இலக்கிய இயக்கங்களும் பத்திரிகைகளும் எப்போதுமே சில முகமுடிகளைத் தயாரித்து வைத்துள்ளன. அவற்றிற்குத் தங்களைச் சுற்றிப் பலம் பொருந்திய ஆளுமைகள் இருப்பதாக எப்போதுமே பாவனை காட்டும் அவசியம் உள்ளது. தங்களுக்கு ஏற்றவராகவும் அனுசரித்துச் செல்லக் கூடியவராகவும் நடைமுறையில் இருக்கின்ற
அமுலாக்கங்களைக் கேள்வி எழுப்பாதவராகவும் இருக்கும் ஒருவர், அந்த முகமுடியை அணியத் தகுதி உடையவராகிறார். அவர்களுக்கு விருதுகளை வழங்கி அந்நிலையை அதிகார பீடங்கள் அழுத்தமாக்குகின்றன. ஊடகங்களும் சளைக்காமல் அவர்களைப் பிரதானப்படுத்தி வெகுமக்கள் பார்வையில் அவர்களின் பிம்பங்களை ஊதிப் பெரியதாக்க உதவுகின்றன.
தமிழகத்தில் இந்நிலை இருந்தாலும் அது ஆபத்தானதாகப் படவில்லை. எப்போதுமே தரமான எழுத்துகளை முன்னெடுக்கும் போக்கைத் தீவிர எழுத்தாளர்களும் வாசகர்களும் செய்தே வருகின்றனர். அதேபோல பல்வேறு வகையான விமர்சனப் போக்குகளும் விவாதங்களும் தமிழக இலக்கியச் சூழலில் தொடர்ந்தே வருகின்றன. நல்ல எழுத்துகளை வாசிக்க விரும்பும் ஓர் இளம் வாசகனுக்குக் கைகாட்ட ஒரு தொடர்ச்சியான விமர்சகர் வரிசை தமிழகத்திலும் இலங்கையிலும் காலம் தோறும் செயல்பட்டே வருகிறது. ஆனால், இவர்களால் அமைப்புகளின் அதிகாரபலத்துடனும் பெரும் பத்திரிகைகளின் முரண்பாடுகள் இல்லாத ஒற்றைகோஷங்களோடும் செயல்பட முடியாது. பொதுப் புத்தியில் இந்நிலை கேலிக்குரியதுபோல காட்சி தந்தாலும் இந்நிலையே அறிவுத் தளத்தில் இயங்குவதற்கான அறிகுறியாகப்படுகிறது.
தீவிரமாகச் சிந்திப்பவர்கள் அனைவருமே ஒருவகையில் தனியர்கள்தான். அச்சிந்தனைகளோடு ஓரளவு ஒத்துப் போகிறவர்களோடு மட்டுமே தொடர் நடவடிக்கைகள் சாத்தியமாகின்றன. படைப்பிலக்கியவாதி என்பவன் சிந்திக்கக்கூடியவனாக இருக்கும் பட்சத்தில் கருத்துச் சார்ந்த முரண்பாடுகள் இருப்பது மிக இயல்பு. அக்கருத்தை நிறுவ விவாதங்கள் எழுகின்றன. சில சமயங்களில் விவாதம் புதிய அடைவுக்குக் கொண்டு சேர்க்கிறது. முதிரா விவாதங்கள் தனி மனிதப் பகைமையை ஏற்படுத்தி விடுகின்றன. விவாதிப்பவன், தனது கருத்தையும் தன்னையும் ஒன்றென உருவகித்து, கருத்தில் தன் அகங்காரத்தை ஏற்றி வைக்கும்போது , அதன் உடைவை தனதுடைவாகக் கருதுகிறான். பகைமை பாராட்டவும் செய்கிறான். இலக்கிய விமர்சனங்களிலும் இதுபோன்ற விமர்சனப் போக்கு தமிழகத்தில் தொடர்ந்தே வருகிறது.
விமர்சகனின் பரிந்துரைகளை மீறிச் சில படைப்புகள், தேர்ந்த வாசகர்களின் மூலம் காலம் தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவற்றுடனெல்லாம் ஒப்பிட்டுப் பேசும் நிலையில் மலேசிய சிங்கப்பூர் இலக்கியச் சூழல் எப்போதும் இருந்ததில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் படைப்பிலக்கியம் தொடர்பான கறாரான விமர்சன முறையோ இரசனை அல்லது கோட்பாடுகள் சார்ந்த பார்வையோ மலேசியாவில் நிகழ்வது அரிது என்பதே.
எழுதுபவர்களிடம் மனத்தடை எற்படலாம், நட்பில் விரிசல் நேரலாம், மலேசியத் தமிழ் இலக்கியம் வளராத போது அதைக் கறாரான விமர்சனத்திற்கு உட்படுத்துவது அவசியமற்றது, மலேசியத் தமிழ்க் கல்விச் சூழலின் காரணமாக இதுபோன்ற எழுத்துகள்தான் சாத்தியம் என்பன போன்ற காரணங்களால் இதுகாறும் அது தவிர்க்கப்பட்டிருக்கலாம். தட்டிக் கொடுக்கிறேன் எனத் தொடர்ந்து குழந்தையைத் தூங்க வைத்த கதைதான் இது. அதன் விளைவாக மேற்சொன்ன அமைப்புகளும் பத்திரிகைகளும் முகமூடி அணிவித்து உருவாக்கி விட்டவர்களே மலேசிய இலக்கியத்தில் அடையாளங்களாகி விடுகிறார்கள்.
அதிகார பலம் கொண்ட தமிழ்ச் சங்கங்களும் பத்திரிகைகள் மூலம் உருவாக்கப்படும் எழுத்தாளனின் பிம்பங்களும் சிறுபத்திரிகைகள் மூலம் இயங்கும் எழுத்தாளர்களின் ஆளுமையை வெகு எளிதில் மறைத்து வைக்கும் சக்தி கொண்டவைதான். அடிக்கடி மேடைகளில் குறிப்பிடப்படும் பெயர்களும் பரிசு பெறும் உருவங்களும் எண்ணிக்கையில் அதிகமான புத்தகம் எழுதும் எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளின் பொற்கரங்களைச் சுமக்கும் தோள்களும் மலேசியாவில் எந்தக் கேள்வியும் இல்லாமல் பிரசித்தி பெற்று விடுகின்றன. அதிகாரம், வசதி, வாய்ப்பு உள்ளபடியால் வெளிநாடுகளுக்கு ஏந்தி செல்லப் படுவதும் இந்த முகங்கள்தான். அதன் விளைவாக, மலேசிய இலக்கியம் குறித்த மோசமான ஒரு முன்முடிவுகள் தமிழகம் உட்பட வெளிநாடுகளில் வாழ்கின்ற எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இயல்பாகவே தொற்றிக் கொள்கிறது.
ரெ.கார்த்திகேசு சில நல்ல சிறுகதைகளை மலேசிய இலக்கியத்திற்குக் கொடுத்திருக்கிறார் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. மலேசியாவில் முக்கியமான 10 சிறுகதைகளைக் கேட்டால், என் பட்டியலில் நிச்சயம் கார்த்திகேசுவின் சிறுகதை ஒன்றாவது இருக்கும். ஆனால், நாவலாசியர்களில் அவருக்குப் பத்தாவது இடம்கூட கிடைப்பது சிரமம்தான். வானத்து வேலிகள் (1981), தேடியிருக்கும் தருணங்கள் (1993), அந்திம காலம் (1998) (இது குறித்து சில அம்சங்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் பொருட்படுத்திப் பேச வேண்டியுள்ளது.) காதலினால் அல்ல (1999) இறுதியாக வந்த சூதாட்டம் ஆடும் காலம் (2005) என அவரது நாவல்கள் அனைத்துமே ஜனரஞ்சக வாடை வீசுபவைதான். ஆனால், மலேசியாவில் நாவல் வளர்ச்சிக்கு அவர் பெறும் பங்காற்றியது போன்றதொரு பிம்பம் கொடுக்கப்படுவது அவரை வைத்து இரவல் வெளிச்சம் பெறும் இலக்கிய அமைப்புகளின் அரசியல் மட்டுமே. இந்நிலைக்கு ரெ.கா பொறுப்பாக மாட்டார் எனினும் என் கருத்துக்கு நான் பொறுப்பேற்று அவர் நாவல் குறித்த என் பார்வையை முன் வைப்பதுதான் நியாயமாகும்.
