ஜெயமோகன்; விஷ்ணுபுரம் விருது; எழுத்தாளனை போற்றுதல்


தமிழக எழுத்தாளர்களில் நேரில் அதிக நெருக்கமாக நான் உரையாடியது ஜெயமோகன் மற்றும் மனுஷ்ய புத்திரனிடம்தான். இருவரும் மலேசியா வந்துள்ளனர். இருவருடனும் நெடும்பயணங்கள் செய்துள்ளேன். இருவருக்கும் உள்ள ஒற்றுமையாக நான் கருதுவது பிற படைப்பாளிகள் குறித்த அவர்களின் அக்கறை.

ஒரு பதிப்பாளராக மனுஷ்ய புத்திரன் நூல்களைப் பதிப்பிப்பதிலும் அதை வெற்றிகரமாக விநியோகிப்பதிலும் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்க செய்யும் அவரது செயல்களினால், தன் ஆழ் மனதின் தெளிவிலிருந்து விலகி முரணாகும் தருணம் குறித்த அந்தரங்க அழுத்தங்களை அவரைத் தொடரும் வாசகனாக அறிய முடிகின்றது.

ஜெயமோகன் என்ற பெயரை நான் அறிந்த தருணம் மனுஷ்ய புத்திரன் இவ்வாறு என்னிடம் கூறினார். “ஜெயமோகன் தமிழ் இலக்கியத்தின் நகர்ச்சி”. அப்போது நான் தமிழ்நாட்டில் அவர் வீட்டில்தான் தங்கியிருந்தேன். சதா பிற  எழுத்தாளர்களின் தனித்த வாழ்வை உற்று நோக்கி  அவதூறு பேசிப்பழகிய கூட்டத்தையே பார்த்த எனக்கு மனுஷ்ய புத்திரம் பேச்சு ஆறுதலாக இருந்தது. அதேபோல பல கவிஞர்கள் குறித்து அவர்கள் கவிதை குறித்து நெகிழ்ந்து பேசுபவராக மனுஷ்ய புத்திரன் இருந்தார்.

பின்னர் மூன்று முறை ஜெயமோகன் மலேசியா வந்தபோது அவர் பேச்சின் அடிநாதமாக இருந்தது இலக்கியமும் தத்துவங்களும்தான். நான் முன்பே பலமுறை சொன்னதுபோல அவர் கருத்துகளில் மாற்றுகருத்துகள் இருந்தாலும், இலக்கியம் / தத்துவம் குறித்த அவரது விரிந்த பார்வை ஆச்சரியமானது. (ஒருவேளை தமிழ்நாட்டில் அப்படி நிறைய பேர் இருக்கலாம். மலேசியாவில் அதுவரை அப்படி யாரையும் காணத எனக்கு ஆச்சரியம்தானே) மிகவும் சுவாரசியமாக ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டலாம்.

வல்லினம் நிகழ்ச்சியில் நான் ஜெயமோகனை ‘நாவல்’ குறித்து பேசப் பணித்திருந்தேன். அந்தத் தலைப்பை நிகழ்வுக்கு 1 மணி நேரத்துக்கு முன்பு கொடுத்திருந்தேன். ஜெயமோகன் மிகச்சுவாரசியமாகப் பேசினார். அந்தப் பேச்சு அவரது இலக்கிய உரைகளில் சிறந்தது என சில நண்பர்கள் பதிவிட கண்டுள்ளேன். அதன் இறுதியில் பலரும் நாவல்கள் குறித்து கேள்வி கேட்டனர். கேள்வி கேட்டவர்கள் குறிப்பிடும் தமிழ் நாவல்களை அவர் ஏன் அவசியமாகக் கருதுகிறார் அல்லது கருதவில்லை என கதாப்பாத்திரங்களின் பெயருடன் கூற ஆரம்பித்தார். பின்னர் மலாயா பல்கலைகழக பேராசிரியர்கள் சிலர் ஆங்கில நாவல்கள் குறித்துகேட்க அதற்கும் அந்த நாவலாசிரியர்கள் எழுத்து குறித்து விரிவாக பேசினார். இதே நிலைதான் நாடுதழுவிய அளவில் செய்த பயணங்களில் சங்க இலக்கியம் தொட்டு கேட்கப்பட்ட கேள்விக்கும் நிகழ்ந்தது.

ஒரு பதிப்பாளனுக்கு ஏற்படும் பண / மன நெருக்கடியில்லாமல் மிகச்சுதந்திரமாக அவர் செய்யும் இலக்கியச் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கது. குறிப்பாக விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்வு. எவ்வித இதழ்/ இயக்க பலமில்லாமல் தொடரும் இச்செயல்பாடு ஒரு எழுத்தாளன் தான் வாழும் காலத்தில் இன்னொரு எழுத்தாளனை போற்றி அவன் படைப்பை முன்னெடுக்கும் முயற்சிகளில் முக்கியமானது. மலேசிய சூழலில் இதுபோன்ற முயற்சிகளே தொடங்கப்பட வேண்டும் என நான் விரும்புவதுண்டு.

மலேசியாவைப் பொருத்தளவில் நூலை வெளியிட்டு அதை பெரும் வாசகர் பரப்புக்குக் கொண்டு செல்லும் அமைப்புமுறை இல்லை. சில எழுத்தாளர்கள் தங்களின் அரசியல் செல்வாக்கால் நூலை வைத்து பணம் பண்ண முடியுமே தவிர அது வாசகனை அடைவதே இல்லை. அல்லது ஒரு மூத்த எழுத்தாளருக்கு வாழ்நாள் முழுக்க தனது ஆளுமையைப் பேசி முடிப்பதிலேயே காலம் கரைந்துவிடுகிறது. அது ஒரு தொற்று நோயாக சில இளைய எழுத்தாளர்களுக்கும் பற்றிக்கொண்டுள்ளது. ஜெயமோகன் தொடர்ந்து பிற இலக்கிய ஆளுமைகளை முன்னெடுக்கிறார்…அவரது பேச்சின் மூலம் அவர்களது படைப்புகளை மீட்க நினைக்கிறார்; மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறார்.

இலக்கியம் ஏதோ ஓட்டப்பந்தயப் போட்டி, அதில் ஓடி ஒன்றாவதாக வரவேண்டும் என நினைபவர்களுக்கு… இலக்கியம் என்பது ஒரு சமூக மனதின் பிரதிபளிப்பு என மீண்டும் மீண்டும் சக எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி நிரூபிக்கிறார். இது மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்தான். பொறாமைகளின் காரணங்களால் அவதூறை பேசிக்கொண்டிருக்கும் கூட்டத்துக்கு மத்தியில் ஜெயமோகனின் இந்தப்பகுதியை பின்பற்றக்கூடிய ஒன்றாகவே கருதுகிறேன். அதுவும் பூமணி. ‘பிறகு’ , ‘வெக்கை’ நாவல்கள் குறித்து விரிவான கட்டுரை எழுத இதை எழுதிக்கொண்டிருக்கும் நிமிடம் யோசிக்கிறேன்.

பொதுவாகவே ஒரு பொது நிகழ்வில் சில முரண்பாடான கருத்துகள் இருக்கும். ஜெயமோகன் தொடர்ந்து மணிரத்னம், பாரதிராஜாவை விருது வழங்குபவர்களாக அழைப்பது கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. இயக்குனர்களுக்கு விருது தரும்போது எழுத்தாளர்கள் கையில் வாங்க விரும்புகிறார்களா என்ன… ஒரு எழுத்தாளன் கையில் விருது பெருவதுதானே எழுத்தாளனுக்கு உவப்பானது.

 

நாள் : 18.12.2011

நேரம் : மாலை 6.00

இடம் : கீதா ஹால், ரயில் நிலையம் எதிரில், கோவை

(Visited 131 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *