ரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. ‘வாசிக்கும் அனைவரும் வாசகனா?’ எனக்கேட்டால் இல்லை என்பதே பதில். பல முக்கியமான இலக்கியப்பிரதிகளை வாசித்த நண்பர்கள் எனக்கு உண்டு. ஒரு சிறுகதையை வாசித்து முடித்தபின் அவர்களால் அதில் உள்ள தகவல்களை மட்டுமே சொல்ல முடிவதைப் பார்க்கிறேன். தொடக்கத்தில் அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர்களால் மொழிவழியாகக் கற்பனைசெய்ய முடியவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவர்களால் சொற்களில் இருந்து ஒரு சூழலை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கான பயிற்சியும் இல்லை. சொற்கள் வழியாக ஒன்றைத் தெரிந்துகொள்ள மட்டுமே செய்தனர். தெரிந்துகொண்டதைத் தகவல்களாகச் சேமித்து ஓரிரு வாக்கியங்களில் கூறினர். அதையே விமர்சனமாகவும் நம்பினர். கடைசிவரை அவர்களால் ஒரு சிறுகதையினுள் நுழைந்து அதன் நுட்பத்தை தரிசிக்கவே முடியாது.