வணக்கம் நவீன்!
சிகண்டியை அரவணைத்தபடி இருக்கிறேன். படிக்க இன்னும் இறுதியாக இருப்பக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. நெஞ்சு விம்மி கண்ணிலிருந்தும் நாசியிலிருந்தும் நீராக ஊற்றுகிறது. கடும் வலி தொண்டையை அடைத்து வெளியேறாமல் அப்படியே நின்றுவிடுமோ என்று அஞ்சுகிறேன். நாம் எத்தனைக் கீழ்மையானவர்கள் என்பதை நினைவூட்டி கர்வத்தை அழிக்கும் அதே சமயம் பேய்பிடித்த இந்த அந்தகார மனத்தில் சிறு ஒளியாக சராவின் மீது சிறு துளியும் நாம்தான் என்று தேற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்.
சிகண்டியை நான் வாசித்திருக்கக்கூடாது. அதற்கான மன திடம் எனக்கில்லை.
இந்த உண்மைகள் எதையும் தெரிந்துக்கொள்ள விரும்பவில்லை. சௌகர்யமான இடத்தைவிட்டு இந்தப் பாழாய் போன மனத்தை நகர்த்தி ஏன் இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஈபுவிடம் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிற தீபன் அவரிடம் மாட்டிக்கொண்டதும் ஒருவித ஆசுவாசம் கொள்வதுபோலவே ஏன் இக்கதையைப் படிக்க வேண்டும் என்கிற வலியும் நல்லவேளையாக இப்போதாவது வாசிக்க கிட்டியதே என்ற ஆசுவாசமும் ஒருசேர எழுகிறது.
இந்த நாவலைப் படித்து முடித்த பிறகு என்னால் இச்சமூகத்திற்கு என்ன செய்துவிட முடியும் என்கிற கேள்வி சில நாள்கள் குடைந்துக்கொண்டிருக்கும். ( வேறு என்ன செய்துவிட முடியும் ? )
டோரதி பார்க்கவில்லை. மகளுக்கு பரீட்சை நடக்கிறது. முடித்ததும் இருவருமாக பார்க்கலாம் என்று சொல்லியிருந்தாள். அதற்கு முன்னர் இந்த நாவலைப் படித்துவிட்டு அவளுக்கு கதையாக சொல்ல வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். சாத்தியமில்லை என்பதை புத்தகத்தின் பாதி அத்தியாங்களில் புரிந்துக்கொண்டேன். எங்கெங்கிருந்தோ ஓடி வரும் கிளை நதிகள் இறுதியில் ஒன்றாகி கடலில் சங்கமிப்பதுபோல கதையில் பல கிளைக்கதைகள் தோன்றுவதும் அது இணைந்து வருவதும் ஆற்றொழுக்காக இருக்கிறது.
டோரதி பார்த்த பிறகு என் கருத்து என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நாவல் படமாக வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணம் தோன்றாமலில்லை. சௌகாட் எனக்குள் பிரமாண்ட திரைக் காட்சியாகத்தான் இருக்கிறது.
குண்டர் கும்பல், போதைப் புழக்கம், கடைகள், டேபிள் டாக், ஈபு, ஷா, சிகண்டி, வீரன், வைட் கோப்ரா, தீபன், சரா அமிர்கான் எல்லாமே திரைக்கதைக்கான கச்சிதமான இடங்களும் கதாப்பாத்திரங்களாகவும் இருக்கின்றன.
நல்லவேளையாக இந்தப் புத்தகத்தை உங்களிடம் வாங்கினேன். ( நூலகத்தில் பார்த்துவிட்டு பெரிய புத்தகமாக இருக்கிறதே வாசிக்க நேரம் இருக்குமா என்று யோசித்து எடுக்காமல் இருந்திருக்கிறேன்.) வளர்ந்ததும் என் மகள் வாசிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதற்குள் அவள் இன்னும் படித்து தன் வாசிப்பை வளர்த்துக்கொள்வாள் என்ற பேராசையும் நம்பிக்கையும் எழுகிறது.
