லட்சியம்

எல்லோருடைய லட்சியங்களையும் கேட்டப்பின்
நான் எதிர்காலத்தில்
ஒரு நோயாளியாக முடிவெடுத்தேன்

நோயின் தன்மைகள்
நோயின் தாக்கங்கள்
நோயின் தலைவிதிகள்
குறித்தெல்லாம்
அவ்வப்போது குறிப்பெடுத்துக்கொண்டேன்

அது வரும் நேரம்
அதற்கு முன்பான அறிகுறிகள்
அது சென்றபின்பு ஏற்படும் வெறுமைகள்
அது விட்டுச்செல்லும் சுவடுகள்
மீண்டும் வர வாய்ப்பிருக்கின்ற எச்சரிக்கை தொணிகள்
அதற்கான பயங்கள்
இயலாமையின் கோபங்கள் என
அறுபது சொல்லுக்கு இரண்டு குறைந்தன

நான் ஒரு நோயாளியாக முடிவெடுத்தது குறித்து
அரசியல்வாதியாக முடிவெடுத்தவர்களும்
பத்திரிகையாளராக முடிவெடுத்தவர்களும்
எழுத்தாளராக முடிவெடுத்தவர்களும்
கவிஞராக முடிவெடுத்தவர்களும்
அவசர அவசரமாக தங்கள் கருத்துகளைத் தொகுத்தனர்

ஒரு நோயாளியாக முடிவெடுப்பது
இறுதியில் எங்கு சென்று சேர்க்கும்
என்பதே அவர்களின் இறுதி கேள்வி

ஒரு நோயாளியால்
எங்கும் சேர முடியும்

நோயாளிகளின் உலகம் பெரியது
நோயாளிகளுக்கான
மருத்துவமனைகள் அவற்றில் இருக்கும்
படுக்கை அறைகள், மருந்துகள், சாதனங்கள்,
இருக்கைகள், தாதிகள், மருத்துவர்கள், நன்கொடையாளர்கள்
நோயாளிக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள்
நோயாளியைப் பார்த்து பயப்படுபவர்கள்
நோயாளியை நிந்திப்பவர்கள்
என பலரும் நோயாளிகளை
நம்பி வாழ்வதைக் கூறினேன்

எல்லா லட்சியங்களும்
மிக நாசுக்காக நோயாளியாகும்
இறுதி முடிவையே தன்னுள்ளே கொண்டுள்ளன.

எல்லா மதங்களும்
நோயாளிகளைக் காட்டியே தங்கள்
சக்தியை நிரூபிக்கின்றன.

எல்லா தத்துவங்களும்
நோய்மையின் முடிவிலிருந்தே
தொடங்குகின்றன.

இருந்தாலும்
நோயாளியாவது எப்படி லட்சியமாகும்
என்றே நண்பர்கள் கேட்டனர்

அவர்களுக்குக் கடைசி வரை புரிவதில்லை
சரணடைவதற்கான சவால்களும்
சமாதானங்களும்.

(Visited 120 times, 1 visits today)

One thought on “லட்சியம்

Leave a Reply to ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி from Japan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *