மலேசியச் சூழலில் சமகாலத்தில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து நான் எனது அபிப்பிராயங்களை அவ்வப்போது கூறியே வருகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகளை மட்டுமே பிடிவாதமாக மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கும் சூழலில், பிறர் படைப்புகள் குறித்து பேசுவதில் பகையைச் சம்பாதித்ததுதான் அதிகம் என்றாலும் எனக்கு அது முக்கியமான பணியாகவே தெரிகிறது. பொதுவாகவே மலேசியச் சூழலில் சமகாலப் படைப்புக் குறித்த எவ்வித உரையாடலும் நடப்பதில்லை. நூல் வெளியீடுகளில் ‘முகஸ்துதிக்கு’ நாகரீகமான பெயராக நூல் விமர்சனம் என்ற பகுதியை இணைத்துவிடுகிறார்கள். யார் மிக அதிகமாக ‘பட்டர்’ பூசுவார்கள் என்று கணக்கெடுப்பெல்லாம் எடுத்து, அதில் அதிகப் புள்ளிகள் பெறுபவரே நூல் விமர்சகராக பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.