அவதூறுக்கு பதில் சொல்லதான் வேண்டுமா?

மொட்டைக் கடிதங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் மொட்டைக் கடிதங்கள் பெரும்பாலும் இயலாதவர்களின் குரலாக இருக்கும் போது அதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. சமூகத்தால் ஒடுக்கப்படும் ஒரு சிறுமியிடமிருந்துகூட தன் உரிமையைக் கேட்டு மொட்டைக் கடிதம் வரலாம். எல்லாவற்றையும் சீர்த்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது. கடிதத்தின் ஆதாரமான நோக்கத்தை ஆராய வேண்டியுள்ளது.


இன்று எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. அதில் நான் மற்றும் பாலமுருகன் குறித்த அவதூறுகள் குவிந்திருந்தன. முழுமையாக புறக்கணிக்க முடியாத கடிதம்தான். அதில் உள்ள சில விடயங்கள் ஒட்டி பேசலாம். காரணம் அது நான் இத்தனை காலம் கூறிவரும் அரசியலுக்கு முற்றிலும் எதிரானது.

நான் இன்று வேலை செய்யும் பள்ளிக்கு, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பழைய பள்ளியிலிருந்து மாற்றப்பட்டதாக அந்தக் கடிதம் முதலில் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறது. இது போல ஏற்கனவே என் புளோக்கிற்கு வந்த மொட்டை கடிதங்களுக்கு நான் சொன்ன பதில் ஒன்றுதான்.

நான் அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பள்ளி மாற்றப்பட்டிருந்தால் அதற்கான கடிதங்களும் கோப்புகளும் இன்னமும் எனது பழைய பள்ளியில் இருக்கும்.  அவர்கள் என் மீது முன்வைப்பது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு. எனவே ஆதாரங்கள் தாராளமாகவே கிடைக்கும். உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அப்பள்ளியில் இருக்கின்ற மூத்த ஆசிரியர்களிடம் கூட ஆதாரங்கள் இருக்கலாம். அவற்றை அம்பலப்படுத்துங்கள் . இன்னமும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. எனது பழைய பள்ளியில் நான் செய்த பாலியல் வல்லுறவு தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி உடனே என்னை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள். அரசிடம் வந்த அதிகாரப்பூர்வமான கடிதத்தையோ என்மீது காவல் நிலையத்தில் உள்ள புகாரையோ எடுத்துக் காட்டுங்கள். நான் உடனே எனது வேலையை விட்டு விடுகிறேன்.

இரண்டாவது சண்முக சிவா தொடர்பானது. பெண் எழுத்தாளர்களைக் கேவலமாகப் பேசிய ராஜேந்திரன் தலைவராக இருக்கும் வரை அவர் நிகழ்வை புறக்கணிக்க கூறினோம். இந்தச் சம்பவங்கள் நடக்கும் போது சண்முகசிவா தமிழகத்தில் இருந்தார். எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவே அவர் வந்தார். எதுவுமே தெரியாமல் அவர் அங்கு சென்றார். உண்மை நிலை தெரிந்திருந்தால் அவரும் புறக்கணிக்கவே செய்திருப்பார்.

அப்புறம் மிகப் பிரபலமான எனக்கும் பாலமுருகனுக்குமான சர்ச்சை அல்லது சண்டை தொடர்பானது. நானும் பாலமுருகனும் நண்பர்கள். எங்களிடம் சில முரண்பாடுகள் இருந்தன..இருக்கும். இருந்தால்தான் நாங்கள் சிந்திக்கிறோம் எனப் பொருள். எங்களின் விவாதங்கள் தனிமனித தாக்குதல் அளவில் செல்லும் போது கைகலப்புகூட சாத்தியமாகின்றன. அது எங்கள் தனிப்பட்ட விவகாரம். எப்படி ஒரு கணவன் மனைவி விவகாரத்தில் அடுத்தவர் நுழைய அனுமதி இல்லையோ நண்பர்கள் தனிப்பட்ட விவகாரத்தில் நுழையவும் அனுமதி இல்லைதான்.

மற்றவை, என் தனிப்பட்ட ஒழுங்கு தொடர்பானவை. சமூகம் சொல்லும் ஒழுங்கு எனும் சொல்லின் மீதெல்லாம் எனக்கு உடன்பாடுகள் இல்லை. எனது சுதந்திரம் வன்முறையானதல்ல எனக்கூற மட்டுமே மேலுள்ள விவரத்துக்கான ஆதாரம் கேட்டேன். மற்றபடி நான் பெண்களைத் தேடிச் செல்பவன், காமுகன், போதை பித்தன், என எத்தனை அவதூறுகள் சொன்னாலும் அதற்கான பதிலையெல்லாம் என்னிடமிருந்து பெற முடியாது. சமூகத்தில் ஒழுங்கின் பிம்பமாக என்னைக் காட்ட துளியும் விருப்பம் இல்லை. எனது சுதந்திரமான கையசைப்பு யார் கண்களையும் குத்தவில்லை என மட்டுமே என்னால் சொல்ல முடியும். நான் ஏன் கைகளை அசைக்கிறேன் என சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

ஒருவேளை வல்லினத்தைப் பயன்படுத்தி நான் பணம் சம்பாதிக்கிறேன் என்ற கேள்வி எழுந்தாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கலாம். யாரிடமிருந்து எவ்வளவு பணம் பெற்று ஏமாற்றினேன் என கூறினால் உதவியாக இருக்கும்.

தொடர்ந்து மொட்டைக் கடிதம் போடுபவர்கள் கொஞ்சம் உழைக்கப்பழகுங்கள். இன்னும் ஆதரங்களைத் தேடுங்கள். உங்கள் கருத்துகளில் வலு இல்லை. இது போன்ற கடிதங்களை யாரும் எப்படியும் எழுதலாம். எந்த தார்மீகமும் இதற்கு தேவையில்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை. சமூகத்தில் ஏதாவது குசுகுசுக்க விரும்புபவர்களுக்கு சுவாரசியமாக இருக்கும். அல்லது நவீன், பாலமுருகன் உள்ளிட்ட ஏனைய இளம் எழுத்தாளர்கள் அனைவரும் ‘பொம்பள பொறுக்கிகள்’ என கட்டமைக்கலாம். நல்லது. அவ்வாறு இருப்பதற்கும் இலக்கியத்தில் இயங்குவதற்கும் என்ன சம்பந்தம்? சமூக ஒழுக்கத்திற்கும் இலக்கியத்திற்கும்தான் என்ன சம்பந்தம்?

இதனாலெல்லாம் நானோ அல்லது நாங்களோ எதையும் நிறுத்தப்போவதில்லை. உங்கள் வசை சொற்களை உங்களுக்கே பரிசளிக்கிறேன். உங்களை ஈன்றவர்களும் வளர்த்தவர்களும் நல்ல மொழிகளை உங்களுக்கு போதித்துள்ளார்கள். அவர்களுக்கும் நீங்கள் உங்கள் சொற்களைப் பரிசளிக்கலாம். முடிந்தால் உங்கள் குழந்தை உங்கள் மனைவியிடம் கூட உங்கள் சொல் ஆளுமையை பகிர்ந்துகொள்ளலாம்.

மெச்சுவார்கள்.

(Visited 107 times, 1 visits today)

3 thoughts on “அவதூறுக்கு பதில் சொல்லதான் வேண்டுமா?

  1. காய்த்த மரம் தான் கல்லடி படும் .. இது போன்ற சில்லறை தனமான விசயங்களுக்கு எல்லாம் செவி
    சாய்க்காதீர்கள் ஐயா . வாழ்க வளமுடன் .

  2. Moddai Kaditham Podupavarkalukku – Intha maanangkedda polappukku neengale ungalukku moddai kaduthasi eluthi kollungal, thuui

  3. ஏனைய இளம் எழுத்தாளர்கள் அனைவரும் ‘பொம்பள பொறுக்கிகள்’ என கட்டமைக்கலாம். நல்லது. அவ்வாறு இருப்பதற்கும் இலக்கியத்தில் இயங்குவதற்கும் என்ன சம்பந்தம்? சமூக ஒழுக்கத்திற்கும் இலக்கியத்திற்கும்தான் என்ன சம்பந்தம்?// இதுதான் இக்கட்டுரைக்கு சிகரம். வாழ்த்துகள். மொட்டைக்கடிதங்கள் வரும் அளவிற்கா உயர்ந்துவிட்டீர்கள்.? இளம் வயதிலேயே இது மிகப்பெரிய வளர்ச்சி நவீன். பொறாமையாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *