பறையனாக இருந்துவிட்டுப் போவதில் உனக்கு என்ன பிரச்சினை?

ம.நவீன் மலேசியத் தமிழ் எழுத்தாளர். மலேசியாவில் கெடா மாநிலத்தில் பிறந்தவர். தற்போது கோலாலம்பூரில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் பணிபுரிகிறார். 17 வயதிலிருந்து இதழியல் துறையில் இயங்கிவருகிறார். 23-வது வயதில் ‘காதல்’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து மலேசியாவில் தீவிர எழுத்தாளர்களை ஒன்றிணைத்தவர். 10 இதழ்களுக்குப் பின் ‘காதல்’ இதழ் நின்ற போது இலக்கிய ரீதியிலான புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் விருப்பில் சுயமாக ‘வல்லினம்’ எனும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். ‘வல்லினம்’ மலேசியத் தீவிர இலக்கியத்திற்கு இன்று ஒரு மையமாகத் திகழ்கிறது. தமிழர்களின் பிற கலைத்துறைகளின் பங்களிப்பை வெளிக்கொணர கலை இலக்கிய விழா எனும் நிகழ்வினையும் வருடம் தோறும் நடத்தி வருகிறார் நவீன். ஓவியம், நிழல்படம், மேடை நாடகம் என தொடங்கி இன்னும் எழுத்தாளர்கள் நூல்களை பதிப்பிப்பது இவரது பணியில் ஒன்று. ‘சர்வம் பிரம்மாஸ்மி’ எனும்  கவிதை தொகுப்பும் ‘கடக்க முடியாத காலம்’ எனும் கட்டுரை தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. 2010ன் சிறந்த கவிஞருக்கான மாநில அரசாங்கத்தின் விருதைப் பெற்றவர். இனி நவீனுடனான நேர்காணல் : – ஆதவன் தீட்சண்யா

உங்களது முன்னோர்கள் எத்தனை தலைமுறைகளுக்கு முன்பு மலேசியாவுக்கு புலம்பெயர்ந்தனர் அல்லது புலம்பெயர்க்கப்பட்டனர்?

என் அப்பா தன் தாத்தாவும் பாட்டியும் மலேசியாவில் பிறந்தவர்கள் என்று சொல்வார். அப்படிப் பார்க்கும்போது அதற்கும் முந்தைய தலைமுறை மலேசியா வந்திருக்கலாம். அவர்களின் பூர்வீகம் குறித்த எந்தப் பதிவும் இல்லை. அப்பாவின் அப்பாவை சிறுவயதில் பார்த்த ஞாபகம் உண்டு. அம்மாவின் தந்தை தஞ்சையில் பட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர். அம்மாவின் தாயார் திருநெல்வேலிப்பகுதி. இருவரும் இங்குதான் (மலேசியாவில்) திருமணம் செய்து கொண்டனர். தமிழகத்தில் எவ்வகையான உறவுத் தொடர்பும் இல்லை. அதைக் கண்டுப்பிடிக்கப் பாட்டியிடம் கேட்டால் தாத்தா அடிக்கடி ‘தஞ்சா ஊரு ஜில்லா பட்டுக்கோட்டை தாலுக்கா’ எனச் சொல்வதாக மட்டுமே தன் நினைவிலிருந்து மீட்டெடுப்பார்.

புலப்பெயர்வுக்கு இசைவான மனநிலையை ஏற்படுத்தியதில் அன்றைய காலத்தில் நிலவிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சூழலின் வகிபாகம் என்ன?

புலம்பெயர்வு என நீங்கள் சொன்னதை 1786ல் வெள்ளையர்கள் பினாங்குத் தீவினைக் கைப்பற்றியதிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்கிறேன். 1786இல் பினாங்குத் தீவு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்த பின்பே தமிழர்களின் குடியேற்றங்கள் அங்கு ஏற்பட்டுள்ளன. எனினும் 1833 பின்னரே அதிக அளவில் இந்தியர்கள், தமிழர்களின் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. அதற்கு முன்பும் தமிழர்களின் வருகை இருந்திருக்கிறது. வியாபார நோக்கில் வந்த அவர்கள் வருகை குறித்த முறையான, முழுமையான பதிவுகள் இல்லை. அரசரத்தினம் கி.மு 500 க்கு முன்பிருந்தே தமிழர் – மலாயா தொடர்பு இருந்தது என்று History of Malaya and Singapore நூலில் சொல்கின்றார். வணிகத் தொடர்பாய் இருந்த அது பண்பாட்டுத் தொடர்பாய் மாறி பின்னர் அரசியல் தொடர்பாக மாறியுள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் தென்னவர்களின் ஆதிக்கம் நெடுங்காலம் நிலைத்து இருந்ததற்குரிய சான்றுகள் சமயக் கோட்பாடுகளாய், வழிபாட்டு உருவங்களாய், சிற்பங்களாய், கட்டடங்களாய்ப் பதிந்தன. அவற்றின் எச்சங்கள் இன்றும் காட்சியளிக்கின்றன். அவற்றில் ஒன்றாக பூஜாங் பள்ளத்தாக்கைச் சொல்வேன். அதன் அடையாளமும் கொஞ்சம் கொஞ்சமாக அழியும் அச்சம் உண்டு.

உங்கள் கேள்வியின்படி புலம்பெயர்வுக்கு இசைவான மனநிலை ஏற்பட மிக முக்கியக் காரணம் தமிழகத்தில் நிலவிய வறுமையும், நிலக்கிழார்களிடம் அகப்பட்டுத் துடித்த கொத்தடிமை நிலையும், சாதிய ஒடுக்குமுறையும் என மலேசியத் தமிழர் வரலாறு குறித்து எழுதியுள்ள ஐயா முரசு நெடுமாறன் அவர்கள் குறிப்பிடுகிறார். அதோடு ஆங்கிலேயர்கள் இந்தியர்களைக் கவர சொல்லிய பொய்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு முன் மலேசிய வரலாற்றுத்துறை அறிஞர்கள் பலர் செய்த பங்களிப்பின் சாரத்தையே நான் எனது இந்த பதிலில் பயன்படுத்தியுள்ளதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

பூஜாங் பள்ளத்தாக்கிற்கும் தமிழர்களுக்குமுள்ள வரலாற்றுப் பிணைப்பு எ த்தகையது? தமிழர்களோடு தொடர்புடையது என்பதால் அழியட்டும் என்று விடப்பட்டுள்ளதா அல்லது வேறு காரணங்கள் உண்டா?

இந்தக் கேள்விக்கும் நான் என் வாசிப்பின் மூலம் கிடைத்த தரவுகளைக் கொண்டு பதில் கூறினால் இன்னும் தெளிவாக இருக்கும் என நினைக்கிறேன். நான் வரலாற்று ஆய்வாளன் அல்ல. ஆனால் ஒரு சிறுபான்மை இனம் தனது இருத்தலை எப்போதும் வலுப்படுத்திக்கொள்ள வரலாற்று அறிவை அவசியமானதாகக் கருதுகிறேன்.

SIR RICHARD WINSTEDT என்பவர் MALAYA AND ITS HISTORY எனும் நூலில் குறிப்பிட்டது போல மலேசிய வரலாறை ஐந்து பாகங்களாகப் பிரிக்கலாம்.

முதலாவது : பண்டைய காலம் (35,000 கி.மு – 100 கி.மு )

இரண்டாவது : இந்து அரசாட்சி (100 கி.மு – 1400 கி.பி)

மூன்றாவது : இஸ்லாமிய ஆட்சி (1400 – 1511 )

நான்காவது : அந்நிய ஆட்சி (1511 – 1957)

ஐந்தாவது : சுதந்திர மலேசியா (1957- தற்பொழுது வரை)

பாடப் புத்தகங்களில் மலேசிய வரலாறு மலாக்கா நகர் தோற்றத்திலிருந்து தொடங்குகிறது. அதாவது இஸ்லாமிய ஆட்சி.

பரமேஸ்வரன் என்ற இந்து மன்னன் ஏறத்தாழ 1400 – 1403 ஆண்டுவாக்கில் மலாக்கா சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் . அக்காலக்கட்டத்தில் அவர் மூலம் இந்துமதம் மலாக்காவில் பரவியிருந்தது. அப்போது வட சுமத்திராவில் பாசாய் எனும் ஓர் சிற்றரசு இருந்தது. (சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது) இந்தப் பாசாய் சிற்றரசின் இளவரசியைப் பரமேஸ்வரா 1409 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின் இஸ்லாமிய சமயத்தில் இணைந்தார் என்றும் அதன் பின்னரே தன் பெயரை ‘இஸ்கந்தார் ஷா’ என்றும் மாற்றிக்கொண்டார் என்பதும் வரலாறு. பரமேஸ்வரன் இஸ்லாம் மதத்தைத் தழுவிய பின்னரே அங்கு வாழ்ந்த மலாய் சமூகத்தினர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் மலாக்காவில் சுல்தான் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பரமேஸ்வரா இஸ்லாம் மதம் தழுவியதற்கான சில ஐயப்பாடுகளையும் வரலாற்று ஆசிரியர்கள் முன்வைப்பதுண்டு. அதற்கான தெளிவான ஆதரங்கள் இல்லாதது அதற்கு காரணம். எது எப்படி இருந்தாலும் பரமேஸ்வரா ஓர் இந்து மன்னன் என்பதும் அவர் ஶ்ரீ விஜய பேரரசு வழி வந்தவர் என்பதும் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மலேசிய வரலாற்றில் இவ்வுண்மை மிக நுணுக்கமாக மறைக்கப்படுகிறது. அதில் எந்த இடத்திலும் பரமேஸ்வரர் என்பவர் ஓர் இந்து மன்னன் என்றும் அவர் மூலம் மலாக்காவில் இந்து மதம் பரவியிருந்தது என்றும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மிகக் குறைந்த வார்த்தைகளில் பரமேஸ்வர மன்னனைக் கடந்து, அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியபின் பெற்ற ‘இஸ்கந்தார் ஷா’ எனும் பெயர் மூலமே முன்வைக்கப்படுகிறார்.

இங்கு நான் இதை விரிவாகச் சொல்ல காரணம் உண்டு. மலாக்கா வரலாற்றுக்கு முன்பே மேலே நான் கூறிய இரண்டாம் காலகட்டத்தில் கங்கா நெகரா, லங்கசுக்கா, பான் பான், ஶ்ரீ விஜயா, கெடா துவா போன்ற அரசாங்கங்கள் இந்து, பௌத்த மதத்தை உள்ளடக்கி மலேசியாவில் இருந்துள்ளன. ஆனால் அவற்றை ஒட்டிய விரிவான முழுமையான தேடல்களோ பதிவுகளோ இல்லை.

வரலாறு அதிகாரத்தின் உள்ளவர்கள் தேவைக்கு ஏற்ப மாற்றப்படும் ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி, வழி பூஜாங் பள்ளத்தாக்கின் நாகரிக காலம் முதலாம் நூற்றாண்டு என கூறுகிறது. அக்காலக்கட்டத்தில் தென்கிழக்காசிய நாடுகள் தமிழ் கலாச்சாரத்தை உள்வாங்கியிருந்தது. தென் இந்திய அரசுகளான பல்லவ, சோழ தமிழ் மன்னர்களின் காலகட்டம் அது. தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் அதற்கான சான்றுகள் உண்டு. குறிப்பாக ‘சண்டி’ எனப்படும் இந்து-பௌத்த கோயில்களைக் குறிப்பிடலாம்.

இத்தகைய சண்டிதான் மலேசியாவில் பெரிய அடையாளங்கள் இல்லாமலும் தொடர்ந்து ஆய்வுக்குட் படுத்தப்படாமலும் உள்ளது. இது குறித்து மிக விரிவாக ஆய்வு செய்தவர் டாக்டர் ஜெயபாரதி. புணரமைக்கப்பட்ட சண்டிகள் பூஜாங் பள்ளத்தாகிலிருந்து சுங்கை பட்டாணியிலுள்ள மெர்போக் தொல்பொருள் காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நான் பலமுறை அவ்விடத்திற்குச் சென்றதுண்டு. என் சிறுவயதில் நான் அங்கு சென்றதற்கும் இப்போதைக்கும் நிறைய மாற்றங்களைக் காண்கிறேன். எஞ்சிய சில லிங்கங்களும் சிற்பங்களுமே தற்போது உள்ளன. ஒருவேளை அரசியலற்ற, பாராபட்சமற்ற தொல்பொருள் ஆராய்ச்சி அவ்விடத்தில் நடைபெற்றால் நிறைய உண்மைகளைக் கண்டடையலாம். அது மலேசிய வரலாற்றை மாற்றும். அந்தப் புதிய வரலாற்றை அரசியலும் அதிகாரமும் விரும்புமா என்பதுதான் கேள்வி.

தமிழர்களைப்போலவே இந்தியாவின் பிறபகுதிகளிலிருந்தும் மலேசியாவுக்கு மக்கள் பிடித்து வரப்பட்டனரா?

தமிழர்களுக்கு அடுத்து மிகுதியான எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தவர்கள் மலையாளிகள். இவர்களில் பெரும்பாலோர் தோட்டங்களில் கிராணிகளாகவும் மருத்துவமனை உதவியாளர்களாகவும் பணியாற்றினர். கல்வி அவர்களுக்கு அவ்வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தது. தமிழர்களைப்போல தெலுங்கர்களில் பெரும்பாலோர் தோட்டப் பாட்டாளிகளாகவே இருந்தனர். வரலாற்றின் பல இடங்களில் இவர்களும் நல்ல உழைப்பாளிகள் என்றே எழுதி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கர்களும் மலையாளிகளும் பிறபகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்டனர். கன்னடர்கள் நேரடியாக கன்னடத்திலிருந்து அல்லாமல் தமிழ்நாட்டிலிருந்தே அழைத்து வரப்பட்டனர். வடவர் பிரிவில் வங்காளி, நேப்பாளி, குஜராத்தி, பஞ்சாபி, போன்றோர் அடங்குவர். பஞ்சாபிகள் பெரும்பாலும் காவல் துறையைச் சார்ந்திருந்தனர். இது இந்தியர்கள் மலேசியாவுக்குப் பிடித்து வரப்பட்ட சுருக்கமான வரலாறு.

இதேபோல சீனர்களின் தாயகமும் அவர்கள் புலம்பெயர வேண்டிய நிலையில் இருந்தது. அவர்களின் உழைப்பு அவர்கள் உயர்வை முன்வைத்திருந்தது. வலிமை வாய்ந்த நாட்டின் பின்னணியால் தமிழர்கள்போல அவர்கள் ஆங்கிலேயர்களிடம் சிரமப்படவில்லை.1898க்குப் பின் சீனர்கள் ஈய வயல்களின் பணி புரிந்தனர். அவர்கள் பெற்ற ஊதியமும் தமிழர்கள் ஊதியத்தைவிட அதிகம்.

தேயிலைத்தூரில் தேங்காயும் மாசியும் (கருவாடு) புதைந்திருக்கும்- தேவையானதை எடுத்துக்கொள்ளலாம் என்றும்கூட பொய்களைச் சொல்லி ஆள்கட்டி கங்காணிகள் இலங்கைக்கு தமிழர்களை அழைத்துப் போயிருக்கின்றனர். மலேசியாவுக்கு அழைத்துப்போக இப்படிக் கிளப்பிவிடப்பட்ட பொய்க் கதைகள் எதுவும் உண்டா?

சில கதைகளை வாய் மொழி மூலமாகக் கேள்விப்பட்டுள்ளேன். ரப்பர் மரங்களை உலுக்கினால் பணம் கொட்டும் என்று கூறி ரப்பர் காடுகளில் வேலைக்குச் சேர்த்ததாகவும் மலாயாவில் காடுகளை அழிக்க, குருவிகளை விரட்டும் வேலை என அழைத்து வந்ததாகவும் கதைகள் உண்டு. மேலும் தங்கும் இடம், போக்குவரத்து, உணவு அனைத்துமே இலவசம்! இலவசம்! இலவசம்! என இலவசமாக பொய்கள் விடப்பட்டுள்ளன. சிலர் ரயில் தண்டவாளம் போடும் வேலை எனத் தெரிந்தே வந்துள்ளனர். ஆனால் சுரங்கம் குடைந்து, காடு அழித்து தண்டவாளம் போட வேண்டும் என்பது இங்கு வந்த போதுதான் தெரிந்திருக்கிறது. இன்று கற்றவர்களே அரசாங்கம் சொல்லும் பொய்களை நம்பும்போது, அன்று கல்வியறிவில்லாத மக்கள் அத்தகைய பொய்களை நம்பி வந்தது சாத்தியமாகக் கூடியதுதான். இந்த ஏமாற்றத்தைச் சொல்லும் ஒரு நாட்டுப்புறப் பாடலை இங்கே நினைவுபடுத்தலாம்.

 

‘பகடியான வார்த்தையிலே

பால்மரத்தில் பணம்காய்க்கும்

ஆவடியில் முந்திக்கிட்டா

அதிர்ஷ்டமும் தானேவரும்

இப்படியும் ஜாலாக்கு

எப்படியும் போட்டாங்க

பொய்சொல்லிக் கப்பலேத்திப்

பொழப்பெல்லாம் போச்சுங்க

கருங்கடல் தாண்டிவந்து

கைகட்டி நின்னோமுங்க

கல்பமும் உண்டுன்னு

கையேந்தி ஊமையானோம்!’

தோட்டத் தொழிலில் இருந்து வெளியேறிவிடாமல் – கொத்தடிமைத்தனத்தை நீட்டிப்பதற்குக் கையாளப்படும் சுரண்டலுத்திகள் எப்படியானவை?

இன்று அத்தகைய நிலை இல்லை அல்லது குறைந்துள்ளது. பல இளைஞர்கள் இன்று நகரங்களை நோக்கி நகர்ந்துவிட்டனர். தோட்டங்கள் இன்று அந்நியத் தொழிலாளர்களின் வேலையிடங்களாகி விட்டன. ரப்பர் தோட்டங்கள் அழிக்கப்பட்டு செம்பனை பரவியுள்ள நிலங்கள்தோறும் இந்தோனேசியர்களே அதிகம் பணி புரிகின்றனர். அவர்கள் அத்துறையில் வல்லுனர்களாக உள்ளனர். ஆரம்பக் காலங்களில் ஆங்கிலேயர்கள் நீங்கள் சொன்ன சுரண்டல்களை மிக நாசுக்காகவே செயல்படுத்தினர். அவர்களின் முக்கிய நோக்கம் தமிழர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது மட்டுமல்ல. பல்லின மக்களோடு எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதும்தான். அதற்காக முன்பு ஒவ்வொரு தோட்டத்திலும் ஒரு கூத்து மேடை, கள்ளுக்கடை அமைத்தார்கள். கோயில்களும் கட்ட அனுமதிக்கப்பட்டது. வேலை முடிந்து வந்ததும் தொழிலாளர்கள் கள் குடித்து உறங்கவும் கூத்துப் பார்க்கவுமே நேரம் சரியாக இருக்க, வெளி உலகைப் பற்றி அறியும் ஆவல் அவர்களிடம் இருக்கவில்லை. ஒவ்வொரு தோட்டத்திலும் தமிழ்ப் பள்ளிகளை அமைத்ததினால் தமிழர்கள் கல்விக்காகக் கூட தோட்டத்தை விட்டு அகலாமல் இருந்தனர். இனவாரியான பகுப்பும் இனங்களுக்கிடையில் தொடர்பு இல்லாமையுமே கொத்தடிமைத்தனத்திற்கான முதல் பலம்.

நாடுவிட்டு நாடுபோன உங்களது முன்னோர்கள் மலேயாவில் எளிதாக தங்களைப் பொருத்திக்கொள்ள முடிந்ததா? திரும்பி விடுவதற்கான எத்தனிப்புகள் எதுவும் நடந்திருக்கிறதா?

எப்படி முடியும்? காடுகள் நிரம்பியிருந்த அப்போதைய மலாயாவில் பாட்டாளிகளின் இருப்பிடங்களும் தொடக்கத்தில் காடுகளில்தான் அமைக்கப்பட்டிருந்தன. காட்டு மரங்களைக் கொண்டும் அத்தாப்பு மட்டைகளைக் கொண்டும் பரண்போன்று உயரமாய்க் கட்டப்பட்ட நீண்ட குடிசைகளே இவர்களுக்கு இருப்பிடமாய் இருந்துள்ளது. மழைநீர், ஆற்று நீர், கிணற்று நீரே குடிநீர் வசதியைக் கொடுத்துள்ளது. சிமிழ் விளக்கும் பந்தங்களும் இரவுக்கு ஒளி கொடுத்தன. மருத்துவ வசதியும் இல்லை. வேலை 12 மணி நேரம். இதில் மலேரியா, வாந்திபேதி போன்றவற்றால் நிறைய பேர் மாண்ட கதை உண்டு. இதில் எப்படி அவர்களால் தங்களைப் பொறுத்திக்கொள்ள முடியும்? இந்நிலையில் மலேசிய மேட்டுக்குடிகளின் (யாழ்பாணத் தமிழர்கள் மற்றும் மலையாளிகள் ) உதவியுடன் ஆங்கிலேயர்கள் தமிழர்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் பிடித்துவைத்து ஒடுக்கியிருக்கின்றனர். இந்நிலை சுமார் 200 ஆண்டு காலமாவது நீடித்திருக்கும் எனக்கணக்கிடப்படுகிறது.

தமிழர்கள் அங்குள்ள பிற சமூகத்தவரோடு கலந்து வாழ்வதற்குண்டான சாத்தியப்பாடுகளும் தடைகளும் என்னென்ன? யாழ்ப்பாணத் தமிழர்களும் மலையாளிகளும் இன்னமும் அதிகாரத்தின் இளைய பங்காளிகளாக இருந்து இந்தியத் தமிழர்களை ஒடுக்குகின்றனரா அல்லது மனமாற்றம் அடைந்துள்ளனரா?

சாத்தியப்பாடுகள்தான் அதிகம். எனக்கு சில மூத்த எழுத்தாளர்களோடும் ஆய்வாளர்களோடும் தொடர்ந்த உரையாடல்கள் உண்டு. அவர்கள் கூற்றுப்படி ஆரம்பக்காலம் தொட்டே தமிழர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் நல்ல உறவு இருந்திருக்கிறது. அது இன்னமும் உள்ளது என்பதே என் எண்ணம். நான் இடைநிலைப்பள்ளியில் படித்த காலங்களில் ஓர் இனவெறியனாகச் சுற்றியிருக்கிறேன். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டிருக்கிறேன். அதெல்லாம் முதிர்ச்சி அடையாத வெவ்வேறு இன இளைஞர்களின் கோபங்களாகத்தான் இன்று தெரிகிறது. ஒருவகையில் மலாய்க்காரர்களும் அதிகார பீடங்களால் ஒடுக்கப்படுதலுக்குள்ளாகின்றனர். மலேசியாவில் இனங்களுக்கிடையிலான அதீத நெருக்கத்தை காட்டுவது எவ்வாறு ஓர் அரசியல் தந்திரமோ அவ்வாறே அவற்றுக்கிடையிலான பகைமை இருப்பதுபோலக் காட்டுவது. மலையாளிகளும் யாழ்ப்பாணத் தமிழர்களும் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் உள்ளனர் எனலாம். குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள். மலேசியாவின் இரண்டாம் நிலை பணக்காரரான ஆனந்த கிருஷ்ணன் யாழ்பாணத் தமிழர்தான்.

வரலாற்றின்படி வண்ணார் பண்ணை, சுழிபுரம், வயாவிளான், புலோலி, வட்டுக்கோட்டை போன்ற பிரதேசங்களிலிருந்து பெருமளவில் இங்கு தபால், கச்சேரி, கல்வி, போக்குவரத்து, மருத்துவம் போன்ற அரசாங்க சேவைகளில் இடைநிலை ஊழியர்களாகப் பணியாற்றவென்று யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் ஆரம்பத்தில் அழைத்து வரப்பட்டுள்ளர். இந்தியத் தொழிலாளிகளுக்கும் ஆங்கிலத் துரைமார்களுக்கும் இடையில் மொழிவழி இணைப்பாளர்களாக இவர்கள் பணியாற்றியதாக வரலாறு உண்டு. மொழி வழியில் தமிழராக இருந்த போதிலும் மலேசியாவில் குடியேறிய இந்தியத் தமிழ் தொழிலாளர்களிடையே யாழ்ப்பாணத் தமிழர்கள் குட்டி அடக்குமுறையாளர்களாகவும் ஆங்கிலத் துரைகளின் செல்வாக்கைப் பெறும் நோக்கில் அவர்களின் நலன் பேணுபவர்களாகவுமே விளங்கி உள்ளனர். பின்னாளில் மலேசியாவில் எழுதப்பட்ட இலக்கியங்களில் அந்த ஆதிக்க தமிழர்களைப் பார்க்க முடிகிறது.

ந.பழநிவேலு எனும் கவிஞர் 1947ல் எழுதிய கவிதையில் இப்படிச் சொல்கிறார் :

அயலான் ஒருவன் என்னை

‘அடிமை இந்தியனே’ என்று அழைக்கும் பொழுதும்

அதே அடிமை இந்தியன் என்னைத்

‘தாழ்ந்த குலத்தான்’ என்று சாற்றும் பொழுதும்

அடிமையின் பயங்கர தளையைக் காணும் பொழுதும்

… என் மனம் துடிக்கிறது!

இதுபோல சில சிறுகதைகளும் யாழ்பாணத் தமிழர்களின் மேலாதிகத்தைச் சொல்பவைகளாக உள்ளன.

லண்டனில் இருக்கும் நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்கள் மிக விரிவாக மலேசிய இலக்கியத்தில் இலங்கை தமிழர்கள் பங்களிப்பை ஒரு கட்டுரையில் விளக்குவதன் வழி சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமாக அவர்களின் செயல்பாட்டை அறிய முடிகிறது. அவர் கொடுத்த நூல் பட்டியலின்படி அதிகமும் சைவசித்தாந்தம் முதலான இந்து நெறிகளில் தீவிர பிடிப்புள்ளவர்களாக அப்போது குடியேறிய ஈழத்தவர்கள் இருந்துள்ளனர். மலேசியா மண்ணில் தம்மை உயர்குலத்து சைவ வேளாளர்களாக அடையாளப்படுத்துவதற்கு இத்தகைய இலக்கியப் பதிவுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கலாம்.

என்.செல்வராஜாவின் ஆய்வுப்படி மலேசியாவில் முதல் நாவல் ஈழத்தமிழரால் இயற்றப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடுகிறார். மலேசியாவின் முதல் நாவலாகக் கருதப்படும் வெங்கடரத்தினம் அவர்கள் எழுதிய ‘கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி’ என்ற நாவல் 1917 -இல் வெளிவந்துள்ளது. ஆனால் க.சுப்பிரமணியம் என்ற ஈழத் தமிழர் எழுதிய ‘பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம் 1918 -இல் வெளியாகியுள்ளது. இதன் முதல் பாகம் கிடைக்கும் பட்சத்தில் மலேசிய நாவல் வரலாறு மாற்றப்படலாம் என்கிறார்.

இதுதவிர தவத்திரு தனிநாயகம் அடிகள் மலாயா பல்கலைக்கழகத்தில் செய்த தமிழாய்வுப் பணியின் பங்களிப்பு முக்கியமானது. அதேபோல மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர்களாகவிருந்த இரண்டாம் தலைமுறை ஈழத்தவர்களான தேவபூபதி நடராஜா, திலகவதி போன்றவர்கள் அறிவார்ந்த படைப்பிலக்கியப் பணிகளையும், ஆன்மீகத் துறை வெளியீடுகளையும் காலத்திற்குக் காலம் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள் என்பது வரலாறு. இதேபோல நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் மிக முக்கிய ஆளுமையான எம்.ஏ.நுஃமான் அவர்கள் வருகைதரும் பேராசிரியராக மலாயா பல்கலைக்கழகத்தில் ஓராண்டுகள் பணியாற்றியது என் போன்றவர்களுக்குப் பெரும் ஊக்கம் கொடுத்தது.

இன்று யாழ்பாணத் தமிழர்களும் மலையாளிகளும் தமிழர்களை ஒடுக்க வழியில்லை. மலையாளிகளில் பலர் மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு வளமான பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என்பதையும் மறுக்கமுடியாது. ஆனால் இன்றைக்கு அவர்களின் கலை, அரசியல்ரீதியான பங்களிப்பு பெரிதாக இல்லை என்பதே வருத்தம். மேலும் திருமண பந்தங்கள் போன்ற விடயங்களில் அவர்கள் மலேசியத் தமிழர்களை நெருங்காமலேயே உள்ளனர்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் மலேசியத் தமிழர்களுடன் நெருங்காமல் இருப்பதற்கு அடிப்படையான காரணங்கள் எவை?

சாதிய மற்றும் மேட்டுக்குடி மனப்பான்மைதான். வேறெந்த காரணங்களைச் சொன்னாலும் அது மேல்பூச்சாக இருக்கும். சஞ்சிக் கூலிகளாக வந்த தமிழர்களை ஆங்கிலேயப் பிரதிநிதிகளாய் இருந்து அடிமைகள் போல நடத்தியது ஈழத் தமிழர்களும் மலையாளிகளும்தானே. அக்காலகட்டத்தில் அவர்கள் செய்த கொடுமைகளை இன்று மூத்த தலைமுறைகள் வெறுப்போடு சொல்வதைக் கேட்பதுண்டு. இன்று பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள் மேட்டுக்குடி வர்க்கமாகவே இருக்கின்றனர். நானறிந்து அவர்களில் பலர் சீன இனத்தவர்களைத் திருமணம் செய்யக்கூட தயாராக உள்ளனர். ஒரு மலேசியத் தமிழன் அவர்கள் பார்வையில் இன்னமும் அடிமைப் பரம்பரைதான்.

அப்படியானால் தமிழர் ஒற்றுமை என்ற முழக்கத்தின் பொருள்தான் என்ன?

ஒரு பொருளும் இல்லை என்பதுதான் அதன் பொருள். சஞ்சிக்கூலிகளாக வந்த தமிழர்களே இன்று சாதிய மனப்போக்கினால் பிளவுபட்டிருக்கும் சூழலில் ‘தமிழர் ஒற்றுமை’ என்பதெல்லாம் அவ்வப்போதைய அரசியல் கோஷங்கள்தான்.

புதிய நிலப்பரப்பில் நிலைகொள்வதற்கு தமிழர்கள் நடத்திய போராட்டங்கள் எவ்வகைப்பட்டவை?

போராட்டமா? இப்போது இருப்பது போலவே அப்போதும் எதிர்காலம் குறித்த எந்தக் கவனமும் இல்லாமல்தான் வாழ்ந்திருக்கின்றனர். வேலை செய்யும் வரை தங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் தோட்டத்தை ‘எங்க தோட்டம்’ எனப் பெருமையோடு கூறுவதை இன்றும் மலேசியத் தமிழர்களிடம் பார்க்கலாம். தோட்ட நிர்வாகம் 55 வயது வரை வேலை செய்ய மட்டுமே அனுமதி கொடுத்திருந்தது. அதன்பின் அவர்கள் விரட்டப்படுவர். இதில் தோட்டத் துண்டாடல் நடந்தபோது நிலை இன்னும் மோசம். விலங்குகளைப்போல இருக்க இடம் இல்லாமல் இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டனர். புறம்போக்கு நிலங்களில் குடிசை அமைத்து சிலர் வாழ்ந்தனர். விரல் விட்டு எண்ணும் அளவுக்கே சேமநிதி மற்றும் சேமிப்பின் மூலம் சில தமிழர்கள் தங்கள் வாழ்வுப் போராட்டத்திலிருந்து தப்பியிருக்கின்றனர். தமிழர் மத்தியில் எழுந்த முதல் விழிப்புணர்வாக 1940 எழுந்த கிள்ளான் தொழிலாளர் புரட்சியை வேண்டுமானால் குறிப்பிடலாம். இதற்கு வித்திட்டவர் ஆர்.எச்.நாதன்.

கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சியின் கோரிக்கைகள் என்னவாக இருந்தன? அக்கிளர்ச்சியின் விளைவு என்ன?

ரப்பர் தோட்டங்கள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் அது. தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தது போலவே சீனர்களும் செய்தனர். ஒரு நாளைக்கு 400 மரங்கள் சீவ வேண்டும் என்பது வெள்ளையன் கட்டளை. சீனர்கள் போலவே இந்தியர்களும் 400 மரங்கள் சீவினர். ஆனால் அப்போதே ஆங்கிலேயன் தமிழர்களை ஏமாளிகள் எனக் கண்டுக்கொண்டிருக்க வேண்டும். முன்பே நான் சொன்னது போல தங்கள் உரிமைகளைக் கேட்க சிந்தனை இல்லாதவர்களாக இருந்ததால்தானே அவர்கள் தமிழர்களை பிடித்து வந்தனர்.

இந்நிலையில் 1939ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் 50 காசு. ஜனவரி 1940திற்குள் சீனத் தொழிலாளர்களின் சம்பளம் 75 காசு. ஜனவரி 1941குள் அவர்களின் சம்பளம் 85 காசாக உயர்ந்தது. சில தோட்டங்களில் சீனத் தொழிலாளர்களின் சம்பளம் $1.20 காசாக ஏற்றம் கண்டது. ஆனால், தமிழ்த் தொழிலாளர்களின் சம்பளம் 50 காசிலேயே நின்றது.

1941இல் தான் இந்திய ஆண்களுக்கு 60 காசாகவும் பெண்களுக்கு 55 காசாவும் உயர்த்தப்பட்டது என்று Jim Hagan and Andrew Wells (University of Wollongong) எழுதிய ‘The british and rubber in Malaya, c1890 – 1940’ என்ற கட்டுரை குறிப்பிடுகிறது.

இந்த நிலையிலும், தோட்ட முதலாளிகள் தமிழ்த் தோட்ட பெண் தொழிலாளர்களிடம் சம்பளமில்லாமல் வேலை வாங்கினார்கள். இச்சுரண்டலுக்குத் தோட்ட முதலாளிகள் இட்ட பெயர் “சந்தோஷ வேலை”. அமைதியான வேண்டுகோள்களின் பலனாகக் காலனித்துவ முதலாளிகள் வேண்டா வெறுப்பாக 5 காசை வாழ்க்கை படிச் செலவு பிப்ரவரி மாதம் 1941ஆம் ஆண்டிலிருந்து கொடுக்க முன் வந்தனர். அந்தச் சுரண்டலைக்கூட அறியாமல் தமிழர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தமிழகத்திலிருந்து வந்து இங்கு தமிழ் நேசன் நாளேட்டில் பணியாற்றிய ஆர்.எச்.நாதன்தான் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் மிக மோசமாகத் தொடர்ந்து சுரண்டப்படுவதினால் சினமடைந்து தம் நண்பர்களோடு இணைந்து இந்தியத் தோட்டத் தொழிலாளர்களைப் பிப்ரவரி மாதம் 1941ஆம் ஆண்டில் வேலை நிறுத்தங்களில் ஈடுபடுத்தினார்கள்.

1937 இல் சீனர்கள் நடத்திய வேலை நிறுத்தத்திற்கு பின்னர் பல்வேறு சீனர்களின் தொழிற் சங்கங்கள் உருவாகின. அதைப் பின்பற்றி இந்தியர்களும் தொழிற்சங்கங்களைத் தொடங்க வேண்டும் என்று அப்போது மலாயா வந்திருந்த ஜவகர்லால் நேரு அறிவுறுத்தினார். அவற்றில் ஒன்றான 1940களில் தொடங்கப்பட்ட கிள்ளான் வட்டார இந்தியர் சங்கம் (KDIU) சீனர்களுக்கு சமமான ஊழியம் தர வேண்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலை நிறுத்தங்களை நடத்தியது. (The british and rubber in Malaya, c1890 – 1940′) காந்தி தொப்பி அணிந்திருந்த வேலை நிறுத்தக்காரர்கள் வெறும் சம்பள உயர்வு மட்டும் கோரவில்லை. தங்களது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முன்னேற்றத் திற்குத் தடையாக விளங்கிய அனைத்தையும் அகற்ற வேண்டும் எனக் கோரினார்கள். இந்தியர்களின் விழிப்பு ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

5.5.1941ஆம் ஆண்டில் ஆர்.எச். நாதன் கைது செய்யப்பட்டார். மே மாதம் 7ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கிள்ளான் தொழிலாளர் துறை முன் கூடி நாதனை விடுவிக்குமாறு கோரினர். மே மாதம் 10ஆம் தேதிக்குள் சில 6,000 இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வேலை நிறுத்தம் தொடர்ந்து பரவி மே மாத மத்திக்குள் சிலாங்கூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட எல்லா இந்தியத் தொழிலாளர்களும், நெகிரி செம்பிலானில் சில தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருந்தனர். மொத்தத்தில் 20,000 இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் 120 தோட்டங்களில் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் அனைவரும் கிள்ளான் நகரில் ஒன்று கூடியுள்ளனர். அக்காலக் கட்டத்தில் வாழ்ந்தவர்களின் பதிவின்படி கிள்ளான் நகரம் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததைப்போல் தோன்றியதாம். வேலை நிறுத்தக்காரர்கள் கலகத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி, இராணுவத்தினருக்கு கலகக்காரர்களை சுடும்படி உத்தரவிடப்பட்டது. இராணுவத்தினர் சுட்டதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இத்துடன் வேலை நிறுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. ஆட்சேபம் மற்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்த காலத்தில் போலீசார் அவசரகால சட்டத்தின் கீழ் 389 பேர்களைக் கைது செய்தனர். 21 பேர் நாடு கடத்தப்பட்டனர். 49 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 186 பேர் கிள்ளான் மாவட்டத்திலிருந்து அகற்றப்பட்டனர். இன்னொரு 95 பேர் தாமாகவே இந்தியாவிற்குத் திரும்பினர். கிள்ளான் மாவட்ட இந்தியர் சங்கம் தடை செய்யப்பட்டது. மே மாத இறுதிக்குள் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள்.

அக்காலக் கட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்னவாஇருந்தது?

12 கோரிக்கைகள் இருந்திருக்கின்றன.

1. இந்திய, சீன தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம். 2. கொடுமையான தோட்டச் சிப்பந்திகளை அகற்றிவிட்டு அவர்களுக்குப் பதிலாகத் தமிழ்மொழி பேசும் சிப்பந்திகள் அமர்த்தப்பட வேண்டும். 3. குழந்தைகளுக்கு முறையான கல்வி போதிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 4. ஐரோப்பியர்களும் கருப்பு ஐரோப்பியர்களும் பெண் தொழிலாளர்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும். 5. முறையான மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும். 6. கள்ளுக் கடைகள் மூடப்பட வேண்டும். 7. பேசுவதற்கும் கூடுவதற்கும் சுதந்தரம் அளிக்க வேண்டும். 8. உறவினர்களும் நண்பர்களும் தோட்டங்களுக்கு வருவதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது. 9. ஐரோப்பிய நிர்வாகிகள் மற்றும் ஆசிய சிப்பந்திகள் முன் தோட்டத் தொழிலாளர்கள் சைக்களில் ஏறிச் செல்வதற்கு அனுமதி அளிக்கவேண்டும். 10. நாள் ஒன்றுக்கு 10லிருந்து 12 மணி வரையான வேலை நேரத்தை அகற்றப்பட வேண்டும். 11. குறைகளை முன் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. 12. தொழிலாளர்கள் தங்களின் நலன்களைக் கவனித்துக் கொள்வதற்கும், அவர்களின் குறைகளை முன் வைப்பதற்கும் ஒரு மன்றம் அமைக்க அனுமதிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் மூலம் அக்காலச்சூழலில் எவ்வகையான ஒடுக்குமுறைக்கு தமிழர்கள் ஆளாக்கப்பட்டிருந்தனர் என்பதற்கான காட்சிகள் நமக்குக் கிடைக்கின்றன. அதேபோல ஒடுக்குமுறைக்கான எதிர்ப்புணர்வின் அணுகுமுறையும் கவனிக்கக்கூடியதே.

கிள்ளான் போராட்டத்தில் உயிர்நீத்த தொழிலாளர்களின் பெயர் என்ன? அவர்களின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுவதுண்டா? அந்தக் கிள்ளான் பாரம்பரியம் சன்னமாகவேனும் அடுத்தவந்த காலங்களில் தொடர்ந்ததா?

கிள்ளான் போராட்டம் குறித்த எவ்வகையான நினைவுகளும் எம்மவருக்கு இல்லை. முறையான பதிவுகளும் இல்லை. அப்போராட்டத்தில் ஐவர் சுடப்பட்டு இறந்தனர் எனும் பதிவு கூட நம்பகமானதாக எனக்குத் தோன்றவில்லை. இன்னும் அதிகம் இருக்கலாம். எழுத்தாளர் அ.ரெங்கசாமி மட்டும் அவ்வரலாற்றை நிறைய ஆய்வுகள் செய்து ஒரு நாவலாக எழுதியுள்ளார். அடுத்த ஆண்டு வெளிவரலாம். இதே ரெங்கசாமிதான் சயாமில் மரண இரயில் போடச் சென்று பல இன்னல்களுக்கிடையில் ஜப்பானியர் கொடுமையால் கூட்டம் கூட்டமாக இறந்த தமிழர்களுக்கு நினைவுச் சின்னம் வைக்காததை நொந்து அவ்வரலாற்றை ‘நினைவுச்சின்னம்’ என்ற தலைப்பில் நாவலாக எழுதினார். இரயில் தண்டவாளம் அமைக்கச் சென்று கூட்டம் கூட்டமாக இறந்த தமிழர்களுக்கு நினைவுச்சின்னம் வைக்காத நாங்கள், கிள்ளான் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவுதினம் அணுஷ்டிப்போமா என்ன? எங்களை முன்னின்று நடத்தும் தலைவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் போன்ற ‘ஏழை’ வந்தால் தங்கச் சங்கிலி போடவும் பாடலாசிரியர் வைரமுத்து வந்தால் நூல் வெளியிட்டுப் பணம் திரட்டித் தரவுமே அவர்களின் இளகிய மனம் இடம் தருகிறது. இந்நிலையில் இறந்தவர்கள் பற்றியெல்லாம் அ.ரெங்கசாமி போன்ற வரலாற்று நாவலாசிரியர்கள் மட்டுமே தங்கள் படைப்பிலக்கியங்களில் அவற்றைப் பதிவு செய்கிறார்கள். அதன் மூலமே அந்நினைவுகளை அனுஷ்டிக்க வைக்கிறார்கள்.

கோரிக்கைகளுக்கு நேர்ந்த கதி என்ன?

அடையாளம் இல்லாமல் அப்போராட்டம் ஒடக்கப்பட்ட பின்னர் கோரிக்கைகளை கவனிக்கவும் மீண்டும் வலியுறுத்தவும் அடக்குமுறை சம்மதிக்குமா என்ன?

தாய்நிலம் குறித்த நினைவுப்பதிவுகளையும் புதிய இடத்திற்குள் பொருந்தமுடியாத மனமுறிப்புகளையும் இலங்கையின் மலையகத்திற்குப் போன தமிழர்கள் வாய்மொழிப் பாடல்களாக விட்டுச் சென்றுள்ளனர். இவ்வகையில் மலேசியத் தமிழர்கள் எவ்விதமாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்? அவற்றின் வழியே பெறப்படும் செய்திகள் என்ன?

‘மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள்’ எனும் புத்தகம் இரா.தண்டாயுதம் அவர்களால் 1998ல் தொகுக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் பல்வேறு வகையான நாட்டுப்புறப்பாடல்கள் கிடைக்கப் பெறுகின்றன். மலேசியாவில் அவர்கள் பட்ட கொடுமையையும், வெள்ளைக்காரனையும், கங்காணியையும் மேலும் அவர்கள் வாழ்வின் காதல், பக்தி, சமூகம் என எல்லாவற்றையும் பாடி உள்ளனர். ஆங்கிலேயர்களிடம் பட்ட துன்பம், பின்னர் சயாம் மரண இரயில் உருவாக்கத்தில் பட்ட வேதனை, வறுமை, கங்காணி முறையில் ஏமாற்றம் அடைந்தது, தாலாட்டு என அப்பாடல்கள் மூலம் பல்வேறு செய்திகளைச் சொல்லிச் செல்கின்றனர். இதேபோல மிக அண்மையில் எனக்கு அறிமுகமான முத்தம்மாள் பழனிசாமி அவர்களும் ‘நாட்டுப்புறப் பாடல்களில் என் பயணம்’ எனும் தலைப்பில் ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது ‘நாடு விட்டு நாடு’ எனும் சுய வரலாறு போலவே இதிலும் சாதிய வாடை வீசுவதுதான் வாசிப்புக்கு ஓர் அசூயைத் தன்மையைத் தருகிறது.

இலங்கை மலையகத் தமிழர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தலித்துகளாகவே உள்ளனர். அதாவது சாதிமுறைமையின் சுமைகளால் நெரிபட்டு தத்தளித்துக் கொண்டிருந்த தலித்துகளை புலம்பெயர்த்துக் கொண்டுபோவது பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கு எளிதாக இருந்திருக்கிறது. மலேசியத் தமிழர்களின் சமூகக் கலவையும் இதேபோன்றதுதானா?

ஆமாம். இங்கும் தலித்துகளே அதிகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த விசயத்தில் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் பெரிய பேதமில்லை. கல்வியறிவற்ற, உரிமைகோரும் திறமற்ற , உழைக்க மட்டுமே தெரிந்தவர்களை அடிமைகளாக்க ஆங்கிலேயர்கள் அதிகம் சிரமப்படவில்லை. என்னைக் கேட்டால் இன்று மலேசியத் தமிழர்கள் அனைவருமே தலித்துகள்தான். எதிர்குரல் கொடுக்க உரிமையில்லாமல் ஒடுக்கப்படும் ஒரு இனத்தை வேறெப்படி அழைப்பது.

வாழிடம், பணியிடம், வேலைத்தன்மை, வாழ்க்கைத்தரம், வழிபாட்டுத்தலம் போன்றவற்றை பகிர்ந்துகொண்டேயாக வேண்டிய நிலைமைக்குள் நெட்டித்தள்ளப்பட்ட இருநூறாண்டு கால வாழ்வில் இன்று இலங்கை மலையகத்தில் சாதியுணர்வு மறைந்துவிடவில்லை என்றாலும் மங்கி வருவது போன்ற நிலையிலிருப்பதைக் காணமுடிகிறது. மலேசியத் தமிழர்களிடையே சாதியின் இருப்பு எத்தகையது?

முன்பிலும் மிக மோசமாக உள்ளது. அண்மைய காலமாக சாதிச் சங்கங்கள் ஆங்காங்கு முளைக்கின்றன. அவற்றுக்குச் சில தொழிலதிபர்களும் புரவலர்களாகவும் அறங்காவலர்களாகவும் உள்ளனர். அவர்கள் வெளியிடும் ஆண்டு மலருக்கு எங்கள் அமைச்சர்கள் வாழ்த்துரை வழங்கும் அளவுக்கு மடையர்களாக இருக்கின்றனர். நீங்கள் சொன்னதுபோல வாழ்விடம், பணியிடம், வேலைத்தன்மை, வாழ்க்கைத்தரம், வழிபாட்டுத்தலம் போன்றவற்றால் தமிழர்கள் இணைந்திருக்கின்றனர்.

ஆனால் என் பார்வையில் சாதி என்பது இங்கு வணிகம் செய்ய ஏற்ற வஸ்துவாகிவிட்டது. தங்களுக்குக் கீழ் ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் தமது இருப்பை திடப்படுத்தி அதிகாரத்திடம் போதுமான விலை வந்தால் தங்களை விற்கத் தயாராக இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக சாதிச் சங்கங்களின் தாக்கம் அதிகம் உள்ளது. மலேசியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் சாதியின் ஆதிக்கம் மறைமுகமாக இருந்து ஆதிக்கம் செய்கின்றதென்றால் சாதி சங்கங்கள் வெளிப்படையாகவே பத்திரிகைகளில் அறிக்கை விடுகின்றன. தார்மீகம் பேசும் மலேசியாவில் உள்ள மூன்று தினசரிகளும் வழக்கம்போலவே கூலிக்கு மாரடிக்கின்றன.

கவலை கொள்ளுமளவுக்கு சாதியுணர்வு முனைப்படைந்துள்ளதற்கு பின்புலம் என்ன?

தொழில் சார்ந்த சாதிய அமைப்பு முறை மலேசியாவில் இல்லை. வரலாற்றின் அடிப்படையில் தமிழர்கள் புலம்பெயர்க்கப்பட்டு வந்த பொழுதே சாதிய உணர்வையும் சேர்த்தேகொண்டு வந்தனர். இன்று சாதி ஒரு வணிகமாகி விட்டது. இது குறித்து நான் சிந்தித்ததுண்டு. சாமானியர்கள் சாதி பற்றி பேசுவதற்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டெனப்பட்டது. எளிய மனிதர்களிடம் அவர்களின் சாதிய அடையாளம் குறித்த எவ்வகையான அழுத்தமான காரணமும் இல்லை. அது ஒரு கடைப்பிடிக்கப்பட வேண்டிய பழக்கமாகிவிட்டது. இந்நிலையை எளிதில் மாற்றி விடலாம் என்றும் தோன்றியது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு சாதிச் சங்கங்கள் வளரத் தொடங்கியுள்ளன. வன்னியர் சங்கம், முக்குலத்தோர் சங்கம் என அவை நாடு முழுதும் பல கிளைகளைப் பரப்பியுள்ளன. இதை முன்னெடுப்பவர்கள் அரசியல்வாதிகளும் செல்வந்தர்களும். இவர்கள் இதன் மூலம் தங்களுக்குக் கீழ் ஓர் அணியினரை சேர்க்க முயல்கின்றனர். அதன் மூலம் தங்கள் இருப்பை வலுப்படுத்தி அடையாளம் காட்டுகின்றனர். இந்த அடையாளம் அவர்கள் இயங்கப்போகும் அரசியல் வியாபாரத்திற்கு உதவும். இவர்கள் வீசும் வலையில் பல சின்ன சின்ன இயக்கங்கள் மாட்டிக் கொள்கின்றன. அவர்களிடமிருந்து பண உதவிகள் பெற முடியும் என்பது அதற்கு பிரதான காரணமாக இருக்கலாம். பொருளாதார அல்லது அதிகாரத் தேடலைத் தவிர்த்து சாதியை வளர்க்க மலேசியாவில் வேறு காரணங்கள் இருக்காது என நம்புகிறேன்.

மிக அண்மையில் ‘இண்டர்லோக்’ எனும் மலாய் நாவல் சாதியம் குறித்த சில எதிர்வினைகளைத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கியது எனத் தெரிகிறது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?

இண்டர்லோக் நாவல் பிரச்சனையின் போதுதான் பல முற்போக்கு, நவீனத்துவ, தீவிர எழுத்தாளர்களாகச் சிந்தனையாளர்களாகத் தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் பலரின் சுயரூபத்தைக் காண முடிந்தது. தமிழர்களை இழிவாகச் சித்தரிப்பதாகக் கூறி அந்நாவலைத் தடை செய்ய கூட்டங்கள் போடப்பட்டன. முதலில் நானும் அந்த மலாய் நாவலை வாசிக்கவில்லை. தமிழ்ச் சமூகத்தை இப்படிக் கொதித்துப் போக வைத்திருக்கும் ஒரு நாவல் என்னதான் சொல்கிறது என அறிய நண்பர் ஒருவரிடம் வாங்கி வாசித்தேன்.

அந்நாவலில், தமிழர்களால் பிரச்சனையாகச் சொல்லப்படும் விடயங்களை இப்படித் தொகுக்கலாம்:

மலையாளிகளும் தெலுங்கர்களும் வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ்மொழி தெரியும். மலையாளமும் தெலுங்கும் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்தனவாகும். இவர்கள் அனைவரும் இயல்பாகப் பழகுவதற்குரிய காரணம்; இவர்கள் எல்லாரும் பறையர் சாதியச் சேர்ந்தவர்களாவர்.

யாரையும் தொட்டால் தீட்டாகுமென இவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

சாதி வேறுபாட்டை உணர்த்தும் வேலைகள் இங்கில்லை. மற்ற இந்தியர்களைப் போல தன் மனைவியின் பாதுகாப்பைப் பற்றி மணியமும் கவலைப்பட்டதே இல்லை.

இவ்வாறு அந்நாவலில் அப்துல்லா உசேன் எனும் தேசிய இலக்கியவாதி கூறியுள்ளார். இங்கு ஐந்தாம் படிவத்துக்குப் பாடநூலாக வந்துள்ள இந்நாவலைத் தடை செய்ய கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. தமிழ்ப் பத்திரிகைகள் வீர ஆவேசத்துடன் தங்கள் வழக்கமான பணிகளைச் செய்து கொண்டிருந்தன. இவ்வாறு கொதித்துப் போயிருக்கும் ஒரு சமூகத்தின் மனநிலையின் மையத்தை ஆராய்ந்தபோது எனக்குப் புலப்பட்ட உண்மை ஒன்றுதான். அவர்கள் கோபத்தின் மிக முக்கியமான காரணம் அந்நாவல் இந்தியர்கள் அனைவரையும் ‘பறையன்’ எனப் பகர்வதுதான்.

பல புத்திஜீவிகள் ‘எப்படி எல்லாரையும் பறையனென்று சொல்லலாம்’ என கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில்தான் நான் ‘பறையனாக இருப்பதில் என்ன பிரச்சினை?’ எனும் கட்டுரை எழுதினேன். அப்துல்லா உசேன் நாவலில் சில வரலாற்று பிழைகளைச் செய்துள்ளார். அதுகுறித்து ஆய்வுபூர்வமாகச் சுட்டிக்காட்டியவர்களும் உண்டு. ஆனால் சாதிய அடையாளத்தில் அவர் செய்துள்ளதாகச் சொல்லப்படும் வரலாற்றுப் பிழைக்குதான் எதிர்ப்பு இங்கு அதிகமாக இருந்தது. அதனாலேயே இந்த விடயத்தை ஒட்டி பேச என்னிடம் சில காரணங்கள் இருந்தன.

முதலாவது, மலேசியத் தமிழர்களிடையே சாதிய மனப்போக்கு இல்லை என்பது போன்றதொரு நாடகத்தை தரைமட்டமாக்க வேண்டும். இரண்டாவது, இதுபற்றி பெரிய அறச்சீற்றத்துடன் பொங்கிய தமிழ்ப் பத்திரிகைகள் சாதிச் சங்க விளம்பரங்களை பணம் வாங்கி கொண்டு பத்திரிகையில் போடுவதைக் கேள்வி எழுப்ப வேண்டும். மூன்றாவது, பறையன் என்று சொன்னால் உனக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது? அதை ஏன் நீ தாழ்வாக நினைக்கிறாய்? சாதியை நம்பாத நீ எதற்கு வெற்றுச் சொல்லைப் பிடித்து தொங்குகிறாய்? பறையனாக இருந்துவிட்டுப் போவதில் உனக்கு என்ன பிரச்சினை என அவனவன் கண்ணத்தில் விட வேண்டிய அறைகளை சொற்களாக மாற்றவேண்டியிருந்தது. இந்தியா, இலங்கையைவிட மலேசியாவின் சாதிய மனம் ஆபத்தானது என்பேன். காரணம் அது சப்தமின்றி இருக்கிறது. ஆனால் உயிருடன் இருக்கிறது. அடையாளம் காட்டாத மிருகத்தை வேட்டையாடுதல் சிரமம்.

அந்த மிருகம் பலர் மனங்களிலும் ஆழ உயிர்த்திருந்ததை உரையாடல்களின்போது பார்க்க முடிந்தது. அந்தச் சமயத்தில்தான் ‘பறை’ என்ற இதழையும் தொடங்கினோம். இணையத்தில் உரையாடலுக்காகப் பதிவு செய்தோம். ஒருவகையில் ‘இண்டர்லோக்’ மலேசியத் தமிழர்களிடையே பரவியிருக்கும் சாதிய மனதை அடையாளம் காட்டவும் அது குறித்து உரையாடவும் ஒரு வாய்ப்பாக இருந்தது. அப்துல்லா உசேன் தெரிந்து செய்தாரோ தெரியாமல் செய்தாரோ. சாதிய அடையாளத்தைக் குறிப்பிடுவதில் அவர் செய்தது தவறாக இருந்தாலும் அது தொடரட்டும். பறையனாக இருப்பதில் என்ன பிரச்சினை?

மலேசியத் தமிழர்களிடையே உருவான அரசியல், தொழிற்சங்க, பண்பாட்டு அமைப்புகள் எவை? அவை பண்புரீதியாக ஏற்படுத்திய மாற்றங்களாக எவற்றைக் குறிப்பிட முடியும்?

நேதாஜி அணியில் இணைந்து விடுதலைப் போர் நடத்திய ஜான் ஏ.திவி, மலாயா இந்தியருக்குக் காலத்தின் கட்டாயத்தால் ஓர் அரசியல் கட்சியை அமைத்துப் புதியதொரு வழியைக் காட்ட முயன்றார். பெரும்பாலும் இந்திய விடுதலைக் கழகத்திலும் இந்திய தேசிய இராணுவத்திலும் தொண்டாற்றிய பலரின் ஒத்துழைப்போடு 1946 ஆகஸ்ட் ம.இ.கா பிறந்தது. இன்றுவரை இக்கட்சியே இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் பிரதான கட்சியாக தேசிய முன்னணியில் இருந்து வருகிறது. அதேபோல தந்தை பெரியாரின் இரு வருகைகளின் (1932, 1950) விளைவாக சுயமரியாதை இயக்கத்தின் தாக்கமும் தமிழர்களிடம் துளிர்த்திருக்கிறது. மணிமன்றப் பேரவை மூலம் கலை இலக்கிய பிரக்ஞை தமிழர்களிடையே வளர்ந்ததுபோல ‘தமிழர் திருநாள்’ என்ற பெயரில் மாபெரும் தமிழ்; தமிழர் எழுச்சிப் பெருவிழாவினை ஏற்படுத்தி மொழி, இனம் உணர்வு ஏற்பட கோ.சாரங்கபாணி காரணியாக இருந்தார். தமிழ் முரசு ஆசிரியராக இருந்த கோ.சா ஒரு பெரியார் தொண்டர். இவர் மூலம் இலக்கியம் சார்ந்த முன்னெடுப்புகள் முன்னிறுத்தப் பட்டுள்ளது. அதேபோல 1946இல் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் தோட்டப் பாட்டாளிகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்தது. ஆனால் இன்று வரை தோட்டத்தில் உள்ள தமிழர்களின் நிலை உயரவில்லை.

இந்த வரலாறு இன்றைய தலைமுறைக்கு வாய்மொழியாகவோ எழுத்துபூர்வமாகவோ பயிற்றுவிக்கப்படுகிறதா?

உள்ளன. ஆனால் அவை பாட நூல்கள் மூலமாக அடுத்த தலைமுறைக்கு சேரும் முறைமையில் இல்லை. பாட நூல்கள் எந்தக் காலத்தில் உண்மையைச் சொல்லியுள்ளன? அவை சிலரை கதாநாயகர்களாகக் காட்டி வரலாற்றை மாற்றியமைக்கின்றன. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வாகாக வளைந்து கொடுக்கின்றன. ஆனால் மலேசிய நாட்டின் தமிழர் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உத்வேகத்துடன் பலர் தங்களால் இயன்ற வகையில் முயன்றுகொண்டேதான் இருக்கின்றனர். இதில் படைப்பிலக்கியரீதியில் நாவலாசிரியர் அ.ரெங்கசாமி, நாடகங்கள் மூலமாக சிங்கை இளங்கோவன், ஆய்வுரீதியில் ஜானகிராமன், டாக்டர் ஜெயபாரதி, முரசு நெடுமாறன், சீ.அருண் போன்றோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள்.

தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் நிலை இன்னும் மாறவேயில்லை என்கிறீர்கள். அவர்கள் தமது பணியிடத்தில் மனிதத்தன்மையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதில்லையா? அவ்வாறெனில் அவற்றில் தலையீடு செய்யும் வலுவுடன் அமைப்புகள் எதுவும் இல்லையா?

இங்கு நான் தோட்டத் தொழிலாளர்கள் என்பது அந்நிய நாட்டு தொழிலாளர்களையும் இணைத்துத்தான் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த என்னால் அவர்களுக்காகவும் சேர்த்தே அனுதாபப்பட முடிகிறது. தமிழர்கள் பெரும்பாலோர் தோட்டங்களை விட்டு வெளியேறி விட்டனர் என்பதுதான் உண்மை. இன்னும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் அடிப்படை செலவுக்குக்கூட போதுமானதாக இல்லை. இன்று மலேசியாவில் ரப்பர் தோட்டங்கள் பெருமளவில் அளிக்கப்பட்டு செம்பனை தோட்டங்களாக்கப்பட்டு விட்டன. உலகச் சந்தையில் அதன் தேவையையும் விலையையும் பொறுத்தே இம்மாற்றம் நிகழ்ந்தது. ஆனால் தோட்டங்களில் ரப்பர் மரம் சீவிக் கொண்டிருந்த தமிழர்களுக்கு செம்பனைத் தொடர்பான எவ்வித பரிட்சயமும் இல்லாமல்தான் இது அறிமுகம் ஆனது. இந்நிலை தமிழர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. செம்பனைச் சூழலோடு ஒத்துப்போக முடியாத சூழலில் அவர்களில் பலர் தோட்டத்தை விட்டு வெளியேறினர். இன்று அவ்வேலைகளை இந்தோனேசியர்களே அதிகம் செய்கின்றனர். அவர்களுக்கு அத்தொழில் ஏற்றதாய் உள்ளது. வேறு வழியில்லாமல் தோட்டங்களில் எஞ்சி இருக்கும் தமிழர்களும் தேசிய வளர்ச்சியில் அதிகமும் விடுபட்டு விட்டனர்

மலேசிய மக்கள் தொகையில் தமிழர்களின் வீதம் என்ன? கொள்கை முடிவெடுக்கும் அதிகார அமைப்புகளில் தமிழர்களுக்குரிய இடமுண்டா?

மக்கள் தொகை வீதமெல்லாம் அரசாங்க கணக்கெடுப்புகள்தான். 7% என்கின்றனர். மலேசியாவில் இன்னமும் தமிழர்களில் பலர் அடையாள அட்டை இல்லாமல் இருக்கின்றனர். அடையாள அட்டை வழியே மக்கள் தொகையைக் கணிக்க முடியும். ஒருவேளை ம.இ.காவின் தலைமைத்துவத்துக்குக்கூட உண்மையான எண்ணிக்கை தெரியாமல் இருக்கக்கூடும். பாவம் அவர்கள். அதிகார அமைப்புகளிலெல்லாம் எவ்வகையான முடிவெடுக்கும் உரிமையும் இல்லை. இன்று மலேசியாவை ஆளுவது ‘பாரிசான் நேஷனல்’ எனும் கட்சி. இதில் முக்கிய கூட்டணி கட்சியாக ம.இ.கா உள்ளது. இது தமிழர்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக் கொள்கிறது. தமிழர்களிடம் நிலவும் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் கூறி வேண்டியதைப் பெற்றுத் தருவதே இவர்களின் முக்கிய வேலை. அதையே அவர்கள் முறையாகச் செய்வதில்லை. இதில் கொள்கையாவது… முடிவாவது.

தோட்டத் தொழில் அல்லாத பிற துறைகளில் தமிழர்கள் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் எவ்வாறுள்ளன?

முன்பே நான் சொன்னதுபோல இன்று மிகக்குறைந்த விழுக்காட்டினரே தோட்டங்களில் பணியாற்றுகின்றனர். போதிய ஊதியம் வழங்கப்படாததுதான் அதற்கு காரணம். அவர்களின் இடங்களை இந்தோனேஷியர்களும் வங்காள தேசத்தவரும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

தனியார் துறைகளில் தமிழர்கள் அதிகம் பங்கெடுக்கின்றனர். அரசாங்கத் துறைகளில் மிகக் குறைவு. தமிழர்களுக்கு அதிகம் அரசாங்கத்தில் கிடைக்கும் வேலை வாய்ப்பே தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தொழில்தான். இது தவிர வியாபாரங்களிலும் அவர்கள் ஈடுபட முடியும். ஆனால் அவர்கள் வணிகத்தில் ஈடுபட உரிமம் கிடைப்பதில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதுகுறித்த தொடர்ச்சியான செய்திகள் நாளிதழ்களில் வருவதில்லை. அவர்களின் பத்திரிகை உரிமம் பறிபோய்விடும் பயம் அவர்களுக்கு.

http://www.humanrightspartymalaysia.com/ போன்ற வளைத்தளங்கள் மூலமே இவ்வாறான மக்கள் பிரச்சினைகளை அறிய முடிகிறது. பெரிய அளவில் இஸ்லாம் அல்லாதவர்கள் வியாபாரத்தில் ஈடுபட இஸ்லாமியர்களுக்கு அதில் பங்குரிமை இருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் அரசாங்க குத்தகைகள் கிடைக்கும். மலேசியாவைப் பொறுத்தவரை வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்களில் பரவலாக அறியப்பட்டவர்களாக இந்தியர்களே உள்ளனர். ஆனால் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் அத்துறைகளைப் பயில இடம் கிடைப்பதில்லை. அல்லது அரசாங்க கல்விக் கடனுதவி கிடைப்பதில் சிரமத்தை எதிர்க்கொள்கின்றனர். இது குறித்தெல்லாம் இன்று வெளிப்படையாகவே பேசப்படுகிறது. ஹிண்ட்ராப் தோற்றம் அவ்வாறு பேசுவதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும்

(அடுத்த மாதம் அம்ருதாவில் முடிவுரும்)

(Visited 2,606 times, 1 visits today)

7 thoughts on “பறையனாக இருந்துவிட்டுப் போவதில் உனக்கு என்ன பிரச்சினை?

  1. அற்புதமான நேற்காணல். அரிய பல புதிய தகவல்களுடன் ஒரு தலித்தாக படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சரிபாதி வாழ்வு தமிழக மனங்களில் இருந்து எங்கோ தள்ளப்பட்டு கிடக்கின்றது என்பதை அறியாமல் விட்டு விட்ட கொடுமைகளுக்கு எந்த நியாயத்தையும் இச்சமூகமும் இயக்கங்களும் கற்பிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. எனக்கு எழுந்த ஒரு கேள்வி என்னவென்றால் தெற்கு ஆசிய நாடுகளில் புலம் பெயர்ந்து பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து ட்ராட்ஸ்கி மற்றும் செங்கொடி தொழிற்சங்கத்தினர் தெற்காசிய அளவில் ஒரு பேரியக்கத்தை உருவாக்கினார்களே அதன் இன்றைய நிலை என்னவாக இருக்கிறது? அல்லது வேறு ஏதேனும் அமைப்பாக்க முயற்சிகள் (அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் தவிர்த்து) நலக்கின்றனவா? என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அண்ணன் ஆதவன் அவருக்கே உரித்தான (எதையும் மூடி வைக்காமல் பட்டென பேசும்) தனித்த பார்வையில் உணர்வுகளைப் புரிந்து விவாதித்திருப்பது நன்று.

  2. முக்கியமான நேர்காணல்.

    மலேசிய நிலைமை, அங்குள்ள அரசியல், அங்கிருக்கும் தமிழ் மக்கள்,அவர்களுக்கிடையிலான அதிகார – வாழ்நிலைச் அசமத்துவங்கள், தொழிலாளிகள், அவர்களுடைய வாழ்க்கையும் பிரச்சினைகளும், இந்திய வழி மலேசியத்தமிழர்கள், இலங்கை வழி மலேசியத்தமிழர்கள், மலேசிய இலக்கியம், மற்றும் கலைவெளிப்பாடுகள் எனப் பலவற்றை ஆழமாகப் பேசும் நேர்காணல்.

    ஆதவன் தீட்சண்யாவும் ம.நவீனும் நடத்தியிருக்கும் உரையாடலின் மூலம் இவற்றைப் பற்றி ஆழமாக அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.

  3. அருமையான நேர்காணல்.அடையாளம் காட்டாத மிருகத்தை வேட்டையாடுதல் சிரமம்.ஆதவன் தீட்சண்யாவும் ம.நவீனும் நடத்தியிருக்கும் உரையாடலின் மூலம் இவற்றைப் பற்றி ஆழமாக அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.

  4. மிக நுட்பமான அரசியல் பேசும் பேட்டி.மலேசிய தமிழரின் பாசாங்கு முகங்களுக்கு பின்னால் இருந்த சாதிக்கு பளீச்’சிட செய்தது அழகு.இந்தியாவிற்கு வெளியிலும்,உள்ளேயும் புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்த ஆழமான உண்மையான பதிவுகள் வராதது.வேதனை தருகிறது.

  5. மிக நல்ல நேர்காணல். பல செய்திகளை அறிந்து கொள்ள உதவியது. நன்றி.

Leave a Reply to Vidyasakaran from Bangalore, Karnātaka, India Cancel reply

Your email address will not be published. Required fields are marked *