருக்குப் பின்னால் ஒரு 16 வயது வாலிபன் இன்னும் அழுது கொண்டிருக்கிறான். உடல் வளர்ந்து முதிர்ந்தாலும் மனம் ஒரு காயமான அந்த இரவு நிகழ்வில் சிக்கிக்கொள்கிறது. கடந்த காலம் திரும்பத் திரும்ப நிகழ்கிறது; நிகழ்காலம் புதிதாகத் தொடங்குவதில்லை. தீபனைப் பொறுத்தவரை அவன் வயதானாலும், இறப்பை எதிர்கொண்டாலும் அவன் மனம் முதல் நிராகரிப்பு நாளிலிருந்து நகரவில்லை. அதே பயம், கோபம், காமம் மீண்டும் மீண்டும் வருகின்றன.

தந்தையின் போகூழ்  விதையாகிறது

ஊழ் என்பது முடங்கிப் போகாத, தலைமுறைகளைத் தாண்டி குருதி நரம்புகள் வழியே ஓடும் வலிமையான சக்தி என்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது நாவல். ஊழ் என்பது கடந்த கால நினைவல்ல, அது உயிருள்ள சக்தி. குருதியின் வழி நகர்ந்து, தலைமுறைகளைத் தொடர்ந்து தன்னைத்தானே புதிதாக்கிக் கொள்கிறது. அதை முறிக்க விழிப்புணர்வும், துணிவும், ஆழமான தூய்மையும் தேவை இல்லாவிட்டால் சுழற்சி நிற்காது. தீபனின் தந்தை சிங்கப்பூரில் வேலை பார்க்கும் பிலிப்பினோ பெண்ணுடன் பிறழ் உறவில் சிக்குகிறார்.  இச்சைக்கு அடிமையாதல், பெண்ணால் ஏமாற்றப்படுதல். இதுவே அவரது போகூழ். இறப்பில் குடும்பம் பணத்தையும் பாதுகாப்பையும் இழக்கிறது. அந்த வினையின் குருதி முத்திரை தீபன் மீது விழுகிறது. ஊழ் அத்தனை சீக்கிரம் ஆட்டதை நிறுத்தாது. நாவலில் வரும் தீபனின் மகனும் திக்கின்றி அலைகிறான். குடும்பம் சிதைகிறது. பேத்தி தீபனால் வளர்க்கப்படுகிறாள்.

தீபனுக்கு பரிமாறும் வட்டம்

தந்தை விட்டுச் சென்ற வெறுமையும் தவறான முன்மாதிரியும் தீபனை அதே பாதைக்கு இழுக்கின்றன. அவனும் இச்சைக்கு அடிமையாகிறான். வயது முதிர்ந்தும் அதே ஊழினால் பேத்தியைத் தவறாக அணுகுகிறான். இது தந்தையின் முறைகேடு இன்னும் கொடூரமான வடிவம் எடுக்கும் இடம்.  பெண்கள் மீதான அச்சம், ஒழுக்கச் சீர்குலைவு, ஆணாதிக்க உணர்வு  இவற்றால் துடிக்கும் உள்ளம். குல ஊழ் தலைமுறை தொடர்பு கொண்டது. தந்தையின் முடிக்கப்படாத, கனமான வினைகள் ஆற்றல் வலையமைப்பு மூலம் சந்ததியைத் தொடர்பு கொள்கின்றன. தீராத ஆசைகள், காயங்கள், முடிக்கப்படாத கடமைகள் தீபனையும் அவன் மகனையும் பாதிக்கின்றன. தொடர்ந்து அதே வட்டங்களில் சுழல வைக்கின்றன.

நிஷாவுக்கு கடிதம் எழுதி பாவத்தைக் கழுவ முயல்கிறான். ஊழ் எத்தனை ஆக்ரோஷமாக குருதி வழி பயணிக்கிறது என்று கண்டு அஞ்ச வேண்டி இருக்கிறது. ஊழ் சமரசம் செய்துக் கொள்ளாமல் தொடர்ந்து தன்னைத்தானே வடிவமைத்து நகர்கிறது.

இட்டு நிப்புதல். ஒரே வட்டம், வேறு முகம்

தீபன் ஒவ்வொரு சமயமும் தன் வாழ்வை வெவ்வேறு மனிதர்களை கொண்டு நிரப்பிக் கொண்டே போகிறான். நிஷா எனும் பெயரே இங்கு காலத்தின் சுழற்சியைக் காட்டுகிறது. முதலில் பாலியல் தொழிலாளி நிஷா. அவனை சீண்டி நிராகரிக்கிறாள், அவனுடைய ஆண்மையை சவாலுக்கு உட்படுத்துகிறாள். பின்னர் பேத்தி நிஷா. அதே பெயரில், அதே உறவின் நிழலாக அவன் முன் தோன்றுகிறாள். பாலியல் தொழிலாளி தன்னை சீண்டி நிராகரிக்கும் ஆண்மையின் சீண்டலை காலம் கடந்து நிஷாவிடம் விளையாடி பார்க்க எத்தனிக்கிறான்.

மாறனின் இடத்திற்கு மேம்படுத்தப்பட்ட கதாபாத்திரமான விச்சு வருகிறான். கனகா கலைவாணியால் நிரப்பப்படுகிறாள். தீபன் தன்னுடைய தந்தையின் இடத்தையும் தீபனின் மகன் தீபனின் இடத்தையும் பல செய்கைகளின் வழி ஒத்திருக்கிறார்கள். பேச்சாயியும் ஜாலம்பாரும் ஏறக்குறைய ஒத்த தன்மைக் கொண்டவர்கள்.  தீபனை பேச்சாயி நிராகரிப்பது ஒருவிதம் என்றால் ஜாலம்பார் அதையே வேறு விதமாகச் செய்கிறார்.

தொடர் சுழற்சியில், முடிவில்லா வட்டத்தில் நாவலின் சுழற்சி அதிக வட்டங்களை எழுப்பி பெண் என்பளின் சக்தி பரிமாணங்களை மீண்டும் ஒரு முறை கேள்வி எழுப்புகிறது. சடங்காக கொண்டிருக்கும் தாய் எனும் புரிதலுக்கு வேறு வாசல்களும் இருக்கிறது என்பதை திறந்து வைக்கிறது. அப்படி பார்க்கையில் உருவாக்குவதும், இயக்குவதும், காப்பதும், பசியாற்றுவதும், அழிப்பதும் பெண்ணுள் அமிழ்ந்து ஒளிரும் பேரன்னையின் சக்திகளே.

(Visited 5 times, 5 visits today)