தொலையும் ஆபரணங்கள்

கண்டெடுக்கும் ஆபரணங்கள்
ஆபத்தானவை
அவை யாருக்காகவோ காத்திருக்கின்றன

யாராலோ நிராகரிக்கப்பட்ட அவை
யாரையோ பலிதீர்க்க
முனைகின்றன

அவற்றிடம் நிறைய கதைகள் உள்ளன
நாம் அந்தக் கதைகளில் லயிக்கிறோம்
வன்மங்களில் ஆபரணங்கள் கொடுக்கும் வலி
கதையின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது

கண்டெடுக்கும் ஒரு வளையல்
உங்கள் ரத்த நாளங்களை அறுக்கலாம்
ஒரு கொலுசு
உங்கள் கால்களை இறுக்கலாம்
ஒரு சங்கிலி
உங்களுக்குத் தூக்குக் கயிறாகலாம்
தோடுகள்
குளவிகளாக மாறி காதுக்குள் நுழைந்து
துளையிடலாம்

அனாதையாகிவிட்ட ஆபரணங்கள்
ஆபரணங்களல்ல
அவை
அணிந்தவனின் ரத்ததை
பருகி பழகியவை
நமக்கு அறிமுகமாகாதவனின்
குணங்களை ரொப்பியவை

கண்டெடுக்கும் ஆபரணங்கள்
அறிமுகமில்லாதவனின் தீண்டல்களில் தொடங்குகிறது
அறிமுகமில்லாதவனின் தீண்டல்களோடு தொடர்கிறது
பின்னர்

அவை தொலைகின்றன
ஆபரணங்கள் கண்டெடுக்கப்படும் என
அத்தனை உறுதியாய் நம்புகின்றன.

(Visited 78 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *