லீகாட்: கையில் சிக்காத பம்பரம் -நோவா குருலு

லீகாட் நாவலைப் படித்து முடித்து விட்டேன்.

எப்போதுமே ஒரு நாவலைப் படித்து முடித்த பின் அதை எல்லா நேரங்களிலும் தியானித்து அசை போடுவேன். மாடு வருடத்தில் பிறந்ததால் அசை போடுவது எனக்குப் பழகிவிட்டது. லீகாட் எனக்கொன்றும் புதிய சொல் கிடையாது. லீகாட், செம்போய், மம்ப்போய் போன்ற சொற்கள் எனக்குப் பழகிப்போன சொற்கள்தான். நவீன் வாழ்ந்த அதே நிலப்பரப்பில், ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில் இன்னொரு முனையில் பிறந்து வளர்ந்ததால், இந்தக் கதையின் கதாபாத்திரங்களை என் வாழ்நாள் முழுவதும் அருகிலிருந்து கண்டிருக்கிறேன். என்ன, ஒரு ‘ஹாய்’, ‘ஹலோ’, ‘பாய்’ என்றவாறு அவர்களைக் கடந்து போயிருக்கிறேன். அவ்வளவுதான். எனவே இது புனைவென எழுதப்பட்டிருந்தாலும், அதை முழுமையாகப் புனைவென்று ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது.

நான் வாழ்ந்த பகுதிக்கு லூனாஸிலிருந்து யாரேனும் வந்தால், ‘பனாஸ்ஸான ஏரியா’ என்றுதான் சொல்வோம். அவ்வளவு மோசமாக நடந்துகொள்ளும் இளைஞர்களையும் அப்போது பார்த்திருக்கிறேன். நாவலில் சொல்லப்பட்டிருந்த காலக்கட்டத்தில் நான் படித்தது செய்ண்ட் பெட்ரிக் தேசிய இடைநிலைப் பள்ளி. அதுமட்டுமில்லாமல், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை என் கல்வி அடைவுநிலையைக் கருத்தில் கொண்டு மாவட்டக் கல்வி இலாகா என்னைப் பல பள்ளிகளுக்கு மாற்றம் செய்தது. அதனால் கூலிம் மாவட்டம் முழுவதும் எனக்கு நண்பர்கள் அதிகம். அதுவும் என்னுடைய பேச்சுத் திறமைக்கு நல்ல உந்துதலாக அமைந்தது. எனவேதான் லீகாட் நாவலில் வாழும் பாத்திரங்கள், உயிருடன் இருப்பவர்களையும் உயிரற்றுப் போனவர்களையும் என் கண்முன் கொண்டு வந்து நிறுத்தின. அவர்கள் யாரென்று எனக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறேன்.

சரி, லீகாட்டுக்கு வருவோம்.

கதாநாயகனின் பெயரை வலை போட்டுத் தேடினேன். நிறையப் பக்கங்களைத் தாண்டிய பின்னர்தான் அவன் பெயர் தீபன் என்று தெரிந்தது. இந்தப் பெயரை நவீன் தனது முந்தைய நாவலான ‘சிகண்டி’யில் அறிமுகப்படுத்தியிருந்தார். எனக்கு அது பிடிக்கவில்லை. இருந்தும் அது நாவலாசிரியரின் சுயதேர்வு. ஒரு வாசகியாக, ‘அவன் தான் இவனா? இல்லை, அந்தச் சிகண்டி தீபனின் பதின்ம வயது தீபன்தான் லீகாட்டில் இருக்கிறானா?’ என்று நானே தொடர்புபடுத்திப் பார்த்துக்கொண்டேன். பல இடங்களில் என்னை நம்ப வைப்பதுபோலத்தான் கதை முழுவதும் லீகாட் தீபன் வலம் வந்துகொண்டிருந்தான்.

யார் இவன்? இவன் எதைத் தேடிக்கொண்டிருக்கிறான்?

தீபனின் கண்வழியே அவனைப் பார்க்கத் தொடங்குகிறோம். கருத்த, வெடவெடத்த உருவம். பூமாவோடு சம்பந்தப்படுத்தப்படும் தோற்றம். இதுவும் லீகாட்டான ஒரு மிருகம் தான். காடு மேடென ஓடிய, தன்னையுணராத ஒரு பதின்ம வயதினன். அடிப்படையில் அம்மா மீது பாசம் கொண்டவன். ஜாலம்பாரு மாமனைத் தனது முன்மாதிரியாகப் பார்த்தவன். அப்பாவோடு ஓரளவு மட்டுமே பிடிப்பு கொண்டவன். கருப்பனை அளவுக்கதிகமாக நேசித்தவன். நன்றாகப் படிக்கக்கூடியவன். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அவன் தேடிய பிம்பங்களே அவனைத் தடம் மாறிச் செல்ல வைத்துவிட்டன.

தீபனுக்குள் முளைக்கும் காமம் முதலில் ஒரு பதின்ம வயதினனின் இயல்பான உடல் உணர்வாகத் தோன்றினாலும், காலப்போக்கில் அதுவே அவனை ஆளத் தொடங்குகிறது. இறுதியில் தன் பேத்தி நிஷாவிடம் தவறாக நடந்துகொள்ளும் அளவுக்கு அது அவனை இழுத்துச் செல்கிறது. ஒரு கட்டத்தில் அவனுக்குள் இருந்த காமம் அவனை மனிதனாக அல்ல, மிருகமாகவே வாழ வைத்திருக்கிறதோ என்று தோன்றியது.

பாவம் அவன் அம்மா பேச்சாயி. எப்படியெல்லாமோ நினைத்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்த தன் மகனின் உடலில் காமம் நரம்பு நாளங்களிலெல்லாம் புடைத்திருப்பதை அவர் காலம் கடந்துதான் அறிந்திருக்கக்கூடும். ஒரு தாயின் கண்களுக்குள் இன்னும் குழந்தையாகவே இருந்தவன், மற்றொரு உலகத்தில் வேறொரு மனிதனாக மாறிக்கொண்டிருந்திருக்கிறான்.

கதையில் வருவதுபோல அவனுக்குச் சரியான ஆள் அவன் மாமன் மட்டும்தான். முனியாண்டி சாமிபோல ஓர் உருவம். நீதி, நியாயம் என ஓடும் ஒருவர். குறிப்பிட்ட அந்தக் காலக்கட்டத்தில் தோட்டப்பகுதிகளில் இவரைப்போலப் பலர் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சிலர் என் நினைவில் வந்து போயினர். அவர் கடை வைத்திருந்த பகுதி, கடையின் உட்புறக் காட்சிகள் என எல்லாமே நான் கடந்து போன இடங்களாகத்தான் எனக்குத் தோன்றியது.

பொதுவாகவே கடையில் போய் உண்ணும்போது நாங்கள் சண்டை போட மாட்டோம். காரணம், விச்சு போன்றவர்கள் எச்சில் துப்புவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எனக்குச் சுத்தமாக உணவு வரவேண்டுமென்றால் அங்கு வேலை செய்பவர்களிடம் நன்றாகப் பேசவேண்டும். இல்லையென்றால் அவர்கள் எச்சிலை நாம் உண்ண வேண்டியதுதான். எல்லாருக்குள்ளும் ஏதோ ஒரு வக்கிரபுத்தி இருந்துகொண்டேதான் இருக்கிறது.

தீபன் தனது மாமாவின் தயவால் நன்றாக மீ கோரேங் போடக் கற்றுக்கொள்கிறான். இங்கு எனக்கு நவீன் தன் முகநூலில் எப்போதோ, தான் போடும் மீ கோரேங் சுவையில் தனித்து விளங்கும் என்று எழுதியதும் நினைவுக்கு வந்தது. நாவலுக்கும் நாவலாசிரியனின் வாழ்வனுபவங்களுக்கும் இடையில் எங்கோ சிறுசிறு நூல்கள் கட்டப்பட்டிருப்பதுபோலத் தோன்றியது.

அடுத்து கடையின் மேல்மாடி.

அது எப்படி இருக்கும் என்பதை நவீன் விவரிக்கும்போது எனக்குள் பழைய நினைவொன்று சட்டெனத் திறந்துகொண்டது.

ஒருமுறை சரவாக்கில் எனக்கு ஒரு தோழி அறிமுகமானாள். அந்தப் பெண் தீபகற்பத்திலிருந்து அங்கு போனவள்தான். படிப்பைத் தவிர பகுதிநேரமாக அங்கிருந்த போம்பேய் மசாலா கடைகளில் மேசை துடைக்கும் வேலை பார்த்தாள். அவ்வப்போது என் வீட்டில் வந்து தங்குவாள். இருந்தும் எப்போதுமே மர்மமாகவே இருப்பாள். அங்கு எல்லாரும் வேற்று மாநிலத்தவர்கள் என்பதால் உதவி செய்யும்போது அதிகம் கேள்வி கேட்பதோ, பின்புலத்தை அதிகம் விசாரிப்பதோ கிடையாது. திருடிக்கொள்ள எங்களிடம் பணமும் இல்லை. அந்தளவுக்கு வேலை செய்தாலும் நாங்கள் ஏழைகள்தான். விச்சு மட்டுமல்ல.

ஒருநாள் அந்தப் பெண், “அக்கா, நான் வேலை செய்யும் இடத்துக்கு என்னைக் கொண்டு போய் விடுகிறீர்களா?” என்று கேட்டாள். நானும் அதிகம் யோசிக்காமல் கொண்டு போய் விட்டேன். அங்கு மேல்மாடியில்தான் வேலையாட்கள் எல்லாரும் தங்கியிருந்தார்கள். அவளோடு மேலே சென்று பார்த்தபோது குப்பையும் கூளமுமாக இருந்தது. அங்கு இருந்தவர்கள் எல்லாரும் ஆண்கள்.

இவள் எப்படி இங்கு தனியாக? மனம் பதைபதைத்தது. பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் முதற்கொண்டு தரையில் கிடந்தன. எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் மிகச் சாதாரணமாக, “அக்கா, நான் என்னைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லி என்னைப் போகச் சொல்லிவிட்டாள். நான் அவளைப் பார்த்தது அதுதான் கடைசி.

அப்போது அவளுக்கு இருபது வயதுதான் இருக்கும். அறைகளுக்கிடையில் வெறும் ப்ளைவூட் தடுப்புகள்தான். இவள் எப்படிச் சமாளிப்பாள்? சின்னப் பெண்ணாக இருக்கிறாளே? இதெல்லாம் பழகிய உலகமா இவளுக்கு? என்று என்னென்னவோ என் மனதுக்குள் ஓடியது. என்னதான் பழகினாலும் அவளுடைய வாழ்க்கையை என்னால் ஓர் அளவுக்கு மேல் புரிந்துகொள்ள முடியவில்லை. நவீன் அந்த மேல்மாடி அறையை விவரித்தபோது, என் நினைவிலிருந்து அந்தப் பெண் மீண்டும் இறங்கி வந்து என் முன்னால் நின்றாள். அதனால்தான் சொல்கிறேன். சில இடங்களில் என்னால் லீகாட்டைப் புனைவாக மட்டும் வாசிக்க முடியவில்லை.

தீபன், விச்சு பயன்படுத்திய ஆணுறையை வெள்ளந்தித்தனமாகப் பலூன்போல ஊதி விளையாடும் காட்சியை ஏற்கனவே நவீனின் ஒரு சிறுகதையில் வாசித்திருக்கிறேன். அதேபோல கருப்பனை குட்டியாக மர ஆலையில் கண்டெடுத்த காட்சியும் அவரது முந்தைய எழுத்துகளில் வந்திருக்கிறது. இந்த நாவல் முழுமையடைவதற்கு முன்னரே அதன் காட்சிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நவீனிடம் பிறந்திருக்கின்றன என்று தோன்றுகிறது. லீகாட் அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரே வாழ்க்கையாக ஓடவிட்டிருக்கிறது.

