தினக்குரலில் வெளிவந்த நேர்காணல்: என்னிடம் நன்றி உணர்ச்சி இல்லை !

இன்றைய இளைஞர்கள் எங்கு போய் கொண்டிருக்கிறார்கள்? இலக்கியம் என்பதில் அவர்களது ஈடுபாடு எவ்வாறு உள்ளது? அதனை உள் வாங்கிய இளம் படைப்பாளிகளின் இயக்கம் எவ்வகையில் இயங்குகின்றது? படைப்பதும் அதனை பாதுகாப்பதும், தன்னை சிறந்த படைப்பாளி என அடையாளப்படுத்திக் கொள்வதும் மாத்திரம்தான் ஒரு படைப்பாளியின் இலக்கியத்தின் உச்சமா? இவற்றுக்கெல்லாம் முரணான விடையாகிறார்…ம.நவீன் என்ற இளம் படைப்பாளி.


புதுக்கவிதைகள் வழி எழுத்துலகில் கால் தடம் பதித்து நவீன இலக்கியத்தில் ஆளுமைக் கொண்டவராக மட்டும் அல்லாமல் புத்தாயிரத்தில் நவீனக்கவிதைகளை மலேசிய இலக்கியச் சூழலுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடியும் ஆவார். நவீன இலக்கிய மனதின் வெளிப்பாடு எது, ஆற்றல் எது என்பதை அடையாளப்படுத்தியவர். இவரது கவிதைகள், புனைகதைகள், புதினம் போன்றவை அதற்கு சான்று பகர்கின்றன. மிக இளம் வயதிலேயே ‘காதல்’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக உருவெடுத்து தீவிர இலக்கியத்தை மலேசிய இலக்கிய வெளியில் நிறுவ முனைந்தவர். தற்போது வல்லினம் இணைய இதழின் ஆசிரியரான இவர், இதுவரை ‘சர்வம் பிரம்மாஸ்மி’ என்ற கவிதை தொகுப்பும் ‘கடக்க முடியாத காலம்’ என்ற கட்டுரை தொகுப்பும் வெளியிட்டுள்ளார். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 2010 ஆம் ஆண்டின் சிறந்த கவிஞருக்கான விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மன மோதல்… சுய மோதல் இல்லாமல் மலேசிய இலக்கிய நகர்வின்பால் கொண்ட கருத்து முரண்களால் அதிக அளவில் பேசப்பட்டவர், பேசப்படுகின்றவர். இலக்கிய அவலங்களைத் தோலுரித்து காட்ட இவர் நிறுவுகின்ற முயற்சிகளில் இவர் படைப்புகளைப் பற்றி சிறிதேனும் அக்கறையின்றி இருப்பது ஆச்சரியம். இவர் ஒரு தமிழ் பள்ளி ஆசிரியராவார். மேலும் இவருக்கு அறிமுகம் தேவையில்லையென நினைக்கிறேன். இவருடன் இணையம் வழி நடத்தப்பட்ட நேர்காணல் இது.  – இராஜசோழன்

 

கேள்வி : இலக்கிய பாராம்பரியத்திலிருந்து வந்தவரா நீங்கள்?

பதில் : எவ்வித இலக்கியப் பின்புலமும் இல்லாதக் குடும்பம் என்னுடையது. கெடா மாநிலத்தில் லுனாஸ் என்ற சின்னஞ்சிறிய ஊரிலிருந்த காலம் தொட்டே எழுதிவருகிறேன். அம்மாவும் அப்பாவும் நல்ல வாசகர்கள். எனது பதினாறாவது வயதில் நான் சந்தித்த முதல் எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வன். என்னை புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டு வாசிப்பை விசாலமாக்கியவர். என்னைவிட அவருக்கு என்மீது அப்போதே நிறைய நம்பிக்கை இருந்தது.

கேள்வி : ம.நவீன் என்பவர் யார்?

