ராமின் திரைப்படங்களின் கதை என்பது வாழ்வில் நாம் கண்டுகொள்ளாமல் அல்லது கண்டுகொள்ள விரும்பாமல் அகலும் தருணங்களை கேள்விகளாக முன்னிறுத்துபவை. அந்தக் கேள்விகளுக்குப் பதிலைத் தேடி ஆராய்வதே அவரது திரைக்கதை. திரைப்படத் தொழில்நுட்ப நுணுக்கங்கள் பற்றியும் அதைச் சார்ந்த இசை மற்றும் ஒளிப்பதிவின் பாங்கு பற்றியும் அறியாத நான் சினிமா எனும் கலை வடிவத்தின் மொழி என்னுள் கடத்தும் உணர்ச்சிகளையும் திரைக்கதை தன்னுள்ளே கொண்டுள்ள அரசியலுக்கும் உளவியலுக்கும் எவ்வளவு நேர்மையாக உள்ளது என்பதையும் மட்டுமே கவனிக்கிறேன். தொடர்ந்து ராமின் திரைப்படங்களைப் பார்த்து வருபவனாக எனக்கு அவர் நேர்மையான இயக்குநர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.