அது ஈராயிரத்து ஐந்தாம் ஆண்டு. தமிழகப் பயணத்தில் பல முக்கிய எழுத்தாளர்களில் நூல்களைத் தேடித்தேடி வாங்கி கொண்டிருந்தேன். இறுதியாக தமிழின் வசந்தகுமாரைச் சந்தித்தேன். ‘தமிழினி’ பதிப்பகத்தில் நூல்களைக் கொண்டுவருவதில் கறாரான போக்கை உடையவர் என அவர் குறித்து கேள்விப்பட்டுள்ளேன். தன் மனதுக்கு/ வாசிப்புக்கு ஒவ்வாத நூல்களை வணிகத்துக்காக ஒருபோதும் பதிப்பிக்காதவர். அவரிடம் இலக்கியம் தொடர்பாக உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நான் வாங்கிய நூல்கள் தொடர்பாகக் கேட்டார். அப்பட்டியலில் நகுலனின் கவிதை தொகுப்பு இருப்பதை அறிந்ததும் “நகுலனை வாங்கிகொண்டு கடல் கடந்து செல்லும் உங்களை நினைத்தான் பாவமாக இருக்கிறது” என்றார்.
எனக்கு குழப்பமாக இருந்தது. அத்தனை சத்தற்றவையா நகுலனின் கவிதைகள் என அவரை உடனடியாக வாசிக்கலானேன். வசந்தகுமாரின் வரிகள் மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்து அவ்வாசிப்புக்குத் தடையாக இருந்தது. ஆனால் அந்த நூலின் முன்னுரையில் காவ்யா சண்முகசுந்தரம் குறிப்பிட்டிருந்து ‘ராமச்சந்திரனா…’ எனத்தொடங்கும் கவிதை மட்டும் நகுலனை வாசிக்க வேண்டிய அவசியம் இல்லைதான்போல என முன்முடிவுக்கு வர தூண்டியது. கொஞ்ச நாள்கள் நகுலனை மூடிவைத்தேன்.
இது நடந்து மூன்று வருடங்கள் இருக்கும். ‘வல்லினம்’ பதிப்பில் வந்த சில நூல்களை தபாலில் அனுப்பும் அவசரத்தில் அழைந்துகொண்டிருந்தேன். தபால் செலவைக் குறைக்க புடுராயா பேருந்து நிலையத்தில் பேருந்தில் புத்தகங்களை அனுப்புவதாக முடிவு. புடுராயா புகையால் சூழப்பட்டிருந்தது. எல்லோரும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருந்தார்கள். யாருக்கும் யாரையும் இடிப்பது குறித்தோ முண்டிச்செல்வது குறித்தோ அக்கறை இல்லை. நகரம், மனிதனின் வேறொரு குணத்தை ஆரவாரத்துடன் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.
நகர நெருக்கடியில் சட்டென கலந்து கெடா மாநிலத்துக்குச் செல்லும் பேருந்தை தேடி அழைந்தேன். பேருந்து ஓட்டுனரிடம் நூல்களைக் கொடுத்துவிட்டு , கையில் பத்து ரிங்கிட்டைக் கொடுத்தால் பத்திரமாகச் சேர்த்துவிடுவார். சட்டென ஒரு முகம் என்னை எதிர்க்கொண்டு நிறுத்தியது.
கால்களின் வேகத்தைக் குறைக்கச் சிரமப்பட்டு நடையைத்தொடரும் அவசரத்துடன் ஏறிட்டேன். அவர் என் கல்லூரி நண்பர். மூன்று வருடங்கள் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர். பேசுவதற்கு ஓய்வு கிடைக்காத பொழுதுகளை இருவரும் நொந்துகொண்ட தருணங்கள் அதிகம். ஆள் கொஞ்சம் இளைத்திருந்தார். தலையில் முடி குறைந்தது. குறுகிய காலத்தில் நிறைய மாற்றம். “நீ நவீன்தானே” என்றார். நானும் “ஆமாம்” என்று கைக்கொடுத்தேன். அவ்வளவுதான். அவரும் அவ்விடத்தைவிட்டு அகல நான் பேருந்தை தேடி புறப்பட்டேன்.
திரும்பும் வழி நெடுகவும் இந்தச் சம்பவமே என் மனதில் மோதிக்கொண்டிருந்தது. ஏன் நான் அவரிடம் நிதானித்து பேசவில்லை? குறைந்தபட்சம் கைப்பேசி எண்களைக் கூட வாங்கிகொள்ளவில்லை. அத்தனை துரிதமான அவன் தோற்ற மாற்றம் குறித்தும் கேட்கவில்லை. சின்ன அறிமுகத்துடன் நட்பின் கரங்கள் விலகிவிட்டன. அவரும் அவ்வாறுதான் நடந்துகொண்டார். குறைந்தபட்சம் அவர் என்னை வெளியில் தேநீர் அருந்தவாவது அழைத்திருக்கலாம் எனத்தோன்றியது. எங்களை இவ்வாறு செய்ய வைத்தது எது என்ற கேள்வியும் தொற்றிக்கொண்டது. நிச்சயமாக இந்த நகர வாழ்வின் அவசரம்தான் என மனதுக்குப்பட்டதும் நகுனின் ‘ராமச்சந்திரன்’ கவிதை நினைவுக்கு வந்தது.
ஒரு கவிதை தன்னை திறந்துகாட்டும் தருணம் அது. அர்த்தம் கொடுக்காத வரிகள் சட்டென வாழ்வின் மிக நுட்மான தருணத்தை நமக்கு அறிமுகம் செய்கிறது. அக்கவிதையில் வரும் ‘ராமச்சந்திரன்’ எனும் படிமம் இப்போது நானாக மாறியிருந்தேன். இந்த நகரமும் அதன் நெருக்கடியும், பொருள் தேடும் அவசரமும் சக மனிதர்களுக்குள் எவ்வாறான மாயச்சுவரை எழுப்பியுள்ளது என அன்று முழுதும் நினைத்துக்கொண்டிருந்தேன்.
நகுலன் மீண்டும் தன் கவிதையை வாசிக்கலானார்…
நன்றி :மயில்