பதில் : வாசகன்.

கேள்வி : மலேசியா இலக்கியத்தை விமர்சிக்க என்ன திறன் உள்ளது என புருவங்களை நெரிப்பவர்களுக்குத் தாங்களின் பதில்?

பதில் : விமர்சனத்தை இரண்டு விதமாகப் பிரித்துக்கொள்ளலாம். முதலாவது இலக்கியப் பிரதிகள் குறித்தவை. மற்றது, இலக்கியச் செயல்பாடுகள் குறித்தவை.

நான் என்னை வாசிப்பின் மூலம் எப்போதுமே புதுப்பிக்கவே முயல்கிறேன். குறைகள் தேங்கியுள்ள என் வாழ்வில் ஒரு நல்ல படைப்பிலக்கியத்தைப் படைப்பதைவிடவும்  வாசிப்பது எனக்கு முக்கியமாகப் படுகிறது. வாசிப்பு எனக்கு நீண்ட வாழ்வின் அனுபவங்களைத் தருகிறது. இன்னொரு வாழ்வை வாழ்ந்து முடித்த அனுபவம் அது. சக மனிதர்களின் நியாயங்களை உணர முடிகிறது. நுட்பமான வாழ்வின் பிறழ்வுகளை உள்வாங்க இயல்கிறது. புனைவு, அல்-புனைவு என்ற ரீதியில் அது தொடர்ந்துகொண்டே செல்கிறது. அந்த வாசிப்பு எனக்குள் ஒரு இரனையை உண்டாக்குகிறது. அதன் அடிப்படையில் ஒரு படைப்பை உள்வாங்கி அது குறித்து பேசவும் முடிகிறது. அதேபோல இன்னொருவருக்கு ஒரு படைப்பு குறித்து வேறு கருத்துகள் இருக்கலாம். அதுதான் இயல்பு. ஆனால், நாம் ஒரு படைப்பைக்குறித்த முன்வைக்கும் கருத்துக்கு எவ்வளவு உழைத்திருக்கிறோம் என்பதே முக்கியம். அவ்வாறான படைப்புகள் குறித்த எனது விமர்சனங்களை ஒருவர் தூக்கி எறிந்துவிட்டு போகலாம். அதற்கான எல்லா உரிமையும் ஓர் எழுத்தாளருக்கு உண்டு;அவ்வாறு செய்வது எளிதும் கூட. ஆனால் எனது கருத்துக்கு எதிர்க்கருத்தாட வேண்டுமென்றால் அவர் உழைக்க வேண்டியுள்ளது. அதை பலரும் விரும்புவதில்லை. இங்கு எல்லோரும் வசைகள் பொழிவதில் தேர்ந்துள்ளனர். அறிவுதளத்தில் நின்று விவாதிக்கத் தயாராக இல்லை.

இலக்கியச் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்க ஓர் அக நேர்மை தேவையென்றே நினைக்கிறேன். நீங்கள் தீவிரமாகச் செயல்படத்தொடங்கும்போது உங்கள் தோளில் பொன்னாடை போர்த்தவும் உங்கள் சேவைகளைப் பாராட்டி விருது வழங்கவும் அதிகார பார்வைகள் உங்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கும். அவர்களுக்குத் தேவையான பதில், ‘உங்கள் விலை என்ன?’ என்பதுதான். அதன் மூலமே உங்கள் வாயை அடைக்க முடியும். பொருள், பணம் ரீதியில்  அந்த வியாபாரம் முழுமையடையாவிட்டால் உணர்வுகள் ரீதியில் தொடரும். அன்பு, நன்றிக்கடன் என உங்களை அடக்க முயலும். இதிலேயும் நீங்கள் சிக்கிக்கொள்ளாவிட்டால் அடுத்து உங்களிடமிருந்து பொதுபுத்தி சார்ந்த அங்கீகாரங்களை அகற்றுவதாகக் கருதி உங்களை துரோகி, பொறுக்கி, ரௌடி என வைய்யும்.

நம்மவர்களுக்கு சமூக அங்கீகாரத்தின் மீது பெரிய பற்றுதல் இருப்பதால் இறுதியில் விமர்சனத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு ‘ஏன்டா வேண்டாத வேலை’ என்று இருந்துவிடுவார்கள்.  எனக்கு அந்தக் கவலை இல்லாததே பலருக்குப் பிரச்னை. என்னிடம் நன்றி உணர்ச்சி இல்லை. அன்பென்றும் நட்பென்றும் நன்றிக்கடனுமென்றெல்லாம் என்னிடம் சமரசங்கள் இல்லை. நான் எதை நினைக்கிறேனோ அதை உணர்ந்து சொல்கிறேன். நான் சொல்லும் கருத்துக்கு நான் நேர்மையாக இருப்பதே எனது திறன். அதற்காக துரோகி, பொறுக்கி, ரௌடி போன்ற பட்டங்களைச் சுமக்க எப்போதுமே தயாராக இருக்கிறேன்.

கேள்வி : மலேசிய இலக்கியம் குறித்து  தாங்களின் பொதுவான பார்வை?

பதில் : ஒரு பெரிய தொய்வுக்குப் பிறகு கடந்த ஆறேழு ஆண்டுகளாக புத்துணர்வு பெற்றுள்ளதாக கருதுகிறேன். ‘காதல்’ எனும் இலக்கிய இதழ் வருகைக்குப் பின்னரே அதன் போக்கு மையப்பட்டுள்ளது. இந்த மையப்படுதல் முக்கியம். அதன் மூலமே சமகால இலக்கியத்தைத் தீவிரமாக நகர்த்த முடியும். எல்லா காலத்திலும் மலேசியத் தமிழ் இலக்கியத்திற்காக  உழைத்தவர்கள் உண்டு. அவ்வரிசையில் வைத்தே ‘காதல்’ மற்றும் ‘வல்லினம்’ செயல்பாடுகளைப் பார்க்கிறேன். ஆனால்  மலேசிய இலக்கியத்தில் பலவீனமான பகுதி என்றால் நிச்சயம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைதான் சொல்வேன்.

நம்மிடம் நல்ல உணவில்லை என நான் சொல்கிறேன். உடனே ஒருவர் ‘அப்படியா!’ எனக்கூறி தமிழகத்துக்கு ஒரு கூட்டத்தை அழைத்துச்சென்று , அங்குள்ள வகை வகையான உணவுகளையெல்லாம் காண்பிக்கிறார், நம்மிடம் எவ்வகையான உணவு வகைகள் இருக்கின்றன என கருத்தரங்கமெல்லாம் நடத்துகிறார் , அங்குப் பிரபலமாக இருக்கின்ற சமையல்காரரிடம் ‘மலேசிய உணவு பிரமாதம்’ என்ற பாராட்டு சான்றெல்லாம் வாங்குகிறார்,  சுவையாகச் சமைப்பதற்குப் போட்டியெல்லாம் நடத்துகிறார் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த நபரை என்ன இடத்தில் வைப்பீர்களோ அந்த இடத்தைதான் நான் எழுத்தாளர் சங்கத்துக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் தருவேன்.

மலேசிய இலக்கியம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உண்டு. முதலில் இங்கு வெளிவரும் படைப்புகள் கறாராக விமர்சிக்கப் படுவதில்லை. ஓர் எழுத்தாளன் தன் வாழ்நாளில் சம்பாதித்த அரசியல்வாதிகளின் நட்பின் துணையுடன் நூலை வெளியிடுகிறார். மறுநாள் அந்த நூல் அரசியல்வாதியில் பாராட்டு முத்திரையோடு நாளிதலில் பிரசுரமாகிறது. உடனே இந்நாட்டில் அவ்விதழுக்கு இலக்கிய அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. அது தவிர அந்நூலில் இடம் எது எனப் பேசப்படுவதே இல்லை. இந்த அரசியல் பாராட்டு முத்திரையோடு அந்த நூலுக்கு எளிதில் ஏதாவது ஒரு விருதும் கிடைத்துவிடும். பிறகென்ன அதை அழியா காப்பியமாக ஒரு கூட்டம் கொண்டாடும்.

அடிப்படையில் இங்கு நல்ல இலக்கியங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை. அதிகார வர்க்கத்தின் துணையுடன் சிலர் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்கின்றனர். தமிழகத்திலும் இது நடப்பதுதான். ஆனால், அங்குக் கற்றவர் மத்தியிலாவது ஒரு தெளிவு இருக்கும். இங்குக் கற்றவர்களும் சேர்ந்தல்லவா வைரமுத்துவின் பின்னாலும் சினேகன் பின்னாலும் ஓடுகிறார்கள்.

கேள்வி : மலேசியா இலக்கியவாதிகளிடம் பொதுவாக உங்களைப் பற்றி  ஒரு கருத்து நிலவுகின்றது.நீங்கள் வெறும் அம்பு என்றும் உங்களை ஏய்த வில் உங்களுக்கு பின்னால் இருப்பதாக பேசப்படுகின்றது.உண்மையா?

பதில் : இந்த உவமையை இரு நிலைகளில் புரிந்துகொள்கிறேன். ஒன்றாவது, வல்லினம் இலக்கியச் செயல்பாடுகளில் நான் ஒரு அம்பு என்பதை. அவ்வாறெனில் அது உண்மைதான். வல்லினத்தின் செயல்பாடுகள் என்பது என் தனியொருவனின் முயற்சி அல்ல. அதற்குப்பின் பலரது உழைப்பு உள்ளது. சிவா பெரியண்ணன் என்ற ஒருவர் இல்லாவிட்டால் இன்று வல்லினம் இணைய இதழாக வெளிவராது என்பது பலருக்குத் தெரியாது. அது போலவே வல்லினம் வளர்ச்சியில் பலரது சிந்தனை உள்ளது. அவ்வகையில் நான் ஒரு கருவி மட்டுமே.

மற்றொன்று, எனது எதிர்வினைகள் என்னுடயதல்ல என்பது.அப்படி யாராவது இருந்தால், தயவு செய்து அந்த ‘வில்’ பொறுப்பை ஏற்கச் சொல்லுங்கள். என்னை நோக்கி வரும் வசைகளை அந்த வில்லின் பக்கம் திருப்பிவிட வசதியாக இருக்கும்.

இதுபோன்ற கருத்துகளைச் சொல்பவர்களிடம் நான் சொல்வது ஒன்றுதான். தயவுசெய்து என் எழுத்துகளை ஒருதரம் முழுமையாகப் படித்துவிட்டு இதைக் கூறுங்கள். ( http://vallinam.com.my/navin/  என்ற தளத்தில்  அனைத்தும் உள்ளன)போகிற போக்கில் ஒரு தெரிப்பையோ, ஒரு திணிப்பையோ, நான் இதுவரை என் எழுத்தில் செய்ததில்லை. நான் முக நூல் எழுத்தாளன் அல்ல. நான் முன்வைக்கும் ஒவ்வொரு கருத்துக்கும் ஆதரம் வைக்கிறேன். அதற்கான நியாயங்களை தர்க்கம் செய்கிறேன். நேரில் விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன். சொன்ன சொல்லுக்காகப் பொறுப்பேற்கிறேன். நான் கடைப்பிடிக்காத எதையும் இதுவரை சொன்னது கிடையாது.

சாதியத்தை எதிர்க்கிறேன் என்றால் அதன் அடையாளத்தைத் தாங்கியுள்ள தாலியையும் என் திருமணத்தில் மறுக்கவே செய்கிறேன். சாதியைச் சுமந்துள்ள மதத்தையும் முழுமுற்றாக மறுக்கிறேன். மத சடங்குகள் எதற்குமே என்னிடம் இடம் இல்லை. என் நெருக்கமானவர்கள் என்பதற்காக தரமற்ற படைப்பை எப்போதும் நான் உயர்த்திப் பேசியதில்லை. எந்தப் பொன்னாடையையும் என் தோளில் விழ அனுமதித்ததில்லை. எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதெல்லாம் எனக்குச் சரிவராது. என்னைச் சுமக்கும் வேதனை எந்த வில்லுக்கும் நேர்ந்ததில்லை.  நான் ஒரு சுமை.

கேள்வி : தமிழ் மரபில் இலக்கியம் என்பது புனிதமானது என்று உருவாக்கப் பட்டிருந்த புனைவுகளை உடைத்து,இன்றைய புனைவுகள் நவீனம் பின் நவீனத்துவம் என்ற ரீதியில் போய் கொண்டிருக்கின்றது.இக்காலக்கட்டத்தின் இலக்கிய வடிவங்கள் ,உத்திகள் வாசகர்களை திருப்தி படுத்தும் விதத்தில் உள்ளனவா?

பதில் : பெரும்பாலோரைப் போல எனக்கும் இலக்கியம்  பள்ளிப்பாடம் வழியாக அறிமுகமானது. அவை நற்கருத்துக்களால் குவிந்திருந்தது . அது ஒரு காலகட்டம். காரணம் வாழ்வு பள்ளியோடு முடிவதில்லையே. நாம் வாழ்க்கையை நேரடியாகச் சந்திக்கும் தருணம் நிகழ்கிறது. வாழ்வு திட்டமிடப்பட்ட பள்ளிப்பாடமா என்ன? அதனிடம் நேர்த்திகள் குறித்து எவ்வகையான கேள்விகளும் இல்லை. உண்மையில் வாழ்வு நமக்கு புதிய உண்மையைச் சொல்கிறது. புனிதங்கள் கேள்விக்குறியாகின்றன. அதுவரை புனிதங்களைச் சொன்ன இலக்கியமும் கேள்விக்குறியாகின்றன. அப்போதுதான் வாசிப்பு தீவிரமடைகிறது. இலக்கியம் வாழ்வின் சாரத்தைப் பேசக்கூடியதென்றால் வாழ்க்கைக்குள் நிகழக்கூடிய அனைத்துமே அதற்கு முக்கியமானதுதான்.  அவ்வகையில் இலக்கியத்தின் வேலை புனிதமானதைச் சொல்வதுதான் என்பது பிற்போக்கானது.

நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற வார்த்தைகளை எல்லோரும் உபயோகிக்கப் பழகியுள்ளார்கள். கொஞ்சம் மெனக்கெட்டு அது குறித்து வாசித்தால் பின்நவீனத்துவம் ஒரு கலை வெளிப்பாட்டு உக்தி என்ற எல்லையைத் தாண்டி அறிதல் , அறிவியல், அரசியல், அறவியல் எனச் சகலத்திலும் தன் செல்வாக்கைச் செலுத்துகிறது என்பது புரியும். சிலர் இன்று கட்டுடைப்பு, கட்டவிழ்ப்பு, மையமிழப்பு போன்ற வார்த்தைகளை அதன் ஆழம் புரியாமல் பயன்படுத்தி மிரட்டுவது போலெல்லாம் இந்த சிறிய நேர்காணலில் அக்கோட்பாடுகள் குறித்து சுருக்கமாகக் கூறி கடக்க விரும்பவில்லை. நான் பேராசிரியர் அ.மார்க்ஸ் மற்றும் பிரேம் எழுத்துகள் மூலமே அவற்றை உள்வாங்கினேன். விரும்புபவர்கள் தேடி படிக்கலாம்.

உபரி கேள்வியாக வாசகர் திருப்தி குறித்து கேட்டுள்ளீர்கள். எழுத்தாளன் வாசக ருசிக்கு எழுதுபவனல்ல. அதற்கு பேசாமல் கொய்தியோ கேரெங் போடப்போகலாம். அங்குதான் வாடிக்கையாளனின் தேவைக்கு ஏற்ப ருசியின் தன்மையும் மாறும். நல்ல வாசகனுக்கு தேவை வாசிப்பில் பெரும் சௌகரியமான  மனநிலைகள் அல்ல.  வாசிப்பின் மூலம் தர்க்கங்கள், பிரதிகளுடன் உரையாடல்கள். பொழுதுபோக்குக்காக வாசிப்பவர்களை நான் எப்போதுமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை… பொழுது போக்கு இலக்கியங்கள் போலவே.

கேள்வி :  வல்லினம் இணைய இதழ் வழி நீங்கள் சாத்தித்தது என்ன?ஓர் இலக்கிய ஏடான இஃது பரந்த வாசகப் பரப்பைக் கொண்டிருக்கின்றதா?

பதில் : சாதனை என்றெல்லாம் இல்லை. ஓர் துறையில் இயங்குபவன் அவன் வாழ்நாளில் அதன் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்களோடு இணைந்து வல்லினத்தை நடத்தி வருகிறேன். ஆங்காங்கு உதிரிகளாக இருந்த தீவிர எழுத்தாளர்களை வல்லினம் மூலம் மையப்படுத்த முடிந்ததை நல்ல நிகழ்வாகக் கருதுகிறேன். இணைய இதழாக வெளிவரத்தொடங்கிய போது தமிழக, இலங்கை எழுத்தாளர்களும் சம அளவு பங்கு வகித்தது உற்சாகமான மாற்றம்.

வல்லினம் பதிப்பகம் மூலம் இதுவரை 7 புத்தகங்களைக் வெளியிட்டுள்ளோம். எழுத்தாளர்களுக்கு உரிய ராயல்டியையும் கொடுத்துவிடுகிறோம். இது ஒரு சேவை அல்ல. நிபுணத்துவமான செயல்பாடு. அது மலேசியத் தமிழ்ச்சூழலில் நடைபெற நாங்கள் முனைப்பு காட்டுகிறோம். ஓவிய கண்காட்சி, நிழல்படக் கண்காட்சி என பல்வேறு கலை சார்ந்த நிகழ்வுகளை நடத்தியுள்ளோம். ‘கலை இலக்கிய விழா’ என்ற பெயரில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இலக்கிய விழாவினை முன்னெடுக்கிறோம்.

வல்லினத்தில் உருவான எழுத்தாளர்கள் உண்டு. வல்லினத்தின் மூலம் எழுத்தை ஸ்திரப்படுத்தியவர்களும் உண்டு. இளம் எழுத்தாளர்களின் பலரது புத்தகங்கள் வல்லினம் பதிப்பில் முதன் முதலாக வந்திருக்கிறது. உலகம் முழுக்கவும் மலேசிய இலக்கியம் குறித்து இருந்த ஜனரஞ்சக ஆடையை வல்லினம் அவிழ்த்து வீசியது எனலாம். இதுவரை ஷோபா சக்தி, ஜெயமோகன், அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா போன்ற தமிழின் முக்கிய எழுத்தாளர்களோடு வல்லினம் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது.

இப்போது கோட்பாடுகள் , தத்துவங்களின் பின்புலத்தோடு மலேசியப் படைப்பாளர்கள் இயங்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் ‘வல்லினம் வகுப்புகள்’ என்ற தலைப்பில் தொடர்ந்து ஒவ்வொரு கோட்பாடுகள் சார்ந்தும் எழுத்தாளர்களுக்கும் எழுத்தார்வளர்களுக்கும் பயிற்சி நடத்துகிறோம். அந்தந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இப்பட்டறையை வழி நடத்துகிறார்கள்.

ஒரு சிறிய திருத்தம். ‘வல்லினம்’ இலக்கிய இதழ் அல்ல. கலை, இலக்கிய, அரசியலில் பல்வேறு பகுதிகளை அது தொட்டுப் பேசுகிறது.

கேள்வி : மலேசிய நாட்டைத் தவிர்த்து தமிழ் நாடு மற்றும் தமிழ் நெஞ்சங்கள் வாழும் நாடுகளில் உள்ள படைப்பாளிகளிடையே உங்களது உறவு எப்படி உள்ளது?

பதில் : ஜெயகாந்தனோட ஒன்னா குடிச்சேன் தெரியுமா..? வைரமுத்து வீட்டில விருந்து சாப்பிட்டேன் தெரியுமா…? கருணாநிதிகிட்ட கைக்கொடுத்தேன் தெரியுமா…? ஜெயமோகனோட ஊட்டியில ஒன்னா ஒன்னுக்குப் போனே தெரியுமா?  எனக் கூறிக்கொண்டிருக்கும் ஒரு கோமாளிகள் கூட்டம் ஏற்கனவே மலேசியாவில் இருப்பதால் இந்தச் சந்தர்ப்பதை நான் இப்போதைக்கு நழுவ விடுகிறேன். எழுத்தாளர்களுடனான உறவு வாசிப்பில் நீண்டிருப்பதுதான் ஆரோக்கியமானது.

படைப்பாளிகளிடம் உரையாடுவது மகிழ்ச்சி தரக்கூடியதுதான். அதை செய்வதில் எனக்கு எப்போதுமே அலாதி விருப்பம் உண்டு. ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ் ,சண்முக சிவா, என பல எழுத்தாளர்கள் என் சிந்தனை மாற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பேச்சு மனதை வருடுபவை அல்ல. ஏற்கனவே நம்மிடம் இருக்கும் முன்முடிவுகளோடு விவாதிப்பவை.  ஆனால், அத்தகையதொரு தர்க்க மனநிலையை படைப்பிலக்கியவாதி இல்லாத சில எளிய மனிதர்கள்கூட கொடுக்கக்கூடும்.

ஒருமுறை பங்கோர் தீவுக்குச் சென்றிருந்தேன். ஒரு டாக்ஸி ஓட்டிதான் எங்களுக்கு சுற்றிக்காட்டினார்.  வாடகையைக் கறாராகக் கூறினார். விலை குறைப்பே இல்லை. திரும்பும் போது “டாக்ஸியில எதையும் விட்டுடாதிங்க” என எச்சரித்தார். பின்னர், ஒரு வெளிநாட்டு பயணி ஐயாயிரம் ரிங்கிட்டை மறதியாக விட்டுவிட்டு போனதால் ஏற்பட்ட மன உளைச்சலையும் அவரைத் தேடி அலைந்து மீண்டும் பணத்தைக் கொடுத்தக் கதையையும் கூறினார். நாங்கள் ‘அதுக்கு ஏன் மன உளைச்சல் உண்டாகனும்’ என்றோம். “உழைக்காத பணம் உடம்புல ஒட்டாது” என்றார்.  அவரது கடைசி வரிகளை ஒட்டி  எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்கலாம்தான். ஆனால், எல்லா தர்க்கங்களையும் மீறி எளிய மனிதர்களிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

எவ்வித அடையாளமும் இல்லாத அந்த உதிரி மனிதர்களிடம் தங்கள் வாழ்வைச் சொல்ல சொற்கள் போதாமல் இருக்கலாம். சொற்கள் அதிகம் இருப்பதாலேயே படைப்பாளி என்பவன் உயர்ந்தவனா என்ன?

(Visited 92 times, 1 visits today)

3 thoughts on “தினக்குரலில் வெளிவந்த நேர்காணல்: என்னிடம் நன்றி உணர்ச்சி இல்லை !

  1. சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *