நாவல் எனும் கலைவடிவம் குறித்து விரிவாகவே தமிழ் இலக்கியச் சூழலில் பேசப்பட்டுவிட்டது. நாவல் என்பது கயிறு திரிப்பதுபோல முறுக்கிச் செல்வதல்ல; அது கூடை முடைவது போன்ற பின்னல் என்ற ஜெயமோகனின் உவமை நாவலின் கலைவடிவம் குறித்து எளிமையாகப் புரிந்துகொள்ளும் சித்திரம். இது நாவலின் வடிவம் குறித்த சட்டகமல்ல. நாவலின் சாத்தியம் குறித்தது. எளிமைப்படுத்தியும் குறுக்கியும் வாழ்வின் சிக்கலை நாவலில் காட்டுவதென்பது நாவல் கலை கொடுத்துள்ள சலுகைகளை ஓர் எழுத்தாளன் எவ்வகையிலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே. சிறுகதைகளுக்கே உரிய ஒருமையும் நாவலில் இருக்க வேண்டிய உள்இழைகளும் கொண்ட குறுநாவல்கள் மலேசியாவில் நாவல்களாக பல காலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ‘செலாஞ்சார் அம்பாட்’ அதில் ஒன்று.