கருத்துகளையும் எண்ணவுணர்வுகளையும் சுருக்கமாக சொல்லும் மிகக் குறுகிய இலக்கிய வடிவமான கவிதை அனைவருக்கும் புரியும் வகையில் மிகத் தெளிவாக இருப்பது அவசியம்தானே? – விஜயலட்சுமி
விஜயா, முதலில் உங்கள் கேள்விகளுக்கு நன்றி. ‘கடவுளின் மலம்’ கவிதை குறித்த சர்ச்சை எழுந்தபோது யாரும் நேரடியாகக் கேள்வி எழுப்பவில்லை. ஒரு நக்கல், சில வசைகள், உணர்ச்சிக் கொந்தளிப்பு என தொடர்ந்ததே தவிர யாரும் நேருக்கு நேராக எதிர்க்கொள்ள தயாராக இல்லை. அவர்களுக்குத் தெரியும் என்னிடம் பதில் உள்ளதென்று. அவர்கள் உள்ளுணர்வுக்குத் தெரியும் நான் கூறும் பதிலைக் கடந்து விவாதிக்க அவர்களின் வாசிப்புப் பயிற்சி அதிகரிக்க வேண்டும் என்று.
நிற்க! நான் இங்கு என் கருத்துகள்தான் இறுதி எனச் சொல்லவில்லை. அதுவும் விவாதத்திற்குறியவைதான். மாற்றுக்கருத்துகளை எதிர்நோக்குபவைதான். ஆனால், வெளியில் கூச்சலிட்டுக்கொண்டிருப்பவர்கள் வாசிப்புப் பயிற்சி இல்லாததனாலேயே அவ்வகையில் செய்கிறார்கள் என கூறுகிறேன். அவர்கள் கூச்சல் என்னை நோக்கியல்ல. அவர்களை நோக்கியதே அது. தங்கள் இயலாமையை நோக்கி. “நீ சொல்லும் உதாராணங்கள், நீ குறிப்பிடும் தத்துவங்கள், நீ சொல்லும் கோட்பாடுகள் எதுவும் எனக்கு அறிமுகம் இல்லை. ஆனால் நானும் எழுத்தாளன். நீ சொல்வது என்னை ஐயுர வைக்கிறது. ” எனும் அப்பட்டமான பதற்ற குரல்தான் அது.
அந்தப் பதற்றம் வசைகளை உண்டு செய்கிறது. நாம் சொல்லும் கோட்பாடுகளை கிண்டலடிக்க வைக்கிறது.’ தமிழில் இல்லாத தத்துவமா?’ என புலம்பச் செய்கிறது. ஆனால் விஜயா, நான் சொல்லும் பதில் அவர்களுக்கல்ல. உங்களுக்கு… உண்மையில் ஒரு பதிலை எதிர்நோக்கும் இளம் வாசகர்களுக்கு. என் கருத்தோடு அறிவு தளத்தில் மாறுபட்டு கருத்துரைக்கும் நண்பர்களுக்கு.
/கருத்துகளையும் எண்ணவுணர்வுகளையும் சுருக்கமாக சொல்லும் மிகக் குறுகிய இலக்கிய வடிவமான கவிதை/
இந்த வரியை நான் இப்படி மாற்றி அமைப்பேன் விஜயா. /நுண் உணர்வுகளை உணரவைக்கு முயலும் இலக்கிய வடிவமான கவிதை /
இதை நான் சுருக்க சில காரணங்கள் உண்டு.
1. கவிதை கருத்தைச் சொல்ல உருவான இலக்கிய வடிவமல்ல. கருத்தைச் சொல்வதானால் அதற்கு இன்னும் பொதுமக்களுக்கு புரியும் எளிய வடிவம் உண்டு. கட்டுரை அதற்குப் பொருத்தமானது. எளிய மக்களின் புழக்கத்தில் இல்லாத ஒருவடிவை கையாளும் போதே எல்லோருக்கும் கருத்தைச் சொல்ல இதை பயன்படுத்துகிறேன் என்பது அபத்தம்.
2. கவிதை சுருக்கமாக சொல்ல உருவான வடிவம் அல்ல. நீங்கள் வடிவ ரீதியான சுருக்கத்தைச் சொல்கிறீர்கள் என்றால் தமிழில் நெடுங்கவிதைகள் எல்லாம் பாரதி காலம் தொட்டே இயற்றப்பட்டுள்ளன. கவிதைகள் மூலம் காப்பியங்கள் கூட எழுதப்பட்டுள்ளன. நமது நாட்டில் கூட அது போன்ற முயற்சிகள் நடந்துள்ளன.
3. கவிதை சொல்வதற்காக உருவான வடிவமல்ல. அது உணர்த்த உருவான வடிவம். ஓர் இசையால் எப்படி ஒன்றைச் சொல்ல முடியாதோ, ஒரு நவீன ஓவியத்தால் எப்படி ஒன்றைச் சொல்ல முடியாதோ, அதே போல கவிதையும் சொல்ல வரவில்லை. ஓவியம் வண்ணங்களை தனது மூலப்பொருளாகப் பயன்படுத்துவது போல, இசை சப்தங்களை தனது மூலப் பொருளாகப் பயன்படுத்துவது போல, கவிதை சொற்களை தனது மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறது. அவ்வளவே.
அடுத்து புரியாமை குறித்த உங்கள் தொடர் கேள்வியைப் பார்ப்போம்.
‘எனக்கு இந்தப் படைப்பு புரியவில்லை’ என்ற வரி திரும்ப திரும்ப தமிழ்ச்சூழலில் படைப்புமீதான குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. பின்னர், அதையொட்டிய கிண்டல்கள், எரிச்சல்கள், வசைகள் வெளிப்படுகின்றன. இங்கு நன்கு கவனித்தால் படைப்பு அவர்களுக்குப் புரியவில்லை என்பதல்ல பிரச்னை; வேறு படைப்புகள் எனக்குப் புரிகிறதே…இது ஏன் புரியவில்லை என்பதே அதன் உள்ளுள்ள கேள்வி. வணிக எழுத்தில் ஊறியவர்களின் பொது எதிர்வினை இது. ஓர் இலக்கியப்படைப்பு புரியாதது படைப்பின் குறைபாடல்ல விஜயா.
ஓரளவு இலக்கிய வாசிப்புப் பயிற்சி உள்ளவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன். எந்த ஓர் இலக்கியப்படைப்பும் வாசகனுக்கு ஒன்றை புரியவைப்பதற்காக எழுதப்படுவதில்லை. அவை தெளிவாக தர்க்கபுத்திக்குச் சிக்கக்கூடிய விஷயங்களைச் சொல்ல முயல்வதில்லை. அதாவது ஒரு பாட நூலின் வேலையை அது செய்வதில்லை. அதைச் செய்வதுதான் அதன் நோக்கம் என்றால் கலை என்பதற்கான தேவையே அங்கு இல்லை எனலாம். பேசாமல் நாம் சொல்லவருவதை கட்டுரை வடிவில் சொல்லிவிட்டு போய்விடலாம். அல்லது , ‘தம்பிக்கு’ என அழைத்து கருத்து கடிதம் எழுதலாம். இலக்கியத்தின் நோக்கமே உணர்த்துவதுதான். எப்போதுமே நல்ல படைப்பு புறவயமாக தெளிவாகச் சொல்லிவிடமுடியாத சிலவற்றைத்தான் சொல்ல முயல்கிறது. அவற்றை அவ்வாசிரியர் வாழ்க்கையில் இருந்து அவதானித்திருக்கிறார். அதைநோக்கி வாசகனைக் கொண்டுசெல்ல இலக்கியம் வழி முயல்கிறார்.
ஓர் உதாரணம் சொல்லலாம் விஜயா. என் மனதில் மிக நெருக்கமான நாவல் ‘ம்’. இந்த நாவலின் முடிவை ஒற்றை வரியில் சொல்லலாம். அதாவது ஒரு அப்பாவுக்கு மகளின் மேல் காதல் ஏற்பட்டு அவர் மூலம் மகள் கற்பமாகிறாள். இதை வாசிக்கும் ஒருவர் அடையும் அதிர்ச்சி எக்கச்சக்கமானது. அதை வாசிப்பதன் மூலம் அருவருப்பும் அடையாளம். ஆனால் நாவல் ஒரு வாசகனை அந்தத் தந்தையின் வாழ்க்கை முழுக்க பயணிக்க வைக்கிறது. அவன் சந்திக்கும் துயரங்களை நாமும் காண்கிறோம். மரணத்தில் மிக மெல்லிய இழையில் அவன் தப்பிப்பது நம்மையும் திடுக்கிட வைக்கிறது. அவன் மனம் பிறழ்வதை நாமும் கவனித்துக்கொண்டே வருகிறோம். சிதைந்த மனதின் முடிவு என்னவாகிறது என பார்க்கும் போது அவனது நிலை நமக்கு ஓயாத துயரத்தைக் கொடுக்கிறது. இந்த நாவல் உங்களிடம் எதையும் சொல்லவில்லை. ஒரு வாழ்வை உணர்த்துகிறது. வாழ்வை உணர்வதால் மட்டுமே படைப்பை உணர முடிகிறது.
ஒரு படைப்பாளிக்கு ‘சொல்வதற்கு’ என ஒன்று இருந்தால் அதை அவர் நேரடியாகவே சொல்லலாம் என நாம் உணரவேண்டும். அதற்கான வடிவங்கள் ஏராளம் உண்டு. ஆகவே சொல்லமுடியாத விஷயங்களை உணர்த்தவே அவர் எழுதுகிறார். கவிதை இன்னும் நுட்பமாக உணர்வுகளை விளக்க சொற்களை பயன்படுத்திக்கொள்கிறது. சொல்லாமல் விடும் இடத்திலிருந்தே கவிதைக்கான அனுபவத்தை ஒரு வாசகன் பெருகிறான். இது நவீன கவிதைக்கு மட்டும் அல்ல சங்க இலக்கியம் தொட்டே இருப்பதை வாசிப்பு பயிற்சி உள்ளவர்கள் உணர்வார்கள். . உவமைகள் , உருவகங்கள், சொல்லணிகள் எல்லாமே வாசகன் ஊகித்து ரசிக்கவேண்டியவைதானே விஜயா.
முடிவாக ஒன்றைச் சொல்லலாம் ,புரியாமை நிராகரித்திருக்கும் எழுத்தை இலக்கியமென்றே யாரும் கருதமாட்டார்கள். இங்கு நான் ‘யாரும்’ எனச்சொல்வது இலக்கியம் அறிந்தவர்களை.
ஒரு நாவல், ஒரு எழுத்து உணர்த்தும் வாழ்க்கை இங்கே அழகாகச் சொல்லப்பட்டது..
இசையை உணரமுடியும், அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? அற்புதம்.
நவீன ஓவியம், புரியாது ஆனால் அதை விளக்குகின்றபோது பல விஷயங்கள் புரியவரும்.. அதற்காகக அதைப்புறந்தள்ளலாகாது.அருமை.
புரிகின்ற கவிதைகளை எல்லாம் நல்ல கவிதைகள் என்று யாரும் கொண்டாடுவதில்லை. அதேவேளையில் புரியாத கவிதைகள் அனைத்தும் நல்ல கவிதைகள் அல்ல என்கிற அறியாமை வட்டத்திற்குள் புகுந்துகொள்வதும் சரியில்லை.
எழுத்துவடிவில் சொல்லப்பட்ட புரியாத சில விஷயங்களில் எனது புரிதல் குறித்து, `என்னமோ சொல்லவருகிறார்களே, நமக்குத்தான் புரியவில்லை போலும்..’ என்று பலமுறை அதை மீள்வாசிப்பு செய்து, புரிய முயன்று தோற்று,எனது புரிதல் அறிவை நானே நொந்துகொண்ட அனுபவமும் உண்டு. கவனிக்க *மழுங்கிய நிலையிலான எனது புரிதல் அறிவு..*
கவிதை குறித்து எந்த முன்முடிவும் எடுக்காமல், நமது புரிதல் அறிவை நாமே ஆராய்ச்சி செய்வதில் தீவிரம் காட்டினால், எனக்குப் புரியாதது மற்றவர்களுக்கும் புரியாது, அல்லது, நான் புரிந்துகொண்டதுதான் மற்றவர்களுக்கும் புரியும் என்கிற நிருபர் கண்ணோட்டப் புரிதல் விலகும்.
செய்தி சேகரித்து, அதை அப்படியே எழுதி மக்களுக்கு விளங்க வைப்பதும், ஆழ்ந்த வாசிப்பில், சிக்கலான வாழ்க்கைச்சூழலில் சிக்குண்ட மனம் உதிக்கின்ற கவிதை அல்லது இலக்கியப் படைப்பு என்பதும் முற்றிலும் வேறானது. கடினமான படைப்பிலக்கிய வாசிப்பு என்று தனியொரு வாசகன் முயலாதவரை,அதுமாதிரியான முயற்சிகள் மேலும் தொடராதவரை, நவீன எழுத்து கவிதை குறித்த நாலாந்தர விமர்சனங்கள் நம் இலக்கியச்சூழலில் `எழுத்தாளர்கள்’ என்கிற முகமூடிகளால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். இதுபோன்ற கெடுபிடிகள் இலக்கிய உலகிற்கு அவசியம் என்றே தோன்றுகிறது. காரணம், இதுபோன்ற சிக்கல்கள் உருவாகின்றபோதுதானே, இவ்வளவு அழகான தெளிவான கலைப்படைப்புகள் உங்களின் (நவீன் மற்றும் வல்லின குழு) மூலமாக உயிர்ப்பெற்று ஜனிக்கிறது.
இக்கட்டுரையின் மூல சாரத்தை வெட்டியோ அல்லது இதில் குறைபாடுகள் உள்ளது என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டோ தர்க்கம் செய்ய யாராவது முன்வருவார்களா? வரத்தான் முடியுமா? (முடியும், வெட்டியாக மொண்ணையான கருத்துகளை முகநூலில் பதிவேற்றி, அதை விவாதிக்க `ஆமாம் சாமி’ போடுகிற கூட்டத்தைத் திரட்டி, தனிநபர் தாக்குதல் நடத்துவார்கள்.) `கடவுளின் மலம்’ என்கிற கவிதை நாறவில்லை. ஆனால், அக்கவிதை குறித்த விமர்சன எழுத்துக்களின் கீழ் நிகழ்த்தப்பட்ட தனிநபர் தாக்குதலில், உலகிற்கே படம்பிடித்துக்காட்டினார்கள்.. அவரவர் அறியாமையின் உச்சநிலையின் அடையாளங்களை..) என்னக் கொடுமை.!
நவீன், இந்த கட்டுரையினை ஒரு தொடக்கமாகவே நான் நினைக்கிறேன்… இதன் மூலம் நாம் உரையாடவிருக்கிறோம் என்பதை நினைக்கையில் அதற்கு தயாராக வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது…. இது நமக்கான தருணம்…..
Kaithaiyai unarchip puurvamagavum matravargalukku puriyumbadiyum unaal padaikkaa mudiyavillai enbathai oppuk kol…… antha thiramai unakku illai… thaiyiriyamaaga antha unmaiyai oppuk kol… naan unakku katruk kodokindrean