மிகுந்த அலுப்பான மறுவாசிப்புக்குப் பின் ‘சூதாட்டம் ஆடும் காலம்’ என்ற அவரின் கடைசி நாவல் தொடர்பாக சில கருத்துகளைப் பகிரலாம் என முடிவெடுத்தேன். இந்நாவலின் கதையை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம்: கதிரேசன் என்பவன் இங்கிலாந்தில் படிப்பை முடித்து பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்ற நாடு திரும்புகிறான்.
அவனுடைய அம்மா அவன் சிறுவனாக இருந்தபோதே அவனைக் கொடுமைக்கார தகப்பனிடம் தனியே விட்டுப் பிரிகிறாள். இதனால், அவனுக்கு அவன் அம்மாவின் மேல் கசப்பு ஏற்படுகிறது. போகும்போது அவனது இரண்டு மாத தங்கையைக் கழுத்தை நெரித்துக் கொன்றது அதற்கு முக்கிய காரணம். கதிரேசன் தனது சிறுவயதில் அப்பாவினால் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். இதனால், அவன் தந்தையைப் பிரிந்து ஆசிரியர் பாதுகாப்பில் வளர்கிறான். நன்றாகப் படிக்கிறான் கதிரேசன். நாடு திரும்பியவன் அவனைக் காணத் துடிக்கும் அம்மாவைப் புறக்கணிக்கிறான். இறுதியில் இறக்கும் தருவாயில் பாட்டிதான் தன் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறுகிறாள். அதோடு அவன் தாய் இரட்டை குழந்தை பெற்றதாகவும் அதிலொன்று ஊனம் எனவும், ஊனமான குழந்தையை தான் எடுத்துச் சென்று விட்டதாகவும் கூறுகிறாள். அவன் திருந்தி, மனம் வருந்தி தாயைப் பார்க்கப் போக தாய் மரணப் படுக்கையில் இருக்கிறாள். மூளை வளர்ச்சி குன்றிய தனது தம்பியைச் சக்கர நாற்காலியில் பார்க்கிறான். அவனைப் பத்திரமாக ஆசிரமத்தில் விட்டு வருகிறான். அம்மாவுக்குக் கொள்ளி வைக்கிறான். இடையில் காதல் எல்லாம் வருவது தனிக் கதை.
நாவலின் பெரும்பகுதி அவர் விரிவுரையாளராகப் பணியாற்றும் சூழலைச் சொல்லிச் செல்கிறது. கதையின் மையத்திற்கும் அதற்கும் முக்கியதுவமில்லாமல் விரிவுரையாளரின் பணி நுட்பங்களும் மேலோட்டமாகவே விளக்கப்படுகின்றன. கதையின் மையத்தை மட்டும் வைத்து ஒரு கேள்வியைக் கேட்டுப் பார்த்தேன்.
நாவலை வாசித்த பின்பு ஒரு வாசகனான எனக்கு என்ன நேர்கிறது? இந்த அடிப்படையான கேள்வியைக் கொண்டே நான் ஒரு பிரதியை வணிக எழுத்தா அல்லது தீவிர எழுத்தா என்பதைப் புரிந்து கொள்கிறேன்.
தாயை மதிக்க வேண்டும் என்கிறாரா? படித்து முன்னேற வேண்டும் என்கிறாரா? அல்லது தாயின் தியாகத்தைப் போற்றுகிறாரா? இதைதான் இந்த நாவல் சொல்கிறது என்றால் அதற்கு 175 பக்கங்கள் தேவை இல்லை. காரணம், இவை ஏற்கனவே பல அறநெறி நூல்களால் நமக்கு காலம் காலமாக சொல்லப்பட்டு வருபவை. ஏற்கனவே நம்பிக் கொண்டு நடைமுறையில் இருக்கும் ஒன்றைக் கதைச் சூழலுக்குக் கொண்டு வருவதன் மூலம் அதை ஒரு நல்ல இலக்கிய பிரதியாக ஏற்றுக் கொள்வதில் எனக்குச் சிரமம் உள்ளது. அந்நாவலில் வாழ்வு குறித்த எவ்விதமான பார்வையையும் எழுத்தாளர் முன்வைக்கவில்லை. வாழ்வு, காலம் ஆடும் சூதாட்டம் என்றும் எல்லாம் தற்செயல் எனவும் சொல்கிறார். கூடவே , சில கேள்விகளை மட்டும் முன் வைக்கிறார். அதற்கான பதில் அவரிடம் இல்லாததாலோ அல்லது வாசகனை சிந்திக்கத் தூண்டும் நோக்கிலோ நாவலை முடிக்கிறார். அவர் முன்வைக்கும் கேள்விகளின் சாரமாக இருக்கும் தியாகம், அன்பு, சுயநலம் போன்றவற்றிற்கு நெருக்கடி மிகுந்த வாழ்க்கை எவ்வகை அர்த்தம் கொடுக்கிறது எனச் சொல்ல முன்வந்தாலாவது வாழ்க்கை குறித்த அவரது மாற்றுப்பார்வை புரியும்.
ஆனால், அந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எஸ்.பொவுக்கு அந்த விடுகதை புரிந்துவிடுகிறது. காம்யூவை துணைக்கழைத்து ‘எல்லாம் தற்செயல்தான்’ என்ற பார்வையைப் பொருத்திப்பார்க்கிறார். பின்னர் கார்த்திகேசுவுக்கும் காம்யூவுக்கும் உள்ள வாழ்வின் தேடல் ஒன்றெனக்கூற எஸ்.பொ போன்றவர்களுக்கு மனது வருகிறது. ‘எல்லாம் தற்செயல்’ எனக்கூறவும் அதை உள்ளுணரவும் கதிரேசனின் வாழ்வில் எவ்வித அழுத்தங்களும் நிகழவில்லை. அதை சொன்னப் பின்பும் கதிரேசன் வாழ்வின் பற்றுதலை இறுக்கப் பிடித்தே இருக்கிறான். மின் சுடலையில் அவன் தாயின் தேகம் எரிவதைப் பார்த்து அழுகிறான். காம்யூவின் ‘அந்நியன்’ (The Outsider) நாவலில் தாய் பிணவறையில் இருக்கும் போது அவன் அதைப்பற்றி அக்கறைக்காட்டாமல் அவ்வறை பாதுகாவலனிடம் பேசிக்கொண்டிருக்கும் இறுக்கமான சூழல் என் நினைவுக்கு வந்தது. அதனால் என்ன எஸ்.பொவுக்கு இருவரின் தேடலுன் ஒன்றாகத்தான் படுகிறது. என்ன செய்ய முடியும்?
கதையில் மேட்டுக்குடி மனநிலையில் வாழும் கதிரேசன் அடிக்கடி சொல்வதுபோல் “இருக்கின்ற கட்டுபாடுகளுக்கிடையே உருப்படியாக எதாவது செய்ய முடியும்,” (பக்கம் 51) என்ற நம்பிக்கையில் எழுதிச் சென்று எதையுமே ஆழம் இல்லாமல் விட்டுச் செல்கிறார்.
அடிப்படையில் எனக்கு ரெ.கா வின் எழுத்துகளில் இருக்கும் விமர்சனமே அதன் status Quo தன்மைதான். இதற்கு உதாரணமாக பி.பி.நாராயணன் ஒரு சமூக சேவையாளர் என ஒரு கருத்தை பாடப் புத்தகங்கள் நிறுவுகின்றன என வைத்துக்கொள்வோம். ஆனால், அதே பாடப் புத்தகத்தில் மலாயா கணபதி குறித்த தகவல் ஒன்றும் இருக்காது. மாணவர்களும் சமூகம், வரலாறு, கலாசாரம் என்று எதைப் பற்றியும் அதிகார வர்க்கம் சார்ந்த பார்வையையே பெற்றுக் கொள்வர். சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாற்றுக்கு எதிரில் நிற்கும் மாற்று வரலாற்றை (Subaltern History) அவர்கள் கடைசி வரை அறிவதே இல்லை. இந்த நாடு நன்றாக இருக்கிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். வேலை செய்தால் சம்பளம் உண்டு. எனவே எதற்குமே கலக்கம் தேவையில்லை என்பன போன்ற நம்பிக்கைகளில் அவர்கள் சிந்தனையில் உற்பத்தியாகின்றன. இந்த மேட்டுகுடிச் சிந்தனையில் நின்றுகொண்டுதான் ரெ.காவின் நாவல்கள் பயணிக்கின்றன. இப்படிப் பொதுவாகச் சொன்னால் பலருக்குக் கோபம் வரும். எனவே உதாரணமாகச் சிலவற்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன்:
* இங்கிலாந்திலிருந்து சுதந்திரச் சிந்தனையாளனாகத் திரும்பி வரும் கதிரேசனிடம் இந்நாட்டின் விதிமுறைகளின் ஒன்றாக, ‘அரசாங்க ரகசியங்களைக் காக்க வேண்டும்’ என்ற உள்ளடக்கம் கொண்ட பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடப் பணிக்கிறார் அதிகாரி. கதிரேசன் இயல்பாக “எனக்கு இதில் ஆட்சேபனை இல்லை” என்கிறான். அதிகாரியும், ‘பலரும் இதில் கையெழுத்திட தம்முடன் விவாதம் செய்திருப்பதாகவும் கதிரேசன் புரிந்துகொண்டது நல்லதாய் போயிற்று என்றும் சொல்கிறார். (பக்கம் 17)
* அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கல்வி பயின்ற கதிரேசனுக்கு ‘சுதந்திர அறிவு ஜீவியாக’ (இப்படித்தான் ரெ.கா சொல்கிறார்) செயல்பட முடியாமல் போகுமோ என்ற எண்ணம் வருகிறது. ஆனால், சமுதாயக் குழப்பத்தை ஏற்படுத்தாத வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இன்னும் எவ்வளவோ உண்மைகளை வெளிக்கொணர முடியும் என அவன் உணர்ந்திருந்தான். இங்குள்ள சட்டங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டியது அவசியம்தான்……. ‘இப்போது இது ஒரு வேலை. அதனை ஒழுங்காகச் செய்து நல்லபெயர் எடுக்க வேண்டும்’ என்கிறான் (பக்கம் 20)
* நாடு திரும்பிய கதிரேசன் அவன் பழைய காதலியைப் பார்க்கிறான். அவனது கல்வித் தகுதியை அவள் புகழ்கிறாள். அதற்கு கதிரேசன் ஒரு செல்வந்தனைக் கல்யாணம் செய்துகொண்டு செல்வச் செழிப்பில் இருக்கும் பழைய காதலியைப் பார்த்து ஒரு வசனம் பேசுகிறான் இப்படி ,”ஆனா, அந்த மாதிரி எந்தக் கஷ்டமும் இல்லாம நீ உன் வாழ்க்கையில பெரிய வெற்றி பெற்றிருக்கியே! அது இன்னும் கொண்டாடப்பட வேண்டிய விஷயம் இல்லையா? ” (பக்கம் 36)
* தன்னை வளர்த்த ஆசிரியர் முருகேசன் பற்றி நினைக்கும்போது இவ்வாறு சொல்கிறார், “அவர் மட்டும் இந்தத் தோட்டத்தில் இல்லாதிருந்தால், தான் அவரிடம் ஒண்டியிருக்க முடியாது. இப்படி முன்னுக்கு வந்திருக்கவும் முடியாது. தன் முன்னேற்றத்திற்காகத்தான் விதி அவரை அந்தத் தோட்டத்தில் தங்க வைத்ததோ!” (பக்கம் 52)
* இதெல்லாம் ஒரு புறம் இருக்க, பலவும் கற்று மலேசியா வந்த கதிரேசன் சாதி குறித்து இவ்வாறு நினைக்கிறார். “சாதிகள் என்பது என்ன? ஏன் அவை இத்தனை முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை எந்தக் கல்வியும் விளக்க முடியவில்லை. மனித மனதுக்குள் இருக்கும் அறியமுடியாத புதிர்களில் அதுவும் ஒன்றாகவே கிடந்தது”. (பக்கம் 66)
* சரி, கதையில் வருகிற கதிரேசனுக்குத்தான் சாதி குறித்த இந்தக் குழப்பமெல்லாம் என்று சமாதானம் செய்துகொண்டு வாசித்தால் கதை சொல்லியான ரெ.காவுக்கு அதில் குழப்பமே இல்லை எனப் புரிந்துகொள்ள முடிந்தது. “அத்தையால் பிற வழிகளில் தன் அம்மாவை அடக்கி வைக்க முடிந்தது. ஆனால் இந்தக் ‘கீழ்ச்சாதி’ என்று தானாக அள்ளிப் பூசிக்கொண்ட சேற்றை அவளால் துடைத்தொழிக்க முடியவில்லை. இதை எதிர்க்க முடியாமல் அந்தக் கோபத்தை அப்பாவியான கதிரேசன் மேல்தான் காட்டுவாள்” (பக்கம் 64)
* மேட்டுக்குடி மனம் பல விடயங்களைப் பார்த்து எப்போதும் பெருமை பட்டுக்கொண்டிருக்கும். ஆனால் ரெ.கா சொல்லியே அது சாலையைப் பார்த்தும் பெருமிதம் அடையும் எனத் தெரிய வந்தது. “பொருளாதார எழுச்சி பெற்ற புதிய மலேசியா சாதித்துள்ள பல கட்டுமானச் சாதனைகளில் இந்த நெடுஞ்சாலையும் இந்தக் குறுக்குப் பால ஓய்வு விடுதியும் ஒன்று என்பதை எண்ணிப் பார்த்து பெருமிதம் அடைந்தான்.” (பக்கம் 68)
* படித்து முனைவராகிய பின் தன் தந்தையைப் பார்க்கச் செல்லும் கதிரேசன் உதாசினப்படுத்தப்படுகிறான். அவன் தந்தை அவனை வெளியேறச் சொல்ல, கதிரேசன் மனம் இப்படி நினைக்கிறது , “படிப்பறிவில்லாத, அறியாமைகள் நிறைந்த நாகரிகமில்லாத மூட மனிதர். இவர் ஏதோ ஒரு போலி ரோஷத்தில் சொல்லுவதைப் படித்த, அறிவாளியான, அவரைவிடப் பலமடங்கு சமுதாயத் தரத்தில் உயர்ந்த நான் கேட்டுக்கொண்டு போக வேண்டுமா? முடியாது”. (பக்கம் 101)
நாவல் முழுக்கவும் வீச்சமடிக்கும் மேட்டுகுடி சிந்தனையை இப்படி நிறையவே பட்டியலிடலாம். இவற்றை தொகுத்துப் பார்க்கும்போது ரெ.கா இந்த வாழ்வையும் சமுதாயத்தையும் பார்க்கும் விதத்தை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பேராசிரியராகப் பணியாற்றிய அவர் மனம் எவ்வாறு இயங்குகின்றது எனவும் அறிய அவரது வாசகங்கள் வாய்ப்பளிக்கின்றன.
முதலில் ரெ.கா பார்வையில் ‘முன்னேற்றம் / வெற்றி’ என்பதின் அளவுகோள் என்ன என்பதிலிருந்து தொடங்கலாம். பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கும் தனது முன்னால் காதலியைப் பார்த்து ‘பெரிய வெற்றி ‘ பெற்றிருப்பதாகப் பாராட்டுகிறான். அதேபோல விரிவுரையாளராக தான் இருப்பதையும் முன்னேற்றம் அடைந்த நிலை என்றே எண்ணிக் கொள்கிறான் கதிரேசன். கல்வியும் அதன் மூலம் கிடைக்கின்ற பொருளாதாரமும்தான் வெற்றி என்பது மத்தியதர வாழ்வின் சிந்தனைகள்தான். அதை ரெ.கா தனது கதாநாயகன் மூலம் சொல்ல வைப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால், முனைவராகிய பின் தந்தையைச் சந்திக்கச் செல்லும் தருணம் அவன் மனதில் தோன்றும் எண்ணமே அதை படிக்கும் நமக்கு சிக்கலாகி விடுகிறது. மீண்டும் ரெ.காவுக்குள் மேட்டுக்குடி எண்ணம் புகுந்து கொள்கிறது. படிப்பறிவில்லாத, அறியாமை நிறைந்த தன் தந்தையை கதிரேசன் ‘மூட மனிதன்’ எனத் திட்டுகிறான். அதோடு படித்த, அறிவாளியான அவன் தன் தந்தையைவிட சமுதாயத் தரத்தில் உயர்ந்துவிட்டதாக தனக்குள் கூறிக் கொள்கிறான். ‘சமுதாயத் தரம்’ எனும் சொல்லின் மூலம் கற்றவனை உயர்ந்தவனாகவும் கல்லாதவனைத் தாழ்வானவனாகவும் பார்க்கும் ரெ.காவின் இந்தப் பார்வைதான் அவர் படைப்பிலக்கியத்தை மேலும் மேலும் பின்னுக்கு இழுக்கிறது. இந்த சமுதாயத் தரம் பார்க்கும் சிந்தையே சாதிய மனதுக்கு அடிநாதமாகவும் இருக்கிறது.
“இப்பவெல்லாம் சாதி எங்கங்க இருக்கு… என்போரையும் இந்தச் சாதி இங்கு என்ன பங்கு வகிக்கிறது என்பது புரியவே மாட்டேன் என்கிறதே” எனச் சொல்வோரையும் விட ஆபத்தானவர்கள் இருக்க முடியாது. இவர்கள் அது குறித்து பேசுவதிலிருந்து தப்பிக்கும் தரப்பினர். அப்படிப் பேசுவது அவர்களுக்குள் உள்ள சாதிய மனதை உசுப்ப நேரலாம். ரெ.காவின் கதிரேசனும் அதைதான் சொல்கிறான். பெரிய கல்வியாளனான அவனுக்கு சமுதாயத்தில் சாதி எவ்வாற அதிகார பீடங்களால் முக்கியமாக்கப்படுகிறது என விளங்காமல் துடிக்கிறான். இந்தப் பரிதாபமான அப்பாவி கதிரேசன்போல ரெ.காவும் பேசாமல் இருந்திருக்கலாம். கதை சொல்லியான அவர் கதிரேசனின் அத்தை கீழ்சாதி எனும் சேற்றை எடுத்துப் பூசிக் கொண்டார் எனப் பரிதாபப்படுகிறார். ஆக ரெ.காவின் பார்வையில் சாதி என்பது சேறல்ல… கீழ் சாதி என்பதுதான் சேறு. இதைவிட ரெ.கா போன்ற ஒரு மேட்டுக்குடி மனம் கொண்டவரின் சாதிய புரிதலை விளக்க முடியாது என நினைக்கிறேன்.
இவ்வாறு இருக்கும் கதிரேசனை மகிழ்விக்க பல அம்சங்கள் சுற்றிலும் இருக்கிறது. விசாலமான பணி அறையைக் கண்டு வியக்கிறான். நெடுஞ்சாலையும் குறுக்குப் பால ஓய்வு விடுதியையும் எண்ணிப் பார்த்து பெருமிதம் அடைகிறான். அதோடு அதை ‘பொருளாதார எழுச்சி பெற்ற புதிய மலேசியா ‘ என்றும் சொல்கிறான். இங்கு கற்றறிந்த விரிவுரையாளரான கதிரேசனுக்கு பொருளாதார எழுச்சி என்பது எந்தச் சமூகத்துக்கு நிகழ்ந்துள்ளது என்றும் அது நிகழாத இந்திய சமூகத்தின் நிலை குறித்தும் எவ்வித விமர்சனமோ கேள்வியோ இல்லை. அரசாங்கம் திணிக்கும் கருத்துகளை ஒப்புவிக்கும் status Quo தன்மையை அவர் விடுவதாய் இல்லை. குறைந்தபட்சம் தான் செய்யும் தொழிலில்கூட கதிரேசன் எவ்விதமான தீவிரப் பார்வையும் இல்லாமல் அலைகிறான். வேலை செய்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என சமத்துப்பிள்ளையாக இருக்கிறான். இருக்கின்ற சூழலை சகித்துக்கொள்ளும் அப்பட்டமான உயர்கூலிகளின் அடிமை புத்தி அவனுக்கும் வந்துவிடுகிறது. அது குறித்தெல்லாம் ரெ.காவுக்குக் கவலை இல்லை. அப்போக்குக்கு உடன் பட்டவராகவே நாவலை நகர்த்துகிறார். குறைந்தபட்சம் பத்திரிகை துறை மலேசியாவில் எவ்வாறான அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளது என்பது குறித்த கவலைகளே இல்லாமல் நாவல் ஊசலாடுகிறது.
நாவலின் முக்கியமான பகுதியாக ஒன்றை மட்டும் சொல்லலாம். ஊனமுற்ற தனது தம்பியை அவர் (கதிரேசன்) பாதுகாப்பில் வைத்துக்கொள்ள முடியாத சூழல். ஒருவேளை நாவல் இங்கிருந்து நகர்ந்திருந்தால் அதற்கு வேறொரு பரிணாமம் கிடைத்திருக்கும். தாய்மை எனும் குறியீடு கொண்டுள்ள தியாக உணர்வை இன்னொரு சொற்குவியலால் சொல்லிச் செல்வதில் கார்த்திகேசு என்ற தனி மனிதரின் சிந்தனைதான் என்ன? நாவலின் இறுதியில் அவனுக்குப் (கதிரேசன்) பல கேள்விகள் தோன்றினாலும் அது எல்லாமுமே பழக்கப்பட்ட பதில்களையே மீண்டும் சொல்லும்.
வாழ்வின் தரிசனம் அபத்தமான கணங்களிலும் கிடைக்கும் என்பதை ரெ.கா மறுக்கிறாரா எனத் தெரியவில்லை. தம்பியை வேறொருவர் பாதுகாப்பில் விட்டுப் பிரியும் இடம் எளிதாகி விடுகிறது. உறவுகள் என்பது எத்தனை கசகசப்பு. தற்காலிகமாகப் பொங்கும் அன்பினால் முன்வந்து ஏற்கும் கடமைகள் சில சமயம் எத்தனை வாழ்வியல் சிக்கல்களுக்கு தள்ளிச் செல்கிறது. கதிரேசனின் தம்பியை ஒட்டி கதை சென்றிருந்தால் ஒருவேளை ரெ.காவுக்கு வாழ்வின் விசாலம் மேலும் அகப்படலாம். அதற்கு அவர் தன்னை சுற்றி வார்த்துள்ள மேட்டிமை சாயங்களை அகற்ற வேண்டும். வாழ்க்கைக்கு நிஜமாகவே இறங்கி வர வேண்டும்.