மலேசியத் தமிழர்கள் மடையர்களாக இருந்தால் இனி ஹிண்ட்ராப்பை நம்புவார்கள்!

 

HINDRAF MEETS PMஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களின் நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்று கூறியது தொடங்கி சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பெரும்பாலும் படித்தவர்கள்.  அவர்கள் தொணி இவ்வாறு இருந்தது.

குரல் 1 : “இனி பாரிசானுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் போல…” என இருந்தது ஒரு இழுவை.
குரல் 2 : “கேட்டத கொடுத்துட்டா ஏன் மாற்றம் தேவை” என சில நியாயவான்கள் கேட்டார்கள்.
குரல் 3 : “நாம ஏன் டென்சன் ஆகணும். எல்லாம் அரசியல். இதெல்லாம் அரசியல்வாதிகள் பிரச்னை.” இப்படி சொன்னது ஒரு எழுத்தாளர்.

முதல் இரண்டு குரலைவிட மூன்றாவது குரல் அருவருப்பானது. திங்க சோறு இருக்கு, மேல கூற இருக்கு, கீழ மெத்த இருக்கு , படுத்தா தூக்கம் வருது என சொல்லும் சுரணையற்றவர்களைப் போல சமூகத்தில் வேறு நோய் பீடித்தவர்கள் இருக்க முடியாது. நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றன. ஒரு பிரஜையாக இந்நாட்டின் அரசியல் நாடகங்களைக் கண்டிக்கலாம். அல்லது குறைந்தபட்சம் அது குறித்து  நண்பர்களிடம் பேசலாம்.   அதற்கு கூட தொடை நடுங்கினால் தனியாக மெத்தையில் அமர்ந்து கொஞ்சம் டென்ஷனாகவாவது ஆகித்தொலையலாம். அந்த உணர்வு கூட இல்லையென்றால் விலங்குகளைப் போல தெருவில் அலையலாம்.  அரசியலே அத்தனையையும் தீர்மாணிக்கிறது. அப்படி இருக்க முதலில் கற்றவர்கள் மத்தியில் எது குறித்தும் அபிப்பிராயம் இல்லாமல் இருப்பது 56 ஆண்டு கால ஒரே ஆட்சியின் தாக்கம்தான். ஜனநாயகம் பறிக்கப்பட்டு மூலை மலடாகிப்போனப்பின்  சோற்றுக்கு மட்டுமே குரல் எழுப்பும் கூட்டமாக நாம் மாறாமல் இருக்க குறைந்த பட்சம் கோபமாவது பட வேண்டியுள்ளது.

umnoஅடுத்து ஏன் மாற்றம் தேவை என்ற கேள்வி. ஒரு நாடு என்பது மக்கள்தான். ஒரே கட்சி 56 ஆண்டுகளாக இந்நாட்டை ஆட்சி செய்துள்ளது. இதை சிலர் பெருமையாக நினைக்கலாம். ஆனால், இத்தனை காலம் ஆட்சி செய்யும் ஒரு கட்சியின் வலதுகரமாகி வளைந்துகொடுக்கும் சட்டமும் அதை மூர்க்கமாக முன்னிறுத்து  இராணுவமும் காவல்துறையும் ஒரு தனியார் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்போல அதிகார வர்க்கம் இட்ட கட்டளையை முடிக்க மட்டுமே பயன்படுகின்றன. மக்கள் விழிப்புணர்வு என்பது இங்கு சாத்தியமே இல்லை. ஒரு  பழைய கிழவிக்கு அலங்காரம் செய்தது போல மலேசியா தன்னை முதல் உலக நாடு போல பாவனை காட்டினாலும் நமது மனவளர்ச்சி இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதை வேதமூர்த்தி போன்றவர்கள் பின்செல்லும் கூட்டத்தை வைத்து தெரிந்துகொள்ளலாம். இவர்களுக்கு மாற்றம் என்பது சலுகைகள் மட்டும்தான். இங்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்பதெல்லாம் கேள்வி இல்லை. தேர்தல் ஆணையம், நீதி மன்றம், லஞ்ச ஒழிப்பு இலாகா, தொடர்புத்துறை என மக்களுக்காக பயன்பட வேண்டிய அல்லது மக்களின் தேவைக்காக இயங்க வேண்டிய ஒன்று இன்று ஆளுபவர்களின் கைபாவையாக மாறியுள்ளது இந்த ஒரே ஆட்சியின் அவலத்தால்தான். ஜனநாயக முறையில் வாழ விரும்பும் ஒவ்வொரு மனிதனும் இந்த மாற்றத்தை எதிர்ப்பார்த்தே ஆக வேண்டியுள்ளது.

‘கேட்டதை கொடுத்துட்டதால பாரிசானுக்கு ஆதரவு தெரிவிக்கலாம்’ என சொல்பவர்களுக்கு ஒரு உதாரணத்தை மட்டும் சொல்லலாம் என நினைக்கிறேன். ஒரு மனைவி நான் கேட்டதை எல்லாம் என் கணவர் வாங்கி கொடுக்கிறார் என சொன்னால் அந்த கணவனைவிட அதிகார வெறியன் வேறொருவன் இருக்க முடியாது. நீ ஏன் கேட்க வேண்டும். நான் ஏன் கொடுக்க வேண்டும். உனக்கு இந்த உலகில் வேண்டியதை வாங்க உரிமை உண்டு வாங்கிக்கொள் என்பதுதான் சம உரிமை. இன்னும் 56 ஆண்டுகள் ஆனாலும் வேதமூர்த்தி போன்றவர்கள் பிச்சைப்பாத்திரத்துடன் திரிவதை விடப்போவதில்லை. காரணம் அந்தப் பிச்சைப்பாத்திரம்தான் அவர்கள் வருவாய்க்கான மூலதனம்.

hindraf1முதலில் அவர்கள் பிச்சைப்பாத்திரத்தைக் கையில் எடுக்கிறார்கள். பின்னர் அதில் விழும் பணம் அனைத்தும் மக்களுக்கு என்கிறார்கள். பாத்திரம் நிறைந்தவுடன் போராட்டத்தை முடித்துக்கொள்கிறார்கள். பாத்திரத்தில் விழுந்தது  அதிகாரம் உள்ளவன் தன் கையில் அள்ளியது போக மிஞ்சிய எச்சங்களே என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

நாம் செய்ய வேண்டியது பாத்திரத்தை முதலில் வீசுவதைதான். நாம்  அதிகாரத்திடன் கேள்வி எழுப்ப வேண்டியது உன் பணப்பையில் மட்டும் ஏன் இவ்வளவு பணம் இருக்கிறது என்பதைதான். 56 ஆண்டுகால ஆட்சியில்     65 % குடும்பங்கள் வறுமை சூழலில் ஏன் இருக்கிறது என்பதைதான்.  நான் கேட்டபோது கொடுக்காமல் எல்லாவிதத்திலும் நோகடித்து உனக்கு அதிகாரம் தேவைப்படும் போது கொடுக்கிறாயே என்பதைதான். ஆனால் இதையெல்லாம் நாம் கேட்டு முடிப்பதற்குள் நமக்காகப் பிச்சை எடுத்ததாகச் சொன்னவன் நம் முன் அதிகாரத்தில் இருப்பான். கொஞ்சம் அசந்தான் அவனும் நம் கழுத்தில் மிதிப்பான்.

கொஞ்சம் வேதமூர்த்தியின்  அந்த ஒப்பந்தத்தை ஆராய்ந்தால் தமிழர்களை எவ்வளவு முட்டாள்களாக்கியுள்ளார்கள் என்பது புரியும். இடம் பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் நலன்களை மேம்படுத்துவது, நாடற்ற பிரச்னைகளைத் தீர்ப்பது, கல்வி, வர்த்தக வாய்ப்புக்களுக்கு இடமளிப்பது ஆகியவை அவை. அட அறிவாளிகளே… தோட்டத்தொழிலாளர் மட்டுமல்ல (அப்படி இன்னும் இருக்கிறார்களா?) எல்லா தொழிலாளியின் நலன்களை மேம்படுத்துவது, நாடற்ற பிரச்னைகளை (56 வருடத்துக்குப் பிறகு) தீர்ப்பது, வர்த்தக வாய்ப்புக்களுக்கு இடமளிப்பதும் அரசாங்கத்தின் கடமை. கடமையைச் செய்ய எதற்காக ஒப்பந்தம்.  பிள்ளையைப் பெற்றால் வளர்ப்பது கடமை. அதற்கு ஒப்பந்தம் போடுவது எவ்வளவு அறிவீனமோ அவ்வளவு அறிவீனமான செயல் இது. இதற்கு ஒரு நாடகம். ஒரு நடிகர் கூட்டம். ஆனால் தொடக்கத்தில் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்த இனவாதம், போலீஸ் தடுப்புக் காவல்  மரணங்கள்  போன்ற பல  முக்கியமான பகுதிகள் காணப்படவில்லை என்பது குறித்து யாருமே மூச்சுவிடவில்லை.

இங்குச் சிக்கல் வேதமூர்த்தியல்ல. வேதமூர்த்தி போல நாளைக்கு இன்னொரு போராட்டவாதியாக காட்டிக்கொள்பவன் தன்னை விற்று தொலைக்கலாம். நம் சிந்தனை மாற வேண்டும். மாற்றம் மட்டுமே ஜனநாயகத்தை மீட்கும் என்பதை உணர வேண்டும். இங்கு நமக்கு எவனும் வழிக்காட்டியல்ல. இந்த தேர்தல் எளிய மக்களின்  தேர்தல்.

மக்களின் விழிப்புணர்வால் விழும் ஒவ்வொரு ஓட்டு மட்டுமே போலி போராட்டவாதிகளின் முகத்தில் நாம் அடிக்கப்போகும் செருப்பு.

நன்றி : செம்பருத்தி.கொம்

(Visited 37 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *