தங்க மீன்கள் ; குளம் கானலாகிய கதை

திட்டமிடப்படாமல் பதிவாகும் நமது புகைப்படம் நமக்கு அத்தனை நெகிழ்வை ஏற்படுத்துகிறது. மீண்டும் மீண்டும் சலிக்காமல் நாம் அதை பார்க்கிறோம். அதில் தெரிவது நாம் புரிந்து வைத்திருக்கும் நாம் அல்ல. சிரிப்பில், அழுகையில், மௌனத்தில் , கோபத்தில் நமது முகம் வேறொன்றாக இருக்கிறது. நாம் நமது வேறொரு முகத்தைப் பார்க்கிறோம். அதில் அவ்வளவு இஷ்டம் காட்டுகிறோம். அதில்தான் உண்மை நெருக்கமாக உள்ளது. அதிலும் பிரக்ஞையற்ற நமது குழந்தை பருவங்களின் புகைப் படங்கள் நமது பாதுகாப்பில் எப்போதும் இருக்கின்றன.

நாம் அனைவருமே நமது குழந்தை பருவங்களை மறந்தவர்கள். அதனால் நமக்கு குழந்தைகளின் குறும்புகள் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் பரிபூரணமானவர்களாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். அவர்களின் சின்ன மீறல்கள் கூட நமக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே நடப்பில் உள்ள திட்டவட்டமான ஓர் அமைப்புக்குள் அவர்களைத் திணிக்க முனைப்புக்காட்டுகிறோம். அந்த அமைப்பில் திணிக்க முடியாதவர்களை குற்றம் சாட்டுகிறோம். தண்டனை வழங்குகிறோம்.

தங்கமீன்களில்வரும் செல்லம்மாவும் இப்படிப்பட்டவள்தான். அவளிடம் ஒரு கேள்விக்கு நிறைய பதில்கள் உள்ளன. வகுப்பறையைவிட அதற்கு வெளியே அவள் பார்க்க ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. தங்கமீன்களைப் பார்க்க ஆபத்தறியாமல் குளத்தில் இறங்கி செல்லும் அளவுக்கு ஆவல் மிகுந்திருக்கிறது. எல்லாவற்றையும் மீறி அப்பா சொல்லும் எதையும் கேள்வியே இல்லாமல் நம்பும் அளவுக்கு அன்பு மிகுந்திருக்கிறது.

படம் முழுக்கவே செல்லம்மா அன்பை வழங்குபவளாகவே வருகிறாள். அவளிடம் தர்க்கங்கள் இல்லை. எல்லாவற்றுக்கும் எளிய முடிவையும் பதிலையும் வைத்துள்ளாள். கடிகாரத்தில் இருக்கும் குயிலைப் பார்த்து குயில் சொந்தமாகக் கூடு கட்டாது என முடிவு செய்கிறாள். கிருஸ்மஸ் தாத்தா ஆசிர்வாதம் தனக்குக் கிடைத்துவிட்டதாக எண்ணி பரீட்சைக்குப் படிக்காமல் இருக்கிறாள். தான் பள்ளியில் மந்தமானவள் என்பது குறித்து அவளுக்குப் பெரிய கவலை இல்லை ஆனால் தன் அப்பாசில்வர் மேன்எனச்சொல்லி பெருமை படுகிறாள். அவளது உலகில் மகிழ்ச்சி மட்டுமே சூழ்ந்துள்ளது. ஒருவகையில் உலகில் உள்ள எல்லா குழந்தைகளிடமும் இந்த வெகுளித்தனங்கள் நிரம்பிய குதூகலம்தான் வியாபித்துள்ளது. அதை கெடுப்பது பள்ளிக்கூடங்கள் என்பதுதான் கசப்பான உண்மை. ‘தங்க மீன்கள்அந்தக் கசப்பைச் சொல்லவே முனைந்துள்ளது. ஆனால் அதில் வெற்றிபெறவில்லை என்பதே வருத்தம்.

இத நாம கவனிக்காம விட்டுட்டோமேஎன ஒரு வாசகன் வியப்படைவதில்தான் படைப்பாளியின் வெற்றி தொடங்குகிறது. நாம் சதா எதையாவது கவனித்துக்கொண்டிருக்கிறோம். நாம் கவனித்ததைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமது கவனத்தை மீறி மிக நுண்ணிய செயல்கள் ஒரு நிகழ்வில் தொகுக்கப்பட்டே வெளிபடுகிறது. படைப்பாளியின் வேலை அந்த நுணுக்கத்தையும் கண்டடைவதுதான். நுட்பமான சித்தரிப்புகளே வாழ்வை இன்னும் பக்கத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது. தங்கமீன் முழுக்கவேஇத நாம கவனிக்காம விட்டுட்டோமேஎன வியக்கும் அளவுக்கு குழந்தையின் செயல்பாடுகள் படமாக்கப்பட்டுள்ளது முதல் வெற்றி. தன் அப்பா தொலைபேசியில் சொன்ன தான் வாழும் இடங்களின் பூகோல அடையாளங்களையே தன் அப்பாவுக்கு எழுதும் கடிதத்தின் முகவரியாகச் செல்லம்மா சொல்லும் காட்சி அதன் உச்சம். இவ்வளவு கவித்துவமான காட்சியமைப்பையும் வசனங்களையும் வழங்கியதற்கு ராமை முதலில் பாராட்டதான் வேண்டும்.

ஆனால், திரைக்கதை அமைப்பில் தங்க மீன்கள் சோர்வடைய வைக்கிறது . முதல் காட்சியில் செல்லம்மா ‘M’ ‘W’வாக எழுதும் போது அவளுக்கு dyslexic நோய்க்கூறு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த நிமிடமே ‘Taare Zameen Par’ திரைப்படத்தின் காட்சிகள் நம் மனதில் தோன்றுவதை தடுக்கமுடியவில்லை. அதன் பின்னர் படம் நெடுகிலும் அவளை பின்தங்கிய மாணவியாகக் காட்டுகிறார்களே தவிர நோய்க்கான கூறு எதையும் காணவில்லை. அவள் சராசரி குழந்தைதான். அவளுக்கு ஆர்வம், கோபம், கவலை, பயம் என எல்லாமே உண்டு ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேல்பரப்பில் ஒரு குதூகலத்தைப் பூசியுள்ளாள். உண்மையில் நோயுற்றிருப்பது இந்தச் சமூகம்தான் என படம் பார்க்கும் போது நமக்குப் புரிகிறது. குறைந்த பட்சம் ‘3 idiot’ போன்றாவது அந்தச் சமூக நோய்மையை நோக்கி பேச முயன்றிருக்கலாம். மாறாக படம் நெடுகிலும் குழப்பங்களை மட்டுமே விட்டுச் சென்றுள்ளார் ராம்.

குழப்பம் 1 : ஆசிரியை வீட்டுக்குச் செல்லும் ராம் இரவில் தன் மகள் தொலைப்பேசியில் அவரிடம் பேச விரும்புவதாகக் கூற ஆசிரியைத் தயங்கி தயங்கி வருகிறாள். அவள் முகத்தில் கலவரம். ஆனால் அந்தக் கலவரத்துக்கு காரணம் கடைசி வரை சொல்லப்படவில்லை. ஒரு வேளை தொடக்கத்தில் அவள் கணவன் முன் பேச தயங்குவதும் பின்னர் கணவன் முன்பே தைரியமாகப் பேசுவதையும் காட்டுவதை வைத்து ரசிகனாக அவள் கணவன் திருந்திவிட்டான் என முடிவெடுத்துக்கொள்ள வேண்டுமோ! அவன் திருந்த ராமின்தந்தை பாசத்தைக்காரணமாக நம்பிக்கொள்ள வேண்டுமோ என்னவோ. அப்படிப்பார்த்தாலும் தந்தை பாசத்தைக் கண்டு ஒரு கணவன் திருந்துவான் என நானே யோசித்துக்கொள்வது எவ்விதத்திலும் ஒட்டாமல் விலகி இருக்கிறது.

குழப்பம் 2 : அரசு பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளியில் தன் பிள்ளையைச் சேர்க்கும் ராம் இறுதியில் அரசு பள்ளியில் தன் மகளைச் சேர்க்க ஓர் ஆசிரியை மேல் கொண்ட நம்பிக்கை மட்டுமே காரணமாக இருக்கிறது. ஒரே ஒரு ஆசிரியை சரியாக இருந்தாலும் அந்தப் பள்ளியை நம்பலாம் என சொல்ல வருகிறாரா? ஓரிரு ஆசிரியர்கள் சிறந்திருந்திருந்தால் அது நல்லப்பள்ளியாகி விடுமா? நாட்டின் கற்றல் சூழலை மாற்றியமைக்க எத்தனையோ புதிய திட்டங்கள் உருவாகிவருகின்றன. உலகம் முழுதுமே போதனா முறைகளில் மாற்றம் கொண்டுவர தீவிரமாக திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அண்மையில் மலேசியாவில் கூட சோதனை முறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்வு மாணவனின் உண்மையான அடைவை உறுதி செய்யாத பட்சத்தில் அவன் ஆளுமையை வளர்க்கும் வகையில் கல்விக்கூடங்களும் கற்பிக்கும் முறைகளும் மாற்றம் அடைகின்றன. ராம் இதில் எதையுமே கவனத்தில் கொள்ளவில்லை. ஆசிரியர் சரியானவராக இருந்தால் குழந்தைகளின் சூழல் மாறும் என்கிறார். நிச்சயம் எதுவும் மாறாது. ஏற்கனவே இருந்த கசப்பான பொருளை தனியார் பள்ளி ஆசிரியர் முகத்தைச் சுளித்துக்கொண்டே திணித்தார் என்றால் அரசு பள்ளி ஆசிரியை சிரித்துக்கொண்டே கொடுப்பார். அதனால் குழந்தைகள் பொறுத்துக்கொண்டு விழுங்கலாம். மற்றபடி விழுங்கும் உணவு ஒன்றுதான்.

குழப்பம் 3 : அரசு பள்ளிக்குச் சென்றவுடன் செல்லம்மா கெட்டிக்காரியாகிவிடுகிறாள். அது எப்படி என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த ஆசிரியையின் போதனையாக இருக்கலாம். அவள் கெட்டிக்காரியாகிவிட்டாள் என்பதைக் காட்ட கட்டுரை எழுதும் போட்டியில் முதல் பரிசு கொடுப்பது படத்தின் மொத்த அரசியலையும் கெடுத்துவிட்டது. ஒரு போட்டியின் மூலம் முதலாவதாக வருபவள்தான் வெற்றியின் அடையாளமா என்ன? இப்போது தனியார் பள்ளிக்கும் இந்த அரசு பள்ளிக்கும் என்ன பெரிய வித்தியாசம். போட்டியில் வெற்றி அடையும் ஒரு மாணவி இருக்கிறாள் என்றால் தோல்வி அடைந்த அந்த காட்டப்படாத மாணவி எங்கே? அவளை ஏன் இந்த ஆசிரியை மாற்றியமைக்கவில்லை.

இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் ஒரே ஆறுதலான விஷயம் செல்லம்மாவின் தோழியாக வரும் குழந்தை. அவள் அதில் ஒரு குழந்தையாகவே வருகிறாள். குழந்தையாகவே இருக்கிறாள். செல்லம்மாவும் அமைதியாக பேசும் பல இடங்களில் ரசிக்க வைக்கிறாள். நடிப்பதைக் நடிகன் மறக்கும் கணங்களில்தான் கலை பிறக்கிறது போல.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்குடோட்டோ – சான் : ஜன்னலின் ஓரம் சிறுமிஎன்ற டெட்சுகோ குரோயாநாகி எழுதிய ஜப்பானிய நாவல் ஞாபகத்துக்கு வந்தது. இரண்டாம் உலக யுத்த களத்தில் டோக்கியோவில் இருந்த ஒரு முன்மாதிரியான பள்ளியைப் பற்றிக் கூறுகிறது இந்நாவல். ரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்டு இப்பள்ளியை நிறுவிய கோபயாஷி இப்பள்ளி தலைமையாசிரியாசிரியராகவும் இருந்து வழிநடத்தினார். இப்பள்ளியின் சிறப்பு அம்சமே குழந்தைகள் தங்கள் கருத்துகளை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்த சுதந்திரம் கொடுப்பதுதான். ஜப்பான் தொலைக்காட்சியில் தோன்றி புகழ்பெற்ற ஒருவராய் இருந்த டெட்சுகோ குரோயாநாகி என்பவர்தான் இந்நூலில் வரும் சிறுமி டோட்டோ சான். தன் வாழ்வின் வெற்றிக்குக் காரணமே அப்பள்ளியும் அதன் தலைமை ஆசிரியரும்தான் எனக்கூறும் டெட்சுகோ குரோயாநாகியின் வாழ்க்கை வரலாறாகவே இந்நாவல் அமைந்துள்ளது.

கல்வி இன்று எல்லா நாடுகளிலும் வணிகமாக்கப்படுகிறது. தமிழகத்தில் நான் இருந்த தினங்களின் பொதுவாகவே மக்களுக்கு தனியார் வசதிகள் மேல் ஓர் ஈர்ப்பு இருந்ததை அறிய முடிந்தது. தனியார் பேருந்துகள் கூட்டத்தால் நிரம்பியப் பின்தான் மக்கள் அரசு பேருந்தை நாடி ஓடினர். நான் விருந்தினராகத் தங்கியிருந்த நடுதர வர்க்கத்து குடும்பத்தினர் பலரும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில்தான் சேர்த்தனர். அது குறித்த பெருமிதம் அவர்களுக்கு இருந்தது. இச்சூழலை மலேசியாவுடன் ஒப்பிட முடியாதுதான். அரசு மருத்துவமனை, பள்ளிக்கூடம், போக்குவரத்து என பலவும் தனியார் சேவைக்கு நிகராகவே இங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நாட்டில் ஒரு சாரசரி குடும்பத்தைச் சார்ந்தவன் தனியார் பள்ளிக்குத் தன் பிள்ளையை அனுப்புவது சாத்தியமாகாத ஒன்றும் கூட.

இந்நிலையில் தமிழகத்தின் அரசு பள்ளிகளில் உள்ள சிக்கல்தான் என்ன என்பது என்னைப் போன்ற அயல்நாட்டினருக்கு புரிவதில்லை. படம் அதை சொல்ல முயலவும் இல்லை. ஆனால், படத்தின் முடிவைப் பார்க்கும் போது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குறித்த பொது அபிப்பிராயங்கள் நடுத்தர வர்க்கத்து மனநிலையின் சாயல்மட்டுமே எனப்புரிகிறது. இந்த மனநிலையிலிருந்து செல்லம்மாவின் அப்பா மீண்டு வந்ததாகக் கூறலாம். அதனால் செல்லம்மாவுக்கும் நன்மை உண்டாயிருக்கலாம். ஆனால், கண்ணுக்குத்தெரியாத எத்தனையோ செல்லம்மாகளுக்கு எந்த நன்மையும் எந்தப் பள்ளியில் படித்தாலும் கிடைக்காமல் இருக்க இறுக்கமாகியிருக்கும் கல்வி அமைப்பு மட்டும்தான் காரணம். ஒரு குழந்தைக்கு கல்வி என்பது தேவையா? அல்லது கல்வியின் மாற்று வடிவம் என்னவாக இருக்கவேண்டும் என யோசிக்கும் ஒரு காலக்கட்டத்தில் ராம் ஆசிரியர்களின் தியாகம் குறித்து பேசுவது கொஞ்சம் பழசாகவே இருக்கிறது.

ராம் ஒரு சிறந்த இயக்குனர் என்பதில் சந்தேகமே இல்லை. நான் அதிக முறை பார்த்த ஒரே தமிழ்த் திரைப்படம்கற்றது தமிழ்தான். டி.வி.டி யில் இல்லாத தொல்காப்பிய மனிதனின் காட்சி நம்மூர் வெள்ளித்திரையில் ஒளிபரப்பப்பட்டபோது இருந்ததால், பல முறை ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கு அப்படத்தைப் போடச்சொல்லி கேட்டும் பார்த்திருக்கிறேன். ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய தெளிவான அரசியல் நோக்கும் அதை வெளிப்படுத்தும் போது கைக்கூடிவரும் கலை நேர்த்தியும் ராமுக்கு வாய்த்திருக்கிறது. ‘தங்க மீன்களில்அந்த அரசியல் பார்வை குழப்பமாக இருப்பதே நமது வருத்தம்.

சுதந்திரமாக பேசி, ஒன்றுக்குப் பல விளக்கங்கள் சொல்லும் செல்லம்மாவுக்கு அரசு பள்ளியிலாவது தன் கருத்தைச் சுதந்திரமாகச் சொல்ல வெளி கிடைத்திருந்தால் அதுவே அவள் அடைந்த வெற்றியாக இருந்திருக்கும். கட்டுரை எழுதும் போட்டியில் ஒன்றாவதாக வந்து இருக்கின்ற இறுக்கமான கல்வி திட்டத்தில் அவளும் கஷ்டப்பட்டு நுழைந்துவிட்டாள் என நினைக்கும் போது அவளை நினைத்து வருத்தமே வருகிறது.

(Visited 169 times, 1 visits today)

One thought on “தங்க மீன்கள் ; குளம் கானலாகிய கதை

  1. ரசித்து நிறுத்தி நிதானமாக வாசித்தேன். மனதைக் கவர்ந்த திரைப்பட விமர்சனம்.
    குறிப்பாக அந்த ஜப்பான் நாவல் அறிமுகம், கட்டுரைக்கு சிகரம். பலகேள்விகள் உங்களின் மனதில் – இது நீங்கள் ஆசிரியர் என்பதால் அன்றாடம் சந்திக்கின்ற பள்ளிச்சூழல் இவ்விமர்சனத்திற்கு தூண்டுகோலாக அமைந்திருக்கலாம்.
    தேர்வுகளில் போட்டிகளில் முதல் நிலை வரும் மாணவர்கள்தான் சிறப்பானவர்கள் என்கிற சிந்தனை மிகப் பழமையானதுதான் இருப்பினும் அதைநோக்கியே மாணவர்கள் இன்னமும் நகர்த்தப்படுவதும் மேலும் இதற்கு உரமிடும் சக்திவாய்ந்த சினிமாவும் இதற்குத் துணைநிற்பதால் பல குழந்தைகளின் குழந்தைப் பருவம் பாழ்படுகிறது என்பதுதான் உங்களின் இந்த விமர்சனத்தின் சாரம் என்பது புரிகிறது. தமிழ்நாட்டுச்சூழல் – தனியார் மையப்படுத்திய அனைத்திலும் அங்கே ஒருவித மோகம் இருப்பது, உண்மை. உறவுகளின் தொடர்பின்போது, தனியார் பள்ளி, தனியார் மருத்துவமனை, தனியார் கல்லூரி, தனியார் போக்குவரத்து என்று சொல்லுகிறபோது அங்கே பெருமிதம் தாண்டவமாடுவதைக் காணமுடிகிறது.
    கட்டுரையை ஆரம்பித்திருக்கின்ற விதம் மனதைக்கொள்ளை கொண்டது. உடனே கட்டுரைக்குள் முழுமையாக நுழைந்துவிடுவதற்கு அது துருப்புச்சீட்டாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *