கவிதையில் உள்ளார்ந்த அர்த்தம்

படிமங்கள், குறியீடுகள் என்னவென்று விளங்காதபோது கவிதையின் உள்ளார்ந்த அர்த்தம் மறைந்து அக்கவிதை கொச்சை வார்த்தைகளால் ஆன, புனிதத்தை களங்கடிக்கும் குப்பையாக காட்சிபடுமே? – விஜயலட்சுமி

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.’

இது இறையனார்  எழுதியப் பாடல். சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்றுதான்  உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 2. இறையனார் என பெயர் உள்ளதால் இப்புலவரை  கடவுள் (சிவபெருமான்) என்று ஆக்கி, அரசன் அவையில் பரிசு பெறத் தருமி என்பவனுக்கு இப்பாடலைச் சிவபெருமான் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையாக்கித் திருவிளையாடற் புராணம் வடிக்கப்பட்டுள்ளது. ‘திருவிளையாடல்’ என்னும் திரைப்படத்தில் இந்தக் கதை பிரபலமாகி எல்லோரும் அறிந்த பாடலாகிவிட்டபடியால் நான் உங்களுக்கான பதிலுக்கு இதை தேர்ந்தெடுத்தேன் விஜயா.

இன்னும் சொல்லப்போனால், திருவிளையாடல் புராணத்தில் நக்கீரருக்கும் சிவனுக்கும் நடைபெரும் விவாதம்தான் தமிழ்ச்சூழலில் கவிதைகள் குறித்து நடைபெரும் அர்த்தமற்ற விவாதத்திற்கான தொடக்கமோ எனக்கூட தோன்றுகிறது. இந்தக் கவிதையில் நேரடி பொருளை இப்படிச் சொல்லலாம்:

நேரடி பொருள் :

தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உன்னும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள்  கூந்தல் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா?

இதன் உட்பொருள் :

தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா? என்று வினவிக்கொண்டே அவளது உச்சியை முகர்கிறான். அவள் நாணம் நீங்குகிறது. உறவு மலர்கிறது.

* * *
இது ஏன் மிகச்சிறந்த கவிதையாக உள்ளது என யோசிப்போம் விஜயா. இங்கு தலைவனுக்குத் தலைவியின் மேல் காதல் . அவளை அணுக அவன் வண்டிடம் பேசுவது போல பாசாங்கு செய்கிறான். வண்டிடம் தலைவியை புகழ்கிறான். இவள் கூந்தலில் உள்ள மணம் போல நீ பார்த்த மலர்களில் உண்டா எனக்கேட்பது கூந்தலுக்கு மணம் உள்ளது எனும் அர்த்ததில் இல்லை. மாறாக, உன் கூந்தல்தான் எத்தனை மகிமை எனும் காதல் அதில் ரொம்பி இருக்கிறது.

ஆனால், திருவிளையாடல் புராணத்தின் படி நக்கீரர், ‘பெண்களின் கூந்தலில் எப்படி மணம் இருக்க முடியும் ‘ என நேரடியாக கவிதையை அர்த்தப்படுத்திக்கொண்டு கேள்வி கேட்கிறார். உடனே சிவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வர, அது இலக்கிய விவாவதம் என மறக்கிறார். உடனே ‘ எப்படி எல்லா பெண்களுக்கும் இயற்கையில் கூந்தலில் மணம் இருக்க முடியாது ?’ எனக்கோபப்பட்டு விவாதத்திலிருந்து விலகுகிறார். தொடங்கியது பிரச்னை. கவிதைக்குள் இருக்கின்ற கவித்துவம் குறித்து இருவரும் பேசுவதை விட்டுவிட்டு கவிதையின் நேரடி பொருளை இருவரும் விவாதித்து கடைசியில் நெற்றிக்கண் திறந்ததெல்லாம் மீதிக்கதை.

நக்கீரனில் தொடங்கிய சிக்கல், இன்றுவரை நம்மை ஒட்டி வருவதை கவனித்தீர்களா?

நான் மொழியியல் கற்றவனல்ல. ஆனால், ஒரு கவிதையை ஆழமாக உணர மொழியியல் பங்களிக்கிறது என்பதை நம்புபவம். அதாவது மொழியியல் மாணவர்கள் எல்லாம் நல்ல ரசனை உள்ளவர்கள் என அர்த்தமாகாது. அவர்கள் தங்கள் தொழிலுக்காகக் கூட அதை படிக்கலாம். ஆனால், ஓர் இலக்கியவாதியிடம் மொழியியல் வந்து சேரும் தருணம் முக்கியமானது. அதற்காகவே கடந்த ஆண்டு எம்.ஏ.நுஃமான் அவர்களை வல்லினம் சார்பாக இருநாள் பட்டறை நடத்தினோம். அதில் நான் புரிந்துகொண்டு மேலும் அது தொடர்பாக வாசித்தவற்றை மட்டுமே கொஞ்சம் சொல்லலாம் என நினைக்கிறேன்.

சசூரின் மொழி குறி (linguisitic sign) என்ற கருத்தாக்கத்தை அறிந்திருப்பீர்கள். இக்கருத்தாக்கத்தின் படி மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒரு குறி (sign) . ஒவ்வொரு குறியும் வடிவம்  மற்றும் பொருள் என்ற இரு அம்சங்களைக் கொண்டுள்ளது.  இதில் வடிவத்தை குறிப்பான் (signifier)என்றும் அது குறிக்கும் பொருளை குறியம் (signified)என்றும் அழைக்கலாம்.

மரம் என்பது ஒரு குறி. மரம் என்றவுடம் நம் மனதில் விருட்சம் தோன்றுகிறது. கிளை, இலை, வேர் என அது உருவம் கொண்டுள்ளது. இப்போது இந்தச் சொல்லும் மனதில் தோன்றும் விருட்சத்துக்குமான உறவு மரபு ரீதியானது. அதாவது ஒரு மொழிக் குறியைப் பொருள் கொள்வதில் அம்மொழி மரபு பற்றிய அறிவு அடிப்படையானது என்பதையும் உணரவேண்டும். ஆனால், ஒரு குறிப்பான் பல குறியங்களைக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக:  அவள் என்னைத் திட்டும் போது நான் மரமாக நின்றேன். எனச்சொல்லும் போது எனது அசைவற்ற, உணர்வற்ற தன்மையை நான் வெளிப்படுத்துகிறேன்.

எனவே மொழியியல் அடிப்படையில் ஒரு குறியைத் தனிமைப்படுத்தி அதன் பொருளை நிர்ணயிக்க முடியாது. வாக்கிய அமைப்பில் அது பெறும் இடம், உரையாடல், சந்தர்ப்பம் முதலியவற்றின் அடிப்படையில் அது நிர்ணயிக்கப்படுகிறது.

எம்.ஏ.நுஃமான் சொல்கிறார் , “ஒரு இலக்கியப் பிரதியை ஒரு இலக்கியக் குறியாகக் கொள்ளலாம். இவ்விலக்கியக் குறி மொழிக் குறிகளால் அமைவது. அவ்வகையில் இது குறிகளால் அமைந்த குறியாகும். இது பொது வழக்கு அன்றி பெரிதும் சிறப்பு வழக்கு சார்ந்தது.  அதற்கே உரிய பொருள் கொள்வதில் வாசகனின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. “

சொம்ஸ்கியின் மொழி உணர்வுதிறன் (linguisitic competence) அடிப்படையாக வைத்தும் கொஞ்சம் யோசிக்கலாம். மொழி உணர்வுதிறன் ஒருவருடன் உடன் பிறந்தது எனக்கூறும் அவர் இலக்கியத்திறன் பயிற்சியால் வருவது என்றும் கூறுகிறார் (1972). ஒரு செஸ் விளையாட்டை அதன் விதியறியாமல் எப்படி அறிந்துகொள்ள முடியாதோ அதுபோலவே இலக்கிய உணர்வு திறன் இல்லாதவர்களிடம் சிக்கும் பிரதி (கவிதை) பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படும்.

நான் மீண்டும் சொல்கிறேன் விஜயா. மொழியியல் மாணவனல்ல நான். எம்.ஏ.நுஃமான் அவர்கள் மலேசியாவில் இருந்தபோது அவர் வீட்டிலேயே என் பெரும்பாலான நேரங்கள் செல்லும். அவர் கூறியதின் செவி வழி அறிவும் அதை ஒட்டிய வாசிப்பும் தேடலும் மட்டுமே எனக்குண்டு. பொதுவாக ஆழமாகத் தெரியாத ஒரு விடயம் குறித்து நான் பேசுவதில்லை. இந்த பதிலுக்குத் தேவைப்பட்டதால் மட்டுமே நான் இங்கு மொழியியல் குறித்து குறிப்பிட்டேன். இத்துறையில் தேர்ந்தவர்கள் நான் கூறியிருப்பதில் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் பணிந்து ஏற்றுக்கொள்வேன். நான் ஒரு கவிஞன் அவ்வளவே. ஒரு கவிதையை ரசிக்கவும் இந்தக் கோட்பாடெல்லாம் தேவையில்லை. ஆனால், கவிதை / புனைவு வாசிப்பில் ஏற்படும் மரபான தடைகளைப் போக்கவும் மொழியைக் கூர்மை படுத்தவும் மொழியியல், அமைப்பியல் போன்ற  அறிவுத்துறைகள் வாசிப்பை எவ்வகையாக வகைப்படுத்துகின்றன என அறியவேண்டியதுள்ளது என நினைக்கிறேன்.

உங்கள் கேள்வியில் மற்றுமொரு பகுதி உண்டு. /புனிதத்தை களங்கடிக்கும் குப்பையாக காட்சிபடுமே/ எனக்கேட்டுள்ளீர்கள். அதை தனி பகுதியாகத்தான் எழுத வேண்டும்.

(Visited 2,350 times, 1 visits today)

4 thoughts on “கவிதையில் உள்ளார்ந்த அர்த்தம்

  1. இதனை எத்தனைபேர் படித்தார்கள் என்று தெரியவில்லை. உங்களின் உதாரணங்களும் அதனை விளக்கும் முறையும் நல்ல தெளிவைக் கொடுக்கின்றன. இந்த சர்ச்சையை உருவாக்கியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மீண்டும் வாசிப்பேன். கேள்விகள் இருந்தால் கண்டிப்பாக கேட்பேன். நன்றி.

  2. கவிதையை நேரடியாக புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது அதன் சொற்களில் சிக்கிக்கொள்கிறோம். கவிதையை புரிந்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது. உணர்வதே கவிதையைப் புரிய வைக்கும். fine

  3. அற்புதமான விளக்கம். இந்த கற்றல் பயிற்சியில் நானும் பயணிக்கிறேன் என்பதில் பெருமிதம்..

Leave a Reply to விஜயா from Kuala Lumpur, Kuala Lumpur, Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *