ம. நவீனின் லீகாட் நாவல் என் கைகளுக்கு வந்து மூன்று வாரங்களாகிவிட்டன. நான் பெரும்பாலும் புத்தகங்களை மெதுவாகத்தான் வாசிப்பேன். உடனுக்குடன் வாசித்துவிட்டால், கொடுத்த தொகைக்கு ஒரேடியாகப் படித்து முடித்துவிட்டோமே என்ற எண்ணம் ஏற்படும்.
நூலகத்திலிருந்து புத்தகங்களை இரவல் வாங்கினாலும் இதே கதிதான். படிக்கும்போது தூக்கமும் சேர்ந்துகொள்ளும். மேலும், மெதுவாக வாசித்தால்தான் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடந்திருக்கும் என்ற எண்ண ஓட்டத்தோடு தூங்கச் செல்லலாம். மறுநாள் வேலை செய்துகொண்டே அதைப் பற்றிய சிந்தனைகளோடு உலா வரலாம்.
ஆக, நாவல்களை வாசித்தால் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம்தான் வாசிப்பேன். ஆனால் லீகாட்டைப் படிக்கும்போது, இன்னொரு அத்தியாயத்தை அன்றே படித்துவிட மனம் ஏங்கியது. அதனால் தினமும் இரண்டு அத்தியாயங்களை வாசித்தேன்.
வாசித்து முடித்து ஒரு வாரமாகிவிட்டது. லீகாட் தொடர்பான எனது கருத்துக்களை எழுத இப்போதுதான் ஆர்வம் வந்தது. பிறர் எழுதிய கருத்துக்களையும் இன்னமும் நான் படிக்கவில்லை.
நவீனின் நாவல்களிலும் சரி, சிறுகதைகளிலும் சரி, அதிகம் first-person point of view-ஐக் கொண்டு கதாநாயகர்களை நகர்த்துவதால்/எழுதுவதால், வாசிப்பவர்கள் இலகுவாகக் கதைக்குள் நுழைந்து அவர்களும் அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரமாக மாறிவிடுவது இயல்பு.
லீகாட்டிலும் தீபன் என்ற கதாபாத்திரத்தை உள்வாங்கும்போது, நவீனின் உருவம் மனதில் தோன்றினாலும், சில சமயங்களில் தீபன் என்ற அந்தப் பையனாகவே நானே மாறுவதுண்டு. அதற்குக் காரணம், தீபன் அனுபவித்த அந்த உணவுக் கடைச் சூழல், நான் வேலை பார்த்த பேரங்காடியை அதிகம் ஞாபகப்படுத்தியது.
நாவலில் சம்பவம் நடைபெற்ற ஆண்டை நேரடியாகக் குறிப்பிடாமல் ரஜினிகாந்த்தின் திரைப்படப் பெயர்களைக் குறிப்பிடும்போது, வாசிப்பவர்கள் சம்பவம் நடந்த ஆண்டையும் தீபனின் வயதையும் எளிதில் கணித்துவிடலாம். நவீனின் வயது எனக்கு ஏற்கனவே தெரியும் என்பது வேறு விஷயம். புதிய வாசகர்களுக்கும் நவீனை அதிகம் தெரியாதவர்களுக்கும் புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்க வாய்ப்புண்டு. ரஜினிப் படங்களைப் பற்றி அறியாதவர்கள் Google-ல் தேடி, சம்பவம் நடைபெற்ற காலத்தை அறிந்துகொள்வார்கள்.
உணவுக் கடைகளைப் பற்றி அப்படி இப்படி என்று அறிந்து வைத்ததுண்டு. மலேசிய மக்களின் பாதி வாழ்க்கையே உணவுக் கடைகளில்தானே கழிகிறது. நாவலில் வரும் தீபன் அனுபவத்தின் பேரில் எடுத்துச் சொல்லும்போது, நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையென்றே புலப்படுகிறது. இனி பார்த்துப் பார்த்துத்தான் கடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கை எண்ணம் மனதில் தோன்றியது.
நாவல் முழுக்க ஒரு பதின்ம வயதுப் பையனின் உள் உணர்வையும் செயல்களையும் அப்படியே அப்பட்டமாகக் காட்சிப்பூர்வமாக வடிவமைத்தது, என்னையும் 40 ஆண்டுகளுக்கு முன்பு இட்டுச் சென்றுவிட்டது.
தீபனின் அனுபவம் எல்லா பதின்ம வயதினருக்கும் நடந்திருக்காவிட்டாலும், இப்படியும் நடந்திருக்கலாமோ என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்திவிட்டார் நவீன். நல்லவேளை, நமக்கு இப்படியெல்லாம் நடக்கவில்லை என்ற எண்ணமும் தோன்றும்.
லீகாட்டை எல்லோரும் வாசிக்க/ருசிக்க வேண்டும். குறிப்பாக, பதின்ம வயது மாணவர்களை இந்நாவல் சுண்டி இழுக்கும்.
வருடங்கள் உருண்டோடினாலும், பதின்ம வயதுக்காரர்களின் வாழ்க்கையே ஒரு தனி உலகம்.
நாவலை ஆரம்பித்தும் முடித்தும் வைக்கும் கடிதம்தான் எனக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லீகாட் 2 உருவாகுமோ?