அந்த வாழ்க்கையில் மாறனும் முக்கியமானவன். நாவல் முழுவதும் தீபனுக்குள் ஒளிந்திருக்கும் பல கேடுகெட்ட குணங்களுக்குக் கொம்பு சீவிவிடுபவனாக மாறன் பயன்படுத்தப்பட்டிருக்கிறான். அவன் மேல் படர்ந்துகொண்டுதான் தீபன் தைரியமாக உலா வருகிறான். மாறன் மட்டும் தீபனோடு கூட்டாளி பிடிக்காமல் இருந்திருந்தால் தீபன் நன்றாக இருந்திருப்பானோ என்று பல இடங்களில் எனக்குத் தோன்றியது.

ஆனால் எல்லாவற்றுக்கும் மாறனை மட்டும் குற்றம் சொல்ல முடியுமா? தீபனுக்குள் ஏற்கனவே ஏதோ இருந்திருக்கிறது. மாறன் அதை உருவாக்கவில்லை. ஒருவேளை அதை வெளியே கொண்டுவர உதவியிருக்கலாம்.

தீபனுக்குள் ஏறிய காமம், அவன் தாத்தாவாக மாறும் வரையிலும் அவனை வெறியேற்றிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. விலைமாது நிஷாவிடம் ஏற்பட்ட அவமானம் அவனுடைய ஆண்மையை, அவனுடைய காமத்தை எள்ளி நகையாடுகிறது. அந்த அவமானம் முழுமையடையாமல் அவனுக்குள் தங்கிவிடுகிறது. அந்தப் பெயர் மீது கோபம், வெறி, பழிவாங்குதல் என உணர்ச்சிகள் வடிகால் தேடிக்கொண்டே இருக்கின்றன. இங்குதான் எனக்கு மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

ஏன் நிஷா?

விலைமாதுவுக்கும் நிஷா. பேத்திக்கும் நிஷா.

அப்படிப்பட்ட உணர்ச்சிகளை வெளிக்கொணரும் அதே பெயரைத் தன் மகன் வழிப் பேத்திக்கு யாராவது வைப்பார்களா? தீபன் வைக்காமல் போனாலும் அவன் மகன் எதேச்சையாக வைத்திருக்கலாம். அல்லது எதிர்பாராமல் அந்தப் பெயர் தன் பேத்தியின் பெயராக வந்ததால், தன் சதை என்று பார்க்காமல், ஈடேறாத வேட்கையை அவள் மேல் திணிக்க அவன் எத்தனித்திருக்கலாம்.

எனக்குப் புரிந்த அளவில், இரண்டு நிஷாக்களையும் இணைக்கும் கண்ணுக்கு தெரியாத நூல் ஈடேறாத காமம். கனகாவோ கலைவாணியோ தீபனை மனதளவிலேயே வருடிச் சென்றவர்கள். அவர்கள் மீது வெறித்தனமான காமத்தை நான் வாசிக்கும்போது காணவில்லை. அங்கு எதிர்பாராத திருப்பமாக வருபவர் ரத்னா ஆண்ட்டி. இவர் போன்றவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

காமம் ஒரு சிறுநீர் கழிப்பதுபோன்ற சாதாரணமான ஓர் இயற்கை உபாதைதான். ஆனால் அதை ஒருவர் சரியாகக் கையாள முடியாமல் போகும்போது அது எப்படியெல்லாம் உருமாறுகிறது என்பதை லீகாட் காட்டுகிறது. அது ஆசையாக மட்டும் இருப்பதில்லை. அவமானமாகிறது. கோபமாகிறது. பழிவாங்கும் கருவியாகிறது. இன்னொருவரைத் துன்புறுத்தும் அதிகாரமாக வன்முறையாக பலாத்காரமாக மாறுகிறது. ரத்னா ஆண்ட்டி அழகு, வனப்பு, மகள் என வாழ்ந்தும் கணவனின் சந்தேகப் பார்வையால் கைவிடப்படுகிறாள். அவளுக்குத் தீபன் ஒரு வடிகாலாகிறான்.

தீபனோ விலைமாது நிஷாவின் ஏளனப் பார்வையால் கேலிப்பொருளாகி, அந்த அவமானத்தை வாழ்க்கை முழுவதும் விடமுடியாமல் வயதாகும் வரை கூடவே கொண்டுபோகிறான். இறுதியில் அதே பெயருடைய தன் பேத்தியிடம் அதைத் திணிக்க முயல்கிறான். அவள் அவன் கழுத்தை நெறிக்கும் வரை, தான் செய்வது தவறு என்பது அவனுக்குப் புரியவில்லை.

அங்குதான் தீபனை வெறுப்பதா, அவன் மீது பரிதாபப்படுவதா என்று என்னால் முடிவு செய்ய முடியவில்லை. ஒருவன் செய்த தவறு அவன் அனுபவித்த அவமானத்தால் நியாயமாகிவிடாது. தீபன் செய்ததும் நியாயமாகாது. ஆனால் அவன் எப்படி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான் என்பதை நாவல் நம்மைப் பார்க்க வைக்கிறது. அதுதான் என்னை அதிகமாகத் தொந்தரவு செய்தது.

வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் தன் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கும் குழந்தையாக மாறி, பேத்தி நிஷாவைத் தாயாகவும் பாவிக்கிறான் தீபன். அந்த இடத்தில் நிஷா என்ற பெயர் எனக்கு இன்னொரு பொருளைக் கொடுத்தது. ஒரு நிஷா அவனுடைய ஆண்மையை அவமானப்படுத்துகிறாள். அந்த அவமானம் அவனுக்குள் மிருகத்தை வளர்க்கிறது. இன்னொரு நிஷா அந்த மிருகத்தை எதிர்த்து நிற்கிறாள். கடைசியில் அவளிடமே அவன் குழந்தையாகிறான். நிஷா என்ற பெயர் மாறவில்லை. ஆனால் அந்தப் பெயருக்குள் தீபன் மாறிக்கொண்டே இருக்கிறான்.

கதையில் யார் யாரோ வந்து போனாலும், நிஷா என்ற பெயர்தான் அவனை முதலில் மிருகமாகவும் பின்னர் மனிதனாகவும் மாற்றுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

இப்போது மீண்டும் அந்த முதல் கேள்விக்கே வருகிறேன். யார் இந்தத் தீபன்? இவன் எதைத் தேடிக்கொண்டிருந்தான்? பெண்களையா? காமத்தையா? தன் ஆண்மைக்கான அங்கீகாரத்தையா? தன்னை ஏற்றுக்கொள்ளும் ஒருவரையா? தான் பார்த்து வளர்ந்த ஆண் பிம்பங்களை அடைய முயன்றானா? அல்லது அவனுக்கே தெரியாமல் அவன் அவனையே தேடிக்கொண்டிருந்தானா? என்னால் ஒரு பதிலை மட்டும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மீண்டும் சிகண்டி தீபன் நினைவில் வந்து போகிறான்.

ஒருவேளை அதுதானோ லீகாட். லீகாட் என்ற சொல் நாவல் முழுவதும் பயணம் செய்கிறது. என் புரிதலில் அதன் இன்னொரு அர்த்தத்தை, கையில் சிக்காமல் அதிவேகமாக நகரும் ஒரு பம்பரத்தோடு ஒப்பிடலாம். பிடிக்கப் போனால் நழுவுகிறது. நின்றுவிட்டதுபோலத் தோன்றினால் மீண்டும் சுழல்கிறது.

அப்படிப் பார்த்தால் தீபனும் ஒரு லீகாட்தான். அவன் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறான். ஒன்றைப் பிடித்துவிட்டதாக நினைக்கும் ஒவ்வொரு முறையும் அது அவன் கையிலிருந்து நழுவுகிறது. அவனுடைய காமம், ஆண்மை, அவமானம், காதல், கோபம், பழிவாங்குதல் என எல்லாமே அவனைச் சுழற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் தீபனைவிட இன்னொரு லீகாட் இந்த நாவலுக்குள் இருக்கிறது.

நவீன்.

அவரைத்தான் லீகாட் என்று சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு காட்சியில் நம்மை நிறுத்தி அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முயல்வதற்குள் இன்னொரு காட்சிக்குள் நழுவிவிடுகிறார். எங்கோ முன்பு எழுதிய ஒரு காட்சியை இங்கு கொண்டு வருகிறார். சாதாரணமாகத் தோன்றும் ஒரு கடையின் மேல்மாடியைத் திறந்து காட்டுகிறார். ஒரு மீ கோரேங் வாசனையிலிருந்து மனிதனின் வக்கிரம் வரை செல்கிறார். ஒரு நாய்க்குட்டியிலிருந்து காமம் வரை, ஒரு பதின்ம வயதினனிடமிருந்து ஒரு தாத்தா வரை ஓடுகிறார். இடையிடையே நடக்கும் காட்சிகளை எண்ணங்களுக்கு எட்டாமல் வார்த்தைகளில் துணுக்குத் துணுக்காக வைத்துவிட்டு நழுவுகிறார். நாம் பின்னால் ஓட வேண்டியிருக்கிறது. ஒருவேளை அதனால்தான் நாவலைப் படித்து முடித்த பிறகும் நான் இவ்வளவு நேரம் அசை போட்டுக்கொண்டிருக்கிறேன்.

லீகாட் தீபனின் கதை என்று படிக்கத் தொடங்கினேன். படித்து முடித்தபோது அது தீபனின் கதை மட்டுமல்ல என்று தோன்றியது. நான் கடந்து வந்த மனிதர்களில் கொஞ்சம் தீபன் இருந்திருக்கலாம். கொஞ்சம் மாறன் இருந்திருக்கலாம். பினாங்கில் நிறைந்திருக்கும் ஏதோ ஒரு கடையில் விச்சு இருந்திருக்கலாம். எல்லா கடைகளில் கூட இருந்திருக்கலாம். டப்ளின் தோட்டத்தில் வாழ்ந்த என் பக்கத்து வீட்டு அண்ணனாக கூட ஜாலம்பாரு மாமன் இருந்திருக்கலாம். சரவாக்கில் ஒரு கடையின் மேல்மாடியில் நான் கடைசியாக விட்டுவந்த அந்த இருபது வயதுப் பெண்ணும் இந்த நாவலின் ஏதோ ஒரு பக்கத்துக்குள் தை துவட்டிக் கொண்டு வந்து நின்றிருக்கலாம்.

அதனால்தான் இதைப் புனைவென்று மட்டும் சொல்லிவிட்டு என்னால் நகர முடியவில்லை. சில நாவல்களை நாம் படிக்கிறோம். சில நாவல்கள் நமக்குத் தெரிந்த உலகத்தைச் சொல்கின்றன. இன்னும் சில நாவல்கள், நாம் பார்த்துவிட்டு பார்க்காததுபோலக் கடந்து வந்த மனிதர்களைத் திரும்ப அழைத்து வந்து நம்முன் நிறுத்துகின்றன.

எனக்கு லீகாட் அப்படித்தான். புத்தகத்தின் கடைசிப் பக்கத்தையும் படித்து முடித்து விட்டேன். புத்தகத்தையும் மூடிவிட்டேன். ஆனால் என் நினைவுக்குள் எங்கோ அந்தப் பம்பரம் இன்னும் நிற்கவில்லை. லீகாட்டைப் படித்து முடித்துவிட்டேன்.

ஆனால் லீகாட் இன்னும் என்னுள் சுற்றிக்கொண்டிருக்கிறது.

(Visited 52 times, 1 visits today)