இலங்கையில் ஏழு நாட்கள்…4

மறுநாள் காலையிலேயே கிழம்பினோம். தங்கும் விடுதியில் பசியாறை. ஏ.பஹாருடின் அன்று இரண்டு கோயில்களுக்கு எங்களை அழைத்துப் போகப் போவதாகச் சொன்னார். ஒன்று நாக பூசனி அம்மன் கோயில் மற்றது ஒரு சிவன் கோயில். நயினா தீவில் இருக்கும் நாக பூசனி அம்மன் கோயிலுக்குச் சென்று திரும்பவே அரை நாள் பிடிக்கும் என்பதால் சிவன் கோயிலுக்குப் போகும் திட்டத்திலிருந்து நானும் மணிமொழியும் விலகிக் கொண்டோம். அன்று மதியத்துக்குப் பிறகு இலக்கிய நண்பர்களைச் சந்திக்கத் திட்டம்.

பேருந்து நயினா தீவை நோக்கி நகர்ந்தது. பயணம் நெடுகிலும் போரினால் சிதிலமடைந்த வீடுகளைப் பார்க்க முடிந்தது. குண்டுகள் வெடித்து தனது உட்பகுதிகளை திறந்து காட்டும் வீடுகள், மொட்டையாகிவிட்ட பனைமரங்கள், இன்னமும் கன்னிவெடி உள்ள நிலபரப்புகள் என எங்கும் ஒரு போர் நடந்து முடிந்த சூழலை நினைவு படுத்தியப்படி இருந்தது. சில இடங்களில் அனாதைகளாகி கூட்டம் கூட்டமாக நிர்க்கும் மாடுகளைப் பார்க்க முடிந்தது. உரிமையாளர் இல்லாத மாடுகள்தான் என்றுதான் நினைக்கிறேன். ஏற்கனவே அக்கினி எழுதிய ‘மண்ணே உயிரே’ எனும் நூலில் அவ்வாறுதான் படித்துள்ளேன். (தவறாக இருந்தால் நண்பர்கள் விளக்கம் தரலாம்) மணிமொழி ‘பாவம் அவை தன் எஜமானனைத் தேடுது போல’ என வருந்தினாள். எனக்குச் சட்டென அந்நாடு ஒரு தேடுபவர்களின் பிரதேசமாகத் தோற்றம் கண்டது. முன்பு பிரபாகரனைத் தேடிய இராணுவம், பிள்ளைகளைத் தேடும் பெற்றோர்கள், பெற்றவர்களைத் தேடும் பிள்ளைகள்… அங்கு யாரோ யாரையோ  தேடிக்கொண்டே இருப்பதாகப் பட்டது. பேருந்து இரண்டு பக்கம் கடல் இருக்க நடுவில் பிரயாணம் செய்து நயினா தீவை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

இடையில் சில சிறுவர்கள் எங்கள் பேருந்துக்குப் பின்னால் ஓடிவருவதை உணர முடிந்தது. அவர்கள் கைகளில் மலர்கள். ஒரு பை ஐம்பது ரூபாய் என நினைவு. ‘வாங்கிக்கோங்க அண்ணா’ என கேட்டனர். எங்கள் வழிகாட்டி டோன் ‘வாங்காதே. பணம் கொடுத்து பழகிவிட்டால் பின்னர் அவர்கள் பள்ளிக்குப் போக மாட்டார்கள்’ என்றான். அதற்கு முதலில் அவர்கள் சாப்பிட வேண்டும் எனத் தோன்றியதால் வாங்கிக்கொண்டோம். நாக பூசனி அம்மன் கோயிலுக்குச் செல்ல கடல் தாண்ட வேண்டும். நான் இக்கோயிலைத் தேர்ந்தெடுக்க இதுவே பிரதானக் காரணம். கடல்.

தயாராக இருந்த ஃபெர்ரியில் குழுவோடு ஏறினோம். தமிழர்கள்தான் ஓட்டினார். நான் ஃபெர்ரின் மேல் தளத்துக்கு வந்துவிட்டேன். உள்ளே இருந்து ஓட்டையிலெல்லாம் எனக்குக் கடலை ரசிக்க பத்தாது. கப்பல் பணியாளர் ‘ஆர்மி பார்த்த எங்களைத் தான் திட்டும்’ என ஓரிரு முறை சொல்லிப்பார்த்து பேசாமல் இருந்துவிட்டார். அவ்வப்போது  கடந்து சென்ற கப்பலில் இருந்த இராணுவத்தினர் கொஞ்சம் விரைப்பாகத்தான் பார்த்தனர். நான் எழுத்தாளன் என்பதும் அவன் இராணுவம் என்பதும் கடலுக்குத் தெரியாது. விழுந்தால் உள்ளிழுத்துக்கொள்ளும். அப்படி ஒருவன் உள்ளே விழுந்ததும் இறந்ததையும் கூட கடல் அறியாது. கடலுக்கு ஒன்றும் தெரியாது. அது முழுக்க முழுக்க ஏகாந்தத்தில் இருப்பது. கடலை வைவது குறித்தும் கடலை போற்றுவது குறித்தும் கூட கடலுக்கு அக்கறை இல்லை. ஆனால் கடல் எல்லா மனிதனுக்கும் எல்லாவற்றையும் உள்வாங்கி கொண்டு மகிழ்ச்சியில் பொங்குவதை மட்டுமே திரும்ப திரும்ப நினைவு படுத்துகிறது.

நாக பூசனி அம்மன் கோயிலில் கொஞ்சம் கூட்டம். ஆங்காங்கே கன்றுக்குட்டிகள். தொட்டால் அசையாமல் நின்றன. வெளியில் இருந்த ஐஸ் கடைக்காரரிடம் பேச்சுக்கொடுத்தேன். கிறிஸ் மனிதன் குறித்து பேச்சு வந்தது. எப்போது என்ன நடக்குமோ எனும் கவலை அவர் பேச்சில் தெரிந்தது. “முன்பு புலிகள் இருந்தபோது நிம்மதியாக இருந்தீர்களா?” என்றேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு “என் மாமனையும் பெரியப்பாவையும் அவர்கள்தான் கொன்றனர்” என்றார். ஏன் எனக் கேட்டேன். வேறொரு இயக்கத்தில் இருந்ததற்காக பெரியப்பாவையும் இராணுவத்திற்குத் தகவல் சொன்னதால் மாமனையும் கொன்றதாகக் கூறினார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து “ஆனால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருந்தது. இரவில்கூட தைரியமாகச் சென்று வருவார்கள். இப்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” என்றார்.

அது ஒரு கொடுமையான மனநிலை. விடுதி ஊழியர்களிலிருந்து நான் பேசிய தமிழர்கள் பலரிடம் இவ்வாறான மனநிலையே இருந்தது. பலசாலி நண்பனாக இருப்பவன் எப்போது வேண்டுமானாலும் கழுத்தில் கத்தியை வைப்பான் என்றாலும் பிறர் அவ்வாறு வைக்காமல் அவன் அவ்வப்போது பாதுகாப்பாக இருப்பதால் அவன் கரம் பற்றி திரிவது போன்ற மனநிலை அது. ஏழு நாள் அங்கிருந்து ஒரு ஒட்டுமொத்த மனநிலையைக் கணிக்க எனக்குத் தகுதியில்லை என்றாலும் ‘வாழ்ந்தால் போதும்’ என வாழ்பவர்களிடம் பேசியதில் நான் பெற்ற அனுபவம் இதுதான்.

எல்லோர் போலவும் புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்டதும் அவரும் பதறினார். என்னைச் சந்தேகத்தோடு பார்த்தார். ஒரு ஐஸ்கிரிமைக் கொடுத்து பணம் வேண்டாம் எனக்கூறி அனுப்பினார். அது அன்பா… பயமா என இப்போது வரை புரியவில்லை.

 

– தொடரும்

(Visited 163 times, 1 visits today)

One thought on “இலங்கையில் ஏழு நாட்கள்…4

  1. For those who are keen on Elam,this posting will give some points.Look at the ferry journey, it is not a pleasant journey unlike Pangkor or Langkawi.
    The maternal instinct on cows is very strong they often cry for their babies.The calf and cow seeks each other.Cattle,cow in particular look for its manger and farm unlike dog seeks its owner.Some nights when we drive we bound to come across cows and bulls stands at some corners!It was their original place but they lost their place to developments.It is widely reported, in Selangor when the Highland Estate was reformed into Bukit Tinggi town ship, the cows and the bulls comes back and stands at some sites of Bukit Tinggi it seems! its original place!

Leave a Reply to Raj Sathya from Kuala Lumpur, Kuala Lumpur, Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *