வாசகனுக்கு குறிப்பாக பாமரனுக்கு நீங்கள் கூறும் படிமம், குறியீடு பற்றிய பிரக்ஞையே இல்லாதபோது அவர்கள் தங்கள் சிந்தனைக்குட்பட்டுதானே ஒரு கவிதையை வாசிப்பார்கள். அப்படியென்றால் உங்கள் கவிதை பாரமனை முழுமையாகச் சென்றடையாமல் பாதியிலேயே தேங்கி நிற்குமே?
விஜயா இலக்கியம் ஒரு கலை வடிவம். ஓவியம், இசை, சிற்பம், நடனம் போல இதுவும் ஒரு கலை வடிவம். மேற்சொன்ன கலை வடிவங்களுக்கு வெவ்வேறான மூலப்பொருள்கள் இருக்க இலக்கியத்துக்கு மொழியே மூலப்பொருள். அந்த மூலப்பொருள்தான் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் என பயன்பாட்டில் உள்ளன. இந்த மூலப்பொருள்தான் சக மனிதனுடனான உரையாடலுக்கு ஊடகமாக உள்ளது. எளிய மனிதனிலிருந்து அசாதாரண ஆளுமை கொண்ட மனிதர்கள் வரை மொழி பொது பயன்பாட்டில் உள்ளது.
எனவே எல்லோரும் அறிந்த மொழியில் ஒரு கலை உருவாக, அதை வாசிப்பு அறிமுகம் இல்லாத ஒருவன் அணுகும் போது பதற்றம் அடைகிறான். தான் வாழ்நாள் முழுக்கவும் பயன்படுத்திய ஒரு மொழி தனக்கு புரியாமல் இருப்பதில் கோபம் அடைகிறான். இந்தக் கோபத்தை நீங்கள் குறிப்பிடும் பாமரர்கள் அல்ல… பல்கலைக்கழக பேராசிரியர்களிடமே கண்டுள்ளேன் . இவர்கள் ஒரு நவீன ஓவியம் புரியாதது பற்றியோ, கர்நாடக இசையை ரசிக்க முடியாதது பற்றியோ, நவீன சிற்பங்கள் வடிவம் சிதைந்திருப்பதன் மர்மம் பற்றியோ, பரத அசைவுகளில் இருக்கும் புரியாத முத்திரைகள் பற்றியோ எவ்வித அசூயை உணர்வையும் அடைவதில்லை. காரணம் அவர்கள் அக்கலை குறித்த நுட்பங்கள் தங்களுக்குத் தெரியாது என அறிவர். அதை அறிய பயிற்சி தேவை என உணர்வர். ஆனால் இலக்கியம் என வந்துவிட்டால் மட்டும் இந்த சிந்தனை அவர்கள் யாருக்கும் எழுவதே இல்லை. காரணம் இலக்கியம் எனும் கலை மொழியோடு தொடர்பு பட்டிருக்கிறது.
எளிய மக்களுக்குப் புரியாத மேற்சொன்ன பிற கலைகள் குறித்து நாம் கவலை படுவதில்லை. வருத்தம் தெரிவிப்பதில்லை. ஆனால் இலக்கியம் எனும் கலை வடிவத்துக்கு மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறோம். எம்.ஏ.நுஃமான் 1996 ல் எழுதிய ஒரு கட்டுரையில் தான் மேற்கொண்ட ஒரு ஆய்வைக் குறிப்பிட்டிருப்பார். மஹாகவியின் ‘புள்ளி அளவில் ஒரு பூச்சி ‘ என்ற கவிதையை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குக் கொடுத்து அதன் பொருளைக் கேட்டிருப்பார். மாணவர்கள் கூறிய பொருள்களை அந்தக் கட்டுரையில் கொடுத்திருப்பார். தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் பயிலும் அந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்த வெவ்வேறு பொருளை கொடுத்திருப்பர். இத்தனைக்கும் எளிதாக அர்த்தம் கொள்ளக்கூடிய கவிதை அது.
விஜயா, உண்மையில் கவிதை சிலருக்குதான் புரியும்; சிலருக்குப் புரியாது என்பது முற்றிலும் தவறு . இன்னாருக்குப் புரியும் படி நான் எழுதப்போகிறேன் என்பது அபத்தம். பத்திரிகையில் தலைப்புச் செய்தியைக் கூட ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் சூழலில், கவிதை எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்றோ பாமரனுக்கும் புரிய வேண்டும் என்றோ திட்டமிடுவதெல்லாம் நடவாத காரியம். நான் இங்கு கவிதை எளிய மனிதர்களுக்குப் புரியக்கூடாது என சொல்லவரவில்லை. ஒரு படைப்பாளனுக்குத் தன் படைப்பு சகல நிலைகளிலும் உள்ள மக்களுக்குப் புரிந்தால் மகிழ்ச்சிதானே. அதைவிட அவனுக்கு வேறென்ன ஆனந்தம்.
ஆனால் அது வாசிப்புப் பயிற்சி மூலமே சாத்தியம் என்கிறேன். அந்தப் பயிற்சியை மேற்கொண்டால் நீங்கள் குறிப்பிடும் ‘பாமரர்களுக்கும்’ கவிதை சென்று சேறும். அதை அறிய படிமம், குறியீடெல்லாம் முக்கியமே இல்லை. கவிதையை உள்வாங்கும் மனம் மட்டுமே தேவை.
நான் சொல்கிறேன். ஒரு நவீன கவிதையை வாசிக்கின்றீர்கள். அதற்குமுன், நம்மைச்சுற்றி நடந்த, நடக்கின்ற, மனதை உலுக்கிய அல்லது பாதித்த அரசியல் நிகழ்வையோ, அல்லது சமுதாய சீர்க்கேட்டு நிகழ்வையோ அல்லது எதாவதொரு அவலத்தையோ மனக்கண்முன் நிறுத்திக்கொண்டு.. கவிதையில் வருகிற வரிகளை அதே அர்த்தத்தில் தட்டையாக வாசித்து புரிந்துகொள்ளாமல், நடந்த அவலங்களோடு கொஞ்சம் மெனக்கெட்டு ஒப்பிட்டுப் பார்த்து உள்வாங்கி, பிறகு இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி வாசித்து,கவிதையின் உள்ளர்த்தக் கருத்துகளை விளங்கிக்கொள்ளவேண்டும். அதனின் மூலக்காரணம் வேறாகவும் இருக்கலாம் அல்லது நடந்த குறிப்பிட்ட நிகழ்வாகவும் இருக்கலாம். இருப்பினும் புரிதல் என்பது அங்கே ஒரே மாதிரியாகத்தான் நிகழும். இது வயப்பட, நாம், நம்மைச்சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை சுரணை உணர்வுடன் விழிப்புநிலையில் அணுக பழகிக்கொள்ளவேண்டும். இவ்வுணர்வு வருவதற்கு,பரவலான வாசிப்பு அனுபவம் அவசியம் தேவைப்படுகிறது. இது என்னைப்போன்ற பாமரனுக்கும் சாத்தியம். ஆனால் நடப்பது என்னவென்றால்; இங்கே, நமது வாசிப்பின் விழிப்பு மற்றும் சுரணை உணர்வு என்பது, உள்ளூர் பத்திரிகை வாசிகள் ஜீரணிக்கமுடியாமல் வாந்தி எடுக்கின்ற உணர்ச்சிப்பூர்வ செய்திகளாலே தூண்டப்பட்டுகிறது. அதன்பின் நடப்பது என்ன? `நான் ச்சீ, நீ ச்சீ’ என நம்மை நாமே தூற்றிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வதுதான். நண்டுகதை என்பார்களே அதுபோல்.
இப்படியெல்லாம் மெனக்கெட்டும் புரியவில்லை என்றால். விட்டுவிடுங்கள். கவிஞனை விமர்சனத்தால் கொலை செய்யாதீர்கள்.
நன்றாக வந்திருக்கிறது பதிலும் புரிதலும்……