லீகாட்: விடலை பருவத்தின் இருள் பக்கங்கள் – கணேஷ் பாபு

உலக இலக்கியத்தில் பதின்ம வயதினரைக் குறித்து எழுதப்பட்ட எண்ணற்ற நாவல்கள் உள்ளன. அவை யாவும் பதின்ம வயதினரின் வாழ்வின் பல்வேறுபட்ட பக்கங்களைத் திறந்து காண்பிப்பவை. அவர்களை வளர்ந்த சிறுவர்களாக பாவித்து அவர்களின் வேடிக்கை விநோதச் செயல்களைக் கவனப்படுத்தி எழுதப்பட்ட ஹக்லிபெரி ஃபின் மற்றும் டாம் சாயரின் சாகசங்கள் போன்ற நாவல்கள் ஒருபக்கம். மறுபக்கம், பதின்ம வயதினரின் வாழ்க்கைச் சிக்கல்களை அவர்களது துயரங்களைக் கவனப்படுத்தும் ஓலிவர் ட்விஸ்ட் போன்ற நாவல்கள். மேலும் வயதடைதல் (coming of age) நாவல்கள் எனச் சொல்லப்படும் நாவல்களும் வாசிக்கக் கிடைக்கின்றன. அவர்களின் மென்காதல் கதைகளையும் (பால்ய கால சகி, விடுமுறைக் காலக் காதல் கதை), சாகசங்களையும் (பதின்) சொல்லும் நாவல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், நவீனின் லீகாட் நாவலில் பதின்ம வயதினரின் இன்னொரு பக்கம் காட்டப்பட்டிருக்கிறது. அது அவர்களுக்குள் புழங்கும் வன்முறையும் காமமுமே. இவற்றைச் சொல்லாமல் பதின்ம வயதினரின் வாழ்க்கையை முழுமையாகக் காட்டவே முடியாது. மற்ற நாவல்களில் காட்டப்பட்டிராத இந்தப் பக்கங்களைக் காட்டியிருப்பதன் மூலம் இந்த நாவல் தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது.

இந்த நாவலின் கதைநாயகன் தீபன். ஏறக்குறைய பதினாறு அல்லது பதினேழு வயதுப் பையன். வாழ்க்கை குறித்துப் பெரிதாக எந்தப் புரிதலும் இல்லாத மாணவன். பள்ளி ஒரு மாணவனை நல்ல மனிதனாக ஆக்கும் என்று நாம் அனைவருமே நம்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக, எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. தீபன் ஏழ்மையான குடும்பத்துப் பையன். தந்தை இறந்து விடுகிறார். தாயினால் அவனது தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய இயலவில்லை. லூனாஸ் கம்பத்து வீட்டில் சுற்றிலும் தோட்டம், ஆடு, கோழிகள் இருக்கும் கிராமச் சூழலில் வளர்ந்த தீபனை, பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் அச்சுறுத்துகிறார்கள். அவனது உருவம், நிறம், உடை, பேச்சு, பாவனை என யாவற்றையும் குறிப்பிட்டு சக மாணவ மாணவிகள் அவனைப் பகடிவதைக்கு உள்ளாக்குகிறார்கள். சமீப காலத்தில்தான் பள்ளிகளில் பகடி வதை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. வளர்ந்த முன்னேறிய நாடுகளுக்கே கூட இந்தப் பிரச்சனையைக் கையாள்வது மிகவும் சவாலானதாக மாறியிருக்கிறது. ஆனால், நாவல் நடைபெறும் 90-களில் அதற்கான வாய்ப்பே இருந்திருக்கவில்லை. தான் பகடிவதைக்குள்ளாவதை அவனால் பள்ளியின் ஆசிரியர்களிடம் தெரிவிக்கவே முடியாத சூழல்தான் இருந்திருக்கிறது. தீபன் அவனது அம்மாவிடம்தான் தனக்கு நேரும் துயரங்களைச் சொல்லி அழுகிறான். அவனது அம்மாவினால் அவனுக்கு ஆறுதல் மட்டுமே சொல்ல முடிகிறது. ஒரு கட்டத்தில் பகடி வதை என்பது உடலை வதைக்கும் வன்முறையாகவும் மாறுகிறது. ஒரு மாணவன் தீபனின் விதைப்பையை நசுக்கும் அளவிற்கு வன்முறை மூர்க்கம் கொள்கிறது. இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கிடையே புழங்கும் இந்த கீழ்த்தரமான மனநிலையையும் கவனப்படுத்துகிறது இந்த நாவல்.

இந்தத் துயரங்களுக்கெல்லாம் மருந்தாக தீபனுக்கு அமைகிறாள் கனகா என்ற தோழி. அவள் ஒருத்தி மட்டுமே அவனைப் புரிந்து கொள்கிறாள். அவளது இதம் தரும் தோழமையை விலைமதிப்பற்ற பொக்கிஷமாக பாவிக்கிறான் தீபன். பள்ளியே பொறாமையாக பார்க்கும் அழகியான கனகா தீபனிடம் மட்டுமே பேசுவது சக மாணவர்களிடையே தீபனின் முக்கியத்துவத்தை அதிகரித்துவிடுகிறது. கனகாவுடன் தீபன் மலையேறிச் செல்கையில், அவள் மூன்றாம் பிறை குறித்து தீபனிடம் பேசுவது நெகிழ்வூட்டும் காட்சி. மூன்றாம் பிறை தரிசனம் அரிதாகவே கிட்டும், துரிதமாக மறைந்தும் போகும். ஒரு தேவதையைப் போல தீபனின் வாழ்வை மீட்டெடுக்க வந்த கனகாவும் அந்த மூன்றாம் பிறையைப் போல துரிதமாக அவனது வாழ்வில் மறைந்து போகிறாள். அது கொடுக்கும் ஏமாற்றமும் நிராதரவும் வலியும் ஏக்கமும் தீபனை ஆழமாகப் பாதித்துவிடுகிறது.

கனகாவிற்கு நேரெதிரான கதாபாத்திரமாக மாறனைச் சொல்லலாம். கனகா தீபனை நல்வழிப்படுத்த வந்தவள், ஆனால், மாறனோ அவனை தீய வழியில் மட்டுமே செலுத்தப் பிறந்தவன் போலிருக்கிறான். சரியாக கனகா தீபனின் வாழ்வை விட்டு விலகிய பிறகு மாறன் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறான். சகல தீவினைகளையும் கீழ்மைகளையும் தீபனுக்கு அறிமுகப்படுத்துகிறான் மாறன். மாறனின் எதிர்மறையான செல்வாக்கை விட்டு தீபனால் வெளிவரவே இயலவில்லை. மாறனின் சாகசங்களில் அவன் தன் மனதைப் பறிகொடுக்கிறான். அவனைப் போலவே தானும் ஆக வேண்டும் என்று தீபன் முயல்கிறான். திருட்டு, பெண் மோகம், வன்முறை போன்ற சகல தீய பழக்கங்களிலும் புகுந்து பார்க்கும் தீபன், தன் அன்னையை விட்டு வெகு தூரம் சென்றுவிடுகிறான். ஒரு சாகசக்காரனாகத் தன்னைப் பாவித்துக்கொண்டு, அனைவரையும் அச்சமூட்டும் பேட்டை ரவுடி போன்ற தோரணையில் சுற்றிவருகிறான். கல்வி மெல்ல மெல்ல அவனிடம் இருந்து விலகிவிடுகிறது, அவனை விரும்பிய ஆசிரியர்களும் அவனை வெறுக்கத் துவங்குகிறார்கள். “பூமா” என்ற நிலையில் இருந்து லீகாட்டாக மாறிவிடுகிறான் தீபன்.  இந்த மாற்றத்தைப் படிப்படியாக காட்டிச் செல்கிறார் நாவலாசிரியர்.  வீட்டை விட்டும், பள்ளியை விட்டும் மெல்ல மெல்ல அந்நியமாகும் தீபனை மாறன் என்ற சாத்தான் முழுக்கத் தன்னுடைய ஆளுகைக்கீழ் கொண்டுவருகிறது. ஒரு கட்டத்தில் மாறனின் நட்பு என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது என்று தீபனுக்குப் புரியத் துவங்குகிறது. அதுவும் வன்முறையில்தான் முடிகிறது. அதன்பின் அவனது வாழ்க்கை முழுக்க வேறொரு பாதையில் பயணிக்கத் துவங்குகிறது.

கம்பத்தில் தான் செய்த ஒரு தவறினால் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட தீபன், வீட்டை விட்டு வெளியேறுகிறான். பினாங்கில் இருக்கும் மாமாவின் உணவகத்தில் வேலை செய்யத் துவங்குகிறான். அங்கே அவனுக்கு இன்னொரு உலகம் அறிமுகமாகிறது. சிறுவயதில் தன்னிடம் அன்பைக் கொட்டிய மாமா இங்கே முற்றிலும் அந்நியமான மனிதரைப் போல மாறியிருப்பது தீபனுக்கு  அதிர்ச்சியளிக்கிறது. அவர் ஒரு முதலாளியாக நடந்து கொள்கிறார். தீபனையும் ஒரு தொழிலாளியாக மட்டுமே நடத்துகிறார். அவரது கடையில் வேலை செய்யும் விச்சு என்பவனும் தீபனைக் கேலி செய்து கொண்டும், மாமாவிடம் அவனைப் பற்றிக் குற்றம் கூறிக்கொண்டும் இருக்கிறான். அவனது மெல்லிய கேலியும் நக்கலும் எதிர்மறையான பார்வையும் தீபனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவனது இந்தப் புதிய வாழ்க்கையில் தனது ஆகப்பெரும் எதிரியாகவே விச்சுவைப் பாவிக்கிறான் தீபன். ஆனால், நாவலின் முடிவில், விச்சு ஊரை விட்டுப் புறப்படும்போது வேறொரு மனிதனாக தோற்றம் தருகிறான். தீபனால் விச்சுவைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. மாமா கடையில் வேலை செய்த அந்தக் கொடூரமான நாட்களில் தீபனுக்கு இதம் தருபவை அருகில் இருக்கும் மளிகைக் கடையின் உரிமையாளரான ரத்னா ஆண்டியும் அவரது மகளான கலைவாணியுமே. கலைவாணி மீது மோகவயப்படுகிறான் தீபன். அவளது தாயான ரத்னா ஆண்டியைத் தன் தாயின் மறுவடிவமாகப் பார்க்கிறான். அவனது வீட்டுக்கு வெளியே அவனுக்கு அவன் இழந்த தாயன்பு கிடைப்பது ரத்னா ஆண்டியிடம் இருந்து மட்டும்தான். விச்சுவின் பிரிவிற்குப் பிறகு ரத்னா ஆண்டியின் தலைகீழ் மாற்றம் தீபனுக்கு இந்த உலகையும் மனிதர்களையும் குறித்த ஒரு பெரும் பாடத்தைக் கற்றுத்தருகிறது. முடிவில் அவன் தன் அம்மாவிடம் மட்டும்தான் தனக்குப் பரிசுத்தமான அன்பும் நிம்மதியும் கிடைக்கும், மாசடைந்து போன தன்னைச் சுத்தமாக்கும் கங்கை தனது தாய்தான் என்று நினைத்தோ என்னவோ மீண்டும் தன் ஊருக்குக் கிளம்பி தாயின் மடியில் தஞ்சமடைகிறான். இந்த இடத்தில் நாவல் முடிகிறது.

இந்த நாவலை, ஒரு சிறுவன் அவசரமாக இளைஞனாக உருமாற முயற்சி செய்து மீண்டும் சிறுவனாகவே மாறும் ஒரு சித்திரமாக வாசிக்கலாம். விடலைப் பருவத்தின் ஒளிமிக்க பக்கங்களைக் காட்டும் எத்தனையோ நாவல்களுக்கு மத்தியில் அதன் இருண்ட பக்கங்களைக் கவனப்படுத்தியிருப்பதன் மூலம் நவீனின் இந்த நாவல் முக்கியமானதொரு படைப்பாக நிலைகொண்டுவிடுகிறது. வன்முறை மற்றும் காமம் ஆகிய இரண்டு சிறகுகளின் மூலம் பறந்து சென்று வானைத் தொட்டு விடலாம் என்ற பிழையான புரிதலில் பயணிக்கத் துவங்கும் ஒருவனுக்கு வாழ்க்கை கற்றுத் தரும் பாடம் என்ன என்பதையும் இந்த நாவல் கவனப்படுத்திவிடுகிறது. விடலைப் பருவத்தில் உள்ள ஒரு பையனுக்கு ஏற்படும் முதல் சிக்கலே அவனது சிக்கலை அவனால் வெளியில் சொல்ல முடிவதில்லை. ஏனெனில், அந்தச் சிக்கலை அவனே இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. இந்தச் சூழலில் அவனை முழுமையாகப் புரிந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டியது அவனது குடும்பமும் பள்ளியுமே. ஆனால் இவை இரண்டினாலும் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் ஆகும்போது அவன் முழுமையாகவே புறக்கணிக்கப்படுகிறான். அவ்வாறு ஆகும்போது ஆமை தன் ஓட்டுக்குள் ஒளிந்து கொள்வதைப் போல அவன் தனக்குள் சுருங்கி மௌனியாகிவிடுகிறான். இல்லையேல், வயதுக்கு மீறிய அனுபவங்களைத் துய்க்க முயன்று, குற்ற உலகில் புகுந்துவிடுகிறான். இந்த நாவலின் தீபன், சிகண்டியின் தீபனைப் போல குற்ற உலகிற்குள் செல்லவில்லை. ஆனால், அவன் தன்னை ஒரு வஸ்தாதாக, பேட்டை ரவுடியாக பாவித்துக் கொண்டு அதற்குரிய துடுக்குத் தனங்களையும் குற்றங்களையும் செய்பவனாகவோ அதற்குத் துணை போகின்றவனாகவோ மாறிவிடுகிறான். இந்த நாவலோடு பல வகையிலும் ஜே.டி. சாலிங்கரின் “Catcher in the Rye” நாவலை ஒப்பிடலாம். அதிலுள்ள பள்ளி மாணவனுக்கும் கிட்டத்தட்ட தீபனுக்கு இருக்கும் பல சிக்கல்கள் இருக்கின்றன. தீபனைப் போலவே அவனும் அலைக்கழிகிறான். விடலைப் பருவம் என்பதே புகைமூட்டமான பருவம்தான். அந்தப் பருவத்தில் சரியான வழிகாட்டுதலோ ஆலோசனையோ தோழமையோ கிடைக்கப் பெறாத சிறுவர்களுக்கு எடுத்துக்காட்டான கதாபாத்திரமாக தீபன் நிலைபெற்று விடுகிறான்.

இந்த நாவலில் இடம்பெறும் மனிதர்களின் நிலைமாற்றத்தையும் வாசகனால் கவனிக்க முடிகிறது. தன் அம்மாவை நேசித்த அப்பா ஏன் இன்னொரு பெண்ணையும் சேர்த்துக்கொண்டார்? தன்னைப் பிரியமாக நேசித்த மாமா ஏன் முற்றிலும் ஒரு இயந்திர மனிதனைப் போல மாறி, ஒரு முதலாளியாக தன்னிடம் நடந்து கொள்கிறார், முற்றிலும் கேவலமானவன் என்று தான் வெறுத்து ஒதுக்கிய விச்சு முடிவில் ஏன் மேன்மையானவனாக மாறி விட்டான்? அறுநூறு வெள்ளி கொடுத்தால் வருவதாகச் சொன்ன நிஷா ஏன் கடைசி நொடியில் மனம் மாறினாள்? இவை யாவற்றையும் தீபனால் புரிந்துகொள்ள முடியவில்லை. முடிவில், ரத்னா ஆண்டி ஏன் அப்படி மாறிப்போனாள், தன் தாயின் இடத்தில் தான் வைத்திருந்த ரத்னா ஆண்டியும் கீழ்த்தரமாக மாற முடியும் என்றால் வேறு எதுதான் இந்த உலகில் மாறாதது? எல்லா மாற்றங்களையும் சகித்துக்கொண்ட தீபனால், ரத்னா ஆண்டியின் மாற்றத்தை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவளைத் தாயின் இடத்தின் வைத்து எண்ணியிருந்தது தவறு என்பதை உணர்த்திவிட்டாள். அந்தப் பாடத்தை அவள் கற்றுக்கொடுத்ததால்தான் அவளைக் கும்பிட்டு அவளை விட்டு விலகிவிடுகிறானா? அல்லது அதுவரை அவனுக்குள் புகைமூட்டமாக போக்கு காட்டிக்கொண்டிருந்த காம அனுபவத்தை முதன்முதலில் அவனுக்கு முழுமையாக வழங்கியதாலா? அந்த அனுபவத்துக்குப் பிறகுதான் அவன் முழுமையான ஒரு புரிதலை வந்தடைகிறான். காமம் துய்த்து இளைஞனாக மாறியதும் அவனுக்கு மீண்டும் சிறுவனாகவே இருந்து விடலாமோ என்ற ஏக்கம் உருவாகி விடுகிறது, அதை அவன் தன் தாயிடம் திரும்புவதால் மட்டுமே அடைய முடியும் என்று நம்புவதால் மீண்டும் தாயிடம் சென்றுவிடுகிறான். சிகண்டியில் தீபன் லூனாஸ் ஆற்றில் மூழ்கி, தாயின் மடியில் புதைந்துவிட்டால் எல்லாப் பாவமும் அழிந்துவிடும் என்று நம்புகிறான். அதுபோலவே இந்த நாவலிலும், சகல விதத்திலும் மாசடைந்த தன்னை மன்னித்துத் தூய்மையாக்கும் ஆற்றல் தன் தாயிடமே இருப்பதாக நம்பி அவளது மடியில் முகம் புதைக்கிறான்.

தீபனை நல்வழியில் மீட்கச் சாத்தியமானவர்களாக இருந்தவர்கள் இருவர்தான். ஒருவர் அவனது பள்ளியின் உடற்கட்டு ஆசிரியராக இருந்தவர். அவர்தான் தீபனுக்குள் இருந்த விளையாட்டுத் திறனைக் கண்டுகொண்டவர். “பூமா” என்று அவனை அழைத்தவரும் அவர்தான். ஆனால், வறுமை விளைவித்த இயல்பான தாழ்வுணர்ச்சியினால் அவரிடமிருந்து விலகிச் செல்கிறான் தீபன். மற்றொருவர் கனகா. அவள்தான் ஒரு தேவதையைப் போல அவனது வாழ்க்கையில் நுழைந்து அவனுக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறாள். அவள் அருகில் இருந்தவரை தீபனுக்கு காமம் குறித்த பெரிதான எண்ணங்கள் இல்லை. தூய காதல் உணர்வுதான் அவனுக்குள் மலர்ந்திருக்கிறது. ஆனால், அந்த உறவும் பாதியில் அறுந்துவிடுகிறது. கனகா என்ற தேவதையின் இடத்தை மாறன் என்ற சாத்தான் அபகரித்துக் கொள்கிறான். பூமா லீகாட்டாக மாறி விடுகிறது.

“வடிவமைக்கப்பட்ட வேகமே பேராற்றலாக மாறும், வெறும் வேகத்தினால் பயன் இல்லை” என்ற பார்வையும் இந்த நாவலில் முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்தை தீபனுக்கு அவனுடைய உடற்கட்டு ஆசிரியர் தெரிவிக்கிறார், முடிவில் ரத்னா ஆண்டியும் “வேகம் கலையா மாறணும்” என்கிறாள். முடிவில் தன் அன்னையின் மடி நோக்கி வீடு திரும்பும் தீபனிடம் அதுவரை இருந்த தவிப்பு, சந்தேகம், அலைக்கழிதல், உலகத்தின் மீதான கோபம், காமம் இவையாவும் வடிந்துபோய் ஓர் ஆழ்ந்த அமைதியும் நிதானமுமே தென்படுகிறது.

பெருநாவல்களில் காலம் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும். இந்த நாவலின் காலம் மிகக் குறுகியது. தீபன் ஊரை விட்டு வெளியேறி மாமாவின் கடையில் வேலை பார்ப்பது ஒரு மாத காலம்தான். இதற்குள் அவனுக்கு இத்தனை விதமான அனுபவங்கள் நிகழ்ந்து அவனது பார்வையிலும் ஆளுமையிலும் மாற்றம் நிகழ்ந்துவிடுகிறதா? அதே போல முடிவில் அவன் தனது தெருவிற்குள் செல்லும்போது அவன் மீது கோபத்தில் இருந்த சாரதா அக்காவும் அவளது கணவனும் திடீரென மனம் திருந்தி நல்லவர்களாக மாறுவதும் இயல்பானதாக இல்லை.

கதையின் முன்னுரையில் இருந்தும் முடிவுரையில் இருந்தும் தீபன் தன் பேத்திக்கு ‘நிஷா’ என்ற பெயரை இட்டு அவளைக் கொடுமைப்படுத்தியிருப்பது தெரிகிறது. ஆனால், ஏன் அவளுக்குக் கனகா என்ற பெயரை இடவில்லை? கனகா என்று பெயரிட்டிருந்தால் அவளை ஒரு தேவதையைப் போல நடத்தியிருப்பான் அல்லவா? இப்படிப் பல கேள்விகளைப் இப்பகுதிகள் எழுப்புகின்றன. இந்த நாவலின் ஒரே குறையாக சரியாக பொருந்திவராத இந்த முன்னுரையையும் முடிவுரையையும் சொல்லலாம். அந்தப் பகுதிகள் இல்லாவிட்டாலும் இந்த நாவலுக்கு ஒரு குறையும் ஏற்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன். சரியாகப் பொருந்திவராத அந்த முன்னுரையும் முடிவுரையும் நாவலில் இணையாமல் தொக்கி நிற்கும் உணர்வே ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளை நீக்கியிருக்கலாம் அல்லது அந்தப் பகுதிகளையும் விரிவாக்கி இந்தப் பெருநாவலாக ஆக்கியிருக்கலாம். நாவலில் இடம்பெறும் மலாய்ச் சொற்களுக்கான அர்த்தங்களையும் பின்னிணைப்பாக அளித்திருக்கலாம். மற்றபடி, ஒரு நவீன இலக்கியவாதியின் அபாரமான மொழியின் வழியாக ஒரு விடலைப் பருவ இளைஞனின் தவித்தலையும் வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவும் முக்கியமான நாவலாக லீகாட் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது எனலாம்.

(Visited 2 times, 2 visits today)