இலங்கையில் ஏழு நாட்கள்…5

 

கோணேஸ் , கர்ணன், சேனாவுடன்

மதிய உணவுக்குத் தங்கும் விடுதி வந்ததும் ஒரு பிரச்சனை எழுந்தது. ஏ.பஹாருடின் சொல்லிச்சென்ற உணவுவகைகள் தயாரிக்கப்படாமல் வேறு வகையான உணவுகள் இருந்தன. ‘எனக்கு என் வாக்குதான் முக்கியம்’ எனக்கூறிய பஹாருடின் உடனடியாகத் தங்கும்விடுதியை மாற்றினார். எங்கள் பேருந்து யாழ் டில்கோ ஹோட்டலுக்குச் சென்றது. முன்னதைவிட அதிக வசதி கொண்ட பெரிய தங்கும்விடுதி. பேருந்திலிருந்து பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் போது கர்ணன் அழைத்தார். டில்கோ ஹாட்டலுக்கு வழி கேட்டார். நான் மலேசியாவிலேயே வழி சொல்ல திணறுபவன். என் சமத்தை அவரிடம் சொல்ல அவகாசம் இல்லாததால் என் நினைவில் இருந்த யாழ் பொதுஅஞ்சலகத்தைக் குறிப்பிட்டு அதன் பின்புறம் என்றேன். நான் பெட்டியை அறைக்கு ஏற்றிக்கொண்டிருந்தபோது யோ.கர்ணன் சக நண்பர்களுடன் வந்திருந்தார். சட்டென யோ.கர்ணன் முன்னமே பழக்கமானவராகத் தோன்றினார். தொலைபேசியிலும் முகநூலிலும் மட்டுமே பேசிய ஒருவர் அவ்வாறு தோன்றுவது ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஷோபா சக்தி அப்படித் தோன்றியுள்ளார். இலங்கையர்கள் முகம் அவ்வாறானதுதான் போல.

யோ.கர்ணனுடன் சேனவராயன் மற்றும் கோணேஸ் என இரு தோழர்கள் இருந்தனர். இருவரும் கனடாவிலிருந்து விடுமுறையில் வந்திருந்தனர். மணிமொழியையும் அழைத்துக்கொண்டு யாழ் நூலகம் சென்றோம். பார்வையிடும் நேரம் மாலை ஐந்து என்றனர். எனவே அருகில் இருந்த சுப்ரமணியம் பூங்காவில் நுழைந்தோம். கிறிஸ் மனிதன் பற்றி கேட்டேன். “இப்போது நான் ஐவராக நடந்துகொண்டிருக்கிறோம். இதுவே நீங்கள் தனியராக நடந்தால் நீங்கள்தான் கிறிஸ் மனிதன் என உள்ளே பிடித்து போட்டுவிடுவார்கள்” என்று பதில் வந்தது. எதற்கும் இருக்கட்டும் என கொஞ்சம் ஒட்டியே நடந்தேன்.

யாழ் நூலகத்தில்

சேனவராயன் மற்றும் கோணேஸ் விரிவாக உரையாடினர்.  அவர்கள் இயங்கும் ‘தேடகம்’ எனும் அமைப்பு , ஈழத் தமிழர்களின் அரசியல் தேவை, அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் அதிருப்திகள் என பேச்சு சுவாரசியமாக இருந்தது.  எனக்குக் கேட்கப் பிடித்திருந்தது. பொதுவாக இதுபோன்ற உரையாடல்களில் அதில் பங்குபெரும் நபர்கள் மிக முக்கியம். ஓர் உரையாடல் அது தொடங்கிய இடத்திலிருந்து உச்சம் நோக்கி செல்லவேண்டும். பேசுபவருக்கு கேட்பவர் அமைத்துக்கொடுக்கும் வெளி அதற்கான சுவாரசியத்தை ஏற்படுத்தும். நான் சொல்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை. நான் சென்றதே தெரிந்துகொள்ளதான் என்பதால் கேட்டுக்கொண்டிருந்தேன். மேலும் மலேசிய அரசியல் சூழல் குறித்து அறிய அத்தோழர்களும் ஆவல் காட்டவில்லை.

 

ஐந்து மணி நெருங்கும்போது யாழ் நூலகம் சென்றோம். உடன் கர்ணன் மட்டும் இருந்தார். சேனவராயன்மற்றும் கோணேஸ் கிளம்பியிருந்தனர். யாழ் நூலகத்தினுள் சென்று நூல்களைப் பார்த்தாலும் என் நோக்கம் அதுவல்ல. நூலகத்தைப் பார்ப்பதற்கு எந்த நூலகம் வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் யாழ் நூலகத்தினுள் பிரவேசிப்பதே ஒரே வரலாற்று அனுபவமாகவே எனக்குப் பட்டது.

ஓலைசுவடிகள்

இலங்கை போர்ச்சூழலில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவம். 1981 ல்இந்நூலகம் எரிக்கப்பட்டபோது இது கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது என்பது வரலாறு.  அவ்வாறான ஒரு வரலாற்று தடத்தில் நடப்பது ,நிர்ப்பது, தொடுவது என அனைத்திலுமே ஒரு சொல்லமுடியாத தொன்மம் தொற்றிக்கொள்கிறது. நூலக அதிகாரியைச் சந்தித்தோம். மலேசியர் எனக்கூறி நூலகத்தை முழுமையாகப் பார்க்க அனுமதி கேட்டோம். கூடவே ஏசுராசாவின் பெயரைப் பயன்படுத்தியதால் நல்ல வரவேற்போடு நூலகப்பொறுப்பாளர் வேறொரு பாதையில் மேல்தளத்துக்குக் கொண்டுச்சென்று பழங்காலத்து ஓலைச்சுவடிகளைக் காட்டினார். அவ்வெழுத்துகளை வாசிக்க இயலவில்லை. தொட்டுப்பார்த்தோம். மீண்டும் தொன்மம்.

கோட்டையில்

பிறகு யாழ் கோட்டைக்கு நடந்தே சென்றோம். இலங்கை மற்றும் மலேசிய இலக்கியங்களை எவ்வாறு இருசாராரும் வாசிக்கவும் விவாதிக்கவும் வைக்கலாம் என்பது எங்கள் உரையாடலின் மையமாக இருந்தது. யோ.கர்ணனின் காலை அப்போதுதான் கவனித்தேன். பாதம் செந்நிறமாக இருந்தது. ஏதும் தீப்புண் காயமா எனக் கேட்டபோதுதான் அது உண்மை கால் அல்ல எனத்தெரிந்தது. விடுதலைப்போரில் அவர் ஈடுபட்டவர் என்பதும் அதில் காலைப் பறிகொடுத்தவர் கர்ணன் என்பதும் அப்போதுதான் தெரிந்தது. பேச்சு ஈழப்போர் அனுபவம் தொடர்பாக மாறியது. நிறைய விடயங்களைக் கேட்டுக்கொண்டுவந்தேன். ஒரு போர் பூமியில் போரில் பங்கெடுத்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பது சுவாரசியமாக இருந்தது. கோட்டையில் நல்ல காற்று.

பண்ணை பாலம்

அங்கிருந்து பார்த்தால் பண்ணை பாலம் தெரிந்தது. கடலுக்கு அப்புறத்தில் ஷோபாசக்தியின் ஊரான அல்லைப்பிட்டி இருக்கிறது என்றார். அப்பாலத்தின் வழியாகச் சென்றால் அல்லைப்பிட்டி போகலாமா என்றேன். மாலையாகிவிட்டதால் காலம் அனுமதிக்காது என புரிந்தது. பாலத்தை மட்டும் ஒரு படம் எடுத்துக்கொண்டேன். அந்தத் தேர்ந்த கதைச்சொல்லி அங்கிருந்துதான் கதைகளை அள்ளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். காற்றில் கரைந்துள்ள எண்ணற்ற கதைகள் கடல்பரப்பில் அழைவதாகப் பட்டது.

– தொடரும்

(Visited 178 times, 1 visits today)

One thought on “இலங்கையில் ஏழு நாட்கள்…5

Leave a Reply to mogan from Pulau, Perak, Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *