மாயா தொலைவில் உள்ள
மரத்தைதான் முதலில்
தன் இரு விரல்களால் பிடித்தாள்…
பின்னர் கட்டடம்…
ஓடும் நாய்…
இடைவெளிகளை அதிகப்படுத்தி அவளால்
அத்தனையையும் பிடித்துப்பார்க்க முடிந்தது
நட்சத்திரங்களையும் பிடிக்கலாம் இரவாகட்டும் என்றேன்
இரவானால் நட்சத்திரம் சிறிதாகிவிடுமா என்றாள்!
0 0 0
மேல் மாடியில் அமர்ந்தபடி
மாயா
நகரும் வாகனம் குறித்த
ஆய்வில் இருந்தாள்
ஒரு முறை
வெள்ளை நிற பெட்டி வேன் ஒன்று வலது புறமாக கடந்தது
இரண்டு வினாடியில் சாக்லெட் நிற பெட்டி வேன்
இடது புறமாகச் சென்றது
மாயா…
வேன் சேத்துல விழுந்துடுச்சி என்றாள்
0 0 0
வீடு கட்டும் பகுதியில்
குருவிகள் சத்தம் நின்றபாடில்லை
மாயா கேட்டாள்
‘ஏன் குருவிகள் கத்துது?’
வீடுகள் கட்ட மரங்களை அழிச்சிட்டாங்க என்றேன்
‘அவங்கல்லாம் கெட்டவங்களா?’
ஆமாம்
‘நம்ம வீடு கட்டுன இடத்துல
முன்ன எத்தனை மரங்கள் இருந்துச்சு…’
(Visited 96 times, 1 visits today)
nice